ஏதாவதொரு நம்பிக்கை தான் இந்த வாழ்வு. பரந்து விரிந்து கிடக்கும் வானம் சாட்சியாக இந்த பூமி சுழல்வது கூட அப்படியொரு நம்பிக்கையில் தான். அதன் தீர்க்கத்தில்... நம்பினோர்க்கு தான் இந்த உலகம். நம்பினோர்க்கு தான் இந்த வாழ்வு.

உலகத்தோடு ஒட்டாமல் இருப்பது அப்படி ஒன்றும் குற்றமில்லை. ஆனால் ஒட்டி வாழ பழகி கொண்டால் திரும்பும் பக்கமெல்லாம் அர்த்தம் நிறைந்த அமுத சுரபி இந்த உலகம். தேடல் உள்ள உயிர்களுக்கெல்லாம் வாழ வழி இருக்கிறது இங்கே.

தனித்தவனுக்கும் தாகம் எடுக்கும் தானே.

இப்படி ஒரு படம் பார்த்து நீண்ட நெடு நாட்கள் ஆகி விட்டன. கதையின் இறுதி பக்கங்கள் கிழிந்திருக்கும் நிலையில் அந்த முடிவை தெரிந்து கொள்ள பயணப்படும் திரைக்கதை தான் இந்த சினிமா. சித்திரம் நகர்வது போல பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் லாவகம் சினிமா மொழி அறிந்த அறிவின்பால் பூரணம் பெற்றிருக்கிறது. காட்சிக்கு காட்சி கவிதை சேர்த்து.... திரைக்கதையை நகர்த்தி போகும் படத்தொகுப்பு... பார்க்க பார்க்க பரவசம் ஊட்டும் காட்சி மொழி.nitham oru vaanamஅந்த கதைகள் நிஜமாக நடந்த கதைகள். அந்த நிஜ பாத்திரங்களை நேரில் சந்திக்கும் போது கிடைக்கும் அனுபவம்...அலாதி. அவர்களை பார்க்க பயணப்படுகையில் கிடைக்கும் அனுபவம்.. அனுபூதி.

அனுபவமே மருந்தாக ஆகும் கதையோட்டத்தில்... நாயகன் அசோக் செல்வனோடு நாமும் பயணப்படுகிறோம். நாயகனின் பாத்திர படைப்பே ஒரு தனித்தவனின் தவிப்போடு தான் ஆரம்பிக்கிறது. எதிலும் ஒட்டாத.... எல்லாவற்றிலும் அதீத சுத்தம் பார்க்கும்... இந்த உலகத்தில் தான் மட்டுமே போன்ற பட்டும் படாத ஒரு நவீன துறவு மாதிரியான ஒரு இன்ட்ரோவெர்ட் பாத்திரம். தனக்குள் தானே உலகம் சுற்றும் வாலிபன். திருமணத்துக்கு பார்த்திருக்கும் பெண்ணோ...ஒரு சூழ்நிலை சிறகி. அவளும் நல்லவள் தான். கொஞ்சம் குழப்பத்தில் இருக்க அதற்கும் கூட நாயகன் தன்னையும் அறியாமல் தரும் தெளிவு தான் முடிவெடுக்க செய்கிறது.

அவள் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் காதலனுடன் பறந்து விடுகிறாள்.

ஏற்கனவே டிம் லைட்டே போதும் என்றிருக்கும் நாயகனுக்கு இந்த உலகத்தின் மீதிருக்கும் அவ்வெளிச்சமும் விலகுகிறது. பொதுவாகவே எதிலும் நம்பிக்கை இல்லாத மனம்... இப்போது...வெம்பவும் செய்கிறது. அதன் வழியே கிடைக்கும் குழப்பம் சுலபம் என்பதால் அதில் சுழலவும் தொடங்குகிறது.

குழப்பத்துக்கு விளக்கம் சொல்ல... மருத்துவமனை கம்பளம் விரிக்க.. அங்கே டாக்டர் அபிராமி இரண்டு கதைகளை கொடுத்து படிக்க சொல்கிறார்.

எந்த பாத்திரமும் பிடித்து விட்டால் அதில் தன்னை பொருத்தி கற்பனை கொள்ளும் மனநிலை... நாயகனுக்கு சிறுவயதில் இருந்தே இருக்கிறது. அது இங்கும் பற்றிக் கொள்கிறது.

படிக்க படிக்க... சுவாரஷ்யம் தாங்காத கொந்தளிப்பில் இறுதி பக்கங்கள் இல்லை என்றால் என்னாகும். அதன் தொடர்ச்சியில் நகரும் கதை முன் பின்னாக பயணிக்கும் திருப்புக்காட்சி உத்தியில்... கத்தி களேபரம் எதுவும் செய்யாமல்.. ஒவ்வொரு மனிதனின் உள்ளிருக்கும் உள்ளார்ந்த... தான்- ஐ வெளி கொண்டு வரும் காட்சிகளாக விரிவது தான் இந்த மொத்த படமும். உள்ளார்ந்த விசும்பல்.... உள்ளார்ந்த உணரல் என படம் நெடுக வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே அர்த்தமுள்ளதாக இருக்கிறது. தேவை இல்லாத பாத்திரங்கள் ஒன்றுமில்லை. எந்த பாத்திரமும் நிறைந்து வழியவும் இல்லை. நிதானமாக நீக்கமற நிறைந்திருக்கும் திரையில் நாமும் நம்மை இணைத்துக் கொள்வது தான் இந்த திரைக்கதையின் வெற்றி.

கதைகளில் வரும் இரண்டு நாயகிகளுமே ஆத்மார்த்தமான அழகு. வாழ்ந்திருக்கிறார்கள். முன் கதையில் வரும் பாஸ்கட் பால் பிளேயராக இருந்தும் சூழல் சுருக்கி விட்டதில்... மனமும் சுருண்டு இருக்கும் நாயகி ஆகட்டும்... இரண்டாவது கதையில் அப்பாவோடு கருத்து முரண்பட்டு கிறுக்குத்தனங்களோடு அழகழகான சேட்டைகள் செய்யும்... நாயகி ஆகட்டும்... கண்களில் ஒத்திக்கலாம். கவிதைகளை நாயகி ஆக்கி விட்டு கதையை காவியம் ஆக்கி விட்டார்.... எழுதி இயக்கிய ரா. கார்த்திக். தேர்ந்த படைப்பாளி. படம் நெடுகிலும்.. போற போக்கில் போட்டு தாக்கும் வசன வரிகள் இன்றைய வாழ்வை விலாவாரியாக்கி விடுகிறது. பல பல பள பள திரைகள் காணும் இவர் பேனா.

ஒவ்வொரு பெண் பாத்திரமும் கனம் பொருந்திய கண்களோடு இருப்பது கலை நயம். கதைக்குள் வரும் பாத்திரம் நிஜமாக மாறும் நேரத்தில் அந்த பாத்திரமாக வரும் ஷிவதா... அழுத்தம் நிறைந்த தனித்துவ அழகு. தாண்ட வேண்டிய வேலிகள் இங்கு நிறைய என உணர்ந்த வார்ப்பு. சோகம் ஒரு பக்கம் இருந்தாலும்.. வாழ்ந்தாக வேண்டிய காரணம் இந்த பக்கம் இருக்கிறதே. குழந்தையே காதலின் சாட்சியாக இருக்க... அதை காப்பது தானே வாழ்தலின் மொழி. வாழ்கிறார். உணர்வு மொழி

நாயகன் அசோக். இந்த படம் ஒரு பம்பர் என்று தான் சொல்ல வேண்டும். நடிக்க கிடைத்த வாய்ப்பு. ஒரே படத்தில் மூன்று பாத்திரத்தில் மனிதன் வேஷம் கட்டி வெளுத்து வாங்குகிறார். கல்லூரி கெத்தாகட்டும்... அவளோடு காதல் கொள்ளும் பித்தாகட்டும்.... தாடியோடு... தான் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்று நிரூபணம் செய்கிறார். (தாடி எடுத்து தான் அந்த வேலை கிடைக்கும்னா அந்த வேலையே வேண்டாம் என்று காதல் மனைவி சொல்லும் காட்சியில்.... அவரோடு சேர்ந்து நம்மை போன்ற தாடி வாலாக்கள் யாவருக்கும் தாடியில் வண்ணம் பூக்கிறது. தாடி சிறகு தாடி கொண்டோன் அறிவான்.)
அடுத்த கதையில்... காதலிக்காக விஷம் குடித்து விட்டு... காரோட்டி வந்து செய்யும் அலம்பலாகட்டும்... பிறகு அவரே காவல்துறை அதிகாரியாக கனத்த மீசையில் மிடுக்காக வந்து எல்லாம் யாமறிவோம் என்று கதையை திருப்புவதாகட்டும்... தேர்ந்த நடிகன் உள்ளே இருக்கிறார். இனி வெள்ளித்திரையில் தவிர்க்க இயலாத நடிகன். நம்பலாம்.

அப்பா எனும் அழகம் பெருமாள் பாத்திரம்... ஒரு பக்கம் ஊர் தலைவர்... மறுபக்கம் மகளின் அடாவடிக்கு டப் கொடுக்கும் அதே கோக்கு மாக்கு அப்பா. சும்மாவே வெளுப்பார். இந்த பாத்திரம் சலங்கை கட்டி விட்டது போல. சிரித்துக் கொண்டே செய்யும் எல்லா கோமாளித்தனங்களின் பின்னும் ஒரு பெண்ணுக்கு அப்பா எனும் பதற்றம் இருப்பதை அப்பாக்கள் உணர்வார்கள்.

காளி வெங்கட் பார்த்தாலே திரையில் ஒரு திருப்தி வந்து விடுகிறது. சிரித்துக் கொண்டே சீனை நகர்த்தி விடும் அந்த குரல் வழியே இனம் புரியாத ஒரு நம்பிக்கை காண்கிறேன். இந்த படத்தில்... நாயகன் உட்பட... இவரும் பேசும் கொங்கு தமிழ்... தேன் சிந்தும் மொழி. கேட்க அத்தனை இனிமை. வலிய திணித்ததாக இல்லாமல் சிந்தனையிலேயே கொங்கு மொழி வியாபித்திருந்ததை உணர முடிந்தது. காமெடியாகவே இந்த கதை நகர்ந்தாலும்... நல்ல மனம் வாடாது என்ற செய்தியோடும் நம்மை சேர்கிறது.

காதல் தத்துவம் அர்த்தம் அன்பு நம்பிக்கை என்று தேடி தேடி கண்டடையும் இந்த டிஜிட்டல் சினிமா... வானத்தின் வழியே வந்து சேர்ந்திருக்கும் இடம் ரசிக மனங்கள். கலை வடிவத்தை கலர் கலராக காட்சி படுத்திய ஒளிப்பதிவு..... உணர் விதைகள்.

"இந்த சின்ன வாழ்க்கைல.. ஒரு சிரிப்பு.. ஒரு ஹாய்... ஒரு குட் மார்னிங்.. வேற என்ன இருக்கு... வாழ்ந்து கிடக்க..." என்று ஜீவா பேசும் வசனம் மொத்த படத்துக்குமான ஜீவன். எந்த சூழலிலும் வாழ்வதற்கான நம்பிக்கையை இழந்து விடவே கூடாது என்பது தான் ஒவ்வொரு பாத்திரமும் பேசும் பேசுபொருள். அன்பும் அரவணைப்போடு.... சக மனிதர் மீதான மதிப்பும் மரியாதையும் தான்.... இந்த வாழ்வில் நாம் கண்டடையும் வரங்கள். தவங்கள் பெரிதாக ஒன்றுமே இல்லை. எந்த முகம் கண்டும் புன்னகையுங்கள். அவ்வளவே.

வஞ்சமும் வெறுப்பும் நெருப்புக்கு கூட இல்லை. இருந்திருந்தால் அடுப்பில் எரிந்து சோறு எப்படி போடும். மனிதனை விட்டு மனிதன் விலகுதல் தான் ஆன்மிகம் என்றால் அது வாழ்க்கை விதியின் அத்துமீறல். முகம் பார்த்து... கைகள் கோர்த்து... புன்னகைத்து.... உதவி செய்து... நம்பிக்கையூட்டி இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து விடுதல் தான் இந்த பூமியில் வந்து போவதற்கான அர்த்தம். நேசிக்கும் உயிர்களின் துடிப்பை நேசித்தவர் சுமப்பதில் தான் ஒவ்வொரு நாளும் விடிகிறது.

இரண்டு கதைகளை நடந்து கொண்டிருக்கும் கதையோடு இணைந்து... அந்த கதைகளின் நிஜங்கள் முடிவில் நாயகனுக்கு போதியை திறந்து காட்டும் இந்த சினிமா நிஜமாகவே நல்ல சினிமா. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நமக்குள் நாமே பயணப்பட செய்கிறது. நமக்குள் இல்லாத இமயமலையா. அது நிஜ மலையை விட உச்சி அதிகம். குளிர்ச்சி அதிகம். நிதானமும் உள்ளார்ந்த தெளிவும் இருந்தால்... நிம்மதி எனும் உச்சி நிச்சயம்...இல்லையா.

படம் நெடுகிலும் அவரவருக்கான இசையை மெல்ல நீரோடை ஆக்கி இருக்கும் இசையரை பாராட்டாமல் இருக்க முடியாது. தேடல் உள்ள இதயங்களுக்கு இந்த படம் இதய வாத்தியம்.

இன்னொரு பெண் படம் முழுக்க நாயகனோடு வலம் வருகிறாள். அவள் தான் படம் தொடங்குவதில் இருந்தே போதி சுமக்கும் புத்தி. அவளாக வந்து... செய்து கொள்ளும் அறிமுகத்தோடு தான் படம் ஆரம்பிக்கிறது. அதன் பிறகு நித்தம் நித்தம் ஒரு வானம் அவர்களுக்கு மட்டுமல்ல... திரையில் அவர்களோடு நகரும் நமக்கும் தான்.

தினம் தினம் மாறிக் கொண்டே இருக்கும் வானத்தை புரிந்து கொண்டால் பூமி புன்னகைத்து கொண்டு தான் இருக்கிறது என்பதும் புரிந்து விடும்.

திரைப்படம் : நித்தம் ஒரு வானம்
இயக்குனர்: ரா. கார்த்திக்

- கவிஜி