ஒரு வரிக் கதை. 
 
நின்று நிதானமாக நகரும் திரைக்கதை. போட்டோகிராபி ஒளிப்பதிவு. மனதில்......எப்படியோ எங்கிருந்தோ வருடும்... சொல்லொணாத் துயரம்.... தமன்னா நடிப்பில்.  காதலும் காதல் சார்ந்த சில காட்சிகளில் கூட சீனுவின் தனித்தன்மை. 
 
உதயநிதி நடிக்கவும் ஆரம்பித்து விட்டார் என்று நம்பலாம். இப்படி ஒரு கதையில் தன்னை இணைத்துக் கொண்டதை பாராட்டியே ஆக வேண்டும்.  தமன்னாவுக்கும் உதயநிதிக்கும் இடையே அரும்பும் காதலாகட்டும்... படத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் லோன் பிரச்சினைகள் ஆகட்டும்....விவசாயிகள் பற்றிய பார்வை ஆகட்டும்.....ஒன்றன் பின் ஒன்றாக வாழ்வின் யதார்த்தத்தின் அருகே....சென்று காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். நிகழ்கால விவசாய பிரச்சனைகளை ஆங்காங்கே தூவி இருப்பது சமூக பொறுப்பு. 
 
udayanidhi and tamannaநல்ல ஆன்மாக்களால் இயங்கும் சுற்றுப்புறங்களால் ஆன ஊரில் இப்படி ஒரு கதை நிகழ 100 சதவீதம் வாய்ப்பிருக்கிறது.
 
பொன்னாங்கன்னி கீரை....தலைக்கு தேய்க்கும் நல்லெண்ணெய்....இயற்கை விவசாயம்......மண்புழு உரம்......ஜீன் பிரச்சனை......பள்ளி கால தோழி இப்போதும் தோழி...... அப்பத்தா என்றொரு ஆலமரத்தின் நிழல்......கூட்டுக்குடும்பம்......பையனை நல்லவனாக வளர்த்த அப்பா.......கையில் ரசம் வாங்கி குடிக்கும் காட்சி என்று, எதையெல்லாம் நம் சமூகம் மறந்து விட்டதோ அதையெல்லாம் நினைவு படுத்துகிறது. எங்கெல்லாம் நம் சமூகம் தேங்கி நின்று விட்டதோ அங்கெல்லாம் தூர் வாருகிறது திரைக்கதை.
 
இந்த வாழ்வின் பெரும்பகுதி நம்மை மீறி தான் நடக்கிறது. அது தான் இயற்கையின் வாழ்வியல் சுழற்சி. மீதமுள்ள மிகவும் குறைவான பகுதி மட்டுமே நமது திட்டமிடலுக்குள் நிகழ்வதாக நம்பப் படுகிறது. யாருக்கு எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழும், சம்பவிக்கும் அடுத்த முனை திருப்பம் எதுவென்று தெரியாத பேரிருள் இவ்வாழ்வு. அன்பெனும் வெளிச்சமே கை பிடித்து அழைத்து செல்லும் கடவுள்தனம். அன்பில்லாமல் இந்த உயிரின் தாகம் ஒரு போதும் தீர்வதில்லை. அன்பைத் தேடாமல் அன்பைத் தராமல் ஒருபோதும் உன்னதம் நிலைப்பதில்லை. 
 
"உன்னைப் பார்த்துக்க 12 கண்ணு இருக்கு...இந்த வீட்டோட சொத்தே நீ தான்...." என்று உதயநிதி பேசும் வசனங்கள் எங்கிருந்தோ மனைவியாக வரும் எல்லா பெண்களுக்கும் சமர்ப்பணம். மனைவிகள் எல்லாவற்றையும் கடந்த பேரன்புக்காரிகள். அவர்களைக் கொண்டாடாவிட்டாலும் துண்டாடாமல் இருக்கக் கடவது ஆண் சமூகம்.
 
பெரிதாக சப்போர்ட் இல்லாத பெண் பிள்ளைகள் தங்கள் திருமணத்துக்கு தாங்களே காசு சேர்த்து வைக்கும் பக்குவம் கண்களில் துளி விட செய்து விடுகிறது. தன் கல்யாணத்தைப் பற்றி பேச.......தானே வந்து அமர்ந்து பேசும் தமன்னா வெள்ளை நிறத்து பக்கத்து வீட்டுக்காரி என்று தான் நம்பினேன். எதிர்கால ஏக்கம் கண்களில் தவழும் காட்சிகளில் நிஜமாலுமே தன் சுயத்தில் சுயம்புவாக வாழும் எத்தனையோ பெண்களின்  வாழ்வைத்தான் பார்த்தேன். குருவி சேர்ப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து தன் திருமணத்தை தானே நடத்திக் கொள்ளும் பெண்களின் ஒரு துளி எனத்தான் தமன்னா என்ற கதாபாத்திரம் இருந்தது. மனம் பிசையும் தனிமைக்குள் இந்த உலகத்தில் அவர்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் நேர்மை இருக்கிறது. உண்மை இருக்கிறது. ஆசை அடிமனதில் மட்டுமே இருக்கிறது.
 
சோழமண்டலம் அத்தனை அற்புதமாய் கண்களில் விரிகிறது. யுவனின் இசை.. தன்னை கிராமத்து பறவையாக்கிக் கொண்டு சிறகடிக்கிறது. திரைக்கதை சில இடங்களில் நாடகத்தனமாய் இருந்தாலும்... நாடகத்தனம் இல்லாத வாழ்வு எங்கிருக்கிறது என்று கடந்து விடலாம்.
 
வடிவுக்கரசி என்ற நடிப்பு ராட்சசி... சில  காட்சிகளே வந்தாலும்... கண்களாலும்... உடல் அசைவாலுமே நம்மை அசைத்து விடுகிறார். அதும் இறுதிக் காட்சியில் பேரனையும் பேத்தியையும் வழி அனுப்பி விட்டு வாழ்த்துவது போலவே காற்றினில் இரு கைகளையும் வைத்திருக்கும் சில நொடிகள் போதும்... கூட்டுக் குடும்பத்தின்...... பாட்டிகளின் அரவணைப்பில்... ஒரு வீட்டின் வளையம்....எப்படி நம்மை சூழ்ந்திருக்கிறது என்று உணர... 
 
பெருங்காதலோடு வாழும் ஜோடிகளுக்கு குறைகளே இல்லை. ஏனோ அழத் தோன்றுகிறது....மனம் விட்டு அழுவதற்காகவாது ஒரு அப்பாத்தாவின் அன்பு வீட்டில் இருக்க வேண்டும்.... எப்போதும். 
 
- கவிஜி