Periyarநான் வாழ்க்கையில் காதலிக்கும் மிகச்சிலரில் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் ஒருவன். பெரியாரை அவன், இவன் என்று விளிப்பதால் சில பெரியார் பக்தர்கள் கோபப்படலாம். மேலும் நான் பிரதியில் அவன் என்று எழுதும்போது நீங்களும் அவன் என்று வாசிக்கும் சாத்தியம் என்னையும் கோபப்படுத்தும். ஏனெனில் என் பொசிசிவ்னெஸ் அப்படி.

கள்ளுக்கடை மறியல் செய்தவர், அதற்காக அய்ந்நூறு தென்னைமரங்களை வெட்டிப்போட்டவர், கதர்சுமந்துவிற்றவர் என்று இப்படியாகத்தான் பெரியார் தமிழ்மாணவர்களுக்கு அறிமுகமாயிருக்கிறார். ஆனால் இத்தகைய சட்டகங்கள் பெரியாரின் தாடிமயிரை அளப்பதற்குகூடப் போதுமான அளவுகோல்கள் அல்ல. தனக்கு விதிக்கப்பட்ட கரைகளை உடைத்துப் பாய்ந்த மகாநதி பெரியார்.

கள்ளுக்கடை மறியல் செய்த பெரியார்தான் மதுவிலக்கிற்கெதிராக, "ஒருவனைக் குடிக்கக்கூடாது என்றுசொல்வதற்கும் உன் மனைவியைக் கலவி செய்யக்கூடாது என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு?" என்று வினவினார். ஒழுக்கம் என்பது பாமரர்களை ஏமாற்றும் சூழ்ச்சி என்றார். 'திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக்கப்படவேண்டும்' என்றார். மணவிலக்குச் சட்டத்தைக் கொண்டு வராவிட்டால் திருமணங்களில் திருமண மறுப்புப் பிரச்சாரமும், பலதார மணப் பிரச்சாரமும் செய்வேன் என்று அரசை மிரட்டினார். பெண்களின் கருப்பைகளை அடைக்கச் சொன்னார்.

தேசப்படம், காந்தி சிலை, பிள்ளையார் சிலை, ராமர்படம் என அனைத்துப் புனிதப் பிம்பங்களையும் தெருவில் போட்டுடைத்தார் அல்லது கொளுத்தினார். 'தமிழ்ப்புலவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கொடுக்க வேண்டும் என்றார். இப்படி அவர் செய்த கலகங்கள் சொல்லி மாளாதவை. சாதி, மதம், கடவுள், தேசம், மொழி, கற்பு, காதல், திருமணம், குழந்தைப்'பேறு' என அனைத்து ஒளிவட்டங்களின்மீதும் அவரது மூத்திரச்சட்டியில் ஒழுகிய சிறுநீர் வெள்ளமாய்ப் பாய்ந்தது.

கலகத்தின் குரலாய் ஒலித்த அதே பெரியார்தான் அறம்பேணும் துறவியாய் வாழ்ந்தார். காந்தியார் படுகொலையின்போது பார்ப்பனர்களைத் தாக்குதலினின்று காத்தார். 'ஒரு பார்ப்பான் பேச்சைக் கேட்டாக் கலியாணம் பண்ணினாய்?' என்கிற வன்மமும் வெறுப்பும் நிறைந்த கேள்வியை வரலாற்றுப்பழியாய்த் தன் தோள்மேல் சுமந்து ராஜாஜியைக் காட்டிக் கொடுக்காமல் செத்துப் போனார். தமிழ்ச் சூழலில் எந்த முஸ்லிமும் பரப்புரை செய்வதற்கு முன்பே 'இன இழிவு நீங்க இஸ்லாமியராகுங்கள்' என்றார். அம்பேத்கரைத் தன் தலைவர் என்றார். குன்றக்குடி அடிகளாரையும் மதித்தார். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன அவர்தான் தமிழுக்கான எழுத்துச் சீர்திருத்தங்களையும் முன்மொழிந்தார்.

இதையெல்லாம் நீங்கள் பெரியார் திரைப்படத்தில் தேடினீர்களென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பாடத்திட்டங்களைத் தாண்டி படம் நகரவில்லை. பெரிராரின் வாழ்வாதாரமான போர்க்குணமிக்க போராட்டமுறைகள் காட்டப்படவில்லை. பெரியாரால் அவமானப்படுத்தப்பட்ட ராமனும் வினாயகனும்தான் இன்று இந்துத்துவச் சக்திகளால் தேசியச் சின்னங்களாய் முன்னிறுத்தப்பட்டு வெறியாடிக் கொண்டிருக்கும் சூழலில் பெரியாரின் விக்கிரகச் சிதைவுப் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதே அடுத்த தலைமுறையை அரசியலில் ஆற்றுப்படுத்துவதற்கும் நமது போர்மரபின் எஞ்சிய நினைவுகளைச் சரிபார்ப்பதற்கும் உதவும். ஆனால் அது இல்லை. கவனமாக பெரியாரின் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

மேலும் சில தரவுகள் அய்யத்துக்கிடமாயிருக்கின்றன. நான் படித்தவரை 'தமிழர் தலைவர்' நூலில் பெரியார் நாகம்மையின் விரதத்தைக் குலைப்பதற்குச் சாம்பாரில்தான் மீன் துண்டங்களைப் போட்டு வைப்பார். ஆனால் படத்திலோ சோற்றில் சிக்கன் துண்டைப் புதைத்து வைக்கிறார். காசியில் அவர் பிச்சையெடுத்து வாழ்ந்தபோது பார்ப்பனச் சாமியார்களுக்கும் மற்றச் சாமியார்களுக்குமிடையில் நிலவிய வேறுபாடுகள் பற்றி தமிழர் தலைவரில் உள்ளது. ஆனால் காசிச் சாமியார்கள் காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதாகப் படித்ததாக நினைவில்லை.

பெரியாரின் அணுக்கத் தொண்டராகிய குத்தூசிக் குருசாமி படத்தின் எந்த மூலையிலுமில்லை. அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் தந்த உணர்வைப் பெரியார் தரவில்லை. காந்தி, அம்பேத்கர் ஆகியோர் தமிழிலேயே பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. அழகியல் மற்றும் சினிமா மொழி என்றளவில் பார்த்தால் பெரியார் படம் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. பாடல்கள் துருத்தி நிற்கின்றன. பின்னணி இசையின் தோல்வியை நினைக்கும்போது இளையராஜா எப்படியாவது இசையமைத்திருக்கக்கூடாதா என்னும் ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

திமுக தொடங்கியபோது கருணாநிதி திமுகவில் இணையவேயில்லை. அவர் திராவிடர் கழகத்தில்தான் இருந்தார். அதன்பிறகே திமுகவில் இணைகிறார். திமுகவின் அய்ம்பெரும் தலைவர்களில் கருணாநிதி இல்லை. ஆனால் படத்தில் ராபின்சன் பூங்காவில் திமுகவின் துவக்கவிழா மேடையிலேயே கருணாநிதி இடம் பெற்றிருக்கிறார். நாகம்மையைக் கோவிலில் கலாட்டா செய்வதற்குப் பெரியாரே ஆட்களை ஏற்பாடு செய்கிறார் என்பதுதான் தமிழர் தலைவரில் வருவது. ஆனால் அப்படியான குறிப்புகள் எதுவும் படத்தில் இல்லை. 'ஈ.வெ.ராமசாமியாகிய நான்..' எனத்தொடங்கும் பெரியாரின் சுயவிளக்கத்தைச் சாக்ரடீஸ் சிலை முன்பு பெரியார் பேசுவதாக அமைத்திருப்பது கூட சினிமா உத்தி என்றளவில் மன்னிக்கலாம். ஆனால் அவரது வெளிநாட்டுப் பயணக்காட்சிகள் படத்தில் எந்த வகையிலும் பயன்படவில்லை.

திறமையான நடிகையாகிய குஷ்பு சரியாகப் பயன்படுத்தப்படவிலை. பெரியாருக்கு எவ்வளவு வயதானபோதும் நாகம்மையாக வரும் ஜோதிர்மயி மட்டும் கொஞ்சம்கூட மாற்றமில்லாமல் 'இளைமையாக' இருப்பது அபத்தமாக இருகிறது. ராஜாஜியின் தோற்றமும் அப்படியே. மேலும் ராஜாஜி ஏதோ சூழ்நிலைக்கைதி போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கான ஒப்ப்னை நுட்பங்கள் எதுவும் படத்தில் இல்லை. படத்தில் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரே அம்சம் சத்யராஜ்தான். அதுவும் அவர் தாடிவைத்தப் பெரியாராக மாறியபிறகு பெரியாரின் உடல்மொழிகளை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். சத்யராஜின் கடின உழைப்பிற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ஆனால் இளமைக்காலத் தோற்றங்களில் சத்யராஜ் சத்யராஜையே நினைவுபடுத்துகிறார்.

திராவிட இயக்க வரலாற்றைக் கொச்சைப்படுத்தி மணிரத்னம் 'இருவர்' என்னும் திரைப்படத்தை எடுத்தார். இந்து - முஸ்லீம் முரண்களை கதைமய்யமாகக் கொண்ட 'பம்பாய்' படத்தில் இரண்டு மூன்று இடங்களில் துலுக்கன் என்கிற வார்த்தையை நாசரின் கதாபாத்திரத்தின் வழியாக உச்சரிக்க வைத்திருப்பார். இருவரில் அண்ணவையும் பெரியாரையும் ஒரே கதாபாத்திரமாக்கி அதே நாசரை நடிக்க வைத்திருப்பார். 'திராவிட இயக்கம் பற்றிய திரைப்படத்தில் பார்ப்பான் என்னும் வார்த்தையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறார்' என்று மணிரத்னத்தைப் பார்ப்பனீய மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு அறிவுஜீவிகள் விமர்சித்தார்கள். அது நியாயமான விமர்சனமே. ஆனால் மணிரத்னம் என்னும் பார்ப்பனரிடமிருந்து நாம் அதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் திராவிடர் கழகத்தின் தயாரிப்பில் ஞானராஜசேகரன் என்னும் தலித்தும் 'பார்ப்பான்' என்னும் வார்த்தையே இடம்பெறாமல் பெரியார் படத்தை எடுத்து 'சாதனை' புரிந்திருக்கிறார்கள்.

ஒருவரியில் சொல்வதென்றால் பெரியார் திரைப்படம் என் காதலியை யாரோ வன்புணர்ச்சி செய்ததைப்போல இருந்தது.

கொசுறு : என்னுடைய இந்த விமர்சனத்தைப் படித்து யாரும் பெரியார் படத்தைத் தவிர்க்கவோ தவறவோ விடவேண்டாம்.

என்னோடு படம்பார்த்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். பெரியார் அளவிற்கு இல்லையென்றாலும் பெரியாருக்கு அடுத்தபடியாக நான் நேசிக்கும் தோழிகளில் ஒருத்தி. கைபிடித்து அழைத்துச் சென்று அறிவின் மர்மப்பிரதேசங்களை அறிமுகப்படுத்தியவள். தன் மொழிநாவால் வாழ்வின் இடுக்குகளை அலசுபவள். ஆனால் அவருக்குப் பெரியார் பற்றி ஒன்றும் தெரியாது அல்லது ஏதோ தெரியும் என்று சொல்லலாம். பெரியார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொன்னார், 'இனி பெரியாரை முழுசாப் படிக்கணும்'. இது பெரியார் படத்திற்குக் கிடைத்த வெற்றிதான். 

- சுகுணா திவாகர்