"சதத் ஹசன் 42 வைத்து வயதில் மரித்து போகிறான்
 மண்டோ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்"  
 
- என்று படம் முடிகையில் டைட்டில் கார்ட் போடுகிறார்கள். பெருத்த சோகம் கவ்விக் கொண்ட என்னை எப்படி நான் கடப்பது...?! 
 
துயரம் தோய்ந்த கண்களால் தான் மண்டோவைக் காண முடிகிறது.
 
manto movie"என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்" என்று படத்தில் ஓரிடத்தில் கூறும் மண்டோவை கூர்ந்து கவனிக்கையில் உள்ளே நடுக்கம் ஏற்படுகிறது. அந்த விழிகளின் தடுமாற்றத்தில், இயலாமையில் இந்த நாடுகளும் நாட்டு மனிதர்களும் செய்யும் அவமதிப்பில் செத்து செத்து வாழும் ஓர் உன்னத படைப்பாளியின் மரணத்தைக் காண முடிகிறது.
 
"சதத் ஹசன் மண்டோ" பார்த்து விட்டு என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வெளிச்சம் படரும் வெளி எங்கும் கண்களற்று சுற்றுகிறேன். அலைக்கழித்தலின் பொருட்டு மண்டோவின் காய்ந்த உதடுகளை கசப்பேறிய தொண்டைக்குழியை பயத்தோடும் பரிதாபத்தோடும் உற்று நோக்குகிறேன். "மண்டோ" என்ற பெரு மண்டையின் ஓரங்களில் உலா வருகையில் என் மண்டையில் யாரோ தொடர்ந்து அடிக்கிறார்கள். அடிப்பவர்கள், கலைஞனை போற்றத் தெரியாதவர்களாக......மதிக்கத் தெரியாதவனாக....குறைந்த பட்சம் அவனின் வாழ்வில் எழுத்தில் ஏதாவது ஒரு சந்தில் குறிக்கிடுபவர்களாகவே இருக்கிறார்கள். 
 
மண்டோவின் வாழ்க்கையை "மண்டோ" என்ற திரைப்படமாக்கிய "அழகி - நந்திதாதாஸ்"க்கு இனம் மொழி நாடு தாண்டிய கைதட்டல்கள். மனம் திறந்த ஏக்கங்களை கண்ணுக்குப் புலனாகாத எல்லை தாண்டி அவருக்கு அளித்தல் நலம் என்றே நம்புகிறேன். அடுத்த தலைமுறைக்கு இத்தனை சுலபமாக மண்டோவை கடத்த சினிமாவால் முடிந்திருக்கிறது. அதுவும் ஒரு தேர்ந்த சினிமா சாதித்திருக்கிறது. "மண்டோ" டைட்டிலில் கூட இடையே குறுக்கு வெட்டாக இருக்கும் கோடு அரச பயங்கரவாதத்தை பறை சாற்றுகிறது. தைரியமுள்ள நந்திதாவுக்கு நன்றிகள். 
 
அந்த கால கட்டத்தின் காட்சி வடிவத்தை அப்படியே அந்த டோனில் காட்டிய நந்திதா குழுவுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு வீதியிலும் படம் பார்ப்பவரும் உடன் செல்லும் உணர்வு. இப்போது தான் நிஜமாகவே நந்திதா என்றொரு ஆளுமை அழகியாகி இருக்கிறார். தேவதைகள் இப்படியும் காட்சி தருவார்கள்.
 
மண்டோவை படிப்பது எல்லா காலத்திலும் இருக்கும் சம காலத்து மானுடத்தைப் படிப்பது. அதற்கு எல்லைகள் கிடையாது. கருப்பு திரைகளால் எத்தனை மூடினாலும் துளி வெளிச்சம் போதும் அவரைக் காட்டிக் கொடுத்து விடும். மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கலைஞனைப் பற்றிய செய்தி இந்த மானுடத்துக்கு அவசியம் தேவை. மண்டோ இந்த சமூகத்தின் வெளிப்பாடாக இருக்கிறார். இந்த வாழ்வின் அடிப்படை வாதங்கள் மீது பெரும் கோபம் கொண்டவராக இருக்கிறார். 
 
மண்டோவின் கதைகள் நெருப்புக்குள் பூத்த நெருப்பு போன்றவை. சுடுவது கண்டிப்பாகத் தெரியும். சமூகம் பேச முடியாத நிஜத்தின் பிடியில் சிக்கிக் கொண்ட பக்கங்களைக் கொண்டவை அவர் கதைகள். நிஜம், கதைகளை விடவும் கற்பனைகளை விடவும் கொடூரமானவை. அப்படி ஒரு ஆண் பெண் நெருக்கமான கதை எழுதியதற்கு அவர் பல வருடம் கோர்ட் கேஸ் என்று அலைக்கழிக்கப்படுகிறார். ஒரு படைப்பாளியின் மிக சிறந்த உன்னத நேரங்களை எல்லாம் அந்த வீணா போன சட்டங்களின் கையில் கொடுத்து விட்டு நாற்காலியின் மீது குத்த வைத்து அமர்ந்து குடித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது.
 
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை அவரைத் தடுமாற செய்கிறது. தன் இந்து நண்பன் கூறிய கூர் சொல் எழுத்தாளனுக்கே உண்டான அவர் மூளையில் ஆழமாய் தைத்து விடுகிறது. லாகூர்க்கு கிளம்பி விடுகிறார். பாம்பேயை விட்டு போக மனமில்லாத அந்த இறுகிய முகத்தின் வழியே வழி நெடுக காலம் காலமாய் இந்திய மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் புலம் பெயர்தலின் வலியைக் காண முடிகிறது. எத்தனை அரசியல் அது. எத்தனை கொடுங்கோலாட்சியின் சாதனை அது. எதற்கோ எவரையோ பலி கொடுக்கும் வியாக்கியானம் அது. அரசியல் சாணக்யத்தனத்தின் கபட நாடகம் அது. இரு பக்கமும் சாயம் பூசப்பட்ட கள்ளத்தனம் அது. உறவுகளும் உரிமைகளும் உண்மைகளும் எல்லைக் கோட்டில் நின்று கொண்டு தவித்து தடுமாறிய இடம் அது. கடைசிவரை எந்தப் பக்கம் போவதென்று தெரியாமல் எல்லைக் கோட்டில் நின்று புரண்டு அழுது அரட்டி தடுமாறிய பல மனிதர்களின் மனப்பிறழ்வுக்கு முன் மண்டோவின் பேனா கோபத்திலும் சோகத்திலும் தனை எப்போதும் உடைத்துக் கொண்டே நிற்கிறது.  
 
பிள்ளைக்கு மருந்து வாங்க சென்று மறந்து போய் குடித்து விட்டு பின்னிரவில் நினைவு வந்து ஓடி வந்து வீட்டுக்குள் நுழைந்து கையறு நிலையில் கீழே சரியும் மண்டோவை அப்படி காண சகிக்கவில்லை. 
 
வாழ்வின் ஒவ்வொரு நாளையும் பெரும் நடுக்கத்தோடு கடந்த மண்டோ நிஜத்தின் பக்கமும் நேர்மையின் பக்கமும் நின்றது தான்...அவருக்கு கிடைக்க வேண்டிய எதுவும் கிடைக்காமல் போனதற்கு காரணம். அதன் நீட்சியில் குடியின் கசப்பு அவர் வாழ்வை குடித்து விடுகிறது. இந்தியாவைப் பிரிந்தது அவரை உள்ளுக்குள் உருக்குலைக்கிறது. கனத்த யோசனையோடு புகை படரும் அறையில் எப்போதும் நாற்காலியில் குத்த வைத்து அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும்....இடையிடையே கைக்கெட்டும் தூரத்திலிருக்கும் மது பாட்டிலைத் திறந்து மடக்கென்று வாயில் கவிழ்த்துக் கொள்ளும் "மண்டோ" பாழ்ப்பட்ட ஒரு சித்திரத்தின் குறியீடாகவே நான் காண்கிறேன்.
 
படத்தில் மண்டோவின் சில கதைகளை நாம் காட்சிகளாகவே காண்கிறோம். அதில் ஒரு கதை.
 
இந்தியா பாகிஸ்தான் பிரிவின் போது ஒரு பெரியவர் தன் பெண்ணை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறார். எங்கெல்லாமோ தேடுகிறார். கிடைக்கவில்லை. பிறகு ஒரு கட்டத்தில் மருத்துவ முகாம் ஒன்றில் ஒரு பெண் சிதைந்து படுத்திருக்கிறாள். அது தன் பெண் தான் என்று கண்ட அந்தப் பெரியவர் கதறுகிறார். மருத்துவர் எந்த சலனுமும் இல்லாமல் ஜன்னலைத் திறங்கள் என்று கட்டளை இடுகிறார். ஜன்னல் திறந்த வெளிச்சம் பட்டதும்...கதவு திறந்து விட்டது என்று அந்த பெண் முணங்கிக் கொண்டே நடுக்கத்தோடு... அசைய முடியாத உடல் மொழியில்... நேரத்துக்கு சாபட வரும் நாயயைப் போல....தானாக பாவாடை நாடாவை அவிழ்க்கிறாள். 
 
மருத்துவர் நடுக்கத்தோடு நடந்திருக்கும் விபரீதத்தை உணர்ந்து கொள்கிறார். 
 
அந்த தகப்பன் நடக்கத்தோடு கதறுகிறார். (மகாநதி ஸீன் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல )
 
கதை அவ்ளோ தான்... 
 
இது தான் மண்டோவின் கதைகள். அதில் ரத்தமும் சதையும் நிஜமும் சமூகத்தின் மீது காரி உமிழும் கோபமும் கலந்திருக்கும். அவர், குறுக்கு சந்துகளின் சிவப்பு வண்ணங்களை உலகத்துக்கு அடையாளம் காட்டுகிறார். நீங்கள் காணும் இந்தியா மட்டும் உண்மையில்லை. உண்மையில் அழுக்கான அடிபாகத்தைக் கொண்டது தான்...இந்தியா என்று அழுத்தமாய் கூறுகிறார். அதற்கு தான் அவர் தொடர்ந்து புறக்கணிப்பட்டார். 
 
வறுமை சூழ்ந்து வாட்டி எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டதுக்கு காரணம், தன் எழுத்தில் சமரசம் செய்து கொள்ளாதுதான். சமரசம் செய்து கொள்ளும் எழுத்தாளன் எப்படி உண்மையான எழுத்தைக் கொடுக்க முடியும். மண்டோவின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் இறுதியில் மண்டோ தான் வெல்வார்.
 
இன்னொரு கதை.
 
வாசலில் நொண்டி விளையாடிக் கொண்டிருக்கும் 10 அல்லது 11 வயது சிறுமிக்கு வேக வேகமாய் புடவை கட்டி முகப்பூச்சு போட்டு உதட்டு சாயம் போடப்படுகிறது. இந்தமுறை காரில் வந்திருப்பதாக அவளின் பெற்றோர்கள் சொல்கிறார்கள். அவளைக் காரில் ஏற்றி விட்டு காசு வாங்கி வணக்கம் போட்டு அனுப்புகிறான் அந்தக் குழந்தையின் அப்பா. அவளும் மிகுந்த சந்தோசத்தோடு அந்த காரில் அமர்ந்து ஜன்னல் வழியே வெளி உலகத்தை  பார்த்து ரசித்துக்கொண்டே பயணப்படுகிறாள். அந்த சிறுமிக்கு எல்லாமே தெரிகிறது. அவள் மிக இயல்பாக நடந்து கொள்கிறாள். அது எப்போதும் நடக்கும் வழக்கம் என்று நமக்கும் புரிகிறது. ஒரு பெரிய மனுஷியின் தோரணையில் இருக்கும் அந்த சிறுமிக்கு அவள் எதற்கு செல்கிறாள் என்று  விளையாடிக் கொண்டிருக்கும் அவளை அவள் அம்மா கூப்பிடும் போதே தெரிந்திருக்கிறது. நமக்குத் தெரிய வருகையில் தான் நாம் காரின் சீட்டு நுனிக்கு வருகிறோம்.
 
காரின் உள்ளே இரண்டு கிழவர்கள்.. ஒரு வாலிபன் இருக்கிறார்கள். அன்று முழுவதும் அவர்கள் நால்வரும் கடற்கரையில் விளையாடுகிறார்கள். அதீத குடியில் காருக்குள்ளேயே அந்த கிழவர்கள் தூங்கி விடுகிறார்கள். இரவில் அந்த வாலிபன் அர்த்தமுள்ள சிரிப்போடு அவளை வீட்டு வாசலில் இறக்கி விடுகிறான். இறங்கி வீட்டுக்குள் செல்லும் முன் அந்த சிறுமி திரும்ப வந்து காலையில் அந்த வாலிபன் கொடுத்த காசை திருப்பிக் கொடுத்து விட்டு, " நான் வேலை செய்யாமல் காசு வாங்குவதில்லை" என்று சொல்லி, வீட்டுக்குள் ஓடுகிறாள். 
 
"இது தான் கடைசி வாடிக்கையாளன்....எழுந்து வா"  என்று அடித்து பிடித்து தூங்கிக் கொண்டிருப்பவளை இழுக்கும் அந்தக் கிழவனிடம் (கணவனோ.... தொழில்காரனோ)
 
"நான் தூங்கி வாரமாகி விட்டது. இன்று மட்டும் விட்டு விடு" என்று கெஞ்சுகிறாள். அவனோ, " ஒரே ஒருத்தன் தான் வா" என்று அடித்து இழுக்கிறான். வாய்ச்சண்டை முற்றி வேறு வழியின்றி அவனைத் கீழே தள்ளி சாய்க்கிறாள். சாய்த்து விட்டு அப்படியே சரிந்து தூங்க ஆரம்பிக்கிறாள். அவன் தலையில் அடி பட்டு செத்துப் போகிறான். ஆனாலும் தூங்கத் தொடங்குகிறாள்... அந்த சிவப்பு விளக்கு பெண் என்று இன்னொரு கதை.... கண்களில் ரத்தம் பாய்ச்சுகிறது. 
 
நான் மிரட்சியின் பிடியில் நின்று தான் மண்டோவின் கதைகளைக் காண்கிறேன். மண்டோ பற்றிய படம் என்னை நடுக்கத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இன்னும் மீள முடியாத துக்கத்தில் இங்கே எழுதுகிறேன்...
 
மண்டோவின் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம் என்றே நானும் எனக்கே சொல்லிக் கொள்கிறேன். 
 
மண்டோவின் மனசாட்சி என்னை உலுக்குகிறது. 
 
- கவிஜி