”மா” குறும்படம், பதின்பருவ அபிலாசையால் ஏற்படும் நிகழ்வுகளை மையப்படுத்தி மிக நேர்த்தியாய் எடுக்கப்பட்டுள்ளது. சிக்கனமான உரையாடல், குறைந்த கதாபாத்திரங்கள், தேவைக்கேற்ப பின்ணணி இசை, இயல்பான கதைக் கரு என்று அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது இப்படம். இதில் சிறப்புகள் பல இருப்பினும், இக்குறும்படம் சிக்கல் வாய்ந்த மென் உணர்வுகளைப் பேசு பொருளாய்க் கையிலெடுத்திடுப்பதால் ஏராளமான விவாதங்களையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் என்று நம்புகிறேன்.

maa short film

சமீபகாலமாய் பதின்பருவ கருத்தரிப்பு பற்றிய செய்திகள் அரசல்புரசலாய் கேள்விப்படத்தான் செய்கிறோம். அதை சில நேரங்களில் பதைபதைப்புடனும் சில நேரங்களில் கண்களுக்குத் தெரியாதது போலவும் கண்டும் காணாமலும் கடந்து போகிறோம்.

பாலியல் குறித்த புரிதலை பள்ளி வகுப்பறையிலிருந்தே புகுத்தப்பட வேண்டும் என்ற ஆலோசனைகள் சமூக ஆர்வலர்களால் நீண்ட காலமாய் முன்வைக்கப்பட்டு வருகிறது. அது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழாமல் இல்லை. ஆனால், அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களின் வீரியத்தை எதிர்கொள்வதற்கான விரிவான தீர்வுகள் இதுவரை இல்லை என்றே படுகிறது.

வளர்ந்த நாடுகளின் நாகரீக, பண்பாடு கலாச்சாரத்தின் வளர்ச்சியை கண்மூடித்தனமாய் வரவேற்கும்போது சில சாதக பாதகங்களையும் சேர்ந்தே அறுவடை செய்ய வேண்டியிருக்கும் என்பது கசப்பான உண்மை.

பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் ஆண்களாகட்டும் அல்லது பெண்களாகட்டும், தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் தாங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழல் உள்ளது. ஆகவே அவர்கள் அதன் நெளிவு சுழிவுகளுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள். உன்னதமான மரபுகளை உடைத்தெறிந்து விட்டதாய்ப் பெருமைப்பட்டுக் கொள்வதுமில்லை. பழமையிலும் புதுமையிலும் உள்ள முரண்களைப் போட்டுக் குழப்பிக் கொள்வதுமில்லை. எதையும் இலகுவாய்க் கடந்து போகக் கற்றிருக்கிறார்கள்.

ஆனால், இங்கே அப்படியில்லை. நம் வாழ்க்கை முறையே ஒட்டுமொத்த பிணைப்பின் தொகுப்பாய் இருக்கிறது. கடைசி வரை ஒருவர் மற்றொருவரை அல்லது ரத்த உறவுகளைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. உண்மையில் சொல்லப்போனால் யாரும் தனக்காக வாழமுடியாத கட்டமைப்பில் இருப்பதாய் ஒரு மாயத்தோற்றம் நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் எல்லோரும் அடுத்தவர்களுக்காகவே வாழ்கிறார்கள். உண்பதும் உடுப்பதும் உறங்குவதும்கூட பிறரின் அபிப்பிராயத்தின் பேரிலேயே நடக்கிறது. அதைவிட போலி கவுரவமும் வறட்டுக் கர்வமும் கண்களுக்குத் தெரியாத வேகத்தடையாய் இடையிடையே வழிமறிக்கிறது.

அதனால்தான் நம்மால் பழமையை விட்டுவிடவும் முடியாமல், புதுமையை முழுமையாய் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் இருதலைக் கொல்லி வாழ்க்கை வாழ்கிறோம். அதற்கு உதாரணம்தான் இந்த ”மா” குறும்படத்தில் சுட்டிக்காட்டப்படும் பதின்பருவ பாலியலும், அதன் தொடர்ச்சியாய் நியாயப்படுத்திச் செய்யப்படும் கருக்கலைப்பும் விவாதப் பொருளாகப் பேசப்படுகிறது.

எது சரி எது தவறு என்பதை வரையறுத்தது யார்? ”சமூகம்” என்றால் நீயும் நானும் யார்? சமூகமல்லவா? நாம் அதிலிருந்து வேறுபட்டவர்களா? என்ற அசட்டுத்தனமான கேள்வியோடுதான் இக்குறும்படத்திற்கான விமர்சனத்தை முன் வைக்கத் வேண்டியிருக்கிறது.

ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாய் வியாக்யானம் சொல்வதென்றால் ஏராளாமாய் சொல்லிச் செல்லலாம். உலகின் பெண்வழிச் சமூகத்திலிருந்து இன்று வரை நடைமுறையில் எப்போதுமே பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்றும், அதற்கு முதன்மைக் காரணம் ஆண்கள்தான் என்றும், இன்னும் எத்தனை காலம்தான் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கப் போகிறோம்? இச்சமூகத்தின் அடிமனதில் ஆழப்பதிந்துவிட்ட இதுபோன்ற எண்ணங்களுக்கு மாற்றுதான் என்ன? இது போன்ற ஏராளமான கேள்விகளுக்குப் பதில் இல்லையா அல்லது பதில் சொல்ல யாரும் விருப்பம் கொள்ளவில்லையா எனத் தெரியவில்லை.

இதில் எதை நியாயப்படுத்த முனைகிறது இச்சமூகம்? பாலியல் கல்வியைக் கற்றுத்தர முனையும்போதே அதன்மேல் அதீத ஈர்ப்பையோ அல்லது வெறுப்பையோ இளம் மனங்களுக்குள் தவறான கற்பிதம் செய்துவிடக் கூடாது என்ற ஆதங்கம் எல்லோர் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது.

பதின்பருவக் காமம் தவறென்றால் பதின்பருவ சிறுமிக்குச் செய்யப்படும் கருக்கலைப்பும் தவறுதானே? பாலியல் விழிப்புணர்வின் மையப்புள்ளி பாதுகாப்பற்ற உறவில் உள்ள பாதகங்களை அல்லது புரிதலை ஏற்படுத்துவது என்றால் பாதுகாப்பு சாதனங்களோடு கொள்ளும் உறவு தவறில்லை என்ற கோணத்தில் எடுத்துக்கொள்வதா? அல்லது அதைப் பற்றிப் பேசுவதே தவறா? போன்ற கேள்விகள் எல்லையில்லாமல் எழுகிறது.

இயற்கையைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் முக்கியத்துவமோ, அதீத ஈடுபாடோ, கவலையோ காட்டுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். விதையிலிருந்து முட்டி முளைத்து வெளிவரும் செடியோ கொடியோ எப்போது மகரந்த சேர்க்கையில் மையல் கொண்டது என்பது யாருக்கும் தெரியாது. அது ஒரு மெளன சாம்ராஜ்யத்தின் மாயாஜாலம். ஏன் எதற்காக என்ற கேள்விக்கெல்லாம் அங்கே இடமில்லை.

அதுபோலத்தான் இளவயது காதலும் காமமும். அதற்கு இடைவெளியும் கிடையாது, இடைவேளையும் கிடையாது. அது காட்டாற்று வெள்ளம் போல எப்போது கரைபுரண்டு ஓடும் என்பது யாருக்கும் தெரியாது. அதைத் திசை திருப்ப முயற்சிக்கலாமே தவிற அதை அணைகட்டித் தடுக்க முயல்வது வீண் வேலை.

காதலும் காமமும் எப்போது ஒன்றோடொன்று வேதிவினை புரியும் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் அதைத் தவறென்று சுட்டிக்காட்டி மடைமாற்றம் செய்வதும் ஒரு விதத்தில் மென்வதைதான்.

     பெண்ணைப் பெற்றவர்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதைவிட நெருப்பின் விளைவால் ஏற்படும் விபரீதத்தை சுட்டிக் காட்டுவதோடு நிறுத்துக் கொள்ள வேண்டும்` அதைவிடுத்து அதைத் தவறென்ற கோணத்தில் வசைநெருப்பை பதின் பருவ வயதினரின் மேல் வீசுவதும் தவறு, நெருப்பின் மகிமையையேக் காட்டாமல் மறைப்பதும் தவறு. இரண்டுமே எதிர்மறையான விபரீதத்தை ஏற்படுத்தாமல் தவிர்ப்பதே இளம்பருவத்திற்கான அழகு.

- வே.சங்கர்