அழகிய தமிழ்மகன், அதிதி போன்ற படங்களின் இயக்குனரும் தில், தூள், வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாவுமான பரதன் இயக்கத்துல விஜய் நடிச்சு வெளிவந்துருக்குற படம் "பைரவா".

vijay keerthi suresh

சில நாட்களுக்கு முன் கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா, சசிகுமார் உள்ளிட்ட பத்து இயக்குனர்களிடம் நடிகர் விஜய் கதை கேட்டுக் கொண்டிருப்பதாக ஒரு செய்தி வெளியானது. அந்தப் பத்து இயக்குனர்களின் கதைகளிலிருந்தும் விஜய் தேர்ந்தெடுத்த அந்த ஒற்றைக் கதைதான் இந்த பைரவா. ஒரு இயக்குனராக தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்காக பரதன் அவர்களுக்கு விஜய் வழங்கிய வாய்ப்புதான் இதுன்னு சொல்லலாம். அந்த வாய்ப்பை பரதன் சரியாகப் பயன்படுத்துனாராங்குறதை விட அவருக்கு இவ்வளவுதான் வரும் அப்படிங்குற உண்மைதான் தெரியவருது.

கதாநாயகியோட பிரச்சினையை தீர்த்து வைக்க நகரத்துல இருந்து கிராமத்துக்குப் போற கதாநாயகன். இதான் கதை. முதல் பாதி நகரம். இரண்டாம் பாதி கிராமம்னு போற அதே பழைய டெம்ப்ளேட். முதல் பாதியைப் பொருத்தவரை ஓரளவு நன்றாகவே இருந்தது. படத்தோட முக்கிய மையமான ஒரு பிரச்சினையும் அதையொட்டி அந்தப் பிரச்சினையில கதாநாயகன் தன்னை இணைச்சிக்கிற இடைவேளை சண்டையும் நல்லாவே வொர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனா அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குற இரண்டாம் பாதியை சுவாரஸ்யமா அமைக்குறதுல திரைக்கதை கோட்டை விட்டுருது.

ஜில்லா, வேட்டைக்காரன் போன்ற படங்கள்ல விஜய் என்ன குடுத்தாரோ அதையேதான் இதுலயும் தந்துருக்காரு. குழைந்து, குழைந்து பேசுவது, காதலியுடன் ரொமான்ஸ், உறவுகள்/பெண்களின் முக்கியத்துவம் பற்றிய வாழ்க்கை வசனங்கள், ட்ரெண்டிங்கில் இருக்கும் சில பல பிரச்சினைகளை வசனங்களில் வைப்பது , பறந்து பறந்து உதைப்பது என அதே ஃபார்முலாதான் இதிலும். வழக்கமான அவரின் துள்ளலான நடனம் மட்டும் மிஸ்ஸிங்.

ஒரு சில காட்சிகளில் சந்தோஷின் தீம் மியூசிக்கில் விஜயின் மாஸ் காட்சிகள் நன்றாகவே இருந்தது. கீர்த்தி சுரேஷ் வந்து போகிறார் அவ்வளவே. வில்லனாக ஜெகபதிபாபுவும் எதுவும் சிறப்பாக செய்யவில்லை. கோட்டை வீரனாக டேனியல் பாலாஜி மிரட்டுகிறார். சந்தோஷ் நாராயணன் நம்ம அசந்த நேரமா பாத்து இன்ட்டர்ஸ்டெல்லர், டார்க் நைட் தீம் மீயூசிக்கை எல்லாம் உள்ளே நுழைச்சு ஏமாத்திருக்காரு. சண்டைக்காட்சிகள் படத்தை ஏத்தி விட முயற்சி செய்யுது. ஆனாலும் ஒரு சில காட்சிகளுக்கு மேல் சண்டைக்காட்சிகளும் சலிப்பைத் தந்துருது.

மொத்தத்துல வழக்கமான தமிழ் மசாலா ஃபார்முலாவுல இருந்து கொஞ்சமும் விலகாத ஒரு படம். விஜய் ரசிகர்களுக்குப் பிடிக்கும். விஜயைப் பிடிக்காதவர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்காது. முக்கியமான ஒரு மேட்டர் என்னன்னா விஜய்யோட படங்களை மாஸ் ஹிட்டா மாத்துற நியூட்ரல் ரசிகர்களை பைரவா கவருவது ரொம்பக் கடினம்.

- சாண்டில்யன் ராஜூ