தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்தியின் சுயநலத்திற்காக எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை சொல்லும் படம் 'பரதேசி'. திணிக்கப்பட்ட வக்கிரங்களும், தீர்வில்லாத சோகமும் பாலா படத்தின் அடையாளங்கள். பாலாவின் முந்தைய படங்களில் செயற்கையான வன்முறைக் காட்சிகளுக்காகவே கதாபாத்திரங்களை படைத்திருப்பார். இப்படம் வரலாற்றின் உண்மையான துன்பவியல் சம்பவத்தை பதிவு செய்வதால் பாலாவின் வன்முறைக் காட்சிகளுக்கு ஏற்ற களமாக இருக்கிறது. இருப்பினும் பாலாவின் முந்தைய திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் அபத்தமான, வக்கிரமான, வன்முறைக் காட்சிகள் இப்படத்தில் குறைவு.

paradesi_644

வேலைக்குச் செல்லும் பாதையில் நோய்வாய்பட்டு ஒருவர் தவிப்பதும், அவ்வுயிரை பொருட்டாக மதிக்காம‌ல் கங்காணி இழுத்துச் செல்வதும் இதயத்தை பிழியும் தருணம். படத்தின் இறுதி காட்சியில் கதாநாயகன் தன் சொந்த பந்தத்தை பார்க்க ஆசையா இருக்கு, இதற்கு ஒரு விடிவு இல்லையா? என்று கதறுவதும், அந்த நேரத்தில் தன்னுடைய மனைவியும், மகனும் கொத்தடிமைகளாக தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைவதும் பார்வையாளர்களை பதற வைக்கிறது. ‘உயிருடன் வாழ்ந்துவிடலாம், வயிருடன் வாழ வேண்டியிருக்கிதே' என்கிற வரிகள் இம்மக்களின் வாழ்க்கை அவலத்தை கண்ணீருடன் பதிவு செய்கிறது. இத்திரைப்படம் பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இம்மக்களின் இந்த வாழ்வியல் சூழலுக்கு என்ன காரணம்? பின்னணி என்ன? உடைமை சமூகத்திற்கும், சனாதன அமைப்பிற்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்த எந்த வித கருத்தும் இத்திரைப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை. 'ஒட்டு பொறுக்கி'யாக வரும் கதாநாயகன் திருமண வீட்டில் ஒரு வாய் சோறு கூட கிடைக்கமால் ஏங்குவது, அதைப் பார்த்து ஊர் மக்கள் கைகொட்டி சிரிப்பதும் நம்பமுடியாத அபத்தம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விட கொடூரமான குணம் படைத்தவர்களா அடித்தட்டு மக்கள்? இந்தியாவில் உடைமைச் சமூக ஆதிக்கத்திற்கும் பார்ப்பனிய கருத்தியலுக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளாமல் விளிம்புநிலை மக்களின் அவலத்தைப் பேச முடியாது. அப்படி பேசத் துணிந்தால், அது ஆபத்தில் தான் முடியும். ஆந்த ஆபத்துதான் பாலாவிடமும் இருக்கிறது. 2500 ஆண்டுகால பார்ப்பன ஆதிக்க சிந்தனையை எதிர்க்கும் வரலாற்றினை 'பாலா'விடம் எதிர்பார்ப்பது சற்று மிகையானதுதான்.

இருப்பினும், அவருடைய படங்களில் தொடர்ச்சியாக சிறுபான்மை எதிர்ப்பு அரசியல் தலைதூக்குவதை நாம் காண முடிகிறது. தான் ஒரு நாத்திகன் என்பதைக் கூட ‘சிறுபான்மை எதிர்ப்பு' மூலமாகத்தான் நிறுவ முயல்கிறார். அவருடைய ‘சேது'வில்  துவங்கி அனைத்து படங்களிலும் ‘இந்துத்துவ' பொதுப்புத்தி வெளிப்படுகிறது. ‘சேது'வில் பார்ப்பன பெண்ணை காதலிப்பதால் சூத்திர கதாநாயகனுக்கும், அப் பார்ப்பான பெண்ணின் வீட்டிற்கும் ஏற்படும் சோகத்தை காட்டியிருப்பார். பிதாமகனில், 'அய்யமாருங்க சுத்தமாக‌ இருப்பாக, அவங்களுக்கு வயிற்றுப்பிரச்சனை வராது. ஆனா நாம அப்படியில்லை நாறப் பயலுக' என்று லேகியம் விற்பனை செய்யும் கதாநாயகன் பேசுவார். ‘நான் கடவுள்' படத்தில் ‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி அறிவோடதான் இருக்கான்' என்று வில்லன் வசனம் பேசுவான். மேலும் அப்படத்தில் வடக்கத்திய கடவுள்களும் மந்திரங்களும் சக்தி வாய்ந்தவை; தெற்கே இருக்கும் சாமியார்கள் ஏமாற்றுக்காரர்கள் என்கிற கருத்தியலை பதிவு செய்திருப்பார். ‘அவன் இவன்' படத்தில் நான் கோட்டாவுல (இடஒதுக்கீடு) வேலைக்கு சேர்ந்துட்டேன்; எனக்கு எதுவும் தெரியாது' என்று கதாநாயகி வசனம் பேசுவார். மேலும் அப்படத்தில் ‘மாட்டுக்கறி' உண்பது புனிதத்திற்கு எதிரானது என்ற வசனம் இடம் பெறும்.

ஆக பாலாவின் அனைத்து படங்களிலும் ‘இந்துத்துவ மனநிலை' அப்பட்டமாக வெளிப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ‘பரதேசி' படத்திலும் சிறுபான்மையினருக்கு எதிராக‌ விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவம் பார்க்க வந்த டாக்டர்கள் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்வதாக கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் ஆடிப்பாடி கிறிஸ்துவத்தை பரப்புவதாகவும், பிரச்சாரம் முடிந்தவுடன், இருவரும் கேளிக்கைகளில் ஈடுபடுவதாகவும் இப்படத்தில் காட்டப்படுகிறது. திட்டமிட்டு கிறிஸ்துவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்கிற நோக்கோடு ‘பாலா' காட்சிகளை அமைத்திருக்கிறார்.

இந்து ‘கள்ளனும்', இந்து ‘பள்ளனும், கிறிஸ்தவனாக மாறுவது இனியும் தொடரக்கூடாது என்பதே பாலாவின் உள்ளார்ந்த எண்ணம். இத்திரைப்படம் கூட மதமாற்ற தடைச்சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரம்தான். பார்ப்பன சனாதனிகள் செய்ய வேண்டிய வேலையை சூத்திரசாதியைச் சேர்ந்த ‘பாலா' அதுவும் ஒரு நாத்திகர் செய்திருப்பது சங்பரிவாள் வட்டாரங்களை மகிழ்ச்சிபடுத்தும். சரி பிரிட்ஷ்காரர்கள் மதப்பிரச்சாரம் செய்யவில்லையா? அந்த உண்மையை பதிவு செய்யக்கூடாதா? என்று கேட்கலாம். உண்மைதான் பிரிட்டிஷ்காரர்கள் மதப்பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், கிறிஸ்துவ மதப் பிரச்சாரத்தையும் ஒரே நேர்கோட்டில் காட்டியிருப்பது இயக்குனரின் தவறான வரலாற்றுப் பார்வை.

நோய்வாய்ப்பட்டவர்களிடமும், கல்வியறிவற்றவர்களிடமும் சுகாதாரத்தையும், மருத்துவத்தையும் அளித்தத‌ன் மூலமே கிறிஸ்தவ மதம் வளர்க்கப் பட்டது. பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இந்து சனாதன சாக்கடையிலிருந்து தங்களை விடுவித்து கொள்ள கிறிஸ்துவத்தை நாடினர். பெரும்பாலும் காணத்தகாத சமூகமாக இருந்த நாடார்களும், தீண்டத்தகாத சமூகமாக இருந்த தாழ்த்தப்பட்டவர்களும் கிறிஸ்துவர்களாக மாறினர். ஆரம்ப காலத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்த கிறிஸ்தவ பாதிரியாளர்கள் மீட்அய்யர், ரிங்கல்பே அய்யர் என தங்களை உயர்சாதி அடையாளங்களுடன் இணைத்துக் கொண்டனர். இல்லாவிடில் இங்கு உயிருடன் இருக்க முடியாது. இயேசுவின் சீடராக அறியப்படும் ‘புனித தோமையர்' எனப்படும் பாதிரியாரை பார்ப்பனர்கள் கொலை செய்த சம்பவம் வரலாற்றில் உண்டு.

உடன்கட்டை ஏறுதல் என்னும் கொடுமையான பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள பார்ப்பன பெண்கள் பலர் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தனர். இதற்கான ஆதாரங்கள் நெல்லை மாவட்ட வரலாற்றில் அதிகம் கிடைக்கின்றன. இந்தியாவில்  கிறிஸ்தவ மதத்தின் தோற்றுவாய் இப்படி இருக்க, இந்த வரலாறு குறித்த அறிவு இல்லாமல் குறைந்தபட்ச நேர்மையும் இல்லாமல் பாரதீய சனாதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் போல் பாலா செயல்பட்டிருக்கிறார். தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் துயரத்தை பதிவு செய்யும் கனமான கதைக் களத்தில், கிறிஸ்தவ எதிர்ப்பை செயற்கையாக திணிக்க வேண்டிய அவசியம் என்ன?

விளம்புநிலை மக்களின் அரசியல் பேசும் இப்படத்தில் இராம.கோபாலனை மகிழ்ச்சிப்படுத்திருக்கும் ‘பாலா'வின் திரைப்பயணம் ஆபத்தானது.

- ஜீவசகாப்தன்

Pin It