நீதித் துறைக்குப் பரந்த அதிகாரங்கள் இருக்கின்றன. அவை இறுதியானவை, தவறே இழைக்காத தன்மை கொண்டவை என்பதால் நிர்வாக அமைப்பு சட்டத்தை மீறுகிறபோது ‘நீதிபதிகள் தங்கள் நீதிப் பேராணை அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய நடவடிக்கைகளைப் புறந்தள்ளி உத்தரவுகளை இடலாம்.பாராளுமன்றம் அரசியல் சாசனத்தின் வரம்புகளை மீறி சட்டம் இயற்றுகிற போது அல்லது அடிப்படை உரிமைகளின் வரம்புகளுக்கு அப்பால் சென்று உத்தரவுகளை இடும்போது நீதிமன்றம் அந்த உத்தரவையும் நடவடிக்கையையும் தகர்க்க முடியும், ஆனால் உயர் நீதிமன்றங்கள் கட்டுப்பாடற்ற முறையில் வரம்புகளை மீறுகிறபோது அவற்றைச் சரி செய்வதற்கு எந்த அமைப்பும் இல்லை, அவர்களுடைய கடமைகளில் தவறிழைக்கிறபோது அதைக் கையாள்வதற்கு எந்த விதிமுறையும் இல்லை. ஒவ்வொரு அரசியலமைப்புக்கும் குறிப்பாக இந்திய அரசியலமைப்புக்கு ஒரு சமூகத் தத்துவம் இருக்கிறது: நம்முடையது ஒரு சோசலிச,சமயச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு.இந்தக் கட்டளைகள் மீறப்பட்டால், அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிற நல்ல நடத்தை தூக்கியெறியப் படுமானால், அவர்களை ஒழுங்குபடுத்துவதற்கோ அவர்களுடைய தவறான நடத்தையை திருத்துவதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

சாராம்சத்தில் நீதிபதிகள் பிற அரசாங்க அதிகாரிகளில் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல.நல்லவேளையாக, அவர்கள் தமது நீதித்துறைப் பொறுப்புக்க்களை ஏற்ற பிறகும் கூட மனிதர்களாகவே இருக்கிறார்கள்.மனித இனத்தின் எஞ்சியோர் அனைவரையும் போல அவர்களும் அவ்வப்போது பெருமிதத்தாலும் பேரவாவினாலும் அற்பத்தனத்தாலும் காயம்பட்ட உணர்வாலும், சரியாகப் புரிந்து கொள்ளாததாலும் அளவுக்கு மீறிய லட்சிய உணர்வின் உறசாகத்தாலும் பாதிக்கப்படலாம்.’ – ஹியூகோ பிளேக்.

நீதிபதிகள் குறித்த தனது நூலில் டேவிட் பைமிக் பின்வருமாறு கூறியிருக்கிறார்:

நீதிபதி பதவிகளை வந்தடையும் சிலர் சில நேரங்களில் ‘மனிதச் சதையின் வாரிசுரிமைகளாக இருக்கும் தற்பெருமையை, எரிச்சலை, குறுகிய எண்ணத்தை, செருக்கை மற்றும் வீண் ஆரவாரப் பலவீனங்களை வெளிக்காட்டுபவர்களாக இருக்கிறார்கள்’ என்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஜேக்சன் 1952 ல் கருத்துக் கூறியுள்ளார்.ஆங்கில நீதித் துறையில் இடம் பெற்றுள்ள சில புகழ்பெற்ற நீதிமான்கள், தாம் பதவியில் இல்லாத ஓய்வு பெற்ற காலத்திலும் கூட நீதி வழுவிய முறையில் செயல்பட்டதில்லை என்பது வியப்புக்குரியதாகவும் உண்மையில் எச்சரிக்கையாகவும் இருக்கும்...இது அண்மையில் சட்ட அதிகாரி ஹாலிசாம் பிரபுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.நீதி வழங்குவதற்காக அமருவோர் நீதிபதிகளின் நோய் என்று அவர் அழைக்கிற நோய்க்கு ஆளாகிறார்கள், அதாவது பகட்டாரவாரம், எரிச்சலடைவது, வாயாடுவது,வழக்கில் தீர்ப்பு சொல்வதற்கு தேவையில்லாத கூற்றுக்களை உதிர்ப்பதற்கு விருப்பம் கொண்டிருப்பது, குறுக்குவழிகளை நாடும் போக்கு ஆகியவற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

இந்த நோய்க்குறிகளுக்கு எதிராக குணமாக்கும் மருந்து எதுவும் சட்டத்தில் இல்லை, இருப்பது பாராளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவரும் அரசியல்ரீதியான தீர்வு தான், அது நோயைத் தீவிரமாக்குமே தவிரத் தீர்க்கக்கூடியது அல்ல. இந்த அபாயகரமான தீங்குகளை விட மோசமானது ஆக்டன் பிரபு சுட்டிக்காட்டியுள்ளது போல ‘அதிகாரம் ஊழலைப் பிறப்பிக்கிறது, முழுமையான அதிகாரம் முழுமையான ஊழலைப் பிறப்பிக்கிறது.’ஒரு ஜனநாயக நாட்டில் உள்ள மக்களுக்கு நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை இருக்கிறது, அது வெளிப்படையானதாக, சுதந்திரமானதாக, நல்ல நடத்தை உள்ளதாக, பக்கச்சார்பு அற்றதாக, தவறிழைக்கும் தனமையற்றதாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தகராறையும் தீர்ப்பதில் இறுதியாக முடிவு எடுக்கக் கூடிய சொல் அங்கியணிந்த சகோதரர்களின் வாயிலிருந்து வருவது தான்.அவர்களைத் தேர்ந்தெடுப்பது முழுக் கவனத்துடனும் செய்யப்பட்ட வேண்டும்.அவர்களுடைய அரசியல் மற்றும் வர்க்கச்சார்பு தப்பெண்ணங்கள் குறித்து புலனாய்வும் திறனாய்வு ரீதியான மதிப்பீடும் செய்யப்படவேண்டும். (நீதிநிர்வாகத்தின் அரசியல் என்ற நூலில் பேராசிரியர் கிரிபித் கூறியுள்ளது.)

‘இரு தரப்பையும் சமமாகக் கருதும் நீதிபதிகள் எங்கே இருக்கின்றனர்? அவர்கள் அனைவரும் முதலாளிகளுடன் ஒரே சுற்றத்தில் இருக்கின்றனர்; முதலாளிகளின் கருத்துக்களிலேயே கற்பிக்கப்படுகிறார்கள்; முதலாளிகளின் கருத்துக்களிலேயே வளர்க்கப்படுகிறார்கள்.ஒரு தொழிலாளியோ ஒரு தொழிற்சங்கவாதியோ அவர்களிடம் எப்படி ஒரு பாகுபாடற்ற நீதியைப் பெறமுடியும்?உங்களுடைய சொந்த வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் உங்கள் வர்க்கத்தைச் சாராத ஒருவருக்கும் இடையில் எழும் தகராறில், நீங்கள் முழுக்க முழுக்கப் பக்க சார்பு இல்லாத நிலை எடுத்துள்ளீர்கள் என்று உங்களுக்கு நீங்களே உறுதிப் படுத்திக் கொள்வது மிகவும் கடினம்.’ –நீதிபதி ஸ்க்ரட்டன் பிரபு.

நீதியின் லட்சியதிற்கும் தடயவியலுக்கும் மிகவும் அச்சுறுத்தும் அபாயமாக இருப்பது ஊழல், வகுப்புவாதம் மற்றும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சலுகை காட்டுவது ஆகியனவாகும். அண்மைக்கால ஆண்டுகளில், இவற்றில் முதலாவது, நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மட்டத்தில் கூட வானளாவிய அளவுக்கு பாதித்துள்ளது.குற்றம் புரிந்துள்ள நீதிபதிகள் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது மலட்டுத் தனமானதாகும், மேலும் ராமசாமி வழக்கில் எழுந்த சீற்றம் தெளிவானது., தலைமை நீதிபதி வர்மாவால் ஆதரிக்கப்பட்டு, பிரசாந்த் பூஷனால் தலைமை நீதிபதிகளுக்கு எதிராக சுமத்தப் பட்ட ஊழல குற்றச்சாட்டில் குறைந்தபட்ச மிகைப்படுத்தலாவது இருக்கிறதா? அவ்வப்போது நீதிபதிகள் மீதான ஊழல குற்றச்சாட்டு ஏராளமாக அதிகரித்துக் கொண்டே போகிறது.

நம்பிக்கைத் தீர்மானம் என்பது தீர்வே அல்ல. நிலுவைகள் குவிந்து கொண்டே போகின்றன, ஊழல உயர்ந்து கொண்டே போகிறது. பார்க்கின்சன்ஸ் விதிகளோ (எண்ணிக்கையை அதிகரிப்பது) பீட்டர் கோட்பாடோ (தகுதியின்மை தீவிரமடைவதோ) தீர்வு அல்ல. ஒரு நியமன ஆணையமும் ஒரு செயல்பாட்டு ஆணையமும் தாம் ஒரு செயலூக்கமான தீர்வாகும்.அந்த ஆணையத்திற்கு நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்களை நிராகரிக்கவும் பதவியேற்புக்கு முன்பாக வெளிப்படையாக அறிவிக்கவும் கூடிய விரிவான அதிகாரங்கள் இருக்க வேண்டும்.நீதிபதிகளின் தவறான நடத்தை குறித்து விசாரணை நடத்தவும் நிரூபிக்கப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யவும் செயல்பாட்டு ஆணையத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டு இவை நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளின் பகுதிகளாக்கப்பட வேண்டும். முன்மொழியப்படும் நியமனதாரர் பற்றிக் கருத்துத் தெரிவிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்க வேண்டும்.ஏன்?ரோமானியப் பழமொழி கூறுவதாவது: ‘நம்மைத் தீண்டக்கூடிய ஒவ்வொன்றும் அனைவராலும் தீர்மானிக்கப படவேண்டும்’.நமது நீதித்துறை இன்னும் கூட ஒரு விலைமதிக்க முடியாத பொக்கிஷம் ஆகும், ஆனால் அவர்களுக்கு ஒரு கல்லூரியும் காலமுறைப்படியான பாடத்திட்டமும் இருக்க வேண்டும். அப்படிச் செய்யப்பட்டால் நாம் நமது அங்கியணிந்த சகோதரர்கள் பற்றி அகஸ்டசின் சொற்களில் கூறிக் கொள்ள முடியும்.

‘நான் ரோமை செங்கற்களைக் கொண்டு கட்டினேன், பளிங்குக் கற்களுடன் விட்டுச் செல்கிறேன்’ என்று அகஸ்டஸ் பெருமைப்பட்டுக் கொண்டான. ஆனால் அவன் நீதியை, தனது விருப்பத்துக்குரியதாகக் கண்டு அதை எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், மூடி முத்திரையிட்ட புத்தகமாகக் கண்டதை உயிருள்ள எழுத்துக்களாகவும், பணக்காரர்களின் பரம்பரைச் சொத்தாகக் கண்டதை ஏழைகளின் வாரிசுரிமையாகவும், இருபுறமும் கூர்முனை கொண்ட, திறமைக்கும் ஒடுக்குமுறைக்கான வாளாகக் கண்டதை நேர்மைகொண்ட அதிகார அமைப்பாகவும் கள்ளங்கபடமற்றோரின் கேடயமாகவும்  செய்ததாக சொல்ல நேர்ந்தபோது அந்த ஆட்சிமுறை எந்த அளவுக்கு உயர்ந்ததாகப் பெருமைப்படுக்கொண்டிருக்க முடியும்.’

(நியூ ஏஜ் ஜூன் 5-11.)

நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
தமிழில்: வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It