கோ என்றொரு திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடத்தொடங்கி இருக்கிறது. அதன் கதைச்சுருக்கம்.:

நாயகன் ஜீவா ஒரு நாளிதழின் புகைப்படக்கலைஞர். இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என அழைக்கப்படும் புலனாய்வு இதழியல் துறையில் சாதிக்க துடிக்கும் நாயகனாக அறிமுகமாகிறார். ஒரு வங்கிக் கொள்ளையை முடித்து விட்டு முகமூடிக்கொள்ளையர்கள் தப்பிக்க முயலும் படலத்தில் அவர்களில் ஒருவரை தவிர மற்ற எல்லாரையும் படமெடுக்கிறார் ஜீவா. அந்த படங்களின் உதவியால் அவர்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் பிடிபட பணமும் மீட்கப்படுகிறது.

இதனை அடுத்து கோ படம் முழுக்க முழுக்க மேலோட்டமான அரசியல் ஜரிகை நிகழ்வுகளை முன்னெடுத்தபடி நகர்கிறது. ஆளும் முதல்வர் ப்ரகாஷ் ராஜ், எதிர்கட்சி தலைவர் கோட்டா சீனிவாசராவ் ஆகிய இரண்டு பேரின் வெவ்வேறு நடவடிக்கைகள் (முன்னவர் ஒரு பத்திரிக்கையாளரை செருப்பால் அடிக்கிறார்/பின்னவர் 13 வயது சிறுமியை ஜோசியாலோசனையின் பேரில் திருமணம் செய்கிறார்) இரண்டு நிகழ்வுகளுமே ஒரே கதாநாயக ஜீவா எடுக்கும் புகைப்படங்களால் வெளி உலகத்திற்கு தெரிய வருகிறது. இதனால் அரசு இழப்பதும் அரசு அடைவதும் நிகழாது என நன்கு உணர்ந்த கதைசொல்லிகள் அடுத்த கிளைக்கதையாக ஒன்றை நுழைக்கிறார்கள்.

அரசியலில் நுழைய முன்வரும் மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் சிறகுகள் என்னும் அமைப்பை ஆரம்பித்து அவர்கள் அஜ்மல் தலைமையில் அதே பொதுத் தேர்தலில் நிற்கின்றனர். இரு பெரும் கட்சிகளின் சரிவு/ஒரு புதிய இயக்கத்தின் எழுச்சி என்று யோசிப்பதே நல்ல கற்பனை தான். அந்தக் கற்பனையை திரைப்படுத்த மிக வறண்ட காட்சிக்கோர்வையை கையிலெடுத்து குரங்கு கை மாலையாக மாற்றி இருக்கிறார்கள்.

குடிசை எரிகிறது/அஜ்மல் அடிபடுகிறார். முத்தாய்ப்பாக அஜ்மலின் பிரச்சார மேடையில் குண்டு வெடிக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். அதில் ஜீவாவுடன் பணிபுரியும் பியாபாஜ்பாய் இறப்பதற்கு முன்னால் அவர் அனுப்பிய குறுந்தகவல் தான் அஜ்மலை மட்டும் ஜீவா காப்பாற்ற காரணமாக இருக்கிறது. இதற்கு பின் இரண்டாவது பகுதியில் அஜ்மல் முதல்வராகிறார். சரி யார் யாரோ ஆண்ட பூமி எம் அன்னைத்தமிழ் நாடு.. அஜ்மல் கொஞ்சம் ஆளட்டும் அதுவும் படத்தில் தானே என நினைத்தால் அதன் பின் இன்னும் கதை சொல்கிறார்கள்.

1.அஜ்மல் மற்றும் ஜீவா ஒன்றாகப் படித்தவர்கள். ஜீவாவும் சிறகுகள் அமைப்பில் ஒருவர்.
2.அஜ்மல் மட்டும் கெட்டவர். சிறகுகள் அமைப்பில் மற்ற எல்லோரும் நல்லவர்கள்
3.அஜ்மல் முதல்வராக உதவி செய்த போஸ் வெங்கட் ஒரு நக்ஸலைட். அவர் கெட்டவர்.
4.போஸ் வெங்கட் குழு செய்ததுதான் பியா கொலை, முதல் காட்சி வங்கிக்கொள்ளை ஆகியவை.
5.போஸ் வெங்கட் தான் வெடிகுண்டு வைத்தது. அதை வெடிக்க செய்தது அஜ்மலே தான்.

போதும். இந்த படத்தைப் பார்க்கிறவர்களைக் காப்பாற்றுவது நம் வேலை அல்ல. அவரவர் தலை எழுத்துப்படி நடக்கட்டும்.

கோ....... ஓட்டைப்பானையில் செய்த சமையல்

சில கேள்விகள்:

1. இந்த படத்தில் வருவது எதுவுமே நம்பத்தகுந்தது இல்லை. எல்லாமே இயக்குநர் மற்றும் கதாசிரியர் விருப்பப்படியே நிகழ்கின்றன என்றாலும் கூட, இதில் வரும் நக்சல்கள் எந்த ஊரிலும் நாட்டிலும் காணப்படாதவர்களாக இருக்கிறார்கள்.

2. நக்சல்கள் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றுவதை லட்சியமாகக் கொண்டவர்கள் என்பதுதான் வரலாறு. ஒருபோதும் நக்சல்கள் தேர்தல் முறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் அல்ல என்பதும் தெளிவு.

3.நக்சல்கள் ஆயுதம் தாங்கி ஒருபோதும் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் மக்களை நேரடியாக அழிக்க கூடிய செயல்களை செய்திருப்பதாக தெரியவில்லை. இந்த படத்தில் செய்கிறார்கள்.

4.நாடறிந்த நக்சலைட் ஒருவர் மக்கள் மத்தியில் பிடிபட்டபோது அவர் கையில் துப்பாக்கி இருந்தும் ஒருமுறை கூட அதனை மக்கள் மீது பிரயோகிக்காமல் அடிவாங்கிச் செத்தது வரலாறு. சகட்டு மேனிக்கு துப்பாக்கியை சுழற்றுகிறார்கள் இந்த படத்து கொள்ளை நக்சல்கள்

5.நக்சல்களை நான் ஆதரிக்கவில்லை. என் வேலை விமர்சனம் மட்டுமே. ஆனால் எந்த ஒரு நக்ஸலைட் இயக்கமும் ஒரு தெளிவான கொள்கை, ஒரு தெளிவான கோட்பாடு சித்தாந்தம் ஆகியவற்றை வரையறுத்து வைத்துக் கொண்டு போராடுபவர்களே. இந்த படத்தில் வரும் நக்ஸலைட்கள் கொள்ளைக்காரர்களாக/ கொள்கையற்றவர்களாக/ காட்டிக் கொடுப்பவர்களாக/ பணத்திற்காக தமது தலைவனை கொல்லத்துடிப்பவர்களாக சித்தரிப்பதில் இருக்கும் முனைப்பை உண்மையான அரசியல்வாதிகளை அவர்களின் கோர மறுமுகங்களை, அவர்கள் குவித்திருக்கும் சொத்துக்களை, அவர்கள் செய்து மறைத்த கொலைகளை, அவர்களால் கற்பிழந்த பெண்களை இன்னும் இன்னும் பலவற்றை அப்படியே சித்தரிப்பதில் காட்டி இருக்கலாம்.

6.அப்படியே ஒரு வாதத்திற்கு சொல்வதானாலும் கூட தமிழ்நாட்டில் தொடர்ந்து நக்சலைட்கள் ஒடுக்கப்பட்டே வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க ஊறுகாய் மாதிரி எதற்கு அவர்களை கொடியவர்களாக சித்தரிக்க வேண்டும்..?

அரசியல் சாராமல் சினிமா இல்லை என்பது தெரிந்த விஷயம். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. சினிமாவுக்கு இளைத்தவர்கள் முஸ்லிம்கள், நக்சலைட்டுக்கள்.... எடுங்கள்.. இன்னும் படமெடுத்து கலைமாமணிகளாக பீடு நடை போடுங்கள்.