தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் பலர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ‘உலகப் பெருந்தமிழர் - தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்’. தமிழ் இலக்கிய உலகிற்கு முக்கிய ஆவணங்களைத் தந்தவர். அவரை ஆவணப்படுத்தி வந்துள்ள படம் ‘உலகப் பெருந்தமிழர் - தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் - வாழ்வும் பணியும்‘. எழுதி, இயக்கி இருப்பவர் ந. செல்வன். இப்படம் மூலம் தமிழுக்கு இவர் பெருந்தொண்டாற்றியுள்ளார் என்றால் மிகையல்ல.

1930ம் ஆண்டு ஜனவரி 30ல் நெல்லையில் வாழவந்தாள்புரத்தில் பிறந்து படிப்பை முடித்து 1946 முதல் ஆசிரியர் பணியுடன் தன் இலக்கியப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். இன்னும் ஓயவில்லை. இயர்பெயர் கிருஷ்ணன். தந்தை இராமு. தாய் வாழவந்தாள். குல தெய்வம் வாழவந்தாள் அம்மை. ஊர்ப் பெயரும் தாய்ப் பெயரும் குலதெய்வம் பெயரும் ‘வாழவந்தாள்’ என்று அமைந்துள்ளதை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தன் தாயே எடுத்துக்காட்டு என்றும் தன் தந்தையை வாய்மைத் தவறாதவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பணிபுரியத் தொடங்கிய தொடக்கப்பள்ளியை அதன் தாளாளர் மூட முயன்ற போது தன் ஊதியத்தில் பள்ளியை விலைக்கு வாங்கி நடத்தத் தொடங்கினார். பின்னர் கரிவலம்வந்தபுரத்தில் அரசு பணிபுரிந்த போது இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். அரசு பணியில் இருப்பவர் பிற நிகழ்வில் பங்கேற்கக் கூடாது என்று கூறிய போது பதவியையே துறந்துள்ளார்.

உண்ணச் சிறிது போதும்

உறங்க படுக்கைத் தேடேன்

எண்ணப் பொழுது வேண்டும்

எழுத உரிமை வேண்டும்

இது அவரின் குறிக்கோள். பின்னர் பல பொறுப்புகளை வகித்த போதிலும் தமிழ்ப்பணியை விடவில்லை. மனைவி செல்வம் அணிந்திருந்த ஆபரணங்களை விற்றே நூல் ‘செல்வங்களை’ சேகரித்துள்ளார்.

ஓர் இளம் மாணவி கைம்பெண் ஆனதைக் கண்டு மனம் நொந்து அவள் மறுவாழ்வு பெற வேண்டும் என ‘விதவைக் குரல்’ என்னும் தொகுப்பு எழுதி ‘இன்ப வாழ்வு’ என பெயர் மாற்றம் செய்து மு. வரதராசன் அவர்களின் முன்னுரையுடன் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பைத் தவிர வேறு எந்நூலுக்கும் முன்னுரையோ, அணிந்துரையோ பெறவில்லை. இதற்குக் காரணம் பாவேந்தர் பாரதிதாசனே என்கிறார். ‘வேட்டிக் கட்டத் தெரிந்தவனுக்கு துண்டு கட்டி விடுபவன் துணை தேவையில்லை’ என்று கூறியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இலக்கியச் செல்வர் இருவர், தமிழர் வாழ்வியல் இலக்கணம், கட்டுரைப் பயிற்சி, கல்வி செல்வம், மொழி ஞாயிறு, இயற்கை இன்பம், தேனருவி, தனிப்பாடல் கனிச்சுவை, தமிழ் உரை, தமிழ் நூறு, நல்ல மாணவனாக, தமிழ்; மலை, தமிழ் வளம் சொல், இலக்கிய வகை அகராதி, குன்றக்குடி அடிகளாரின் திருக்குறட்பணி, வேலா கருத்துக் களஞ்சியம், திருக்குறளுக்கு உரை திருக்குறளே, பாணர், மனவளப் பயிற்சி, பாவாணர் பாடல்கள், வானவில் தனித்தமிழ் இயக்கம், இலக்கண வரலாறு,வையை வளம் உட்பட 387க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளது வியக்கச் செய்கிறது. ‘புறத் திரட்டு’ என்னும் நூல் பலவற்றை உள்ளடக்கியதாகவும் பலருக்கும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்கிறார். திருக்குறள் தமிழ் மண்ணுக்கே உரியது என்று உறுதிபடுத்தவே ‘திருக்குறள் வாழ்வியல் உரை’ எழுதியதாக தெரிவிக்கிறார்.

மயிலை சீனி வேங்கடம்பிள்ளை தமிழில் மறைந்த நூல் பட்டியலில் ‘காக்கைப் பாடினியம்’ என்னும் நூல் இடம் பெற்றுள்ளது. ஆனால் தான் அதைத் தேடித் திரட்டித் தந்ததாக பெருமிதம் கொள்கிறார். அதே போல் கண்டுபிடித்த மற்றொன்று ‘குண்டலகேசி’. முன்னது இலக்கணம். பின்னது இலக்கியம். இலக்கணம் எழுதி வைத்த ஒரே பெண்மணி காக்கைப் பாடினியம் என்னும் தகவலை மகிழ்வுடன் கூறுகிறார். அவர் தங்கை சிறுகாக்கைப் பாடினியமும் உண்டு என்கிறார். அவர் நூல்களில் ‘பாவாணர் வரலாறு’ குறிப்பிடத்தக்கது. தற்போது மேற்கொண்டுள்ள பணி பழமொழிகள் மற்றும் சொற் பொருள் களஞ்சியங்கள் தொகுத்து வெளியிடுவது என்கிறார். அடுத்த திட்டம் ‘தொல்காப்பியம் வாழ்வியல் முறை’ எழுத வேண்டும் என்றும் அதற்கு வாய்ப்புத் தேவை என்றும் தெரிவிக்கிறார்.

‘ஒரு புல் - தன் வரலாறு’ என்னும் ஒரு தன் வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். ஆனால் இது முன் வரலாறு. பின் வரலாறு எழுதி வைத்திருப்பதாகவும் வெளியிடுவதாகவும் நம்பிக்கையுடன் கூறுகிறார். தன் வரலாற்றில் தமிழ் வரலாறும் உள்ளது.

நூல்கள் பல வெளியிட்டு தமிழ்த் தொண்டாற்றி வரும் இளங்குமரனார் தமிழக அரசு, திரு. வி. க. , வள்ளுவர் என இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

சுத்தானந்த பாரதி, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, இலக்குவனார், வ. சுபமாணிக்கம், சுப்பையாபிள்ளை, பாவாணர், பாவேந்தர், வேலா, திரு. வி. க. , மறைமலை அடிகள், பெரியார், அண்ணா ஆகியோருடன் இளங்குமரனார் கொண்டிருந்த தொடர்பும் நட்பும் பேச்சினூடாக உணர முடிகிறது. பண்பாட்டுக்கு காந்தியையும் பொருளியிலுக்கு மார்க்ஸையும் சமூக முன்னேற்றத்துக்கு பெரியாரையும் பின்பற்றுவதாக கூறுகிறார். இவை பொதுநோக்கு. மேலும் திரு. வி. க. வை வாழ்வியலுக்கும் மறைமலை மடிகளை தனித்தமிழ் உணர்வுக்கும் இலக்குவானரை தமிழ்தொண்டுக்கும் பாவாணரை சொல்லலாய்வுக்கும் வழிகாட்டிகளாக தான் ஏற்றுக் கொண்டதையும் சொல்கிறார்.

பொதுவாக இலக்கியத்தின் பால் ஆர்வம் மிக்கவராக விளங்கினாலும் திருக்குறளின் மீது தீராத பற்றுடையவராக விளங்குகிறார். திருவள்ளுவர் மீதும் அளவில்லா அன்பு கொண்டுள்ளார். திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் அல்லூர் என்னுமிடத்தில் ‘திருவள்ளுவர் தவச்சாலை’யை அமைத்து இலக்கியப் பணியைச் செய்து வருகிறார். ஓய்வூதிய நிதியைக் கொண்டும் பிள்ளைகள் தந்த உதவியை வைத்தும் தவச்சாலையை அமைத்து நடத்தி வருகிறார். தவச்சாலையில் திருவள்ளுவர் சிலையை வணங்கி வருகிறார். ஆனால் திருவள்ளுவரை கடவுள் அல்ல என்றும் அவர் ஒரு சித்தர், சிந்தனையாளர், வாழ்வு நெறியாளர் என்றும் போற்றுகிறார். 1984 முதல் 1994 வரை தமிழகம் முழுவதும் இருந்து திரட்டப்ப்ட்ட 1330 சிறுகற்களை 1330 குறள்களை நினைவூட்டும் விதமாய் சேகரித்து மூன்று சிறு குன்றுகளாக சிலைக்குப் பின் அமைக்கப்பட்டுள்ளது. இத்தவ சாலையில் ஒவ்வோர் அரங்குக்கும் ஒவ்வொரு தமிழறிஞரின் பெயரைச் சூட்டிள்ளார். நான்கு பிள்ளைகள் இருந்தும் தற்போது உடனிருப்பது ‘கங்கையார்’ என்னும் அம்மையார். இவர் தன் ‘தத்துப்பிள்ளை’ என்றும் தனக்குப் பின் தவச்சாலையை நடத்துபவர் என்றும் கூறியுள்ளார். இந்த கங்கையார் இளங்குமரனாரின் சொற்பொழிவுவைக் கேட்டு பின்னர் ஆய்வு மாணவரானவர் என்பது சுட்டத்தக்கது. தற்போது தவச்சாலையில் தான் ஒரு துறவு வாழ்வை மேற்கொண்டிருப்பதாக தன்னிலையைத் தெரிவித்துள்ளார். இந்த ஆவணப்படமே திருக்குறளுடன் தொடங்கி இடையிடையேயும் ஒலித்து திருக்குறளுடனே முடிகிறது. இத்தவ சாலையில் உள்ள பாவாணர் நூலகத்தில் பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன என்னும் தகவலையும் தந்துள்ளார். இந்நூலகம் ஆராய்ச்சியாளயர்களுக்கு மிகவும் பயனுள்ளது என்னும் குறிப்பிட்டுள்ளார்.

‘‘பைந்தமிழ் பயிற்று மொழி’ திட்டத்தை இலக்குவனார் அப்போதைய அமைச்சர் பக்தவச்சலம் அவர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் மறுத்ததாகவும் பின்னர் அண்ணா ஆட்சிக்கு வந்து செய்வதாக தெரிவித்ததாகவும் தற்போது கலைஞர் ஆட்சியில் அத்திட்டம் நிறைவேறும் என்னும் நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆயினும் ஆங்கிலப் பள்ளிகள் பெருகியதற்கு அரசே பொறுப்பு என தீர்மானமாய்க் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டடிருந்தாலும் ‘செம்மொழி தமிழை’ மற்ற செம்மொழிகள் போல் கல்வித்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பண்பாட்டுதுறையின் கீழ் இருக்கக் கூடாது என்கிறார். மேலும் தமிழின் காலம் 1500 என நிர்ணயித்தது தவறு என வாதிடுகிறார். தொல்காப்பியம் என்னும் இலக்கணம் ஏற்படுவதற்கு முன்பே இலக்கியம் இருந்துள்ளது என காரணத்தை முன் வைக்கிறார். ‘இலக்கியத்துக்கே இலக்கணம்’ என்றும் குறிப்பிடுகிறார். செம்மொழிகளிலும் தமழே இன்னும் வாழ்கிறது என்றும் கூறுகிறார். தாய் மொழி கல்வியே அவசியம் என்றும் அறிவியல், கணினி, உயர்கல்வி ஆகியவை தமிழில் கற்க முடியும் என உறுதியாக கூறுகிறார். 1855ம் ஆண்டே மருத்துவம் தமிழ் மொழியில் கற்பிக்கப்பட்டுளள்து என்றும் எடுத்துக்காட்டியுள்ளார். தமிழில் இலட்சக் கணக்கில் கலைச்சொற்கள் உள்ளதெனவும் மணவை முஸ்தபா கூரியர் மூலமே ஆறு லட்சம் கலைச் சொற்களைக் கொண்டு வந்தார் என்றும் தகவலளித்துள்ளார். வழக்கத்திற்கு கொண்டு வருவதன் மூலம் எதையும் தமிழில் சொல்ல முடியும் என்று கூறியிருப்பது ஒரு நல்ல ஆலோசனை.

‘யாழ்பான அகராதி’ வெளியிட்ட அனுபவத்தை மிக உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை சென்று வெளியிட்டிருந்தாலும் யாழ்பானத்தில் வெளிடாததது ஒரு குறையாகவே கருதுகிறார். தமிழ் மண்டலம் சேர, சோழ, பாண்டிய,ஈழ நான்குமண்டலங்களாக இருந்தது என்றும் இதற்கு ஆதாரமான ‘தென்னை’யைக் குறிப்பிடுகிறார். மற்றொரு சான்றாக ‘தாமிரபரணி’யைக் கூறுகிறார்.

இறுதியாக தான் மனநிறைவுடன் வாழ்வதாக கூறியிருப்பது நன்று. ஒரு மனிதன் மனநிறைவு அடைவது என்பது இயலாதது ஆனால் இளங்குமரனாரின் கூற்று அவர் மனத்தைக் காட்டுகிறது. முடிவில் மனிதர்களிடையே ‘உட்பகை’க் கூடாது என்றும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

இளங்குமரனார் குறித்த இப்படம் தொடக்கத்தில் அவர் வாழ்வு பற்றிய அறிமுகத்தை பின்னணியில் கூறுவதாக தொடங்குகிறது. தொடர்ந்து நேர்காணல் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாவிற்கும் விரிவான, விவரமான பதில்களைக் கூறியுள்ளார். இளங்குமரானின் தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவாயுள்ளது. ஒவ்வொரு செய்தியைக் கூறும் போதும் ஓர் ஈடுபாட்டுடன் கூறுகிறார். அண்ணா, கங்கையார் ஆகியோர் பற்றி பேசுகையில் உணர்ச்சி வயப்படுகிறார். அவர் பேச, பேச தமிழ் அவர் வாழ்வென்பது தனியானதல்ல, தமிழுடனேயே நடை போடுகிறது என விளங்குகிறது. தமிழ் வரலாற்றில் தனக்கான ஓரிடத்தை நிறுவியுள்ளார். தமிழ் வளர்ப்பில் தன்பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். தெளிவான ஒளிப்பதிவை செய்திருப்பவர் அர. பிரசன்னா. தொடர்ச்சியாக படத்தைத் தொகுத்திருப்பவர் மனோ- மணி. ஒலிப்பதிவு ஆரோன். சில இடங்களில் இரைச்சல் மிகுந்துள்ளது. வேர்கள். மு. இராமலிங்கம் ஆலோசகராக இருந்து ஆவணப்படத்துக்கு உதவியுள்ளார். தயாரித்து அளித்திருப்பவர்கள் அ. செந்தில் - அகிலா. இவர்களின் முயற்சி போற்றுதலுக்குரியது. நீளம் அதிகமெனினும் நெஞ்சம் நிறைந்தது.

இளங்குமரனாரை ஆவணப்படுத்தியிருந்தாலும் தமிழ் இலக்கியத்தையும் அறியச் செய்கிறது. வரலாற்றையும் புரியச் செய்கிறது. இது ஓர் அற்புத பதிவு. உலகப் பெருந்தமிழரான இளங்குமரனார் நீண்ட காலம் வாழ வேண்டும். அவர் வாழ்ந்தால் அருந்தமிழும் வாழும். வாழ்க. வளர்க.

என்னைப் பார்

       தென்னைப் பார்

உன்னைப் பார்

       உயரப் பார்

என்று அன்புடன் கூறுகிறார் இளங்குமரானார். அவர் வழியில் செல்வோம். உயர்வோம்.

 வெளியீடு: அ. செந்தில் - அகிலா உலகமதி மருத்துவமனை

1, மாருதி நகர், வடலூர் நெடுஞ்சாலை, காந்தி நகர், நெய்வேலி - 607308

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It