1985ம் ஆண்டு வசந்தகுமார் எதிர் கர்நாடக அரசு வழக்கில், நீதிபதி ஓ.சின்னப்ப (ரெட்டி) வழங்கிய தீர்ப்பின் முக்கிய பகுதிகளை அதனுடைய சிறப்பு கருதியும், ‘கிரீமிலேயர்’ மாயையைத் தகர்க்கவும் வெளியிடுகிறோம். நீதிபதி ஓ. சின்னப்ப ரெட்டி லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், சட்டப்படிப்பை சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக 1978 முதல் 1987 வரை பதவி வகித்தவர்.

O.Chinnappa reddy
நமது நாடு பெருமளவிலான பொருளாதார, சமூக, பண்பாட்டுப் பாகுபாடுகளைக் கொண்டது. நமது நாட்டின் பண்பாட்டுப் பன்முகத்தன்மையை நினைத்து நாம் அடிக்கடி பெருமிதம் கொள்கிறோம். பண்பாட்டுப் பன்முகத்தன்மை நாட்டின் பெருமைக்கு அணி சேர்த்தாலும், பிற பாகுபாடுகள் நமக்கு வேதனையையும் அவமானத்தையுமே அளிக்கின்றன. சமூக, பொருளாதாரப் பாகுபாடுகள் உண்மையில் வருந்தத்தக்க அளவில் பரந்திருக்கிறது.

பொதுவாக சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என வர்ணிக்கப்படும் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் சமூக, பொருளாதார அளவில் பின் தங்கிய வகுப்பினர் சமூகத்தின் ஓர் அங்கமாக மாறுவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது, அவர்களுக்கு உதவியும் வசதி வாய்ப்புகளும் தேவையாக இருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு ஓர் உந்து சக்தி தேவைப்படுகிறது. அவர்களது தேவைகளே அவர்களது கோரிக்கைகளாக இருக்கின்றன. அவர்களது கோரிக்கைகள் உரிமை சார்ந்தவையே அன்றி, அவை சலுகைகள் அல்ல. அவர்கள் சமத்துவத்தை தான் கேட்கிறார்களே தவிர, பிச்சையை அல்ல. துரோணர் ஏகலைவன் காலம் எல்லாம் முடிந்து விட்டது. சம நிலைக்கும், சம வாய்ப்பிற்கும், பொருளாதாரம் மற்றும் சமூக நீதிக்குமான சட்டப்படியான உரிமையை அவர்கள் கோருகிறார்கள். அவர்கள் அதனை அடைய பல்வேறு வழிவகைகள் முன் வைக்கப்பட்டன. தொழில் கல்வியும், அரசுப் பணியும் அத்தகைய வழிவகைகளில் இரண்டாகக் கருதப்படுகின்றன.

இப்பிரச்சனை பொதுவாக உயர் நிலையிலிருந்து அணுகப்படுவதால் இட ஒதுக்கீடு என்பது தகுதி கொள்கைக்கும், சமன்படுத்தும் கொள்கைக்கும் இடையிலான பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. உண்மை அது அல்ல. மாறாக, உண்மையான பிரச்சனை என்பது, வறுமை, கல்வியறிவின்மை, பிற்படுத்தப்பட்ட நிலை என்ற பாலைவனத்தில் என்றும் இருந்திராத அல்லது அதிலிருந்து வெகு காலத்திற்கு முன்பே வெளியேறிவிட்ட வகுப்பினருக்கும், இன்னமும் அந்தப் பாலைவனத்திலிருந்து சோலைக்குள் செல்லத் துடிக்கும் வகுப்பினருக்கும் இடையிலானதே. தோட்டத்தில் போதுமான பழங்கள் இல்லை. அதனால் உள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவர்களை வெளியிலேயே நிறுத்தி வைக்க விரும்புகின்றனர். தகுதி கொள்கை என அழைக்கப்படும் கொள்கையானது, ஊட்டச்சத்து குறைந்த, வறுமையில் வாடுகின்ற கல்வியறிவு பெற இயலாத இந்நாட்டின் ஒன்றுமறியா பெரும்பான்மை மக்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் மிகவும் வெளிப்படையானவை.

உண்மையில் தகுதி - திறமை என்பது என்ன? இத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஓர் அமைப்பில் தகுதி என்பதே இருக்க முடியாது. அனைத்து வசதி வாய்ப்புகளுடன், புனித பால் உயர்நிலைப் பள்ளி, புனித ஸ்டீபன் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிலையங்களில் படித்து, போட்டித் தேர்வுக்கென்றே சிறப்பாகப் பயிற்சியும் அளிக்கப்பட்டு 70, 80 ஏன் 90 சதவிகிதத்தைப் பெறுகின்ற உயர் வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளைக் காட்டிலும், கல்வியறிவற்ற அல்லது அறியாமையிலிருக்கும் பெற்றோர்களுக்குப் பிறந்து, எந்த முக்கிய விஷயத்திலும் அவர்களது ஆலோசனைகளைப் பெறுவதை நினைத்துப் பார்க்கக் கூட இயலாத சூழலிலும் வளர்ந்த, அருகில் இருக்கும் உள்ளூர் அரசுப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லக் கூடிய, தனது வீட்டுப் பாடத்திற்கு உதவ யாருமில்லாமல், வீட்டில் படிக்க எத்தகைய நூல்களோ, இதழ்களோ, கேட்க வானொலியோ, பார்க்க தொலைக்காட்சியோ இல்லாத நிலையில், இவ்வுலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள அருகிலுள்ள பொது நூலகத்திற்கு நடந்தே சென்று ஒரு செய்தித்தாளை வாசித்தாக வேண்டிய சூழலில் உள்ள - மரபினாலும் சமூகத்தினாலும் மிகவும் கீழாகப் பார்க்கப்படுகின்ற பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த ஒரு குழந்தை, இத்தகைய அனைத்துப் பாதகங்களுக்கு இடையிலும் படித்து, போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தேவையான 40 அல்லது 50 சதவிகிதத்தைப் பெறுகிறார்கள் என்றால், அந்தக் குழந்தைக்கு இருப்பது திறன் இல்லையா?

இத்தனை தடைகளையும் கடந்து வரக்கூடிய ஒரு குழந்தை, வாழ்க்கையில் முன்னேறும்போது மென்மேலும் திறம்படச் செயலாற்றும் என்பது உறுதி. வசந்த கால மலராக இல்லாவிடினும் இலையுதிர் கால மலராகவாவது அக்குழந்தை இருக்கக்கூடும். பிறகேன் அக்குழந்தை ஒரு பொருந்தாத தகுதி - திறமை கொள்கையின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்? குறைந்த பட்ச தரம் என்பதைக் கொண்டு திறன் அடிப்படைகள் பாதுகாக்கப்படலாம். மிதமான திறமை என்பது உயர் வகுப்பினருக்கு சாதகமாகவே கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று வரும்போது மட்டும் தகுதி, திறமை கொள்கை எனப்படுவது ஏன் மிதமான திறனுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட வேண்டும்?

இடஒதுக்கீடு குறித்துப் பேசப்படும்போதெல்லாம் வளங்களை அனுபவித்து வருபவர்களின் உதடுகளில் திறமை என்ற சொல் ஒட்டிக் கொண்டுள்ளது. இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டை கடந்து விட்டால் திறமை பாதிக்கப்படுமாம். நிரப்பப்படாத இடங்களை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லும் வழக்கத்தினால் திறமை கேள்விக்குள்ளாக்கப்படுமாம். பதவி உயர்வில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், திறமை அடிவாங்குமாம். இடஒதுக்கீட்டினை 50 விழுக்காட்டிற்கு அதிகமாக ஆக்குவதற்கும், பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் நிரப்பப்படாத இடங்களை அடுத்த ஆண்டிற்கு எடுத்துச் செல்லும் வழக்கத்திற்கும் எழுந்த எதிர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, அரசுப் பணி என்பது ‘ஆசீர்வதிக்கப்பட்ட' உச்சபட்ச திறனுடைய சிறப்பானவர்கள் மட்டுமே நுழையவும், மேலும் முன்னேறவும் கூடிய ஒரு ‘சொர்க்கலோகமாக'த் தோன்றலாம்.

ஆனால் உண்மையோ மாறுபட்டது. உண்மையில் அரசுப் பணி ஒரு ‘சொர்க்கலோகம்' அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மேல் தட்டினர் திறமைக்கு எடுத்துக்காட்டானவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திறந்த போட்டியின் கீழ் உள்ள பதவிகளுக்கு வரும் ‘உயர் வகுப்பு' மற்றும் ‘உயர் சாதி'யினைச் சேர்ந்தவர்கள் ‘இயல்பாகவே' இட ஒதுக்கீட்டின் கீழ் பதவிக்கு வருபவர்களை விட திறமையாக செயல்படுவார்கள் என்பதும், ‘புனித எல்லை'க்குள் இட ஒதுக்கீட்டின் கீழ் வருபவர்களை ஊடுருவ விடுவதன் மூலம் திறமை கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதும் மிக மோசமான அனுமானம் ஆகும். உயர் வகுப்பினரின் உயர்வு மனப்பான்மையோடு கூடிய அணுகுமுறைக்கு ஈடானதே அது. இந்த அனுமானங்களை உறுதிப்படுத்த எத்தகைய புள்ளி விவரங்களோ, ஆதாரங்களோ இல்லை.

விவாதங்கள் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. முழுமையான முன் அனுமானத்தின் அடிப்படையிலேயே கருத்துகள் வெளியிடப்படுகின்றன. ‘மேல்தட்டு' அல்லது ‘முன்னேறிய' சாதிகள் ‘கீழ்த்தட்டு' அல்லது ‘பின்தங்கிய' சாதிகளை காலங்காலமாகத் தொடர்ந்து வந்த காழ்ப்புணர்ச்சியுடனேயே நடத்துகின்றன. அந்த காழ்ப்புணர்ச்சி தற்போது உருமாறி, திட்டமிட்டோ அல்லது உள்ளுணர்வின் உந்துதலினாலோ நியாயமற்ற முன் முடிவாகத் திரண்டு நிற்கிறது. ‘கீழ்த்தட்டு' சாதி மற்றும் வகுப்பினைச் சேர்ந்த மக்கள், தங்களுக்குரிய நியாயமான பங்கை கேட்கத் தொடங்கிய நாள் முதலாக இது நடக்கிறது.

அவர்களுக்கான பங்கை அளிப்பது என்பது இயற்கையாக ‘மேல் தட்டு' சாதிகள் தாங்கள் அனுபவித்து வருவதில் கொஞ்சத்தையேனும் விட்டுக் கொடுக்காமல் நடக்காது. நடைமுறையில் உயர்ந்த தொழில்களிலும் பதவிகளிலும் அவர்கள் அனுபவித்து வரும் கண்ணுக்குத் தெரியாத முழுமையான ஆக்கிரமிப்புகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற போதும், உயர் அரசுப் பதவிகளிலும் தொழில்களிலும், தங்களுடைய இந்த முழுமையான ஆக்கிரமிப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அவர்களின் அச்சம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தங்களுடைய நியாயமற்ற முன் முடிவிலிருந்து வெளிவந்து புரிந்து கொள்வது என்பது ‘உயர் தட்டு' சாதிகளுக்கு மிக கடினமானது. (தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் வகுப்பினருக்கு) ஒவ்வொரு கட்டத்திலும் இந்த நியாயமற்ற முன் முடிவையும் எதிர்ப்பையும் கடப்பது மிகக் கடினமானது.

திறமை என்பது புனிதமான ஒன்றைப் போலவும், அதன் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் என்றும் நாம் அடிக்கடி கேட்க முடிகிறது. திறமை என்பது யாரோ ஒரு குரு தன் சீடனின் காதுகளில் ஓதும் மந்திரம் அல்ல. ஒரு தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமே அவர் ஒரு நல்ல நிர்வாகி என்பதற்கு சான்றளித்துவிடாது. ஒரு திறமையான நிர்வாகிக்கு பிற எல்லாவற்றையும் விட கண்டிப்பாக ஒரு குணம் இருக்க வேண்டும். அது புரிதல். அதாவது அக்கறையுடன் புரிந்து கொள்வதன் மூலம், சமூகத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை தீரத்துடன் கையாள்வது. இதை அந்த மக்களிடையே இருந்து வந்தவரை விட வேறு யாரால் மேம்பட செய்து விட முடியும்? இந்தியா விடுதலை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேலாகியும், பட்டியல் சாதியினரின் நிலை ஏன் பெருமளவுக்கு முன்னேற்றமடையவில்லை என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

மாவட்ட நிர்வாகிகளும், மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளும், பெருமளவில் அந்த வகுப்பிலிருந்து வந்திருந்தால் ஒரு வேளை நிலைமை வேறாக இருந்திருக்குமோ என்று கேட்பது நியாயமான கேள்வி இல்லையா? இத்தகைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிலையில் நீதிமன்றங்கள் இல்லை. ஆனால், இதற்கு விடையும் தீர்வும் காண அரசு எடுக்கும் நேர்மையான முயற்சிகளில் நீதிமன்றங்கள் தலையிடாமல் இருக்கலாம். குடிமையியல் பணிகளில் திறமை தேவையில்லை என்றோ, திறமை என்பதே ஒரு மாயை என்றோ நாங்கள் சொல்ல வரவில்லை. நாங்கள் சொல்ல வருவதெல்லாம் அதை வைத்து யாரும் விளையாட வேண்டாம் என்பதுதான். சில பதவிகளுக்கு மிகச்சிறந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்றோ, ஒரு சில படிப்புகளுக்கு மிகச் சிறந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றோ இருக்கலாம். அப்படியெனில் அந்தப் பதவிகளின் நியமனத்திற்கும் அந்தப் பாடங்களுக்கான அனுமதிக்கும் இட ஒதுக்கீட்டில் சில ஒழுங்கு முறைகளை கொண்டு வரலாம்.

ஒரே மாதிரியான தேர்வு முறை இல்லாமல் இருக்கும் வகையில் ஒழுங்குமுறைகளை உருவாக்கலாம். சில பதவிகளுக்கு உயர்ந்த திறன் தேவைப்படலாம். சில படிப்புகளுக்கு உயர்ந்த தொழில் அறிவும் நுட்பமும் தேவைப்படலாம். அப்படியெனில், குறைந்த பட்ச தகுதியை உயர்ந்த அளவில் நிர்ணயிக்கலாம். குறிப்பிட்ட தேர்வு முறையைப் பின்பற்றலாம். வெவ்வேறு வகையான பதவிகளுக்கும் வெவ்வேறு வகையான படிப்புகளுக்கும் அந்தந்த பதவிகள் மற்றும் படிப்புகளுக்கும் ஏற்ப, வெவ்வேறு குறைந்த பட்ச தகுதிகளும் வெவ்வேறு தேர்வு முறையும் பின்பற்றப்படலாம்.

இதய அறுவை சிகிச்சை நிபுணருக்கோ, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருக்கோ தேவையான திறமையும் சாதாரண மருத்துவருக்குத் தேவையான திறமையும் ஒரே அளவிலானது என்று யாரும் பரிந்துரைக்கப் போவதில்லை. அதைப் போலவே ஆய்வுப் படிப்புக்கு விண்ணப்பிப்பவருக்கு இருக்க வேண்டிய தொழில் திறமையும் நுட்பமும் ஒரு சாதாரண கலை பட்டப்படிப்பு சேர விண்ணப்பிப்பவருக்கு இருக்க வேண்டும் என யாரும் பரிந்துரைப்பதில்லை. ஆகையால் திறமை என்பதை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. நாங்கள் சொல்ல வருவதெல்லாம் இதுதான். திறமை என்பதை முகமூடியாகப் பயன்படுத்தி உயர் வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் புறந்தள்ளி, அரசுப் பணிகளில் குறிப்பாக உயர் பதவிகளிலும் தொழில் நிறுவனங்களிலும் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்வதை அனுமதிக்க முடியாது. பிரச்சினையின் மய்யப்புள்ளியை கண்டறிவதற்கு முன் நமது மனதில் பின்னப்பட்டிருக்கும் பல்வேறு சிலந்தி வலைகளை நாம் அகற்றியாக வேண்டி இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது.

சமத்துவத்திற்கான தேடல் என்பது தன்னளவிலேயே விவரிக்க இயலாதது. நாம் நமது நம்பிக்கைகளை விட்டுவிடாமல் நமது கற்பனைகளைப் புறந்தள்ள வேண்டும். சமத்துவத்திற்கான தேடலை தொடர்வது என்பது மனிதனுக்கு கவுரவம் அளிப்பது. ஆர்.எச். தானே, ‘சமத்துவம்' என்ற தனது காவியப் படைப்பில் கூறியிருப்பதை இங்கு குறிப்பிடுவது சிறந்தது என்று கருதுகிறேன். அவர் சொல்கிறார்:

"இந்த சிந்தனையாளர்கள் எல்லாம் சமத்துவம் என்று ஏற்கத்தக்கதாக வலியுறுத்துவது, திறமை மற்றும் சாதனையில் சமத்துவம் அல்ல; மாறாக சூழல், நிறுவனங்கள் மற்றும் வாழ்க்கை முறை சமத்துவமின்மையை அல்ல. மாறாக, சமூக, பொருளாதாரச் சூழலில் நிலவும் சமதத்துவமின்மையை. அவர்களது ஒட்டுமொத்தக் கருத்துகளைத் தொகுத்து சுருங்கக் கூறுவேண்டுமெனில், மனிதர்கள் எவ்வாறாயினும் மனிதர்களே. அதனால் சமூக நிறுவனங்கள், சொத்துரிமை, தொழில் துறைகளின் ஒழுங்கமைப்பு, பொது சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை கூடிய வரையிலும் அவர்களைப் பிரிக்கக் கூடிய வகுப்புப் பாடுகளை வலிமையாக்க பயன்படாமல் மாறாக, அவர்களை ஒன்றிணைக்கும் மனித நேயத்தை வலிமையாக்குவதாக இருக்க வேண்டும்.''

தகுதி மற்றும் சமன்படுத்தும் கொள்கைகளுக்கு இடையிலான விவாதம் என்பது, நமக்கு முன் இருக்கும் உண்மையான பிரச்சனைகளை மறைக்க பயன்பட அனுமதிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளான சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சட்டத்தைக் காப்பதில் சமமான உரிமை மற்றும் சம வாய்ப்புகள் போன்றவற்றில் தெளிவான விளைவு என்னவெனில், ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி நிறுவனங்களில் நுழையவும் பொதுத் துறைகளில் பிரதிநிதித்துவம் பெறவும் ஒரு சிறப்பு வாய்ப்பை அளிக்கக் கூடியதாக அது இருக்கிறது. உண்மை நிலைகளின் அடிப்படையில், எந்தத் தவறான புரிதலும் ஏற்படாத வண்ணம். ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த உரிமை குறித்து அரசியலமைப்புச் சட்டம் சிறப்பு கவனம் எடுத்து சட்டப் பிரிவுகள் 15(4) மற்றும் 15(6) இல் எடுத்துரைத்திருக்கிறது.

இருப்பினும் இட ஒதுக்கீட்டின் பலன்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சாதியினரிடையே இருக்கும் உயர் தட்டினரே பறித்துக் கொள்வதாக எழும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்படும் குறைந்த அளவிலான இடங்களும் பதவிகளும் அவர்களிடையே உள்ள முன்னேறியவர்களால் பறித்துக் கொள்ளப்படுகிறது என்று சொல்வது, இட ஒதுக்கீடே தேவையில்லை என்று சொல்வதாகாது. நம்முடையதைப் போன்ற போட்டி மிகுந்த சமூகத்தில் இவ்வாறு நடப்பதைத் தவிர்க்க இயலாது. ஏன், ஒதுக்கப்படாத பொது இடங்களையும் பதவிகளையும் சமூகத்தின் உயர் தட்டினர் பறித்துக் கொள்ளவில்லையா? ஒதுக்கப்படாத பொது இடங்களை எவ்வாறு சமூகத்தின் உயர் தட்டினர் எடுத்துக் கொள்கிறார்களோ, அதே அளவுகோலின்படியே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அந்த வகுப்பைச் சேர்ந்த உயர் தட்டினர் எடுத்துக் கொள்கின்றனர். ஒதுக்கப்படாத பொது இடங்களை சமூகத்தின் உயர்தட்டினர் பறித்துக் கொள்வது தவறானது இல்லை எனும் போது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்களை அவர்களில் உயர் தட்டினர் பறித்துக் கொள்வது மடடும் எப்படி தவறாகும்? நாம் இயங்கும் சமூக, பொருளாதார அமைப்போடு தொடர்புடையது இது. ஒட்டுமொத்த சமூகத்தில் உயர்தட்டினர் பொது பரிசுகளை பறித்துக் கொள்கின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உயர் தட்டினர் ஒதுக்கப்பட்ட பரிசுகளை பறித்துக் கொள்கின்றனர்.

இது, இட ஒதுக்கீட்டையே தவறாக்கி விடாது. ஆனால் கல்லூரி இடங்களிலும் அரசுப் பணியிலும் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது மட்டுமே பிற்படுத்தப்பட்டத் தன்மையினால் எழும் பிரச்சினைகளை தீர்த்துவிடாது என்பதை உணர்த்துகிறது. வளர்ச்சித் திட்டங்களும் வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருப்பது லாபமாக பார்க்கப்படுதலும், அதனால் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. இதைவிட பெரிய ஆபத்து என்பது இட ஒதுக்கீடு அல்ல. ஆனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுவான சமூக, பொருளாதார வளர்ச்சி இல்லாமல் தரப்படும் இடஒதுக்கீடே ஆபத்தானது. அத்தகைய இட ஒதுக்கீட்டினால் பட்டியல் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த ஆற்றல் மிக்க இளைஞர்கள் அனைவரும் அரசுப் பணியிலேயே முடங்கிப் போய் விடுவார்கள். இதனால் அந்த வகுப்பினரின் நிலைகளை சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் எடுத்துச் செல்ல வெகு சில படித்த இளைஞர்களே மிஞ்சுவர். அரசுப் பணிகளில் இருப்போர் தங்கள் சகோதரர்களுக்காக செயல்படுவதை அவர்களது பொறுப்பு அனுமதிக்காது.

உயர் பதவிகளில் திறன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அது உயர் பதவியோ, கீழ் நிலை பதவியோ அதற்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து நாம் வருந்த வேண்டியதில்லை என்றும் கருதுகிறோம். மாறாக, இடஒதுக்கீட்டிற்கான அவசியம் இன்னமும் இருக்கின்ற நிலை குறித்தே நாம் வருந்த வேண்டும்.

தமிழில் : பூங்குழலி
Pin It