கவுண்ட்டர் மணி தான்... கால போக்கில் மருவி கவுண்டமணி ஆனது. 
 
Goundamaniபெரும் போராட்டத்துக்கு பின் கிடைத்த வாய்ப்பில்.... "பத்த்த வெச்சிட்டியே பரட்டை ....." என்று ஒரு மாதிரி கீச்சு கீச்சு குரலில்... ஆரம்பித்த அந்த பரட்டையின் கையாளின் தத்ரூபம்... "சரோ.....ஸா.... குப்பை கொட்றியா ... கொட்டு கொட்டு" என்று நக்கலும்... சிக்கலுமான குரல் மொழியில்... டெய்லராகவே பரிமாற்றம் அடைந்தார். அதன் பிறகு அவர் ஏறிய உச்சம்... கொக்க மக்க்கா.... என்று அவர் பாணியிலேயே தான் கத்தி சொல்ல வேண்டும்.
 
'லாரல் அண்ட் ஹார்டி' மாதிரி... அவரோடு ஒரு கட்டத்தில் பின்னாளில் சரித்திரம் படிக்க போகிறது என்று தெரியாமல் கூட்டணியில் செந்தில்...சேர்ந்தார். இருவரும் சேர்ந்து 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்கள். எத்தனையோ படங்கள் இவர்கள் காமெடிக்காகவே ஓடியது தான்......வரலாற்று உண்மை. 'கரகாட்டக்கார'னில் இவர்கள் இல்லாமல் யோசித்துப் பாருங்கள்... "என்னை பார்த்து ஏன்டா அப்டி ஒரு கேள்வி கேட்ட..."என்று நினைத்து நினைத்து செந்திலை அடித்து துவைக்கும் காட்சி இன்றும் டாப் டென்னில் இருக்கும் நகைச்சுவை என்றால் தகும். வாழைப்பழ ஜோக் N.S கிருஷ்ணன் அவர்களின் படத்தில் இருந்து அடித்திருந்தாலும்.... கடைக்கோடி மனிதனுக்கும் போய் சேர்ந்தது கரகாட்டக்காரனால் தான்.
 
சத்யராஜ் உடன் சேர்ந்து நடித்த அத்தனை படங்களிலும் அரசியல் சட்டையர்த்தனம் இருக்கும். நையாண்டியில் எல்லாரையும் வாரி விட்டு முற்போக்கு சிந்தனைகளை தூவிக் கொண்டே செல்லும் கவுண்டமணி... உலக சினிமாக்களின் ரசிகன். நிறைய படிக்க கூடிய படிப்பாளி. தனக்கான தரத்தில் சிறிதும் தன்னை சமரசம் செய்து கொள்ளாத சுத்தமான நடிகன். இவரைப் பற்றி ஏதாவது கிசுகிசுக்கள் எப்போதேனும் கேள்விப்பட்டிருக்கிறோமா..? இல்லை என்று தான் நம்புகிறேன்.
 
"நடிப்பது என் வேலை. படம் பார்த்துட்டு போயிட்டே இரு" என்பார். அபிஷேகம் பண்றது......பால் ஊத்தறது... நெய் விடறது......... மவனே இதெல்லாம் வேண்டாம்.. ஓடிப் போயிரு என்று சொல்வது அவர் குரலில் கேட்கிறது.
 
வடக்குப்பட்டி ராமசாமியை காணாத கண்களில் கடவுள் குடியிருப்பதில்லை. டேய் கால்ரா...டேய் கால்ரா...டேய் கால்ரா...என்று கால் மாட்டிக் கொண்ட சைக்கிளில் செந்திலுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு அழுது புலம்பும் கவுண்ட மணியை காலம் கொண்டாடி சிரித்தது. கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு "ஹவா ஹவா..... ஹவா...... ஹவா......" என்று செந்தில் நின்று கொண்டே ஆடுவது தெரியாமல் லுங்கியை ஸ்லொமோஷனில் கழற்றி வீசி விட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்லும் கவுண்டமணியின் முகபாவனைகளை நினைக்கும் போதெல்லாம் சிரிக்கலாம். கதைக்கலாம். "இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா... என்று பேசும் வசனமாகட்டும். அதற்கு சற்று முன் வெற்று போனில் விடும் உதாராகட்டும்...." அட.. டைவேர்ஸ் கேஸெல்லாம் என்கிட்டே வருதுப்பா" என்று பேசி சலித்துக் கொள்வதாகட்டும்........ இன்றும் அந்த மாதிரி கதாபாத்திரங்கள் ஊருக்கு பத்து பேர் இருப்பதை நாம் தெரிந்தே இருக்கிறோம். நம்மில் இருந்தே எடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அவரின் தனித்துவம் மிக அட்டகாசமாக நம்மில் பதிந்து கொள்கிறது.
 
"இங்க பூசு... அங்க பூசு..." "பூவுல முள்ளு கிள்ளு இருந்து குத்திடாதுல்ல..." என்று கேட்கும் நக்கலுக்கு தமிழ் சினிமா வரம் பெற்றதாகிறது.
 
80களின் எல்லா நடிகர்களோடும் சேர்ந்து நடித்த பெருமை அவருக்கு உண்டு. சில படங்களில் ஹீரோவாக நடித்து தன்னையே நொந்து கொண்டதும் உண்டு. ஜீவிதாவுக்கு ஜோடியாக நடித்த படத்தை பார்க்க சகிக்கவில்லை. அவர் பாதை வேறு என்பதை அதன் பிறகே அவர் புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன். அதன் பிறகு அடித்ததெல்லாம் சிக்ஸர்கள் தான். "மலபார் போலீஸ்" படத்தில் நாய்க்கு பயந்து விடிய விடிய உட்கார்ந்திருக்கும் போலீஸ்காரரை எப்படி மறக்க முடியும். "பேப்பர் ரோஸ்ட் லிவர்க்கு நல்லாதாம்பா" என்று "பிரம்மா" படத்தில் நிறைத்ததெல்லாம் மனம் நிறைந்த விருந்து தான். பாட்டிம்மா.....பாட்டிம்மா..." என்று கேலியும் கூத்துமாக... அடித்த லூட்டிகளை தமிழ் சினிமா உள்ளளவும் ஒருவரும் மறவோம். "யாரு நம்ம மதருங்களா" என்று கேட்கையில் தனக்கே உரித்தான விமர்சன பார்வையையும் நோகாமல் உள்ளே வைத்து விட்ட சாமர்த்தியத்தை மெச்சத்தான் வேண்டும். செந்தில் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்பதும்.. அதன் பலனாக தான் மாட்டிக் கொண்டு விழிப்பதுமாக இவர்களின் கூட்டணியில்...உச்சம் கொண்ட படங்கள் நிறைய. 
 
"ஜெய்ஹிந்" கோட்டைசாமியை சினிமா கனவுக்குள் இருந்து விடுதலை செய்யவே முடியாது. " கவலை படாதீங்க.. உங்களை எல்லாம் நான் தான் காப்பாத்த போறேன்" என்று கனவு கண்டு கொண்டே மாடியில் இருந்து குதித்த கோட்டைசாமிக்கு கனவில் தொந்தரவு கொடுத்த செந்தில் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு புதுசு. ஒரு படத்தில் செத்து போய் பேயாக வந்து "இப்போ எப்படி அடிப்பீங்க" என்று நக்கலாக கேட்கும் செந்திலிடம் ஒரு கட்டத்தில் தானும் செத்து போய் செந்திலை அடித்துக் கொண்டே "இப்ப என்ன பண்ணுவ" என்று திரும்ப கேட்கையில்... இவர்கள் சரியும் தவறுமாக வாழ்வின் கோணல் மணல்களை சரி செய்பவர்களாக மாறுகிறார்கள். 
 
"நடிகன்" படத்தில் பிரியாணி கேட்டு விட்டு புளி சோறு தின்னும் சித்தப்பாவை ஒருபோதும் மறவோம்.
 
 "உள்ளத்தை அள்ளித்தா"வில் கார்த்திக்கொடு சேர்ந்து அடித்த கோக்கு மாக்குகள்... அப்போதைய தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி கொடுத்தது. கவலை மறந்தோம். கனவும் மறந்தோம். திரை அரங்கில் வாய் விட்டு சிரித்தோம். "மேட்டுக்குடி" படத்தில் நக்மாவோடு 'லே லக்கு லே லக்கு லே லேலேலேலே...' என்று கோவாவில் வண்ண கனவில் சிறகடிக்கும் காட்சியை அதுவரை தமிழ் சினிமா பெரும்பாலும் கண்டதில்லை. 
 
Goundamani 300"தாய்மாம"னில்... "என்னது சைதை தமிழரசி தாக்க பட்டாரா....!" என்று கடைவீதிகளில் செய்யும் அட்டூழியங்கள் எல்லாம்... இன்றைய அரசியலையும் தோலுரிக்கும் சட்டையர்த்தனம். இன்னமும் அப்படித்தானே நடக்கிறது. ஏதோ ஒரு ஊரில் எவனோ எவளோ ஒரு மூணாங்கிளாஸ் படிச்சா மந்திரிக்கு இன்னமும் நாம் கதவடைத்துக் கொண்டு தானே இருக்கிறோம். "நாட்டாமை"யில்... 'டே அப்பா..... இது நியாயமா' என்று பொண்ணு பார்க்கும் இடத்தில்... கலங்க விட்டதெல்லாம்.. கலகலப்பின் உச்சம். அது ஒரு கால கட்டம் இருந்தது. செந்திலும் கவுண்டமணியும் சேர்ந்திருக்கும் படத்துக்கு குடும்பத்தோடு திரையரங்கம் சென்ற "போவோமா ஊர்கோலம் காலம்..." 'சின்னத்தம்பி'யில்....."இன்னைக்கு மட்டும் நான் வீட்டுக்கு போய்ட்டேன்... ஜெயிச்சுட்டேன்..." என்று வண்டி ஓட்டிக் கொண்டு வரும் கவுண்டமணியை கண்டு நாம் சீட்டின் நுனிக்கே சென்று குலுங்கி குலுங்கி சிரித்ததெல்லாம்.... அர்த்தமானவை. 
 
"வைதேகி காத்திருந்தாள்" படத்தில்.... "இதுக்கு தான் ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணுங்கிறது....அப்டி கேளுடா கோமுட்டி தலையா....நீ ஊருக்குள்ள போய் சொல்லனும்டா.. இந்த மாதிரி அண்ணன் நல்லவரு... பெண்டெடுக்கறதுல வல்லவரு..... யோசித்துப் பார்த்தால்....... இதோ இந்த நேரம் கூட உங்களுக்குள் சிரிப்பு முட்டிக் கொண்டு தானே இருக்கிறது. அது தான் கவுண்டமணியின் மேஜிக். தன் மனைவியை ஆத்தங்கரைக்கு கூட்டிட்டு போய் ஜாலியாக இருப்பதை செந்திலிடம் சொல்கையில் செந்தில் வழக்கம்   போல (அதுவும் ஒரு கிளவர்னஸ் தான் )தவறாக புரிந்து கொண்டு சென்று அவரின் மனைவியிடம் குண்டக்க மண்டக்க கேட்டு அடி வாங்கும் காட்சியில்...."அண்ணே உங்களவுக்கு உங்க பொண்டாட்டி இல்ல" என்று செந்தில் கூறுகையில்.... அந்த ரணகளத்திலும்... "ஆமா அவ கொஞ்சம் குள்ளம்" என்று கமெண்ட் அடிக்கும் நுண்ணறிவுக்கு தான்........ அவர்.... லெஜெண்ட் ஆக இருக்கிறார்.
 
சனிக்கிழமைகளிலும் ஞாயிறுகளிலும் சினிமாவை கொண்டாடிய காலம் அது. அந்த காலத்தின் கண்ணாடிகள் இவர்கள் இருவரையும் இன்னமும் பிரதி பலித்து கொண்டு தான் இருக்கிறது. வீட்டில்......வீதியில் ஒரு அங்கமாகவே மாறி இருந்த இவர்களை ஒரு கட்டத்தில் நாம் மிஸ் பண்ணினோம். அது அப்படித்தான். எது ஒன்று முளைத்து தகிப்போடு மேலே வருகிறதோ அது தானாகவே தன்னை அடக்கிக் கொள்ளும். அது தான் வாழ்வின் நியதி. அது தான்.. இவர்களுக்கும் நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் தானாகவே படங்களில் இருந்து விலகிக் கொண்டார்கள். அதுதான் அழகான நாட்களாக நம்மை நினைத்துப் பார்க்க வைக்கிறது.
 
அநேகமாக 90களில் நாம் அத்தனை படங்களிலும் இவர்கள் இருவரும் இருந்தார்கள். அதுவும் கதாநாயகர்களோடு படம் முழுக்க வரும் ட்ரேக்கில்... நாம் நிஜமாகவே வண்ணக்கனவு என்று சினிமாவை நம்பினோம். கவுண்டமணியின் டைமிங்கிற்கு மிக அற்புதமாக 
ரி- ஆக்சன் செய்யும் ஆற்றல் செந்தில் அவர்களுக்கு உண்டு. உலகளவில் ஒரு மிக சிறந்த ஜோடியாக இவர்கள் இருந்தார்கள். ஒருவர் விட்ட இடத்தில் இருந்து ஒருவர் தொடர்ந்து மிக நுட்பமாக இவர்கள் அடித்ததெல்லாம் கோல்போஸ்ட்டுகளை உடைத்தெறிந்த கோல்கள்தான்.
 
சமீபத்தில் நடித்த "49 O" தரமான சமூக அக்கறை உள்ள படம். தன்னை வாழ வைத்த சினிமாவுக்கு தன்னால் ஆன நல்லதை செய்து விட்ட கவுண்ட்டர் மணி....... இனி நடிக்கா விட்டாலும் பரவாயில்லை. நடிகன்... ஓய்வில் இருந்தாலும்.. அவன் நடித்த பாத்திரங்கள் ஒரு போதும் உறங்குவதில்லை.
 
- கவிஜி