நாச்சியார் டீஸரைப் பற்றி இன்னமும் விவாதம் தீர்ந்தபாடில்லை. என்ன நடக்க வேண்டுமென இயக்குநர் பாலா நினைத்தாரோ அது நன்றாகவே நடந்து விட்டது. சமூக வலைத்தளங்களில் கழுவிக் கழுவி ஊத்தியே இலவச விளம்பரமாகி விட்டது.

சென்சாரில் அந்த வார்த்தை mute செய்யப்படும் எனத் தெரியாததல்ல அவருக்கு. அப்படியென்றால் அவர் அந்த வார்த்தையை வைத்தார் என நாம் கேட்க முடியாது. ஏனெனில், அது படைப்பாளியின் சுதந்திரம் என்பார்கள். இன்றைய நாளில் அவரது படம் சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்பட்டது அப்படத்திற்கு கிடைத்த விளம்பரம் தான். அதை பாலா நன்கு புரிந்து வைத்துள்ளார்.

Janani Iyer in avan ivan

இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் உருவானவர் என்பதால் பாலா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசிய வசனத்தால் எனக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. . ஏனெனில், இதற்குப் பதில் அவர் வேறு வசனம் கொடுத்திருந்தாலும் நடித்திருப்பார். அவருக்கு அது ஒரு காட்சி அவ்வளவு தான். ஆனால், நான் இந்தப் பதிவில் பேச வந்தது ஜோதிகா பேசிய வசனம் பற்றி அல்ல. அவர் ஏற்றிருந்த போலீஸ் வேடம் பற்றித் தான்.

தனது திரைப்படங்களில் கதாநாயகர்களை செமி கிறுக்கனாகவே காட்டிப் பழக்கப்பட்ட பாலா, போலீஸ்காரர்களை முழு கிறுக்கனாகவே காட்டுவார்.

தமிழில் மிகச்சிறந்த படமான சேதுவை தந்த பாலா, அந்தப் படத்தின் கதாநாயகனை பிற்பகுதியில் மனநோயாளியாக சித்தரிப்பார். நந்தா படத்தில் கொலைக்கார விட்டேத்தியாக சூர்யாவைக் காட்டியிருப்பார். பிதாமகனில் விக்ரமை பைத்தியக்காரனாகவே காட்டியிருப்பார். அந்த படத்தில் லைலா கேரக்டரும் பாதி பிதாமகன் போலவே உருவாக்கப்பட்டிருக்கும். பரதேசி படத்தில் அதர்வாவையும் அப்படித்தான் காட்டியிருப்பார்.

தமிழ் சினிமாவில் மனப்பிறழ்வு மனிதர்களை பாலாவைப் போல், காட்சிப்படுத்திய இயக்குநர் வேறு யாரும் இருக்க முடியாது. இப்படியான படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கும் என்பதை உணர்ந்ததாலோ, தொடர்ந்து அவர் படங்களில் இப்படியான கிறுக்குத்தனம் நிரம்பியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதையம்சம் கொண்ட படங்கள் வந்துள்ளன. சிவாஜியின் தங்கப்பதக்கம், எம்ஜிஆரின் ரகசிய போலீஸ் 115, ரஜினியின் மூன்று முகம், கமலின் காக்கிசட்டை, விஜயகாந்தின் ஊமை விழிகள், பிரபுவின் மறவன், சத்தியராஜின் வால்டர் வெற்றிவேல், அர்ஜீனின் குருதிப்புனல், சரத்குமாரின் கம்பீரம், விஜய்யின் ஜில்லா, அஜித்தின் பில்லா, விஜய்சேதுபதியின் சேதுபதி என நிறைய படங்கள் வந்திருக்கின்றன.

ஆனால், இவர்கள் படத்தில் உள்ள போலீஸ்காரர்களுக்கும், பாலாவின் படத்தில் உள்ள போலீஸ்காரர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பாலா படத்தில் இருப்பவர்களை தமிழகத்தில் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் பார்க்க முடியாது. அவ்வளவு கேணக்கிறுக்கன்களாக இருப்பார்கள்.

'நந்தா' படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் கருணாஸ் நடித்திருப்பார். அந்த படத்தில் அவர் நீதிபதி வீட்டில் திருடி, அந்தப் பொருட்களை ஏற்றிச் செல்ல இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து அனுப்பச் சொல்வார். திருடனின் போனை நம்பி எந்த விசாரணையும் இல்லாமல், இன்ஸ்பெக்டரே டிராவல்ஸ்க்கு போன் செய்து வேனை நீதிபதி வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.

'பிதாமகன்' படத்தில் கொட்டக்கடை நடத்தி மோசடி செய்பவராக சூர்யா நடித்திருப்பார். அந்த சூதில் லைலா வாட்ச், செயின், பணம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து விடுவார். அனைத்தும் இழந்த கோபத்தில் சூர்யாவை அடிக்க துரத்துவார். போலீசும் சேர்ந்து துரத்தும்.. சூர்யா சிக்கிக் கொள்ளும் போது, ஒரு பெண் போலீசை 'குந்தாணி' எனத்திட்டுவார். அப்படியெல்லாம் போலீசை திட்ட முடியுமா? இபிகோ சும்மா விடுமா?

'அவன் இவன்' படத்தில் விஷால், ஆர்யா என இரண்டு கதாநாயகன்கள். இதில் எதற்கு விஷாலை அப்படி கேரக்டரில் நடிக்க வைத்தார் என்று இதுவரைக்கும் விஷாலுக்கே தெரிந்திருக்காது. வழக்கம் போல, கதாநாயகர்கள் தலையில் காரக்கொழம்பை கரைத்து ஊற்றி பழக்கப்பட்ட பாலா, இந்த படத்தில் ஆர்யா தலையில் அதை ஊற்றி விட்டிருப்பார்.

களவு குறித்து வேல.ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையைப் படித்த பின், பாலாவின் இந்த படத்தைப் பார்க்கும் போது 'தாய் மீது சத்தியம்' படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தான் தந்தது.

இந்த படத்தில் காவல்துறை அதிகாரி, குற்றவாளிகளை அழைத்து கறிவிருந்து நடத்துவார். அப்போது இனி திருடமாட்டேன என திருடர்களிடம் சாப்பிடும் முன் சத்தியம் செய்யச் சொல்வார்.

போலீஸ் ஸ்டேஷனிலே சரக்கு, சைடு டிஸ் ஆகியவற்றோடு கறிச்சோறு எங்காவது போட முடியுமா? புகார் தரப் போறவர்களிடம் புகார் எழுத பேப்பர் வாங்கி வரச்சொல்லும் கச்சேரிக்கு பாலா போனதில்லை போலும்.

இந்த படத்தில் போலீசாரின் வாக்கி டாக்கி காணாமல் போய் விடும். அதை தேடி போலீஸ் அலையும். அப்போது காவல்துறை அதிகாரியை குண்டு சிறுவன் கடுமையான லந்து கொடுப்பான்.

அவர்களுக்குள் நடக்கும் ஒரு டயலாக். ' டேய்.. என் கண்ணுல இருந்து கண்ணீர் வர வெச்சுட்டீங்கடா.' என காவல்துறை அதிகாரி சொல்ல, அதற்கு அந்த சுள்ளான், "டி எஸ் பி சார்.. கண்ல இருந்து தண்ணி தான் வரும்... பின்னே மூத்திரமா வரும்?” என லந்தடிப்பான்.

இந்த படத்தில் வசனம் ஆபாசம் என்பதைத் தாண்டி வக்கிரமாகவே இருந்தது. ' ஏண்டி.. நான் தெரியாம தான் கேட்கறேன்.. ஆம்பளைங்க பேண்ட்ல ஜிப் இருக்கறது ஓக்கே.. பொம்பள புள்ளைங்க பேண்ட்ல எதுக்குடி ஜிப்?" ( எழுதினது எஸ்.ராமகிருஷ்ணனா?)

இந்த படத்தில் நீதிபதி வீட்டு பீரோ சாவி காணாமல் போகும். அந்த பீரோவை திறக்க திருடனான ஆர்யாவை இன்ஸ்பெக்டர் அழைத்துச் செல்வார். பீரோவை திறந்த பிறகு நீதிபதியின் சைரன் வைத்த வாகனத்திலேயே ஊருக்குள் ஆர்யா வருவார். இப்படியெல்லாம் யாராவது யோசிக்க முடியுமா? இதில் கதாநாயகியாக வருபவரும் போலீஸ் தான். அவர் வீட்டில் திருடப்போகும் விஷாலிடம் அவர் பேசும் வசனங்கள் ‘ஏ’ ஒன் !

இப்படி பாலா படம் என்றாலே போலீஸ்காரர்களை நட்டு கழன்றவர்களாய் காட்டும் நிலையில், நாச்சியாரில் ஜோதிகாவும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப பயமாய் இருக்கிறது.

- ப.கவிதா குமார்