இந்திய மண்ணில் உருவான இரானிய சினிமா...

முதல் இரானிய பேசும் படம் (talkie) தயாரானது நமது இந்தியாவின் மும்பையில் தான் என்றால் வியப்பாக இருக்கிறதா? பிரிட்டிஷ் இந்தியா என்பது பல வகைகளி லும் மற்றைய பல தேசங்களைவிட முன்னணியில் இருந்தது. குறிப்பாக, பிரிட்டிஷார் தங்கள் தேசத்தில் அறிமுகமான பலவற்றையும் சூட்டோடு சூடாக நம் இந்தியாவுக்குக் கொண்டுவந்துவிடும் இயல்பினராக இருந்தனர். சந்தையைப் பயன்படுத்திக் கொள்வதில் அவர்களுக்கு சலிப்பே ஏற்பட்டிருக்கவில்லை. அப்படித்தான் சினிமாவும் இந்தியாவுக்கு சீக்கிரமாகவே வந்துவிட்டது.  

அப்தோல் ஹொசேன் பழங்கால பெர்ஷிய வரலாற்றிலும் பெர்ஷிய இலக்கியத் திலும் தீவிர ஈடுபாடு கொண்ட இரானியர். இதன் காரணமாக தனக்கு செபன்டா என்ற புனைபெயரைச் சூட்டிக்கொண்டார் ஹொசேன். 1907 ஆம் ஆண்டு இரானின் தலைநகர் டெஹரானில் கொலாம் ரெசாகான் என்பவரின் மகனாகப் பிறந்தார் செபன்டா. குவஜார் பரம்பரையின் அரசரான மொசாபர் அல் தீன் ஷாவுக்கு மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார் கொலாம். இதனால் அப்தோல் ஹொசேன் நல்ல கல்விச் சூழலில் வளர்ந்தார். 1925 ல் டெஹ்ரான் வட்டாரத்தைச் சார்ந்த செயின்ட் லூயிஸ் மற்றும் சோராஷ்டிரியன் கல்லூரிகளில் உயர் கல்வியினைப் பெற்றார். அதன் பின்னர் இந்தியாவுக்குப் பயணமானார். தின்ஷா இரானி என்ப வரைத் தனது மொழிபெயர்ப்பாளராகக் கொண்டு தொன்மைப் பண்பாடு குறித்து விரிவாகப் பயின்றார். சிறிது காலம் இரான் திரும்பிய செபன்டா நீண்டகாலம் தங்கி யிருக்க எண்ணி இந்தியா திரும்பினார். தொடர்ந்து பழங்கால இரானியப் பண்பாடு மற்றும் இலக்கியம் பற்றி மேலும் பயின்றார். அவரது பேராசிரியர்கள் தந்த உற்சாகத் தால் சினிமாவில் தனது கவனத்தைத் திருப்பினார் செபன்டா.  

இரானில் அப்போது பேசாப் படங்கள்தான் வந்துகொண்டிருந்தன. ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்த ஆர்மேனியரான ஒகானஸ் ஒகானியன்ஸ் (oganes oganians) தான் அன்றைய முன்னணி இரானிய சினிமா தயாரிப்பாளராக இருந்தார். இந்தியாவில் சினிமா தொழில்நுட்பம் மேம்பட்டிருப்பது கண்ட செபன்டா தன்னால் இரானின் முதல் பேசும் படத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார். 1931 ல் இந்தியாவின் முதல் பேசும் படத்தைத் தந்த அர்தேஷிர் இரானியின் நட்பு செபன்டாவுக்குக் கிடைக்க, இரானின் முதல் பேசும் படமான ‘லோர் கேர்ல்’ மும்பை யின் இம்பீரியல் பிலிம் கம்பெனியில் உருவானது. இரானின் முதல் பேசும் படமான இந்தப் படத்தில்தான் முஸ்லிம் நாடுகளிலேயே முதல் முறையாக ஒரு பெண் நடித் திருந்தார். அதற்குமுன்னர் ஒரு பெண்ணை வைத்துப் படம் எடுப்பது அங்கெல்லாம் இயலாததாக இருந்தது. அதை செபன்டா துணிவுடன் முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்தப் படம் 1933 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெஹரான் நகரின் மாயக் சினிமா மற்றும் செபா சினிமா ஆகிய இரண்டு தியேட்டர்களில் ஒரே சமயத்தில் வெளியானது. படம் வியத்தகு வெற்றி பெற்றது. வெளிநாட்டுப் படங்களையே திரையிட்டுக் கொண்டிருந்த இரானில் ‘லோர் கேர்ல்’ அந்தச் சூழலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அதன் சாதனையைப் பல ஆண்டுகளுக்கு இன்னொரு படத்தால் முறியடிக்க முடியவில்லை.  

அந்தப் படத்தின் முழு திரைக்கதையையும் செபன்டாவே எழுதினார். அத்துடன் அதன் கதாநாயகனாகவும் நடித்தார். கிராமத்தின் தேநீர் விடுதிப் பெண்ணான குல்நார் அரசாங்கத்தின் ஏஜென்டான ஜாபர் மீது காதல் கொள்கிறாள். இரானின் அரசியல் சூழல் காரணமாக அவர்கள் இந்தியாவுக்குத் தப்பி ஓடுகின்றனர். குவாஜர் பரம்பரையினரை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்த பலாவி பரம்பரையினரின் கொடுங் கோல் ஆட்சியில் மக்கள் சொல்லமுடியாத பெருந்துயரங்களை அனுபவித்தனர். மக்களுக்குப் பாதுகாப்பில்லாத அந்த அரசியல் சூழலை நுட்பமாக விமரிசனம் செய்தது ‘லோர் கேர்ல்’.

1930 களில் இரானில் மொத்தம் 9 பேசும் படங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றுள் 5 படங்கள் செபன்டாவினுடையவை. பொழுதுபோக்கு அம்சங்களோடு அரசியல் ஆவணங்களாகவும் திகழ்ந்தன செபன்டாவின் படங்கள். செபன்டா மட்டுமே இரானில் அவரது யுகத்தின் தலை சிறந்த சினிமாக் கலைஞராவார். அரசாட்சியிலி ருந்தவர்களுக்கு அவரது படங்கள் வேம்பாகக் கசந்தன.  

இயக்குநராகவும், கதையாசிரியராகவும், பல படங்களிலும் முன்னணிப் பாத்திரங் களில் நடிகராகவும் பன்முகங்கள் காட்டிய செபன்டாவின் லோர் கேர்ல், பெர்தோவ்சி, ஷிரின் ஓ பர்ஹாட், பிளாக் ஐஸ் மற்றும் லைலி ஓ மஜ்னுன் ( நம்ம ‘லைலா மஜ்னு’ தான்) ஆகிய படங்கள் இந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டன.  

இஸ்லாம் மயமாவதற்கு முன்பான பெர்ஷிய இலக்கியத்தில் மேதமைபெற்று விளங்கிய செபன்டாவின் படங்கள் தேசிய மற்றும் வரலாற்றுத் தன்மை கொண்டதாக இருந்தன. ஒடுக்கப்பட்டவர்களின் வெளிப்பாடாக அவரது படங்களின் உள்ளடக்கம் இருந்தது. சமூக, பண்பாட்டுத் தளங்களில் ஓய்வில்லாமல் நிகழ்ந்துகொண்டிருந்த மோதல்களை அவரது படங்கள் பிரதிபலித்தன.  

செபன்டா பின்னாளில் தனது முதல் படம் குறித்துச் சொன்னார்: 

“இரானின் முதல் பேசும் படமான இது இரான் நிலைமை குறித்து மிகப் பிரகாசமாகப் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்று நான் விரும்பினேன். இரானுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழும் இரானியர்களின் தேசிய உணர்வுக்கு இது ஊக்கமளித்தது என்பதை நான் பெருமையோடு சொல்வேன்”.

லோர் கேர்ல் வரும்வரையில் இரானிய சினிமா உயர் வர்க்கத்தினருக்குச் சேவகம் செய்வதாகவே இருந்தது. மற்ற இரானிய சினிமா இயக்குநர்கள் வெளிநாட்டுப் படங் களைப் பார்த்துக் காப்பியடித்துக்கொண்டிருந்தனர். செபன்டா மட்டுமே இரானின் பழைய இலக்கியத்தின் கூறுகளையெல்லாம் தனது படைப்புகளில் பயன்படுத்தினார். செபன்டாவின் படங்கள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி, அவர் களின் ரசனை மட்டத்தையே உயர்த்தின. அவரது இரண்டாவது படமான ‘பெர்தோவ்சி’, பெர்ஷிய இலக்கிய உலகின் காவியக் கவிஞனான பெர்தோவ்சியின் ஆயிரமாவது ஆண்டுக் கொண்டாட்டங்களின்போது அந்தக் கவிஞனின் நினைவைப் போற்றும் நோக்கத்துடன் எடுக்கப் பட்டது.  

1930 முதல் 1936 வரை இரானின் சினிமா நெடுந்துயிலில்-நீண்ட தூக்கத்தில் இருந்தது. செபன்டா மட்டுமே தனியொரு மனிதனாக-விதி விலக்காக இயங்கிக் கொண்டிருந்தார். செபன்டாவின் துவக்க காலம் என்பது பம்பாய் நகரத்தில் கழிந்தது. அங்கே வாழும் பார்சி இன மக்களின் ஆதரவுடன் இயங்கிவந்த செபன்டா ஏதோ காரணத்தால் அங்கிருந்து 1935 ல் கல்கத்தா நகருக்குத் தன் இருப் பிடத்தை மாற்றிக் கொண்டார்.  அவருக்கு அங்கே புலம்பெயர்ந்த இரானியர்களின் அறிமுகம் கிட்டியது. அபித் பாஸ்ரவி என்பவருடன் இணைந்து ‘லைலி ஓ மஜ்னுன்’ படத்தை எடுத்தார்.  

இரானில் அரசியல் நிலைமை மாறியிருந்தது. தனது ‘லைலி ஓ மஜ்னுன்’ படப் பெட்டியுடன் இரானுக்குப் பயணமானார் செபன்டா. தாய்நாட்டில் புதிய அரசாங்கம் தனக்கு உதவி செய்யும். இரானில் ஒரு சினிமா படப்பிடிப்பு ஸ்டுடியோவை நிறுவலாம் என்றெல்லாம் கனவுகளோடுதான் அவர் இரான் வந்துசேர்ந்தார். ஆனால் அங்கே அவரை உதாசீனப்படுத்தியது இரான் அரசு. அதிகார வர்க்கம் சினிமாவை ஒரு கலை வடிவமாகக்கூட ஏற்க மறுத்தது. அவரது ‘லைலி ஓ மஜ்னுன்’ படத்தைக்கூட அவரால் வெளியிட இயலவில்லை. மனமெங்கும் சோகம் அப்பியபடி தனது இந்தக் கடைசிப் படத்தை அடிமாட்டு விலைக்கு விற்க முயன்றார். விற்றுவிட்டு மீண்டும் இந்தியாவே கதியென்று கிளம்ப நினைத்தார். இந்தியா வந்து, தனது அடுத்த படங்களான தி பிளாக் அவ்ல், ஓமர் கய்யாம் ஆகியவற்றின் பணிகளைத் துவங்கிட எண்ணினார். இவை இரண்டுக்குமான கதைகளை எழுதித் தயாராகவே வைத்திருந்தார் செபன்டா. ஆனால், அவரது தாயார் நோய் வாய்ப்பட அவருடனேயே அவர் எஸ்பகானில் தனிமையில் தங்க வேண்டியதாயிற்று. அதன் பின்னர் அவர் இந்தியா வரவேயில்லை. ‘லைலி ஓ மஜ்னுன்’ வே அவரது கடைசிப் படமானது.  

முப்பது ஆண்டுகள் உருண்டோடின. செபன்டா ஒரு 8 எம்.எம்.கெனான் காமிரா வை வாங்கினார். மீண்டும் சுறுசுறுப்பானார். 1967 முதல் 69 வரை ஏராளமான ஆவணப்படங்களை எடுத்துத் தள்ளினார். 1943 ல் ‘செபன்டா செய்தித்தாள்’ (sepanta newspaper) என்ற வாரப் பத்திரிகையைத் துவங்கினார். கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அரசியல் சுதந்திரத்தை அவரது இதழ் வெளிப்படுத்தியதால் தொடர்ந்து அதனை நடத்த அரசாங்கம் இடையூறு செய்தது. 1954 ல் மூடுவிழா கண்டது அவரது பத்திரிகை.  

இரானிய சினிமாவின் தோற்றத்திற்கும், அதன் அடிப்படையான வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க நுட்பமான பங்களிப்பினைச் செய்த அப்தோல் ஹொசேன் செபன்டா இரானிய சினிமாவின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படுகிறார். கவிதை, தத்துவம், வரலாறு முதலான துறைகளில் 18 நூல்களையும் எழுதியுள்ள செபன்டா 1969 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று தனது 62 வது வயதில் மாரடைப்பால் மரணத்தைத் தழுவினார். இரானிய சினிமா இன்று உலகம் வியக்க வளர்ந்திருக்கிற தென்றால், இன்றளவும் அதற்கு அடியுரமாகிக் கிடக்கின்றன அந்நாளைய வீரியமிக்க செபன்டாவின் படைப்புகள்.

- சோழ. நாகராஜன்