jackson durai movie

தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு புது படம் வந்து வெற்றிபெற்றுவிட்டால் அவ்வளவுதான் அடுத்து  டஜன் கணக்கில் அதுபோன்றே படங்கள் எடுத்துத் தள்ளப்படும். போலீஸ் படங்கள், அம்மா சென்டிமென்ட் படங்கள், அம்மன் சென்டிமென்ட் படங்கள், குழந்தைகள் சென்டிமென்ட் படங்கள்  என வெற்றி பெற்ற படத்தின் பார்முலாவை அப்படி இப்படி என மாற்றிப்போட்டு சில மாதங்கள் ஓட்டுவார்கள். மக்கள் காறித்துப்பி கழுவி ஊற்றும்வரை இந்தப் பணி தொய்வின்றி தொடர்ந்துகொண்டே இருக்கும். கோடம்பாக்கத்தில் இயக்குனர் கனவோடு சுற்றும் பல பேர் மக்களின் வாழ்க்கையை நன்கு படித்திருக்கின்றார்களோ இல்லையோ தயாரிப்பாளர்களின் மனதை நன்றாக படித்திருக்கின்றார்கள்.

 கடந்த ஒரு வருடமாக தமிழ் சினிமா இயக்குனர்கள் தங்களுடைய கேமராவை தூக்கிக்கொண்டு பாவம் சுடுகாடு சுடுகாடாக சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுடைய சமூகப்பணி இதோ முடிந்துவிடும் அதோ முடிந்துவிடும் என நாமும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தால் இந்தப் பாவிகள் தாங்களும் ஆவிகள் ஆகும்வரை இதை நிறுத்தப் போவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். வாரம் வாரம் ஒன்றோ, இரண்டோ பேய்படங்கள் வந்து தமிழக மக்களை விடாமல் ஆட்டிக்கொண்டே இருக்கின்றது.

 பல இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் பேய்பிடித்து ஆட்டுவது போல  பல நடிகைகளையும், நடிகர்களையும் விடாது அது ஆட்டிக்கொண்டு இருக்கின்றது. பணம் கொடுத்தால் அந்தப் பேய் யாரை வேண்டும் என்றாலும் ஒரே சாத்தாக சாத்திவிடுகின்றது. கடைசியாக நாத்திகம் பேசிய ஒரு நடிகரையே ஜாக்சன் துரை என்ற பேய் அடித்துவிட்டது என்றால் பாருங்கள். இப்படி எடுக்கப்படும் பல பேய்படங்கள் பெரியாரின் சீடர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளில் தான் அதிகம் ஒளிபரப்பப்படுகின்றன. இன்னும் சொஞ்ச நாளில் பெரியாரையே வைத்துப் பேய்படம் எடுத்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

  ஒவ்வொரு பேய்படமும் பேயை ஒவ்வொரு கோணத்தில் காட்டுகின்றன. நல்லது செய்யும் பேய், கெட்டது செய்யும் பேய், எப்போது பார்த்தாலும் உர்… உர்…. என்று காரணமே இல்லாமல் கத்திக் கொண்டிருக்கும் பேய், கண்ணில் கருவளையம் விழுந்த பேய், ஒவர் மெக்கப்போட்ட பேய், கூந்தலை முடியாத பேய், சிவப்பு புடவை கட்டிய பேய், வெள்ளைப் புடவை கட்டிய பேய், இன்னும் சில பேய்கள் நம்மளைப் போலவே அழகாகவே இருக்கின்றன. அதை படம் முடியும் வரை நம்மால் பேய் என்று கண்டுபிடிக்கவே முடியாது, இயக்குனருக்கு அவ்வளவு சாமார்த்தியம்!. இப்படி விதவிதமாக பேய்யின் வடிவமைப்பும் அவற்றின் குண நலன்களும் நம்மிடம் பேய்பிடித்த இயக்குனர்களால் வலிந்து காட்டப்படுகின்றன.

 பல கோடிகளைக் கொட்டி மாஸ் ஹுரோக்களை வைத்து எடுக்கும் படங்கள் எல்லாம் மண்ணைக்கவ்வி விட குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் இது போன்ற பேய்படங்கள் கல்லாவை காயப்படுத்தாததால் தயாரிப்பாளர்களும் பெரும்பாலும் இதுபோன்ற பேய்படங்களையே எடுக்கச் சொல்லி இயக்குனர்களை ஊக்குவிக்கின்றார்கள். கூலிக்கு மாறடிக்கும் பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குனர்களிடம் சமூக பொறுப்பு என்பதெல்லாம் நாம் பொதுவாகவே எதிர்ப்பார்க்க கூடாதுதான் என்றாலும் குறைந்த பட்சம் தம்முடைய படங்களைப் பார்க்கும் மக்களிடம் அது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அறம் சார்ந்த பார்வை அவர்களிடம் இருக்கின்றதா என்று நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

  உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் எடுக்கும் படம் என்ன மாதிரியான சமூக விளைவை ஏற்படுத்தும் என்ற குறைந்த பட்ச அக்கறையைக் கூட அவர்கள் திரைப்படங்களில் கடைபிடிப்பதில்லை, எப்படி வன்முறை காட்சிகளும், பாலியல் வக்கிரம் நிறைந்த காட்சிகளும் இந்தச் சமூகத்தைச் சீரழிக்கின்றதோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல் இது போன்ற பேய்படங்களும் இந்தச் சமூகத்தைச் சீரழிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே உள்ள மரணம் பற்றிய பயத்தையும், மரணத்திற்குப் பின்னால் மனிதனின் வாழ்வு பற்றிய பயத்தையும் அறிவியல் நீக்கமற தீர்த்து வைக்கின்றது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், ஆய்வுத்திறனும் அற்ற நபர்கள் மரணத்திற்கு பின் ஒரு ஆவி வாழ்வை எப்போதுமே கற்பனை செய்துகொள்கின்றார்கள். அது அவர்களுக்குத் தற்காலிகமாக மரணத்தைப் பற்றிய பயத்தில் இருந்து ஒரு ஆசுவாசப்படுத்தலைக் கொடுக்கின்றது. எண்ணிக்கையில் இப்படி நினைப்பவர்கள் தான் பெரும்பான்மையாக இருப்பதால் அதை வைத்து மக்களை ஏமாற்றுவது இது போன்ற பேய் வியாபாரிகளுக்குச் சுலபமாக உள்ளது.

 எந்த அறிவியல் மூட நம்பிக்கைகளை ஓட ஓட விரட்டி அடித்ததோ இன்று அதே அறிவியலைப் பயன்படுத்தி மூட நம்பிக்கைகள் தீவிரமாக பரப்பப்படுகின்றன. கணினியில் ஜோசியம் பார்ப்பதில் ஆரம்பித்த இந்த அயோக்கியர்கள் இப்போது அதே கணினியை வைத்து பேய்களையும் உருவாக்கி திரையில் உலாவவிடுகின்றார்கள். பார்ப்பனியம் கணினியைக்கூட உள்வாங்கிவிட்டது!. எந்த வகையிலும் இந்திய மக்கள் அறிவை பெற்றுவிடக் கூடாது என்பதில் பார்ப்பனியம் மிகத் தெளிவாக உள்ளது.

sowkarpettai

  இது போன்ற பேய் படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குக் குறிப்பாக சிறுவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றார்கள். மூளையில் உள்ள Amygada பகுதியில்  ஒரு முறை எதிர்மறையான எண்ணங்கள்  ஏற்பட்டுவிட்டால் அது எளிதில் மறையாது என்று கூறுகின்றார்கள். இதனால் அவர்களின் எதிர்கால  வாழ்க்கையே சிக்கலுக்குள்ளாகி பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றது. இதனால் 12 வயதுக்குக் குறைவான குழந்தைகளை எக்காரணம் கொண்டும் இது போன்ற மூட நம்பிக்கைகளைப் பரப்பும் படங்களை பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது என்று மனநல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றார்கள். ஆனால் நம்ம ஊரில் எடுக்கப்படும் பெரும்பாலான மூட நம்பிக்கை சார்ந்த படங்களின் முதல் டார்கெட்டே அந்த சிறுவர்கள் தான். படத்தில் நான்கு சிறுவர்களை காட்டிவிட்டால்  அல்லது அவர்களுடன் சேர்ந்து ஒரு நடனம் ஆடிவிட்டால் உடனே அது சிறுவர்களுக்கான படமாக அப்படியே மாற்றப்படுகின்றது. இப்படித்தான் பல வக்கிரம் பிடித்த கதாநாயகர்கள் குழந்தைகள் விரும்பும் நாயகர்களாக வளம் வந்துகொண்டு இருக்கின்றார்கள்.

 நமக்குத் திரைப்படங்களில் பேய்களைப் பார்த்தால் ஏற்படும் பயத்தை விட இது போன்ற பேய்படம் எடுக்கும் புறம்போக்குகளைப் பார்த்தால்தான் பயமாக இருக்கின்றது. லாபம் உத்தரவாதப்படுத்தப்படுகின்றது என ஒரே நோக்கத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவு வளர்ச்சியின் மீதும் வன்முறையைச் செலுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். வளரும் இளம் தலைமுறை இளைஞர்களை அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டு அமானுஷ்யமாக சிந்திக்கவைக்கும் அறிவிலிகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தனிப்பட்ட கதாநாயகர்களை சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் போராளிகளாக காட்டி காசு பார்த்த கோடம்பாக்கத்துக் கோமாளிகள் இன்று பேய்களையே போராளிகளாக காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். தாம் எடுக்கும் இதுபோன்ற கேடுகெட்ட படங்களால் ஒரு சமூகமே மூடநம்பிக்கை சகதிக்குள் சிக்கிக்கொள்ளும் என எந்த அக்கறையும் இந்த பணவெறி பிடித்த பேய்களிடம் இருப்பதில்லை.

 ஒவ்வொரு மனிதனும் அறிவியலை நம்பவேண்டும், மரணத்திற்குப் பின் வாழ்வுண்டு என்ற மத நம்பிக்கையில் இருந்து விடுபடவேண்டும். சக மனிதனின் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடும் போர்க்குணம் கொண்ட சிந்தனைமரபை நாம் வரித்துக் கொள்ள வேண்டும். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறுகின்றார்

  “நான் இறந்த பின்பு அழுகிப்போவேன்; என்னுடைய அகம் எதுவும் மிஞ்சாது, நீடித்து நிற்காது. நான் இளைஞன் அல்லன்; இருப்பினும் வாழ்வை நேசிக்கின்றேன். ஆனால் ஒரு நாள் அழிந்துவிடுவோமோ என்பதை எண்ணி நடுங்குவதை வெறுக்கின்றேன். மகிழ்ச்சி முடிவுக்கு வரக்கூடியதுதான்; இருப்பினும் அது மகிழ்ச்சியாக உணரப்படுகிறது என்பது உண்மை. அவ்வாறே, சிந்தனை, அன்பு ஆகியவை நீடித்து நிலைக்காதவை என்பதால் அவற்றின் மதிப்பு குறைவதில்லை. எத்துணையோ மனிதர்கள் பெருமையுடன் தூக்குமேடை ஏறியுள்ளனர். அதே பெருமிதம், இவ்வுலகில் மனிதனின் இடம் எது என்பதைச் சிந்திக்க அவனுக்குக் கற்பிக்க வேண்டும். மரபு வழியிலான மனித நேயப் பழங்கதைகளில் மூழ்கி, பாதுகாப்பாக வீட்டிற்குள் அடங்கிச் சுகித்திருக்கும் வாழ்வு, அறிவியல் எனும் சாளரத்தைத் திறக்கும் போது, வெளியிலிருந்து வரும் குளிர் காற்றில் பாதிக்கப்பட்டாலும், முடிவில் நமக்குப் புதிய காற்றும் பரந்த வெளியும் நல்லூக்கமும், வலிமையும் தரும்”( கடவுள் ஒரு பொய் நம்பிக்கை: ரிச்சர்டு டாகின்ஸ்).

 பார்ப்பனிய பண்பாட்டு விழுமியங்களை அழித்தொழித்தல் எனும் பணியில் மிக முக்கியமானது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போரட்டம் ஆகும். பார்பனியத்தால் உள்வாங்கப்பட்ட பல முற்போக்கு அமைப்புகளில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மருந்தளவுக்குக் கூட எப்போதுமே நடைபெறுவது கிடையாது. நமக்குத் தெரிந்து இன்று அதை தமிழ்நாட்டில் தீவிரமாக எடுத்துச் செல்லும் ஒரே அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகமே ஆகும். தொடர்ச்சியாக மக்களிடம் அறிவியல் சிந்தனைகளைப் பரப்புவதையும் அதற்கான பிரச்சாரங்களைக் கட்டமைப்பதிலும் மற்ற அமைப்புகளைக் காட்டிலும் எப்போதும் அவர்கள் முன்னணியில் இருக்கின்றார்கள். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மற்ற பெரியாரிய, மார்க்சிய அமைப்புகளும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போர்குணம் கொண்ட போராட்டத்தை நடத்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிற்போக்கு சக்திகளை பெரியாரிய மண்ணில் இருந்து நாம் தனிமைப்படுத்த முடியும். இல்லை என்றால் கோடம்பாக்கத்துக் கோமாளிகள் தினம் ஒரு பேய்படம் எடுத்தாலும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

- செ.கார்கி

Pin It