தமிழ் சினிமாவிற்கும், அரசியலுக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதை மனப்பிறழ்வு ஏற்பட்டவனிடம் கேட்டால் கூட சொல்லி விடுவான். அறிஞர் அண்ணா துவங்கி வைத்த அந்தப் பயணத்தில் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா பலர் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜயகாந்த் கடைசியில் இந்தப்பட்டியலில் சேர்ந்துள்ளார்.

vijaykanthகாலைச் சுழற்றி, சுழற்றி அவர் சினிமாவில் அடிப்பதைப் பார்க்கும் போது, அச்சமாக இருக்கும். ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது, நடிகர் பொன்னம்பலம் சொல்லும் போது, ஆனஸ்ட் ராஜ் படத்தில் விஜயகாந்தோடு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது பலத்த அடிபட்டதாகக் கூறினார். அடிபட்டவர் இன்னும் சண்டைக்காட்சியில் நடித்துக் கொண்டிருக்க, அடித்தவர் தற்போது தமிழகத்தின் எதிர்கட்சித்தலைவர்!

நடிகர் எம்.ஜி.ஆர் திமுகவில் பல ஆண்டுகள் செல்வாக்குடன் திகழ்ந்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதன் பின்னணியில் அவர் கட்சி துவங்கும் போது, ஆதரவு கிடைத்து அதன் பின் முதல்வரானார். அவருடைய மறைவிற்குப் பின் அவருடைய துணைவியார் வி.என்.ஜானகியால் முதல்வராகத் தொடர முடியாமல் போனது. குறுகிய காலத்தில் முதல்வராக இருந்தாலும் மக்கள் செல்வாக்கு இல்லாத காரணத்தால் இரட்டைப்புறா சின்னத்தில் நின்று தோற்றுப்போனார்.

நடிகர் எம்.ஜி.ஆரின் புகழைப் பார்த்து நடிகர் சிவாஜி கணேசனும் அரசியலில் குதித்தார். ஆனால், அதன் ஆழம் தெரியாமல் காலை விட்டு பின் தப்பித்தால் போதும் என துறவறம் மேற்கொண்டார். எம்.ஜி.ஆரைப் போன்று நாடகத்தில் இருந்து துவங்கிய அவரது பயணம், பராசக்தி மூலம் பெரும் சக்தியாக உருவெடுக்கக் காரணமானது. 1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜிகணேசன் 1961 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் ஆனார். 1987 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி அவ்வாண்டே கலைக்கப்பட்டு விட்டது தான் பெரும் சோகம்.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் கட்சியின் தலைவர்களுள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அக்கட்சியில் பெரும்பான்மையான தலைவர்கள் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக (ஜெ) அணியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென விரும்பினர். அதனை எதிர்த்த சிவாஜி தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி புதுக்கட்சி தொடங்கினார். ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக (ஜா) அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தமிழக முன்னேற்ற முன்னணி தோல்வியைத் தழுவியது. சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்து சிறிது காலத்திற்குள் கட்சியைக் கலைத்து விட்டு ஜனதா தளம் கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து விட்டார். இப்படி அரசியலில் அவரால் நிலைத்து நிற்க முடியாமல் போனதற்குக் காரணம் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசியலில் செலவழிக்க அவர் தயாராக இல்லாமல் போனது தான். நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

இப்போது கூட நடிகர் விஜய் அரசியல் பிரவேசித்தலுக்கான முயற்சியுடன் இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் பரப்பப்படுகின்றன. நடிகர் ரஜினி ஒருகாலத்தில் வாய்ஸ் கொடுத்து தமிழ் மாநில காங்கிசை வெற்றி பெற வைத்ததாக கதைக்கப்பட்டது. அதன் பின் அவர் பல முறை குரல் கொடுத்தும் அவருடைய குரல் அரசியல் தளத்தில், அவர் பாணியில் சொல்தென்றால் "சும்மா! அதிர்வை" ஏற்படுத்தவில்லை. இவர்களுக்கு மத்தியில் எம்ஜிஆரின் வாரிசு என சினிமாவில் கைகாட்டப்பட்ட இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர் டி.ராஜேந்தர் ஆகியோரின் கட்சிகள் போணியாகவில்லை.

இப்படி அறுபது ஆண்டு காலம் சினிமாவோடு பின்னிக் கிடந்த தமிழக அரசியல், சினிமாவை, வேண்டாம் திரையரங்குகளையாவது காப்பாற்றியதா?

தமிழகத்தைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இப்படி கலைத்துறையினர் அதிகம் பேர் முதல்வரான வரலாறு இல்லை. அதனால் தான் கலைத்துறையில் கால் வைத்ததும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய கனவுடன், கதாநாயகன்கள் திரையில் அறிமுகமாகும் காட்சியில் பில்டப் பாடல்கள் மெட்டிசைக்கப்படுகிறது. ஓடும் குதிரையில் பந்தயம் கட்டுவது போல வெற்றி பெற்ற கதாநாயகன்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் மீது பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு இவர்களின் அரசியல் எல்லாம் தேவையில்லை. மூன்று சென்டர்களிலும் படம் ஓட வேண்டும். கல்லா நிரம்ப வேண்டும். அவ்வளவு தான்!

நாம் பார்க்கிறோமோ இல்லையோ அன்றாடம் வீடுகளில் உள்ள சின்னத்திரையில் 5 படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் கண்ணீர் சிந்தும் காட்சிகளுடன் 5 நாடகங்கள் என பெண்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் சின்னத்திரையால் பெரிய திரை பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

1916-ஆம் ஆண்டு தமிழில் முதல் மௌனப்படமாக துவங்கிய திரைப்பட பயணம் தற்போது டிஜிடல் கேமரா கொண்டு படப்பிடிப்பிலேயே டப்பிங் பேசி படத்தை முடிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் மண்ணைக் குவித்து வைத்து படம் பார்த்த டூரிங் தியேட்டர்களும் பல திரைப்படங்களை ரீலிஸ் செய்த பெரிய திரையரங்குகளும் காணாமல் போய் கொண்டிருக்கின்றன‌.

மதுரையில் உள்ள சிந்தாமணி தியேட்டரில் மூன்றாண்டுகள் “சிந்தாமணி“ என்ற படம் ஓடியதால் அப்படத்தின் பெயரை தனது பெயராக்கிக் கொண்டது அத்தியேட்டர். இப்போது ஜவுளிக்கடைக்காக வாங்கப்பட்டு பல ஆண்டுகளாக அப்படியே உள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையங்கு என பெயர் பெற்ற தங்கம் தியேட்டர் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது திரையோட்டத்தை நிறுத்திக் கொண்டது. அமெரிக்காவின் பிளான்விடா தியேட்டரைப் போல மதுரையில் ஒரு தியேட்டரை உருவாக்க வேண்டும் என நினைத்த விருதுநகரைச் சேர்ந்த பிச்சை என்பவர் உருவாக்கியது தான் இந்த தங்கம் திரையரங்கம்.

vijay anna hazare 450மதுரையின் மத்தியப்பகுதியான டவுன்ஹால் ரோட்டில் 1952-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திரையரங்கில் வெளியிடப்பட்ட முதல் படம் பராசக்தி. இந்தியாவின் மிகச்சிறந்த நடிகரான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அறிமுகமான இப்படம், 4 மாதங்கள் திரையிடப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்களை கவருவதற்காக பல புதிய ஆங்கிலப்படங்களை ரீலிஸ் செய்தது தங்கம் தியேட்டர். இப்படிப்பட்ட புகழ்பெற்ற இத்தியேட்டர் 1993-ஆம் ஆண்டு மூடப்பட்டது.

மதுரையில் புகழ்பெற்று விளங்கிய பல திரையரங்குகள் தற்போது இல்லை. இம்பீரியல், சிடிசினிமா, நியூசினிமா, சந்திரா, போத்திராஜா, சிந்தாமணி, தீபா, ரூபா, தினமணி, விஜயலெட்சுமி, வீரலெட்சுமி, கதிர்வேல், பத்மா, லெட்சுமி, சோனைமுத்தையா என பல திரையரங்குகள் தற்போது திருமண மண்டபங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறியுள்ளன.

இதற்குக் காரணம் தான் என்ன? ஒரு காலத்தில் ஒரு திரைப்படம் மூன்று ஆண்டுகள் ஒரே திரையரங்கில் திரையிடப்பட்ட காலம் போய் ஒரே திரையரங்கில் ஒரே நாளில் இரண்டு படங்கள் திரையிடும் நிலைமைக்கு தமிழ் சினிமா உலகம் தள்ளப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கதையற்ற மசாலாத்தனத்துடன் எடுக்கப்படும் படங்களினாலும், ஒரு பக்கம் 20 ரூபாய்க்கு 5 படங்களைத் தரும் திருட்டு டிவிடியினாலும், மறுபக்கம் படம் பார்க்க வருபவர்களின் பர்சை பதம் பார்க்கும் 150 ரூபாய் என்ற திரையரங்க கட்டணங்களினாலும் திரையிரங்குகள் பெரும்பாலும் ஈ ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

மறுபக்கம் பிக் சினிமா, அட்லாப்ஸ் என்ற அடைமொழிகளோடு புதிய திரையரங்குகள் அங்காங்கே தோன்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை என்பது குறைவு. திரையரங்குகளால் உயர்ந்த பலர் அத்தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.

அன்றைய காலத்தில் 70 லட்ச ரூபாயில் பிரம்மாண்டமாக சந்திரலேகா என்ற படத்தை ஜெமினி தயாரித்தது. எதிர்பார்த்த வெற்றியை அப்படம் தரவில்லை. ஆனால், குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் வெள்ளிவிழா கண்டன‌. ஆனால், இன்றைய காலத்தில் 5 கோடி ரூபாய்க்கு மேல் கதாநாயகனுக்குத் தந்து படம் எடுக்கும் நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளதால், இந்தப் பணத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக கட்டணங்களை தியேட்டரில் வசூலிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை சினிமா ரசிகர்கள் சுமத்துகிறார்கள். கட்டண உயர்வால் கூட்டம் குறைவதால் தான் திரையரங்குகள் மூடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள்.

மதுரையில் ஒரு படம் வெற்றி பெற்றதால் தான் தமிழகம் முழுவதும் அப்படம் குறித்த நல்ல அபிப்பிராயம் சொல்லப்படும். அப்படிப்பட்ட ரசிக மகாஜனங்களின் காலடிபட்ட பல திரையரங்குகளின் அஸ்திவாரங்கள் இருந்த இடங்கள் புல் முளைத்துக் காணப்படுகின்றன. இந்த கவிதையைப் படிக்கும் போதெல்லாம் பலருடைய மனசில் வந்துபோகும் டூரிங் தியேட்டர்கள்!

“டூரிங் தியேட்டரில்
படம் பார்த்து
நாளானதை விட
டூரிங் தியேட்டரே
பார்த்து வெகுநாளாகிப்போச்சு!"