இந்த ஆண்டில்..... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்க மாட்டார்கள் எங்கள்
தோழர்கள் கூண்டில்!
எட்டுத் திசைகளும்
நின்ற இருட்சிறை
விட்டுக் கதிரொளி
வெளியே குதித்தது!
மொட்டுத் தளைகள்
உடைத்தது தாமரை
சிட்டுக் குருவி
சிறகை அவிழ்த்தது!
இந்த ஆண்டில்..... இன்றேல்
இருக்க மாட்டார்கள் எங்கள்
தோழர்கள் கூண்டில்!
முப்புறம் சிறை
கொண்ட மலைகளை
ஒப்பிலா மலை
ஆறு தகர்த்தது!
குப்புறக்கடல்
காற்றைக் கவிழ்த்தது!
சிப்பி உடைத்தொரு
முத்துச் சிரித்தது!
இந்த ஆண்டில்...... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார்கள் எங்கள்
தோழர்கள் கூண்டில்!
Pin It