சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் கடந்த சில வாரங்களாக நிகழ்ந்துவரும் நிகழ்வுகள் குறித்து பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. சமூகநீதி மறுக்கப்படும்போதும், உரிமை மீறல்கள் தொடரும்போதும், சனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படும்போதும்;, உடனடியாக உணர்வுள்ள வழக்கறிஞர்கள் களத்தில் நிற்பார்கள். இதை வழக்கறிஞர்களின் பல கட்ட போராட்டங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. வழக்கறிஞர்கள் சட்டத்தின் அறிவைப் பெற்றவர்கள் என்பதாலேயே, உரிமைகள் பற்றிய உணர்வு அவர்களுக்கு சற்று கூடுதலாகவே உண்டு.

               high court chennai வழக்கறிஞர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை எல்லாத் தரப்பிலும் தள்ளிநின்று வேடிக்கை பார்ப்போரும் உண்டு. விமர்சனம் செய்வோரும் உண்டு. சனநாயக உணர்வோடு புரிந்துகொள்வோரும் உண்டு.   எத்தனையோ பல போராட்டங்களை இதற்கு முன்னதாக வழக்கறிஞர்கள் முன்னெடுத்திருந்தாலும், அண்மையில் மேற்கொண்ட சில போராட்டங்கள் நேரடியாக நீதித்துறைக்கும், சில நீதிபதிகளுக்கும் பெரும் சவாலாகவே அமைந்துவிட்டன. இந்தப் போராட்டங்களில் ஒன்று ஒரு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை மையப்படுத்தியது. இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் அனைவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அந்த தனி நீதிபதியின் தீர்ப்பு மதுரை வழக்கறிஞர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தது. மற்றொரு போராட்டம் தமிழ் மொழியை வழக்காடுமன்றத்தின் மொழியாக அங்கீகரித்து பிரகடனம் செய்ய வலியுறுத்துவது தொடர்பான போராட்டம்.

                இந்த இரண்டு போராட்டங்களும் அதனையொட்டிய தொடர் நடவடிக்கைகளும் சில நீதிபதிகளையும், ஒரு தரப்பு வழக்கறிஞர்களையும் சற்று அதிகமாகவே ஆத்திரமடையச் செய்திருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் தங்கள் கோபத்தை அதிகம் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பல வாத பிரதிவாதங்கள் பல தளங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. போராடிய வழக்கறிஞர்கள் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தின் நடவடிக்கைகள் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நீதித்துறையில் இது ஒரு அசாதாரணச் சூழலை உருவாக்கியுள்ளது. 15 வழக்கறிஞர்களை வழக்கறிஞர்கள் என்ற நிலையிலிருந்து நீக்கியதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜூ முட்டாள்தனமான முடிவு என்று வர்ணித்துள்ளார்.

போராடுவது சட்ட உரிமையே

நாட்டு விடுதலைக்கு முன்பாக, மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன. ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவோர் மீது அடக்குமுறைச் சட்டங்கள் பாய்ந்தன. போராடுவதற்கான உரிமை அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது. நாட்டு விடுதலைக்குப் பிறகு அமைந்த குடியரசிலே போராடுகின்ற உரிமையை, நாட்டு மக்கள் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக தமக்கு தாமே அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக வகுத்துக் கொண்டனர். சுதந்திர இந்தியாவில்,‘போராடுவது’ என்பது அரசியலமைப்பே மக்களுக்கு வழங்கியிருக்கின்ற அடிப்படை உரிமையாக மாறியது.

போராட்டங்களில் பல வகைகள் உண்டு. இந்திய அளவில், அன்றாடம் எத்தனையோ விதமான போராட்டங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. பெரும்பாலான போராட்டங்கள் அரசுக்கும் அரசு எந்திரத்திற்கும் எதிரான மக்கள் போராட்டங்களாகவே இருக்கின்றன. இத்தகையப் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதானிருக்கின்றன.  

போராடுகின்ற குழுக்களில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடுகின்ற குழுக்களும் உண்டு. அப்படிப்பட்ட குழுக்களோடு அரசுகள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்கின்ற நிகழ்வுகளும் பல உண்டு. நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் இத்தகையப் போராட்டங்கள் நடந்துகொண்டுதானிருக்;கின்றன. அவை அறிவிக்கப்படாத உள்நாட்டுப்போர் நடப்பதைப் போன்று உள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான குழுக்கள் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து ஆயுதமேந்தாமல், மாற்றுவழிப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆயிரக்கணக்கான போராட்டங்கள் அரசு அமைப்புக்களான காவல்துறை மற்றும் இராணுவம் கொண்டு நசுக்கப்படுகிறது. போராடுபவர்கள் மீது சட்டம் பாய்கிறது. பொய் வழக்குகள், கைது நடவடிக்கைகள், துப்பாக்கிச்சூடு மற்றும் லத்திப் பிரயோகம் என்று போராட்டங்கள் பெரும்பாலும் அடக்கி ஒடுக்கப்படுகின்றன. ஆயுதமேந்திப் போராடும் குழுக்களையும் ஆயுதமின்றி போராடும் மக்களையும் அரசு எப்போதும் ஆயுதங்களைக் கொண்டே அடக்க முயல்கிறது.

                போராடுவது சனநாயக உரிமையென்றாலும், இப்போதெல்லாம் மக்கள் போராட்டங்களை பல இடங்களில் அரசு அனுமதிப்பதே இல்லை. மக்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு போராடும் மக்கள் மீது வன்முறைகளை அரசுகளே கட்டவிழ்த்து விடுகின்றன. அனுமதியளித்தாலும் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி என்ற காரணங்களைக் காட்டி அப்போராட்டங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத குறிப்பிட்ட மூலைகளுக்குத் தள்ளப்படுகின்றன. அதற்கு ஏற்றவாறு அப்போதைக்கப்போது காவல்துறைச் சட்டங்களையும், தடையுத்தரவுகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்துவதில்லை. இப்படி வரையறுக்கப்பட்ட போராட்டங்களால் அந்த போராட்டங்களின் நோக்கம் நிறைவேறாததை காணும் மக்கள் தங்கள் போராட்டங்களை அனைவரும் அறியச் செய்ய வேறு பல உத்திகளைப் பின்பற்றுகின்றனர்.

கவனத்தை ஈர்ப்பதற்கே வழக்கறிஞர் போராட்டங்கள்

கடந்த சில ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் தங்களது போராட்ட உத்திகளை வடிவமைப்பதில் வழக்கமான மரபுரீதியான வழிமுறைகளைக் கடந்து நீதிமன்ற அறைக்குள்ளேயே நுழைந்து பேராடுவது, கோஷமிடுவது, நீதிபதிகளின் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, துண்டறிக்கைகளை விநியோகிப்பது என்பதாக அமைந்துள்ளன. இது வழக்கறிஞர்களின் போராட்ட உத்திகளில் புதிய அணுகுமுறையாக இருக்கிறது. போராட்டம் என்று சொன்னால், அதன் நோக்கம் கவன ஈர்ப்பு என்பதே. பொதுமக்களின், சமூகத்தின், ஊடகங்களின் மற்றும் தொடர்புடைய பொறுப்பாளர்களின் கவனங்களை ஈர்ப்பதற்கே போராட்டங்கள். அப்படி கவனத்தை ஈர்க்காத போராட்டங்கள் போராட்டங்களாகவே இருக்க முடியாது. இப்படிப்பட்ட போராட்டங்கள் ஒரு ஒழுங்குக்குள், கட்டமைப்புக்கள்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல. வன்முறையின்றி நன்முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு சட்டம் முழு உரிமையை அனைவருக்கும் வழங்கியிருக்கிறது. ஆயுதமேந்தாமல், தாக்குதல் நடத்தாமல் குரலெழுப்பியும், அத்துமீறி நுழைந்தும் போராடுவது என்பது வழக்கறிஞர்கள் மேற்கொண்ட புதிய சனநாயக ரீதியிலான போராட்ட வழிமுறையே. இப்படிப் போராடுவதன் மேலான நோக்கம் கவன ஈர்ப்பே அன்றி யாரையும் இழிவுபடுத்துவதற்கோ, கொச்சைப்படுத்துவதற்கோ அல்ல.

                குறிப்பாக எந்தவொரு போராட்டமும் இயல்பு நிலையை பாதிக்காத போது பிசுபிசுத்துப் போகிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றால், இயல்புநிலையை பாதிக்கின்ற வகையில் போராட்டங்களைத் திட்டமிட்டு நடத்த வேண்டியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

முதல் போராட்டம்

தமிழ் மொழிக்கான போராட்டம் சாமனியர்களுக்கான போராட்டமே!

                தமிழை வழக்காடு மன்றங்களின் மொழியாக பிரகடனம் செய்ய வலியுறுத்துவது தொடர்பாக வழக்கறிஞர்கள் ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதை வழக்கறிஞர்களின் சிறு குழுவினர்தான் முன்னெடுக்க வேண்டிய சூழல். ஏனெனில், இங்கு பல மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பெரும்பான்மை வழக்கறிஞர்களுக்கு,‘தமிழ் மொழியில் வழக்காடும் உரிமை’ என்பது தேவையான ஒன்றுமல்ல, ஒரு முக்கியமான பிரச்சினையுமல்ல. மாறாக, மொழியுணர்வும், சமூகப்பற்றும், கொள்கைப்பிடிப்புமுடைய வழக்கறிஞர்களுக்கும், இந்த மாநிலத்தின் பெரும்பான்மை மக்களுக்கும்,‘நீதிமன்றங்களில் தமிழ் மொழியும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்’ என்பது மிக முக்கியமான, அடிப்படை மனிதஉரிமையாகும். இதை அரசியலமைப்புச் சட்டமும் ஏற்கிறது. இதற்காகத்தான், பலகட்ட போராட்டங்களை ஒரு சில வழக்கறிஞர்கள் வலுவாக தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348(2) ஒரு மாநிலத்தின் மொழியை அந்த மாநில கவர்னர் குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் அந்த மாநிலத்திலுள்ள உயர்நீதிமன்றங்களின் அதிகாரப்பூர்வ மொழியாக பிரகடனம் செய்ய அதிகாரம் வழங்குகிறது. அதேபோல, அதிகார மொழிச் சட்டம் (Official Language Act 1963) 1963 ன் பிரிவு 7 ஒரு மாநிலத்தின் மொழியிலேயே நீதிமன்றத் தீர்ப்புக்கள் மற்றும் சட்டப்புத்தகங்கள் எழுதப்பட்டு வெளிவருவதற்கு, ஆவண செய்வதற்கு கவர்னருக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது. மாநில அரசுகளும், மத்திய அரசும் இயற்றுகின்ற எத்தனையோ சட்டங்கள் அன்றாடம் நடைமுறைக்கு வந்துகொண்டேயிருக்கின்றன. அவையெல்லாம் பெரும்பாலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் வருகின்றபோது, இந்தக் கூட்டாட்சியில் அங்கம் வகிக்கும் பிற மொழி பேசும் பல மாநிலங்களின் மக்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அடிப்படை மனித உரிமையாகிய மொழி உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டவர்களாகிறார்கள். ‘மொழியிழந்தோர் முகமிழந்தோரே’ என்ற கூற்றுக்கேற்ப, நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தாங்கள் அறியாத மொழியில் இருக்கும்போது, மாபெரும் இன்னல்களுக்கு சாமானிய மக்கள் ஆளாகின்றனர்.

ஏற்கனவே அலகாபாத், பாட்னா, மத்தியப்பிரதேசம் மற்றும் இராசஸ்தான் ஆகிய மாநிலங்களில் அந்த மாநிலங்களின் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் மொழியான ‘இந்தி’ நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் மொழி உரிமையை நாட்டு மக்கள் அனைவரும் அனுபவிப்பதை அந்தந்த மாநிலங்களில் ஆட்சியிலிருப்போரும், ஒருசில தனி நபர்களும் தடுத்து அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றபோது, அந்த உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் அனைத்து மக்களுக்குமான சனநாயகப் போராட்டமே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. போராடும் வழக்கறிஞர்கள், ஏதோ ‘ஆங்கிலப்புலமை இல்லாதவர்கள்... எனவேதான் தங்கள் தொழிலுக்காகப் போராடுகிறார்கள்’ என்று அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி சிறுமைப்படுத்துவது, சிறுபிள்ளைத்தனமும், இழிவான செயலுமாகும்.

இந்த மொழியுரிமைப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்து பார்த்தார்கள். எப்பயனும் விளையவில்லை. “சாகும்வரை உண்ணாவிரதம்” கூட அதிகாரத்தில் இருப்போரை அசைத்துப் பார்க்கவில்லை. சிலர் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யத் தயாரானார்கள். அப்போதும் பயனில்லை. தொடர்ந்து கடந்த 4 – 5 ஆண்டுகளாக எத்தனையோ விதமான போராட்டங்களை நிகழ்த்தியாகிவிட்டது. அதற்குரிய அரசின் அதிகார வட்டங்களையும் சந்தித்து முறையாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிப் பார்த்தாகிவிட்டது. ஆனாலும், இது குறித்து நடவடிக்கையில் இறங்க அதிகாரத்தில் இருப்போர் கிஞ்சித்தும் முயற்சிக்கவில்லையே! இச்சூழலில்தான், மீண்டும் அந்த வழக்கறிஞர் நண்பர்கள் தம் குடும்பத்தாருடன் தலைமை நீதிபதியின் நீதி அரங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி கவனத்தை ஈர்ப்பது என்று புதிய உத்தியை வகுத்துப் போராடியுள்ளனர். இதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் யாரையும் அச்சுறுத்தவோ, ஆயுதமேந்திப் போராடவோ இல்லை. பெண் வழக்கறிஞர்கள் மற்றும் குழந்தையுடன் போராட்டத்தில் பங்கெடுப்பது என்பது என்ன தேசவிரோத குற்றமா? இந்தப் போராட்டம் குறித்து நீதித்துறையின் மேல்மட்டத்தில் இருக்கும் நீதிபதிகள் சிலர் எழுப்பும் சர்ச்சை திட்டமிட்டே கட்டியமைக்கப்படுவதாகத் தெரிகிறது.

கட்டியமைக்கப்படும் நீதிபதிகளின் கண்டனம்

                இது தொடர்பாக நீதித்துறையின் உயர்மட்டத்திலிருக்கும் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நீதிபதிகள், ஏதோ நீதித்துறையே தகர்க்கப்பட்டது போலவும், நீதித்துறையின் மாண்பு முற்றிலும் சிதைக்கப்பட்டது போலவும் ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்தி, கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். வழக்கறிஞர்கள் சங்கங்களை நடவடிக்கை எடுக்கத் தூண்டுகின்றனர்.

                தங்கள் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைத் தொடர்பாக ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக நிகழ்த்தப்பட்ட இந்தப் போராட்டத்தை எந்த அளவிற்குக் கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குக் கொச்சைப்படுத்துகிறார்கள். அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு கீழமை நீதிமன்றங்களுக்கு அழுத்தமும் தருவதாகத் தோன்றுகிறது.

                பாரம்பரியமிக்க நீதிமன்றம்... தரம் தாழ்ந்துவிட்டது என்றும், இவர்கள் எல்லாம் கற்றறிந்த வழக்கறிஞர்கள் தானா? என்று சந்தேகம் வருகிறது என்றும்... நீதிபதிகளுக்குப் பாதுகாப்பில்லை... அச்சத்தில் நீதிபதிகள் பணியாற்ற வேண்டியுள்ளது... என்றும் எத்தனையோ விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். மேலும் சாதிய ரீதியாக வழக்கறிஞர்கள் செயல்படுவதாகவும், வழக்கறிஞர் சங்கங்கள் வேடிக்கைப் பார்க்கின்றன என்றும் முழக்கமிடுகிறார்கள்.

நீதித்துறையின் இந்த பதிலிறுப்பு இதுவரை நீதித்துறைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட எல்லாப் போராட்டங்களிலும் சம அளவில்; இருந்திருந்தால்கூட இந்த நீதிபதிகளின் தற்போதைய இந்த விமரிசனங்களை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், என்றுமில்லாத வகையில் திடீரென்று சில நீதிபதிகள் பதறிப்போய் பதிலிறுப்பதன் பின்னணியை நாம் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஊடகங்களின் நிலைப்பாடு

ஊடகங்கள் இந்தப் பிரச்சினையில் சற்று எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதாகத் தெரிகிறது. முழுமையாகத் தலையிட தயங்குவது போல் தோன்றுகிறது. ஒருவேளை அவதூறு வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என்று ஒதுங்கிவிட்டனரோ என்னவோ? அதே நேரத்தில், ஒரு சில ஊடகங்கள் இருக்கின்ற நிலையை முழுமையாக ஆராயாமல் தலைமை நீதிபதிகளின் கருத்துகளுக்கு முழு ஆதரவு கொடுத்து வலுசேர்த்து வருகின்றன. போதாதென்று சில வழக்கறிஞர்களும் தங்களின் வாதத்திறமையை முன்வைத்து நீதிபதிகள் ஆதரவு கட்டுரைகளை எழுதி, விமரிசனம் செய்யும் நீதிபதிகளுக்குத் தூபம் போடுகிறார்கள். நீதித்துறையையும்,நீதிபதிகளையும் நடுநிலையாக விமரிசனம் செய்யும் கட்டுரைகள் கூட ஊடகங்களில் பிரசுரிக்கப்படவில்லை.

உண்மையில் நீதித்துறையின் மாண்பையும் கண்ணியத்தையும் சிதைப்பது யார்?

“நீதித்துறையின் இன்றையப்போக்கு மிகவும் கவலையளிக்கிறது. சனநாயகம் நிலைபெற வேண்டுமென்றால் நீதித்துறை தனது மாண்பைத் தொலைத்துவிடக் கூடாது”

என்று முன்னாள் குசராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கோகுல கிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

நீதிபதி கைலாசத்தின் தபால்தலை வெளியீட்டு விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல்,

“நீதிபதிகள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களும் இந்த சமூகத்தில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால் நீதித்துறையை சிலர் நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள். அத்தகைய நெருக்கடிகளுக்கு ஆளாக்காமல், நீதித்துறையை தன்னிச்சையாக முடிவெடுக்க விட வேண்டும்” என்றார்.

தலைமை நீதிபதியின் இந்தக் கூற்று மிக முக்கியமானது. ‘சிலர்’ என்று யாரை மனதில் வைத்துச் சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்.

சமீப காலத்தில் நீதித்துறையின் செயல்பாடுகள் அனைவர் மத்தியிலும் பல சந்தேகங்களை எழுப்பி நம்பிக்கையிழக்கச் செய்துள்ளன. நீதித்துறையின் மீது நம்பிக்கைக் கொண்டோரை கூனிக்குறுகச் செய்துள்ளன. மேல்மட்டத்தில் இருக்கும் நீதிபதிகள் அரசியல்வாதிகளைப் போல நடந்துகொள்வது கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடுநிலையுடன் பணியாற்ற வேண்டிய பொறுப்புள்ள நீதிபதிகள் அரசியல் சார்புடன் செயல்படுவது நீதித்துறையின் மாண்பை வெகுவாக சிதைத்துள்ளது. அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிராக உள்ளது. பெருங்குற்றங்கள் புரிந்துவிட்டு அரசின் உயர் பதவிகளில் உள்ளோரை காப்பாற்றுவதற்காக வழக்கமான நடைமுறைகளை மாற்றியமைப்பதை கண்ணியமும் நேர்மையும் உள்ள சக நீதிபதிகளே கேள்விக்குட்படுத்துகிறார்கள். நீதிமன்றங்கள் வழங்கும் பல தீர்ப்புக்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளன என்பதை பலரும் அறிந்துள்ளனர்.

எல்லாவற்றையும் விட உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் எப்படி ஆள்பார்த்து, சாதிமத துவேசத்துடன் தீர்ப்பு எழுதுகிறார்கள் என்பதும் பல வழக்குகளில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குடையோரும், பணபலமிக்கோரும், ஆதிக்க சாதியினரும் எவ்வளவு பெரிய குற்றங்கள் புரிந்தாலும், அவர்களைச் சிறைக்குச் செல்லாமல் காப்பதே சில உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மிகப் பெரும் பணியாக இருக்கிறது. யாருக்கு சேவைபுரிய இந்த நீதிமன்றங்கள் அமைந்துள்ளன என்பதையும் மக்கள் கண்காணித்து வருகிறார்கள். இந்த மேலமை நீதிமன்றங்களால் சாமானிய மக்களின் வழக்குகள் எப்படி உதாசீனப்படுத்தப்படுகின்றன என்பதும் யாவரும் அறிந்ததே.

அண்மையில் வெளிவந்த டெல்லி சட்டப்பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வறிக்கை நாட்டில் உள்ள 4.2 இலட்சம் சிறைக் கைதிகளில் 93 சதவீதம் பேர் தலித், ஆதிவாசி மற்றும் இசுலாமிய சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறது. மேலும், கடந்த 15 ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 373 நபர்களில் 300 க்கும் அதிகமானோர் இந்த 3 சமூகங்களைச் சார்ந்தவர்கள் என்பதும் நிரூபணமாகியுள்ளது. அதே ஆய்விலே நீதித்துறையில் சாதி, மத துவேசத்துடன் தீர்ப்புக்கள் எழுதப்படுகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் மாண்பை சிதைக்கவில்லையா? கண்ணியத்தைக் குலைக்கவில்லையா?

பல ஆண்டு காலம் இழுத்தடிக்கப்பட்ட செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நீதிபதி தீர்ப்பு வழங்கிவிட்டார். அந்த நீதிபதியை எதிர்த்து ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் தூண்டுதலின் பேரில் எத்துணைப் போராட்டங்கள்? எத்தனைவிதமான வசைபாடுகள்? அச்சுறுத்தல்கள்? எந்த அளவிற்கு அந்த நீதிபதியை கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அசிங்கப்படுத்தினார்களே! அரசில் அங்கம் வகிக்கின்ற மந்திரிகள் முதல் அரசுப் பதவிகளை வகிக்கின்ற கட்சிக்காரர்கள் வரை போட்டி போட்டுக் கொண்டு அந்த நீதிபதியை இழிவுபடுத்தினார்களே! அப்போதெல்லாம் இந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் நீதித்துறையின் மாண்பு சிதைக்கப்பட்டது தெரியவில்லையா? எத்தனைபேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்? எத்தனை பேர் மீது உயர்நீதிமன்றம் சுயமாக (suo motu) நடவடிக்கை எடுத்து அவதூறு வழக்குப் பதிவு செய்தது? அது வேறு நீதித்துறையோ? அவை அந்த விசாரணை நீதிபதிக்கு நேரடியாக விடப்பட்ட மிரட்டல்கள்  அச்சுறுத்தல்கள் ஆகாதா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் சார்ந்திருக்கும் நீதித்துறையும் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் பணியாற்றும் நீதித்துறையும் வேறுவேறானவையா?

                இந்தப் பின்னணியில், நீதித்துறையின் கண்ணியத்தையும் மாண்பையும் காக்க வேண்டிய நீதிபதிகளே அவற்றை சிதைக்கின்ற வேளையில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பதை மேற்சொன்ன விவரங்கள் மிகத்தெளிவாக நிரூபிக்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தை கடைபிடிக்க வேண்டிய நீதிபதிகள், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டியவர்கள் அவற்றை காற்றில் பறக்கவிட்டுவிட்டு சட்டத்தின் முதுகில் குத்துகின்ற துரோகிகளாக மாறிப்போயுள்ளனர். எத்தனையோ முன்னாள் மற்றும் இந்நாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகள் மீது அடுக்கடுக்காக எத்தனையோ பலமான குற்றச்சாட்டுக்கள் பல கட்டங்களில் ஆதாரப்பூர்வமாக எழுந்துள்ளன. குறிப்பாக இன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது வருமானத்திற்கு எதிராக சொத்துக் குவித்தது தொடர்பாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெங்களுரில் அவரது மனைவி காயத்ரி பெயரில் கர்நாடக நில சீர்திருத்தச் சட்டத்திற்கெதிராக நிலம் வாங்கியது மற்றும் 50 கோடி மதிப்புள்ள பண்ணை வீட்டைக் கட்டியது, மேலும் வீட்டுமனை பெற்றது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் பற்றி நீதித்துறை வாய்திறக்க மறுக்கிறது. (barandbench.com, May 14, 2015) மேலும், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆர்.சி. லகோடி, கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் ஒய்.கே. சபர்வால் போன்றவர்கள் மீதும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தினகரன் மீதும் எழுப்பப்பட்ட தீர்க்கமான குற்றச்சாட்டுக்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டனவே. அவைகளின் மீது இதுவரை இந்த நீதித்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன? அப்போதெல்லாம் சிதையாத பாரம்பரியமும், நீதித்துறையின் தரமும், தம் தாய்மொழிக்காக, அரசியல் சாசன சட்டத்தின்படி கோரிக்கையை முன்வைத்து, சாமானியர்களின் நலனை கருத்தில்கொண்டு போராடும் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியின் நீதிமன்றத்தில் புகுந்து போராடியதால் மட்டும் சிதைந்துவிட்டதாகச் சித்தரிக்கப்படுவது ஏன்?

மாற்றுக் கண்ணோட்டம் கொண்டுள்ள வழக்கறிஞர் நண்பர்கள்:

                மதுராந்தகத்தில் இருந்து ஒரு வழக்கறிஞர் நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘ஏன் மதுரை வழக்கறிஞர்கள் இப்படி அசிங்கப்படுத்துகிறார்கள்’? என்று கேட்டார். நான் சற்று கோபத்துடன் நிலைமையை விளக்கிச் சொன்னேன். நடந்துவரும் வழக்கறிஞர்களின் போராட்டங்கள் குறித்த அவரது பார்வையை கேள்விக்குட்படுத்தினேன். சுயமாக சிந்திக்குமாறும், நீதித்துறையின் மேல்மட்டத்தில் உள்ள சில நீதிபதிகளின் கூற்றுகளால் நமது சிந்தனையை முடமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும், வழக்கறிஞர்களின் போராட்டங்களில் இருக்கின்ற நியாயத்தையும் எடுத்து விளக்கியபோது அவர் அதைப்புரிந்து கொண்டார். அங்குள்ள தனது வழக்கறிஞர் நண்பர்களுக்கும் போராடும் வழக்கறிஞர்களின் நியாயத்தை எடுத்துணர்த்த கேட்டுக் கொண்டேன்.

கடைநிலை நீதிபதிகளுக்கல்லவா பாதுகாப்பு தேவை?

                நீதித்துறையில் அன்றாடம் பலநூறு வழக்குகளை சிறிதும் காற்றோட்டம் இல்லாத அறைகளில், பெருங்கூட்டம் வழிந்தோடும் சூழ்நிலையில் கீழமை விசாரணை நீதிமன்றங்களில் நீதிபதிகள் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைத்தான், நீதித்துறையின் முதுகெலும்பு என்று சொல்லவேண்டும். இவர்கள்தான், உண்மையில் எவ்வித பாதுகாப்பும் இன்றி இருக்கிறார்கள். பாதுகாப்புக்கு ஒரு கடைநிலை காவலரின் துணை கூட இல்லாமல், மிகப் பயங்கரமான வழக்குகளையும் அன்றாடம் சந்திக்கிறார்கள். இப்படி தங்கள் உயிருக்கு எவ்வித உத்தரவாதமும் இன்றி பணியாற்றும் விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஏராளமான நெருக்கடிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக, தாக்குப்பிடிக்க முடியாமல் தங்கள் பதவிகளை ராசினாமா செய்துவிட்டு ஓட்டமெடுத்த பல நேர்மையான நீதிபதிகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால், பலரும் அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் பணியாற்றி வருகிறார்கள். பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி கடந்த 31.07.2015 அன்று ஓய்வு பெற்றபோது, அதே நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி. ‘தர்னிதர் ஜா’,‘நரசிம்ம ரெட்டி ஒருபோதும் சட்டத்தை மதிக்காதவர், அவருடைய காலத்தில் உயர்நீதிமன்றத்தை மட்டுமல்ல கீழமை நீதிமன்றங்களையும் சிதைத்துவிட்டார்.” என்று பகிரங்கமாக பாட்னா “பார் கவுன்சில்” தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். (dnaindia.com,  07.08.2015). உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வருகையின்போது அடிமைகளைப்போலத்தான் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் நடத்தப்படுகிறார்கள். “ஐயா”க்களுக்குப் பிடித்தமான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்க இவர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். இதன் விளைவாக எண்ணற்ற விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

வழக்குகளின் சாட்சிகளுக்கல்லவா பாதுகாப்பு தேவை?

                நீதிபரிபாலண முறையிலே நீதித்துறைக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பவர்கள் வழக்குகளின் சாட்சிகள். குற்றவழக்குகளில் விசாரணை நீதிமன்றங்களுக்கு, மிகப்பெரும் அச்சுறுத்தல்களையும் மீறி சாட்சி சொல்ல வரும் பொதுமக்கள் இலட்சக்கணக்கானோர் அன்றாடம் எவ்வித பாதுகாப்புமற்றச் சூழலில், உயிருக்கு துளியும் உத்தரவாதமின்றி, நீதித்துறைக்கு துணை நிற்கின்றார்கள். அவர்களுக்கல்லவா உடனடியாக பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். சாமியார் அசாராம் பாபுவுக்கு எதிரான வழக்கில் சாட்சி சொல்ல தயாராக இருந்த 3 பேர் இதுவரை சுட்டுக்கொல்லப்பட்டதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். இதைப்போல நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான சாட்சிகள் உயிருக்கு உத்தரவாதம் இன்றி இருக்கிறார்கள். அவர்களுக்கல்லவா உடனடிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்? அதற்கு மாறாக, ஏற்கனவே பலத்த பாதுகாப்புடன் தனது அண்டை வீட்டாருக்கும், அருகாமைத் தெருவிலும் என்ன நடக்கிறது என்று கூட அறியாத அளவுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தனக்கு பாதுகாப்பில்லை என்று கூறி மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைக் கேட்பது விந்தையாக இருக்கிறது.

மற்றொரு போராட்டம்

நாட்டின் முக்கியப் பிரச்சினை தலைக்கவசமல்ல

நடைபெற்று வரும் தலைக்கவசம் குறித்த வழக்கில், தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 22.09.15 அன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒரு உண்மையை பளிச்சென நீதிபதிக்கு புரிய வைத்திருக்க வேண்டும். தலைக்கவசம் அணிவதால், விபத்து மரணங்கள் குறைந்துவிடவில்லையென்றும், தலைக்கவசம் அணிவதால்தான், உண்மையில் விபத்து மரணங்கள் அதிகரித்திருக்கின்றன என்றும் அந்த அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் நீதிபதி சமாளித்துக் கொள்கிறார். கணக்கெடுப்பில் குறையிருப்பதாக அதிகாரிகளைக் கடிந்து கொள்கிறார். (கணக்கு என்றாலே நீதிபதிகளுக்கு சற்று குழப்பம்தான் போலும்) மேலும் மாநிலம் முழுவதும் தலைக்கவசம் அணியாதோர் மீது பல இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தலைக்கவசம் அணிவது கண்பார்வையை ஒடுக்குவதாலும், செவித்திறனை மட்டுப்படுத்துவதாலும் இந்த உயிரிழப்புகள் அதிகரித்திருக்க வாய்ப்புண்டு. இதுபோன்ற வழக்குகளில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும்போது நிதானம் இழக்காமலும், அறிவியல்பூர்வமாக சிந்தித்தும் தீர்ப்பு வழங்க வேண்டியது அவசியம். மக்கள் கடுமையான வெப்பச்சூழலில், தலைக்கவசம் அணிய நிர்ப்பந்தம் செய்யப்படுவதால், ஏராளமான அசௌகரியங்கள் விளைவது தொடர்பாக பலமுறை எடுத்துரைத்தும் தனிநீதிபதி தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. பிரச்சினையின் கணாகனத்தை புரிந்து கொள்வதற்கு திறந்த மனம் கொண்டிருப்பவராகத் தெரியவில்லை.

இன்றையச் சூழலில், அரசுகளின் அடக்குமுறைகள் ஏராளம். அரசியலமைப்புச் சட்டம் பாடாய்படுகிறது. அதை மதிப்பாரில்லை. நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசும், அதிகாரிகளும் சிறிதும் மதிப்பதில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக இருப்பதே நீதிமன்றங்களின் தலையாய பணியாகும். இச்சூழலில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்க தலைக்கவசம் குறித்த வழக்கில் ஒரு நீதிபதி இவ்வளவு ஈடுபாடு காட்டுவது வியப்பாக இருக்கிறது. பெரும்பாலான சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களை சாதாரண சாமானியனிடம் கேட்டாலே பிட்டுபிட்டு வைக்கிறான். ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவை தெரியாதது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.

விபத்துக்களுக்கான முக்கிய காரணங்கள் பல இருக்க அவைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, வெகு மக்களுக்கு பல வழிகளில் கேடு விளைவிக்கும் ஒரு உத்தரவைப் போட்டு மக்களை பந்தாடுவதில் இவ்வளவு முனைப்பு காட்டுகிறார் ஒரு நீதிபதி. இதை நாம் என்னவென்று புரிந்து கொள்வது? இதை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகளில் சிலர் இறங்கினாலும், மதுரை வழக்கறிஞர்கள் சற்று கூடுதலாக தெருவில் இறங்கி அந்தத் தீர்ப்பை எதிர்த்து தங்களது எதிர்ப்புகளை பலமாகவே நூதன போராட்டங்களின் மூலம் பதிவு செய்தனர். அந்தப் போராட்டங்கள் ஒருவேளை சட்டத்திற்கு எதிராக இருக்கிறதென்றால், போராடும் வழக்கறிஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதானே நியாயம்? அதற்குத்தானே சட்டம் இருக்கிறது. சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும்போது அதை சட்டப்படி வழக்கறிஞர்கள் எதிர்கொள்வார்களே. அதை விட்டுவிட்டு அவர்கள் மீது சட்டப்புறம்பான, சனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான முறையில், கொடுங்கோல் மன்னர்களைப் போலவும், சர்வாதிகார அரசர்களைப் போலவும் கடும் நடவடிக்கைகளை எடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? இப்படிப்பட்ட நடவடிக்கைகள் நீதித்துறைக்கு இப்போதுள்ள சூழலில் எந்த வகையில் துணைபுரியும்?

நீதித்துறையையும், நீதிபதிகளையும் கண்காணிப்பது அவசியம்

அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் பங்கேற்ற ஒரு விழாவில், கவிஞர் வைரமுத்து உதிர்த்த வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை.

"இந்த சமூகத்தை நீதிமன்றங்கள் கவனிப்பதைப்போல, நீதிமன்றங்களை இந்த சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சில நீதிபதிகள் தனது பணிக்காலம் முழுவதும் நேர்மை நெறியைக் கடைபிடிக்கிறார்கள். பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு அத்தனையையும் மீறிவிடுகிறார்கள். சந்தேகத்திற்கு இடமில்லாமல் சாதித்துக் கொள்கிறார்கள்” என்றார்.

இந்நாட்டில் பாராளுமன்றம், நிர்வாக அமைப்பு எப்படியோ அப்படியே நீதித்துறையும் அரசியலமைப்பின் ஒரு அங்கமே. இம்மூன்றும் தனித்துவத்துடன் செயல்பட்டு ஒன்றையொன்று கண்காணித்து துணைநிற்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் நோக்கமாகும். இந்த மூன்று அமைப்புக்களும் அடிப்படையில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அமைப்புக்களாகும். அதேபோல் மக்கள் இந்த அமைப்புக்களை கண்காணிப்பதும், கேள்விக்குள்ளாக்குவதும் சரியான சனநாயக நடைமுறையே. இந்த மூன்று அங்கங்களில் மக்கள் இன்றும் அதிக நம்பிக்கைக் கொண்டிருப்பது நீதித்துறையையே. பொதுவாக மக்கள் நீதித்துறையை மற்ற அங்கங்களை விட மதிப்புமிக்கதாகப் பார்க்கின்றனர்.

                எனவே, நீதிபதிகள் சட்டப்புறம்பாக நடந்துகொள்ளும்போதும், அரசியலமைப்புச் சட்டத்தின் நின்று செயல்படாத போதும், நீதித்துறையையும், நீதிபதிகளையும், அவர்களின் தீர்ப்புக்களையும் விமர்சனம் செய்வது என்பது சனநாயக நாட்டில் மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையே! அந்த உரிமையை வழக்கறிஞர்கள் உண்மையில் கூடுதலாகப் பெற்றிருக்கின்றனர். நீதித்துறையின் கோளாறுகளை எதிர்த்து வழக்கறிஞர்கள் அன்றி வேறு யார் போராடுவது? போராடும் வழக்கறிஞர்கள் சட்டத்தை மீறும்போது அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பது வரவேற்கத்தக்கது. மாறாக, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் மூலம் அவர்களின் வழக்குப் பணிகளைத் தடைசெய்வதும், அச்சுறுத்திப் பணியவைப்பதும் அப்பட்டமான மனித உரிமை மீறலேயன்றி வேறல்ல.

இறுதியாக...              

அரசுகள்தான் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறித்து, அடக்கி, ஒடுக்கி, அச்சுறுத்தி, அதிகாரத்தை நிலைநாட்டி வருகின்றனவென்றால், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய நீதித்துறையே உரிமை பறிப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது மிகவும் ஆபத்தான செயலாகும். உரிமைகளைப் பறித்து, போராடும் வழக்கறிஞர்களை அச்சுறுத்தி, சட்டப்புறம்பாக முடக்குகின்ற வேலைத்திட்டத்தில் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நீதிபதிகள் இறங்கியிருப்பது நமது நாட்டில் சனநாயக மரபுகள் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருவதையே புலப்படுத்துகின்றன.

                இப்படிப்பட்ட நிகழ்வுகளின்போது, தலைமைப் பொறுப்பிலிருக்கும் நீதிபதிகளின் இந்நடவடிக்கைகளை சட்டரீதியாகவே வழக்கறிஞர்கள் எதிர்கொள்வார்கள். ஏனென்றால், நீதித்துறையின் மாண்பையும், கண்ணியத்தையும், மக்களின் சனநாயக உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் காப்பது வழக்கறிஞர்களின் தலையாய கடமையாகும். அவற்றில் வழக்கறிஞர்கள் கடமையுணர்வுடன் நடந்துகொள்வதற்கு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கையும், அக்கறையுமுள்ள அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள். குறிப்பாக,கண்ணியமும் நேர்மையும் நீதியுமிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகளும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களுக்கு துணைநிற்பார்கள் என்று உறுதியாக வழக்கறிஞர்கள் நம்புகிறார்கள். நீதித்துறை என்பது சனநாயக நாட்டில் யாருடைய தனிப்பட்ட சொத்துமல்ல. அது மக்களின் சொத்து.

“மக்களாகிய நாம்தான் உண்மையில் பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் எசமானர்கள். நமது போராட்டம் அரசியலமைப்பையும், சட்டத்தையும் தூக்கியெறிவதற்காக அல்ல. மாறாக, அந்த சட்டத்தையும், அரசியலமைப்பையும் உதாசீனப்படுத்தி இழிவுபடுத்த முயலும் சில தனி மனிதர்களைத் தூக்கியெறிவதற்கே.”  -              ஆபிரகாம் லிங்கன்

- அ.சகாய பிலோமின் ராஜ், வழக்கறிஞர்