rajasthan-judicial-court- 6

இருபத்தியோரு உயர் நீதிமன்றங்களில் உள்ள 850 நீதிபதி பணியிடங்களில் 24 நீதிபதிகள் மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்களாவர். அந்த 21 உயர் நீதிமன்றங்களில் உள்ள 14 நீதிமன்றங்களில் – பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியைச் சார்ந்த – ஒரு நீதிபதி கூட இல்லை. இன்றைய நிலையில், 150 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கதாகக் கருதப்படும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர் ஒருவர் கூட நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.

"சமூகத்தின் ஒரு சில பிரிவினருக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பது வெறும் தற்செயலான நிகழ்வுதானா? அத்தகைய விபத்து 60 ஆண்டுகளாகத் தொடர முடியுமா? நிச்சயமாக இது ஒரு விபத்தல்ல! நீதிபதியாக நியமனம் கோரி வழக்கு தொடுப்பதற்கு எவரொருவருக்கும் உரிமை இல்லை என்று கூறி இதன் மீதான விவாதத்தை நாம் வாயடைக்கச் செய்ய முடியாது''

– சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்ட 12 பேர் அடங்கிய பட்டியல் குறித்த வழக்குகளின் மீதான இறுதி விசாரணையின் போது (25.02.2014) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சவுகான், ஜெ.சலமேஸ்வர் மற்றும் எம்.ஒய். இக்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்த கருத்து.

இந்திய நீதித்துறை வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத வகையில், 13.02.2014 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக்குழு – சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக – சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்ட 12 பேர் (10 வழக்குரைஞர்கள், 2 மாவட்ட நீதிபதிகள்) பட்டியலை திருப்பி அனுப்ப முடிவு செய்தது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு நியமனம் செய்யப்படும் முறை முற்றிலும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக அமைய வேண்டும் என்று வழக்குரைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் நேர்மறை விளைவுதான் இந்த முடிவு.

போராட்டங்களின் ஒரே நோக்கம்: நீதிபதிகள் நியமனத்தில் கையாளப்படும் அணுகுமுறை சாதி, மதம் மற்றும் தனிநபர் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதால் தகுதியற்ற நபர்களும், சாதிய மனப்போக்கு கொண்டவர்களும், சமூக அக்கறையற்றவர்களும், ஊழல் வாதிகளும் – பெரும்பான்மையான நிகழ்வுகளில் – நீதிபதிகளாக நியமனம் பெற வாய்ப்பிருக்கிறது.

எனவே வெளிப்படைத்தன்மை மட்டுமே இத்தகைய சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் தகுதி, திறமை, நேர்மை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் கொண்ட நபர்கள் மட்டுமே நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 15க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய சூழலில்தான் கடந்த ஆண்டு சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்களிடையே இது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்பட்டது.

அதனையொட்டி 29.4.2013 அன்று கூடிய சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கையாளப்படும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அணுகுமுறைகள் களையப்பட வேண்டுமெனில் நீதிபதிகள் நியமனத்தில் முற்றிலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை  வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

அத்தீர்மானத்தின் நகல் அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால் மற்றும் நீதிபதிகள் நியமனக் குழுவில் உள்ள இரு மூத்த நீதிபதிகள் ஆகியோரிடம் நேரில் அளிக்கப்பட்டது.

இத்தீர்மானம் நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு அப்போது பரிந்துரைக்கப்பட்ட 15 பேர் பட்டியலில் இருந்த நபர்களின் தகுதி – தகுதியின்மை குறித்து எழுந்த சர்ச்சையினால் 8 நபர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு, 7 பேர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த விவாதம் ஓரளவு அடங்கிய நிலையில் தனியாக ஒரு நீதிபதி மட்டும் கமுக்கமாக நியமிக்கப்பட்டார். அது தொடர்பாக வழக்குரைஞர்களிடையே கடும் அதிருப்தியும் பெரும் ஏமாற்றமும் ஏற்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 2013 இல் தகுதியற்ற நபர்களைக் கொண்ட நீதிபதி பரிந்துரைப் பட்டியல் ஒன்று மீண்டும் உச்ச நீதிமன்றப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. அப்பட்டியலில் இடம் பெற்றிருந்த நபர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் வழக்குரைஞர்களாகப் பெற்றிருந்த அனுபவம் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருந்தது. எனவே, அந்தப் பட்டியலை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக் குழு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தயாரித்தது என்று பெரும்பான்மை வழக்குரைஞர்கள் கருதினர்.

மேலும், பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ஓரிருவரைத் தவிர ஏற்கனவே உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றிவரும் முன்னேறிய சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் இருந்ததும் பரவலாக எதிர்க் கருத்தை உருவாக்கியது. குறிப்பாக, தலைமை நீதிபதியும் இரண்டாம் மூத்த நீதிபதியும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியத் தொடங்கி ஒரு சில மாதங்களே ஆன நிலையில், பரிந்துரைப் பட்டியலில் உள்ள நபர்களின் தகுதி – திறமை குறித்து முறையாகவும் முழுமையாகவும் எவ்வித விசாரணையுமின்றி பரிந்துரைத்திருந்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது.

வழக்குரைஞர்களின் இந்த உணர்வுகளின் வெளிப்பாடாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், இந்த நீதிபதிகள் நியமனப்பட்டியலைத் திரும்பப் பெற வேண்டுமென்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி – மீண்டும் தலைமை நீதிபதியையும் மற்ற இரு மூத்த நீதிபதிகளையும் நேரில் சந்தித்து – தீர்மான நகலை வழங்கி கோரிக்கை வைத்தது. ஆனால், நீதிபதிகள் தரப்பில் எந்த ஒரு நேர்மறை சமிக்ஞ்சையும் கிடைக்கப் பெறாத காரணத்தால் நீதிமன்றப் புறக்கணிப்பு என்ற போராட்ட வடிவம் கையிலெடுக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இப்பட்டியல் உயர் நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் – முடிவுக்கு வந்தது.

சனவரி 2014 இல் நடைபெற்ற வழக்குரைஞர் போராட்டம், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, அதன் தர்க்க ரீதியான அடுத்தக் கட்டமாக உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம்  வழங்கப்பட வேண்டும் என்பதையும் முன்னிறுத்தியது. அக்கோரிக்கை பெரும்பான்மையான வழக்குரைஞர்கள், நீதிபதிகள் மற்றும் பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

"இந்தியத் தலைமை நீதிமன்றம் உலகில் உள்ள எல்லா நாடுகளின் நீதிமன்றங்களைவிடவும் அதிக அதிகாரம் கொண்டது'' என்பது பன்னாட்டு சட்ட ஆய்வறிஞர்களின் கருத்து. அதே அளவில் மாநிலங்களில் செயல்படும் உயர் நீதிமன்றங்களும் இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் ஆளுகை செலுத்தும் அளவிற்கு அதிகாரம் கொண்டவையாக உள்ளன.

உச்ச நீதிமன்றத்தைவிடவும் பரந்துபட்ட அளவிலான விஷயங்களில் மாநிலங்களில் அமைந்துள்ள உயர் நீதிமன்றங்கள் இந்திய குடிமக்களின் அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களை மேலாதிக்கம் செய்கின்றன. இந்தப் பின்னணியில்தான் இந்திய உயர்நீதித் துறையின் (உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள்) நீதிபதிகள் நியமனத்தில் மக்களாட்சியின் முக்கிய உட்கூறும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக விளங்கிவரும் "சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான பிரதிநிதித்துவம்' என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மேலும், 05.03.2014 அன்று சென்னை உயர் நீதிமன்ற 12 பேர் பட்டியல் வழக்கில் அளித்த தீர்ப்பிலும், "(நீதிபதி) நியமனங்கள் எந்த ஒரு தனிப்பட்ட குழுவிலிருந்து மட்டுமே செய்யப்படக்கூடாது; ஒரு குறுக்கப்பட்ட குழு மேலாதிக்கம் செய்யவும் கூடாது. எனவே, நீதிபதி நியமனங்களில் மிகச் சிறந்த சட்டப்பயிற்சியுடன் கூடிய தகுதி வாய்ந்த ஆளுமை என்பதே வழிகாட்டு நெறியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; இதில் தனிப்பட்ட கருத்துகள் ஊடுறுவ இடமளிக்கக்கூடாது'' என்று உச்ச நீதி மன்றமே குறிப்பிட்டுள்ளது இதனை உறுதி செய்கிறது.

உச்ச நீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ நீதிபதியாக நியமனம் செய்யப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றாக, ஒரு நபர் உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 124 மற்றும் 217 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஆம் ஆண்டு முதல் இந்த உயர் நீதித்துறை நியமனங்கள் நிர்வாகத்துறை எனப்படும் அரசால் மேற்கொள்ளப்பட்டன.

அன்றன்றைய அரசுகளின் பரிந்துரைகள் அரசியல் சார்புடையனதாகவே இருந்தபோதிலும், அதற்கும் அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பினரும் ஏற்கத்தக்க வகையிலேயே நீதிபதிகள் நியமனம் பெரும்பாலும் அமைந்தன. இந்த முறையில் நீதித்துறையின் கருத்து கேட்கப்பட்டாலும் எதிர்க்கருத்து அரசைக் கட்டுப்படுத்தாது என்ற நிலையே இருந்தது. அச்சூழலிலும் கூட, அரசுகள் நீதித்துறையின் கருத்தை ஏற்றுக் கொண்டு வேறு நபர்களைப் பரிந்துரை செய்யும்.

1977 இல் அறிவிக்கப்பட்ட அவசர நிலை காலகட்டத்திற்குப்பிறகு நீதித்துறையில் அரசின் தலையீடு அதிகமாகியது. குறிப்பாக, அரசின் அவசர நிலை அதிகாரம் குறித்த வழக்கொன்றில் அரசின் கருத்திற்கு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி எச்.ஆர். கண்ணா மூத்த நீதிபதியாக இருந்தபோதிலும், பணிமூப்பில் அவருக்கும் பின்னால் இருந்த எம்.எச். பெக் என்பவரை இந்தியத் தலைமை நீதிபதியாக அப்போதைய மத்திய அரசு நியமித்ததையடுத்து நீதிபதி எச்.ஆர். கண்ணா பதவி விலகினார். அதன் பின்னர், நீதித்துறையில் நீதிபதி நியமனத்தில் அரசுக்கு எதிரான ஒரு மனப்போக்கு தோன்றியது. எனினும், இவ்விஷயத்தில் அரசின் அதிகாரத்தை மறுதலிக்காமல் நீதித்துறையுடன் "கலந்தாலோசனை' என்பது "ஒப்புதலைக்' குறிக்காது என்றே எஸ்.பி. குப்தா வழக்கில்  (1982) உச்ச நீதிமன்றம் கூறியது.

அதன் பின்னர், 1993 இல் "உச்ச நீதிமன்றப் பதிவுபெற்ற வழக்குரைஞர்கள் சங்கம்' தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முதன் முறையாக உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனம் /இடமாறுதலில் "நீதித்துறைக்கே முதன்மை' என்ற கோட்பாடு மாற்றம் செய்யப்பட்டு, நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாறுதல் நீதித்துறையின் முழுக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவைத் தவிர உலகில் உள்ள எந்தவொரு நாட்டிலும் நீதித்துறைக்கு இத்தகைய அதிகாரம் இல்லை.

இத்தீர்ப்பின் அடிப்படையிலேயே உயர் நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்திற்கு "நீதிபதிகள் தேர்வுக் குழு'  (இணிடூடூஞுஞ்டிதட்) உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு, அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் மூத்த இரு நீதிபதிகளும் அடங்கிய தேர்வுக் குழு பெயர்களைப் பரிந்துரை செய்யும். அப்பரிந்துரை நடுவணரசின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டு, அவர்களுடைய கருத்துடன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இரு மூத்த நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்படும். அரசின் கருத்தை இந்த நீதிபதிகள் தேர்வுக்குழு ஏற்கத் தேவையில்லை. இந்நீதிபதி தேர்வுக் குழுவின் கருத்தும் தேர்வுமே இறுதியானதாகும்.

Sathiyachandran- india-flagஇந்திய உயர் நீதித்துறையின் நீதிபதிகள் நியமனங்களை 1993 க்கு முன், 1993 க்குப் பின் என்று பகுப்பாய்வு செய்து பார்த்தால், உயர்நீதித்துறை நீதிபதிகள் நியமனம் நீதித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மிக அதிகமாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட "நீதிபதிகள் தேர்வுக்குழு' என்ற மருந்து, அது தீர்க்க வேண்டிய நோயை குணப்படுத்துவதற்கு பதிலாக தகுதி – திறமையற்ற உறவினர் – வேண்டியவர்களுக்கு முன்னுரிமையளித்தல், தன்விருப்பம், ஊழல் என அதிக நோய்களையே இந்த அமைப்பு உருவாக்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

இருப்பினும் இந்த முறையில்தான் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள உயர்நீதித்துறை நீதிபதிகள் நியமனங்கள் – எந்தவித வெளிப்படைத்தன்மையுமின்றி ரகசியமான முறையில் – நடைபெற்று வருகின்றன. நீதிபதிகளின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர், இளவர் என்ற அடிப்படையில் நீதிபதிகள் பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

ஒரு வழக்குரைஞர் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பதவிப்பிரமாணம் எடுக்கும் நேரம் வரை இந்த ரகசியம் காக்கப்படுவதால், நியமனத்திற்குப்பின் ஒரு நீதிபதியின் தேர்வு குறித்து எவ்விதக் கேள்வியும் சட்டப்படி எழுப்பப்பட முடிவதில்லை.

இந்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள நீதிபதிகள் தேர்வுக் குழுவிற்கு மாற்றாக அரசமைப்புச் சட்டத்திற்கு இசைவானதொரு நீதிபதிகள் நியமன முறை உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தது. கடந்த 2013 இல் நடுவணரசு இதற்கென 120 ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தமும் நீதிப் பணிக்குழு சட்டமும் வரைவு செய்து, அதன் மீதான கருத்துகளைக் கேட்டறிந்து பரிந்துரை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது.

இந்த புதிய சட்ட விதிகளின்படி, இந்தியத் தலைமை நீதிபதி அவரால் நியமிக்கப்படும் இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நடுவணரசின் சட்ட அமைச்சர் ஆகியோருடன் பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் அடங்கிய குழு பரிந்துரை செய்யும் புகழ்பெற்ற இரு உறுப்பினர்கள் கொண்ட ஒரு நீதிப் பணிக்குழு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிபதி வரையிலான கீழமை நீதிமன்றப் பணியிடங்கள் மாநிலங்களின் தேர்வாணைக் குழுக்கள் மூலமே நிரப்பப்படுகின்றன. அவற்றில் இட ஒதுக்கீடு முறை அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ளபடியே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடு என்பது விதியாகப் பின்பற்றப்படுவதில்லை. வாய்ப்புள்ள சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையிலேயே அவை மேற்கொள்ளப்படுகின்றன.

உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்பட்டாலும் – நீதிபதி நியமனத்தில் உள்ள நடைமுறை செயல் வடிவங்களின் காரணமாக – ஒரு சில குறிப்பிட்ட வசதி வாய்ப்புள்ள சமூகங்களுக்கே மீண்டும் மீண்டும் நியமனம் பெற ஏதுவாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இட ஒதுக்கீடு முறை இன்று வரை உறுதியாக மறுக்கப்பட்டு வருகிறது.

உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் வழக்குரைஞர்கள் மற்றும் கீழமை நீதிபதிகளிடையே 2:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. கீழமை நீதிபதிகள் பணிமூப்பின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு சுழற்சி முறையிலும் நியமிக்கப்படுவர். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இட ஒதுக்கீடு அடிப்படையில் கீழமை நீதிமன்றங்களில் பணியில் சேரும் பெரும்பாலான பட்டியலினத்தைச் சேர்ந்த நீதிபதிகள் திறமையின்மை, கையூட்டு என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு உரிய விசாரணையின்றி நீக்கப்படுவர், பதவி உயர்வு அடைவர்.

அதே வகையான குற்றச்சாட்டுகள் மற்ற சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் மீது சுமத்தப்பட்டாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இன்றி அவர்கள் பணியில் தொடர்வர். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் பணியிலிருந்த 17 தலித் மாவட்ட நீதிபதிகள் (மூவர் பட்டியல் சாதியினர்; மற்றவர்கள் பழங்குடியினர்) கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டனர். பணியில் அவர்களது செயல்திறன் போதிய அளவில் இல்லை; அவர்கள் தமக்கு வேண்டியவர்களுக்கு சார்புடன் செயல்பட்டார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின்படியே அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதே போன்ற குற்றச்சாட்டுகள் பொதுப்பிரிவுகளைச் சேர்ந்த நீதிபதிகள் மீது இருந்தபோதும், பணியில் அவர்களது செயல்திறன் குறைவு என்றே மதிப்பிடப்பட்டபோதும், அந்த நீதிபதிகளுக்கு பணிநீட்டிப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டது ("தெகல்கா' – 28.3.2011). இத்தகைய தடைகளை எல்லாம் கடந்து பட்டியல் சாதியினர் /பழங்குடி இனத்தைச் சார்ந்த கீழமை நீதிமன்ற நீதிபதி உயர் நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெறுவது என்பது அரிதாகவே அமையும்.

இந்திய உயர் நீதித்துறையில் 1973 இல்தான் முதன் முறையாக பட்டியல் சாதியைச் சார்ந்த அ.வரதராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்நியமனத்திற்கு முன் 24 ஆண்டுகள் அவர் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணிபுரிந்திருந்தார். 1980 இல் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போதும் பட்டியல் சாதியை சார்ந்த முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். அவருக்குப் பின்னர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலிருந்து பி.சி. ரே (1985 – 1991), ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்திலிருந்து கே. ராமசாமி (1989 – 1997) ஆகியோர் உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

k.r-.narayanan 400டாக்டர் கே. ஆர். நாராயணன் இந்திய குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலகட்டத்தில் (1997 – 2002), பட்டியல் சாதியை சார்ந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியில் இருந்தார். பணிமூப்பில் அவர் முதன்மை இடத்தில் இருந்தபோதிலும், அவருக்கும் குறைவாக பணிமூப்புப் பட்டியலில் இருந்த வேறு மாநில தலைமை நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

ஆனால் கே.ஜி. பாலகிருஷ்ணனின் பதவி உயர்வு மட்டும் தள்ளிக் கொண்டே போனது. பணிமூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட்டால், அவர் இந்திய தலைமை நீதிபதியாக நீண்ட காலம் பதவியில் இருப்பார் என்ற அடிப்படையிலேயே அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்படாமல் மிகவும் காலம் தாழ்த்தப்பட்டது.

இந்தச் சூழலில்தான் 1999 இல், ""பின் தங்கிய வகுப்புகளில் தகுதி வாய்ந்த நபர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு குறைந்த அளவிலான பிரதிநிதித்துவம் வழங்குவதையோ, முழுமையாகவே பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதையோ நியாயப்படுத்த முடியாது'' என்று டாக்டர் கே.ஆர். நாராயணன் எழுதிய அரசுக் குறிப்பு, இதன் மீதான  விவாதத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

அதன் பின்னரே மக்கள் கருத்தின் அழுத்தத்தின் காரணமாக கே.ஜி. பாலகிருஷ்ணன் 2000 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற  நீதிபதியாகப் பதவியேற்று, சனவரி 2007 முதல் மே 2010 வரை இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இந்த வகையில், 1950 முதல் இதுநாள் வரை மேற்சொன்ன நான்கு பேர் மட்டுமே பட்டியல் சாதியிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள். இன்றைய தேதியில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் ஒருவர் கூட தலித் இல்லை.

இன்று இந்தியாவில் 24 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. 1983 இல் அப்போதிருந்த 400 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் சாதியை சேர்ந்தவர்களாக இருந்தனர். பட்டியல் பழங்குடியினரிலிருந்து ஒருவர் கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. பின்னர் 01.01.1993 அன்றிருந்தவாறு அமைந்திருந்த 18 உயர் நீதிமன்றங்களில், 12 உயர் நீதிமன்றங்களில் பட்டியல் சாதியைச் சார்ந்த ஒருவர் கூட நீதிபதியாக இல்லை.

அவற்றில் 14 உயர்நீதி மன்றங்களில் பட்டியல் பழங்குடியைச் சார்ந்த ஒருவர் கூட நீதிபதியாக இல்லை. 01.05.1998 அன்று புள்ளிவிவரப்படி, அப்போதிருந்த 481 உயர் நீதிமன்ற நீதிபதிப் பணியிடங்களில் 15 நீதிபதிகள் மட்டுமே பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களும், 5 நீதிபதிகள் மட்டுமே பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.

2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, 21 உயர் நீதிமன்றங்களில் உள்ள 850 நீதிபதி பணியிடங்களில் 24 நீதிபதிகள் மட்டுமே பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்களாவர். அந்த 21 உயர் நீதிமன்றங்களில் 14 இல் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்கள்

ஒரு நீதிபதி கூட இல்லை. இன்றைய நிலையில், 150 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கதாகக் கருதப்படும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர் ஒருவர் கூட நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும்கூட பிரதிநிதித்துவம் பெருமளவில் மறுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 1988 இல்தான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த எஸ். ரத்தினவேல் பாண்டியன் முதன் முதலில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனங்களில் சாதி என்பது அடிப்படைத் தகுதி அலகாகக் கருதப்படுகிறது என்பதை மேற்கூறியவற்றிலிருந்து உண்மை என்று அறியலாம். இது குறித்துபின்னாளில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய பி.பி. சாவந்த், பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது (1997) வெளிப்படுத்திய கருத்து இது:

"உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்யும் முறையாகட்டும் அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு அளிப்பதாகட்டும் அரசியல் சார்புடன் கூடவே வகுப்பு, சாதி, சமூகம் மற்றும் பிராந்தியம் ஆகியவையும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. குறிப்பாக, ஒருவர் ஒத்திசைவான வகுப்பு அல்லது சாதியைச் சார்ந்திராதபோது வாழ்வில் எந்த ஒரு துறையிலும் உயர முடியாது என்பது போன்ற உண்மையான உணர்வு இந்த நாட்டில் உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பதவிகள் உள்ள உயர் நீதித்துறையில் இந்த உணர்வு அதிக அளவில் மேலும் நீடிக்கிறது.'' (Judicial Independence : Myth and Reality , Pune Board of Extra Mural Studies 1998)

பார்ப்பனரைத் தவிர மற்ற வர்ணத்தினருக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்ட சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திலும் சுதந்திரத்திற்குப் பின்னரான காலகட்டத்திலும் உயர் நீதித்துறையில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் மிகப் பெரும்பான்மையானோர் பார்ப்பனராகவும், பிற ஆதிக்க சாதியினராகவும் இருந்துள்ளனர்.

1950 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் குறித்து ஆய்வு செய்துள்ள ஜார்ஜ் எச். கேட்பாய்ஸ் என்பவர் அந்நீதிபதிகளின் சாதிப் பின்னணி குறித்து பட்டியலிட்டுள்ளார் (பார்க்க : பெட்டிச் செய்தி). இப்பட்டியல்களை மேலோட்டமாகப் பார்த்தாலே இந்திய உயர் நீதித்துறை நியமனங்களில் சாதிக் காரணிகள் செயல்படும் விதம் குறித்து தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

உயர் நீதித்துறையில் பிரதிநிதித்துவம் என்பது உரிமையாகவும் இல்லாமல், நடைமுறையிலும் புறக்கணிக்கப்படும் சூழலில் அரசமைப்புச் சட்ட ரீதியான இடஒதுக்கீடு என்பதுதான் தீர்வாக அமையும். ஆனால், இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் தகுதி, திறமை பாதிக்கப்படும் என்ற பொய்ப்பிரச்சாரத்தை முன்னேறிய சாதியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தகுதி, திறமை ஒரு சில சாதியில் பிறந்தவர்களுக்கே உரியது என்ற அப்பட்டமான சாதிய மனப்பாங்கின் வெளிப்பாடுதான் இந்த வாதம். குறிப்பிட்ட சில முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த நீதிபதிகள் அனைவருமேதகுதி, திறமை வாய்ந்தவர்கள்தானா? என்ற கேள்விக்கு இதே நபர்கள் எதிர்மறையாகவும் விடையளிக்கத் தயங்குவதில்லை.

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள சமூக நீதி ஓரளவிற்கேனும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்திலும் இதுபோன்ற சத்தற்ற வாதங்கள் ஏற்கத்தக்கவையல்ல. இன்றைய சூழலில் சமூகத்தின் அனைத்துப்பிரிவினருக்கும் கல்வி உரிமை வழங்கப்பட்டு அதன் பலனாக  அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் தகுதி, திறமை பெற்றவர்களாக உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, அங்கீகரித்து வாய்ப்பளிப்பதன் மூலமே அரசமைப்புச் சட்டத்தின் உயிர் நாடியான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்ட முடியும்.

இந்திய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சார்ந்த பி. சதாசிவம், சூன் 2013 இல் நியமிக்கப்பட்டபோது, ""பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சத் தகுதிகளைக் கொண்டிருந்தால் நியமன முறையில் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கி, உயர் நீதித்துறையில் நியமிக்கப்பட வேண்டும்'' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், உயர் நீதித்துறை நீதிபதி நியமனங்கள் வகுப்பு, சாதி சார்பற்ற வகையில் மேற்கொள்ளப்படுமானால் அத்தகைய சலுகைகள் ஏதுமின்றியே பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவர்களாகவே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக உறுதியாகச் சொல்லலாம்.

இது தொடர்பாக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும் அனைத்துப் பிரிவு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தனது 99 வயதிலும் போராடி வரும் வி.ஆர். கிருஷ்ணய்யர், 1991–1992 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய பிரதமருக்கும் சட்டத்துறை அமைச்சர்களுக்கும் தொடர்ச்சியாக எழுதிய கடிதங்களின் மூலம்,

"நீதித்துறையில் பட்டியலினப் பழங்குடி பிரிவினருக்கு நியாயமான பங்கு வழங்கப்படுவதில்லை என்பது எனது நீண்ட நாளைய உணர்வாகும். நீதிபதிகள் குறிப்பாக, உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குறிப்பிடத்தக்க அதிகாரத்தை கோலோச்சுகிறார்கள். எனவே, பட்டியலின பழங்குடியினருக்கு இவ்வாறான நீதியமைப்பு முறையில் அவர்களுக்கான இடத்தை அளிக்க வேண்டியது சட்டப்படியான கடமையாகும். இதை வலியுறுத்தும் போது தகுதி, திறமை என்ற பொய்க்காரணம் கூறப்படுவதை ஒரு தவறான கருத்திற்கான மதிநுட்பமற்ற முகமூடியாக நான் கருதி அதை மறுதலிக்கிறேன்'' என்றார்.

கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு என 33 சதவிகித இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், உயர் நீதித்துறையில் இத்தகைய நிலை இல்லை. இன்றைய நிலையில், உயர் நீதிமன்றங்களில் 59 பெண் நீதிபதிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமானதே. உயர் நீதித்துறையில் பெண்கள் நீதிபதிகளாகும் வாய்ப்பு இடஒதுக்கீட்டின்மை காரணமாக மிக அரிதாகவே உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் 1989 இல் நீதிபதியாகப் பணிநியமனம் செய்யப்பட்ட பாத்திமா பீவி தான் முதல் பெண் நீதிபதியாவார். அவர் ஏப்ரல் 1992 வரை பணியாற்றி ஓய்வு பெற்றபின், நவம்பர் 1994 இல் தான் சுஜாதா மனோகர் நியமிக்கப்பட்டு ஆகஸ்டு 1999 வரை பணியாற்றினார். அதற்குப் பிறகு, சூலை 2000 இல் நீதிபதியான ரூமா பால் சூன் 2006 வரை பணியாற்றினார். தற்போது, ஏப்ரல் 2010 இல் பதவியேற்றுள்ள க்யான் சுதா மிஸ்ராவும், செப்டம்பர் 2011 முதல் ரஞ்சனா பிரகாஷ் தேசாயும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி வருகின்றனர். 

உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி அரசுப் பணியிடங்கள் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில், உயர்நீதித்துறை இக்கோட்பாட்டைப் புறக்கணித்து வருவது அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். இந்த நியாயங்களை எல்லாம் உயர் நீதித்துறை தொடர்ந்து புறக்கணித்து வருவதைப் பார்க்கும்போது, இந்திய நீதித்துறை மநுவின் மறுவடிவமாகச் செயல்பட்டு வருவதாகவே கருத முடியும்.   

"குல ஒழுக்கமற்ற பிராமணன் கூட மன்னனுக்குரிய இடத்திலிருந்து நீதி உரைக்கலாம். ஆனால் நான்காம் வர்ணத்துச் சூத்திரன் மட்டும் நீதி வழங்கக் கூடாது. இதை மீறி சூத்திரன் நீதி செய்தால், அந்நாடு சேற்றிலகப்பட்ட பசுவைப் போல நம் கண் முன்பே துயருற்றழியும்''

– மநு தர்மம் 9:25, "நீதி செய்யத் தகாதவர்'       

(தலித் முரசு செப்டம்பர் 2012 இதழில் வெளியானது)