மனித வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளில் தலையாயதான நீர் குறித்தும், அதன் பயன்பாடு, தேவைகள், விரயமாக்குதல், பற்றாக்குறை, சேமிப்பு, மேம்பாடு மற்றும் மேலாண்மை தொடர்பான விவாதங்கள், தேவைக்கும் அதிகமான அளவிற்கு நீர் கிடைத்திட்ட போதிலும், பண்டைய தமிழ் இலக்கியங்களிலேயே இடம்பெற்று விட்டன. இருப்பினும், 20ம் நுற்றாண்டின் துவக்க காலங்களில்தான் நீர் குறித்த அச்சம் அரசுகளுக்கும், மக்களுக்கும் மெல்ல மெல்ல துளிர்விடத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக நீர் தொடர்பாக பல்வேறு சட்டங்களும், கொள்கைகளும், திட்டங்களும் இயற்றப்பட்டன. குறிப்பாக தேசிய அளவில் நீர் சட்டம், 1974ம் ஆண்டில் இயற்றப்பட்டது. அதனைத் தொடந்து பல்வேறு மாநிலங்களிலும் நீர் தொடர்பாக சட்டங்கள் இயற்றப்பட்டன. 

நிலத்தடி நீரும் தமிழகமும்:

                தமிழ்நாட்டில் சமீப காலமாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டே வருகிறது. நிலத்தடி நீரின் அளவு பரவலாக மாநிலம் முழுவதும் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதால் தமிழகத்தில் இருக்கும் பதினெட்டு இலட்சம் கிணறுகளில், கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் கிணறுகளுக்கு மேல் வற‌ண்டுவிட்டன. இவை அத்தனையும் இனி பாழுங்கிணறுகள் தான். மற்ற கிணறுகளுக்கும் இதே நிலைமை வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என சில ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழகம் முழுவதும் உள்ள கிணறுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் தமிழகத்தில்தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 384 பிளாக்குகளில், 142ல் நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்பட்டு விட்டது; 33ல் சிக்கலான நிலையிலும், 57ல் ஓரளவு சிக்கலான நிலையிலும் உள்ளது. 

தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம், 2003:

                “நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், நிலத்தடி நீர் அதீத சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பு வழிவகைகள் வழங்குதல் மற்றும் தமிழ்நாட்டில் அதன் திட்டமிடப்பட்ட மேம்பாடு, சரியான மேலாண்மை மற்றும் அது தொடர்பானவைகள் குறித்தவைகளை உறுதி செய்தல்” போன்றவைகளை நோக்கமாகக் கொண்டு கடந்த 04.03.2003 அன்று, “தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம்” இயற்றப்பட்டது. 1987ம் ஆண்டு இயற்றப்பட்ட, “சென்னை பெருநகர் பகுதி நிலத்தடி நீர் (ஒழுங்குமுறை) சட்டம்” அமலில் உள்ள பகுதிகள் தவிர்த்த, ஏனைய தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த சட்டம் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றிட வேண்டி, அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படும். மேலும், அந்த அமைப்பால் நிலத்தடி நீரை மேம்படுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகள், அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். அவ்வப்போதைய அறிவிப்புகள் மூலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தேவையின் பொருட்டு மாறிக்கொண்டே இருக்கும். இந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள படி, பெறவேண்டிய அனுமதியைப் பெறாமல், எவரொருவரும், எந்த நோக்கத்திற்க்காகவும், அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியிலிருந்து, எந்த வாகனத்தின் மூலமாகவும் நிலத்தடி நீரைக் கொண்டு செல்ல முடியாது. அப்படியாக தொடர்ந்து மீறப்படும் பட்சத்தில், தண்டனையுடன் நாளொன்றுக்கு ரூபாய்.500/- வீதம் அபராதமும் விதிக்கப்படும். ஆயினும் இந்த சட்டமானது எந்த நாள் முதல் அமலுக்கு வரும் என குறிப்பிடப்படாமலேயே இயற்றப்பட்டது. மேலும், சட்டம் இயற்றப்பட்டு பத்து ஆண்டுகள் ஆன பிறகும், இந்த சட்டத்திற்கான விதிகள் இன்று வரையிலும் இயற்றப்படவில்லை. 

நிலத்தடி நீர் குறித்த வழக்குகள்:

தங்களுக்குச் சொந்தமான திறந்தவெளி மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரை எடுத்தல் மற்றும் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லுதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட நீதிமன்றத் தடையாணைக்கு எதிராக தொடரப்பட்ட ‘புதிய திருப்பூர் பகுதி மேம்பாடு நிறுவனம்’ தொடர்புடைய பொதுநல வழக்கு ஒன்றில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட ஆயம், கடந்த 31.01.2011 அன்று, "தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம், 2003" அமலுக்கு வரும் நாள் வரையிலும் எந்த நபரையும், நிலத்தடி நீரை எடுப்பதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. நடைமுறைக்கு சாத்தியமில்லாத பொத்தாம் பொதுவான இந்த உத்தரவினை மாநில அரசால் இன்று வரையிலும் அமல்படுத்தப்பட முடியாத சூழலே நீடிக்கிறது. மேலும் அந்த வழக்கு விசாரணையின் போது, விரைவில் இந்த சட்டத்திற்கான விதிகள் இயற்றப்படும் என மாநில அரசு, நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்தது. 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில், தங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்திலிருக்கும் கிணறுகளிலிருந்து, ஆழ்துளைகள் மூலமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தடுக்கும் வகையில் மாவட்ட வருவாய் நிறுவனம், அந்த செயலுக்குத் தடை உத்தரவு பிறப்பித்தது. அந்த தடை ஆணைக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர். கிருஷ்ணசாமி தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்காடினார். அதன் காரணமாக அந்த வழக்கு கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. அந்த வழக்கில் "தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டம், 2003" அமலுக்கு வராத சூழலில், ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என அரசாங்கத்தால், எந்த ஒரு நபரையும் தடுக்க முடியாது என்று அர்த்தம் தரும் வகையிலான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் விளைவாக இன்றளவிலும் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவில் பரவலாக உறிஞ்சப்பட்டு வருகிறது. 

நிலத்தடி நீரும் மத்திய அரசும்:

நாட்டில், குடிதண்ணீர், விவசாயம் என இரண்டுக்கும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால், நாளுக்கு நாள் பெருகிவரும் தண்ணீர் தேவை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கான தீர்வை கண்டறியும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது, நிலச்சுவான்தார்கள் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக தங்களது நிலங்களில் துளையிட்டு, எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நிலை உள்ளது. நிலத்தடி நீரை பொதுநலச் சொத்தாக மாற்றுவதற்கு சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. நிலத்தடி நீரை, நிலத்தின் உரிமையாளர்கள் எவ்வளவு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை எல்லாம் அரசே தீர்மானிக்கும் வகையில் அந்தச் சட்டம் இருக்கும். நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்காக, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், முக்கிய அம்சங்கள் இடம் பெறவுள்ளன. நிலத்தடி நீர் ஆதாரங்கள் என்பவை, குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடாது. இந்த நீர் ஆதாரங்கள், அனைத்து மக்களுக்குமே சொந்தம். நிலத்தடி நீரை எல்லா மக்களுக்கும் சொந்தமாக்கும் வகையில்தான் புதிய சட்டம் இருக்கப்போகிறது.

மேலும், நிலத்தடி நீர் ஒழுங்குமுறை ஆணையங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்படும் என்றும் கடந்த 10.04.2012 அன்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ஆனால் அதனைத் தொடர்ந்து அந்த சட்டம் தொடர்பாக இன்று வரையிலும் எந்தவிதமான அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.

கணிப்பொறி, தகவல் தொழில்நுட்பம், புதிய, புதிய அறிவியல் சாதனங்கள் என்பன குறித்தெல்லாம் அறிந்திடாத நம் முன்னோர்கள், நீர் மேம்பாடு குறித்தும், நீர் மேலாண்மை குறித்தும் தீர்க்கதரிசனங்கள் கண்டு, தொலை நோக்குத் திட்டங்களை வகுத்துள்ளார்கள். அதன் காரணமாக அவர்கள் நீர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட கருவிகளின் துணைகொண்டு, உலகத்தையே கிராமமாக சுருக்கிவிட்டோம் என்று பெருமைகொள்ளும் நாம், நீர் தொடர்பாக வகுக்கும் திட்டங்களில் பெரும்பாலானவைகள், பெரும் பொருட்செலவை உண்டாக்குவதுடன், தற்காலிகமான தீர்வுகளை மட்டுமே தருகின்றன. எனவே, நீர் தொடர்பாக நிலையான தீர்வுகளை உருவாக்க வேண்டி அவசரமாகவும், ஆழமாகவும் சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். வாழும் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைகளான நமது வாரிசுகளுக்கும் பாதுகாப்பான நீரை உறுதிசெய்ய வேண்டியது அரசாங்கத்திற்கு மட்டுமின்றி, நம் ஒவ்வொருவருக்குமான தலையாய கடமையாகும். அதன் முதல் படியாக மாநில அரசு விரைவாக, நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் மேலாண்மை) சட்டத்திற்கான விதிகளை இயற்றிட வேண்டும். மேலும் இந்த சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்திடவும் வேண்டும்.