எந்த நபரையும் ஒரு குற்ற வழக்கில் கட்டாயம் கைது செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஒருவர் மீதான குற்றம் கொடிய குற்றமாக இருந்தால். அவர் அதே குற்றத்தை மீண்டும் செய்யக் கூடும் என கருதினால், சாட்சிகளைக் கலைப்பார் என கருதினால் அல்லது தலை மறைவு ஆகிவிடுவார் என கருதினால் மட்டுமே ஓர் நபரைக் கைது செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஜோகிந்தர் குமார் எதிர் உ.பி. அரசு (1994 – 1 LW Crl 370) வழக்கில் கூறியுள்ளது.

பிடியாணை வேண்டும் குற்றம் – பிடியாணை வேண்டாக் குற்றம்

அ) புகாரைப் பெற்ற காவல் நிலைய அதிகாரி புகாரில் கண்டுள்ளது எவ்வகைக் குற்றம் என அறிந்து பிடியாணை வேண்டாக்குற்றம் (கைது செய்வதற்குரிய குற்றம்) எனில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து எதிரியை உடனே கைது செய்யலாம்.

பிடியாணை வேண்டாக் குற்றத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டபின் அவர் பிணைவிடாக் குற்றத்தில் கைது செய்யப்பட்டால் அவர் பிணையில் விடுவிக்கப்படாமல் சிறையில் அடைக்கப் படலாம்.

பிணை விடும் குற்றம் எனில் அவர் காவல் நிலைய அதிகாரியாலோ நடுவர் மன்றத்தாலோ உடனடியாக பிணையில் விடுவிக்கப்படவேண்டும்.

ஆ) பிடியாணை வேண்டும் குற்றத்தில் நீதித்துறை நடுவர் ஒருவரின் கட்டளையின்றி யாரையும் கைது செய்யவோ வழக்கை விசாரிக்கவோ காவல் அலுவலர் எவருக்கும் அதிகாரம் இல்லை.

கைது செய்வதற்குக் காவல் அலுவலருக்கு அதிகாரம் இல்லாத வழக்குகளில் புகார் (தகவல்) பெற்று அதை உரிய படிவத்தில் பதிவு செய்து நீதித்துறை நடுவரின் முன்வைத்து ஒப்புதல் இல்லாமல் புலனாய்வு செய்ய இயலாது.