“துரதிஷ்டவசமாக பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிலைத்து நிற்கும் சாதிய கட்டமைப்பானது, இது நாள் வரையிலும் தனது கோரமுகத்தை காட்டிக்கொண்டேதான் வருகிறது. நமது நாட்டில் மக்களாட்சியும், சட்டத்தின் ஆட்சியும் இயல்பாக நடைபெற, சாதியக் கட்டமைப்பை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஒழிப்பது மிகவும் அவசியமானதாகும்” என்று கடந்த 2010ம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம், உத்திரப் பிரதேச மாநிலம் எதிர் ராம் சஜீவன் மற்றும் பலர் என்னும் வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளது.

நமது நாட்டில் 21 வயது நிரம்பிய ஆணும், 18 வயது நிரம்பிய பெண்ணும், தாம் விரும்பிய எவரையும், தமது சொந்த விருப்பத்தின் கீழ், திருமணம் செய்து கொள்ளாலாம். தாம் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வது என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் படி உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையாகும். அப்படி செய்வதை அமலிலுள்ள இயற்றப்பட்ட எந்த சட்டமும், எவரையும் தடுக்கவில்லை.

இந்திய சமூகத்தில், சாதி விட்டு சாதி, மதம் விட்டு மதம், பொருளாதார ரீதியாக தம்மை விட குறைவான நிலையில் உள்ளோர் மற்றும் வேறு மொழியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்பவர்கள், தங்களது சாதிப் பெருமையை அல்லது குடும்ப மானத்தை சீர்குலைத்து விட்டதாகக் கருதி, தங்களது குடும்ப உறுப்பினர்களால், குடும்ப கௌரவத்திற்காக படுகொலை செய்யப்படுகிறார்கள். இப்படியாக குடும்ப ‘பெருமைக்காக’, அந்த குடும்ப உறுப்பினர்களாலேயே நடத்தப்படும் கொலைகளை தனித்து அடையாளப்படுத்த, கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் சட்ட முறையில் முதல் முதலாக ‘கௌரவ’ கொலைகள் என்ற பதமானது பயன்படுத்தப்பட்டது. பத்து மாதம் சுமந்து பெற்ற சொந்த மகளை தாயே கொல்கிறார். தோளில் தூக்கி வளர்த்த மகளையும் அவளது கணவனையும், அவளது அண்ணன்மார்கள் மற்றும் தாய்மாமன்கள் ஆசியோடு, தந்தை கொல்கிறார். கொலை செய்துவிட்டு அதில் பெருமிதமும் கொள்கின்றனர். இங்கே, உயிர்களையும், உணர்வுகளையும், உறவுகளையும் விட முக்கியமானதாகிவிட்டது சாதியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள குடும்ப கௌரவம். தமிழகத்தில் நடத்தப்படும் ‘கௌரவ’ கொலைகளில் 90 விழுக்காடு, சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எதிராகவே நடத்தப்படுகிறது.

அடுத்த சாதிக்காரனை (குறிப்பாக பட்டியலினத்தைச் சேர்ந்தவர்) காதலித்ததால், தங்களது குடும்ப மானம் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக, தங்களது செல்ல மகளை, அவளது பெற்றோரே தங்களது வீட்டிற்குள் ஆழக்குழி தோண்டி, ஏதாவது காரணம் சொல்லி குழிக்குள் இறக்கி துடிக்க துடிக்க மண்ணள்ளிப் போட்டுக் கொன்ற நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் உண்டு. “நிலவு தோண்டுவது” என்று குறிப்பிடப்படும் அதன் அர்த்தம் கொல்வதற்குக் குழி தோண்டுவது என்பதாகும்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த சீனியம்மாள் என்ற பெண், தனது சகோதரர்களுக்கு முடி திருத்துவதற்காக, வீட்டிற்கு வந்த நாவிதருடன் காதல் வயப்பட்டதால் கொலை செய்யப்பட்டாள். பொதுவாக இதுபோல குடும்ப உறுப்பினர்களால் அல்லது சொந்த ஊரைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்படும் பெண்களே பின்னர் தெய்வமாக அறிவிக்கப்பட்டு வழிபடப்படுகிறார்கள். இப்படியாக, தமிழ்நாட்டில் இன்றளவும் சொல்லப்பட்டு வரும் பெண்தெய்வக் கதைகள் பலவற்றில், கொலைக்கான அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது காதல் தான். அதிலும் குறிப்பாக வேறு சாதியைச் சார்ந்தவனுடன் ஏற்பட்ட காதல். இது போன்ற பல்வேறு நிகழ்வுகளைக் குறித்த ஏராளமான நாட்டுப்புற கதைகள் தமிழகத்தில் உண்டு.

கடந்த நவம்பர் 07ம் நாள் இரவில், தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தின் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி, செங்கல்மேடு ஆகிய பகுதிகளில், பட்டியலின மக்களின் 153 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; பொருட்கள் களவாடப்பட்டன. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மங்கம்மாள் என்ற 20 வயதுடைய பட்டியலினப் பெண் கடந்த டிசம்பர் 04ம் நாள் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இது போன்றவைகளின் விளைவாக பட்டியலின மக்களுக்கான இழப்பு, சுமார் ஏழு கோடி ரூபாய் என்று தேசிய பட்டியலினத்தோர் ஆணையமும், சுமார் பத்து கோடி ரூபாய் என்று இதர கள ஆய்வு அறிக்கைகளும் மதிப்பிட்டுள்ளன. இவ்வளவுக்கும் அடிப்படை காரணமாகச் சொல்லப்பட்டது அந்த கிராமத்தில் நடந்த ஒரு காதலும், அதன் தொடர்ச்சியான ஒரு தற்கொலையும்.

பத்திரிகை துறை, நீதிமன்றம், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களாலும் பரவலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த நிகழ்வின் அடிப்படை ஒரு சாதி மறுப்புத் திருமணமாகும்.

கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த “காதல்” என்ற தமிழ் திரைப்படத்தில், சாதி விட்டு சாதி காதலித்ததற்காக, அந்த காதாநாயகனை, பெண் வீட்டார்கள் அடித்து சித்திரவதை செய்து மன நலம் பாதிக்கப்பட்டவராக ஆக்கிவிடுவார்கள். சாதி அடிப்படையில் அமைந்த போலி கௌரவத்தின் விளைவிலான கோரத்தை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு பதிவு செய்திருக்கும்.

“மனிதத் தன்மையற்று, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இன்றளவும் தொடரும், “கௌரவ கொலை”களில் கௌரவமானதாக எதுவும் இல்லை என்பதோடு, இவ்வாறான கொலைகள் காட்டுமிராண்டித்தனமான, அவமானப்படத்தக்க, கொடூரமான, நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் கூடிய படுகொலைகளேயன்றி வேறில்லை. எனவே, அப்படிப்பட்ட கொலைகளை புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதன் வாயிலாக மட்டுமே, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாம் வேரோடு பிடுங்கி எரிய முடியும்’’ என்று லதா சிங் எதிர் உத்திரபிரதேச மாநில அரசு என்ற வழக்கில் கடந்த 2006 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சட்டத்திற்கும், இயற்கை நீதிக்கும் புறம்பான, கட்டப் பஞ்சாயத்துகள் மூலமாக அரியானா, பஞ்சாப், உத்திர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஹிமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து நிலவிவரும் ‘கௌரவ’ கொலைகள் தொடர்பாக, சக்தி வாகினி என்னும் அரசு சாரா அமைப்பால் தொடரப்பட்ட பொது நல வழக்கில் அது தொடர்பாக அம்மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு கடந்த 2010ம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பியுள்ளது.

“எங்களது கருத்துப்படி, எந்த காரணத்திற்காக ‘கௌரவ’ கொலை செய்யப்பட்டிருந்தாலும் அது மரண தண்டனை வழங்கப்படக் கூடிய ‘அரிதிலும் அரிதான’ வழக்காகவே கருதப்படும். நமது நாட்டிற்கு இழுக்கு ஏற்படுத்தும் காட்டு மிராண்டிதனமான இப்போக்கினை அடியோடு ஒழித்திட இதுவே தக்க தருணம். நாகரீகமற்ற இத்தகைய நடத்தையைத் தடுப்பது மிகவும் அவசியமாகும். ‘கௌரவ’ கொலை புரிந்திட எத்தனிக்கும் அனைவருமே, அவர்களுக்காக தூக்குமேடை காத்திருக்கிறது என்பதை கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும்” என்று கடந்த 2011ம் ஆண்டு பகவான் தாஸ் எதிர் டெல்லி எனும் வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.

‘கௌரவ’ கொலைகள் தொடர்பாக, மாநில அளவிலான அல்லது மத்திய அளவிலான குறிப்பான எந்த சட்டமும் அல்லது சட்டப் பிரிவுகளும் இதுநாள் வரையிலும் இயற்றப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு, ‘கௌரவ’ கொலைகள் தொடர்பாக மசோதா ஒன்று நடுவணரசால் இயற்றப்பட்டது. அந்த மசோதாவானது, கட்டப் பஞ்சாயத்து நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாகவும் கருதப்படுவார்கள், ‘கௌரவ’ கொலை வழக்கில், வழக்கமான நடைமுறைக்கு மாறாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களே தவறேதும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும், ‘கௌரவ’ கொலைகள் தொடர்பான வழக்குகள், விரைவு நீதிமன்றங்கள் மூலமாக விரைந்து முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு குறுகிய காலத்தில் நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் காவல் துறையினருக்கு தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகளை உள்ளடக்கியுள்ளது. ஆனால் இன்றளவும் இம்மசோதாவானது சட்டமாக்கப்படவில்லை.

1989ம் இயற்றப்பட்ட, பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கெதிரான வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் படி, அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க வேண்டி உருவாக்கப்பட வேண்டிய மாவட்ட அளவிலான சிறப்பு நீதிமன்றங்கள் 23 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இன்றளவும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படவில்லை. எனவே, அவைகளை உடனடியாக அமைக்க வேண்டி 2012 டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுநாள் வரையிலும் ஆண்ட மற்றும் ஆளும் அரசுகளின், பட்டியலின மக்கள் மீதான நிலைபாட்டை இவ்வழக்கின் சாராம்சம் நமக்கு அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட அரசுகளிடம்தான் ‘கௌரவ கொலை’களுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளை நாம் எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

‘கௌரவ’ கொலைகள் அல்லது அதனையொத்த கொடுமைகளுக்கு, கொடூர தண்டனையான மரண தண்டனை வழங்கப்படும் என்று வெறுமனே சட்டம் இயற்றுவதால் மட்டுமே இது போன்று தொடரும் வன்கொடுமைகளை ஒழித்துவிட முடியாது. சாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்காக தமிழ்நாட்டில், மாநில பணியிடங்களில் சிறிது காலமாக அமலில் இருந்த சிறப்பு இட ஒதுக்கீடானது பின்னர் நீக்கறவு செய்யப்பட்டது. மீண்டும் அந்த சிறப்பு இட ஒதுக்கீடானது அமல்படுத்தபட வேண்டும். கௌரவத்திற்காக செய்யப்படும் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்கு மறுவாழ்வும் அளிக்கப்படவேண்டும். இப்படியாக ஆண்டாண்டு காலமாக சாதி ரீதியாக கட்டமைக்கப்பட்டு வருகிற சமூக அநீதிக்கு எதிராக பரவலாக விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். இழந்த மரியாதையை மீட்டெடுப்பதாகக் கருதி செய்யப்படும்  இது போன்ற சித்திரவதைகளில் அல்லது கொலைகளில் மாத்திரமல்ல எந்த வடிவிலான கொலையிலும், துளியும் கௌரவம் எதுவும் இல்லை, அவைகள் “காட்டுமிராண்டித்தனமான”, “கொடூரமான”, “அவமானமான”, “அசிங்கமான” குற்றங்கள் என்பதை சமூகம் உணர வேண்டும். அதற்கெதிரான வழிவகைகளை அரசும், சமூக அமைப்புகளும், இயக்கங்களும் முன்னெடுப்பதின் மூலம் தான் ‘கௌரவ’ கொலைகள் போன்ற வன்கொடுமைகளை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்