சுயமாக முடிவெடுக்கும் அளவுக்கு அனுபவமோ, பக்குவமோ பெற்றிராததால் தங்களது சின்ன சின்ன தேவைகளுக்கும் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், பெரியவர்களையும் சார்ந்து வாழ்பவர்கள் குழந்தைகள். குழந்தை பருவத்தில் ஏற்படும் பாதிப்பானது அவர்கள் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. அந்த பாதிப்பானது குழந்தைகளை மட்டுமின்றி, சமூகத்தையும் பாதிக்கிறது. எனவே, குழந்தைகள் அதிக கவனத்துக்கு உரியவர்களாகின்றார்கள்.

child_labour_300குழந்தைகளுக்கு எதிராக பாலியல் ரீதியான தொந்தரவுகள், குழந்தை தொழிலாளராக நடத்தப்படுதல், உழைப்பு சுரண்டல், கல்வி மறுப்பு, குழந்தை திருமணத்துக்கு உள்ளாக்கப்படுதல், குழந்தைகள் கடத்தப்படுதல் உள்ளிட்ட ஏராளமான வன்முறைகள் அனுதினமும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதில் ஏதாவதொரு வன்முறை குறித்த பதிவுகள் இல்லாத தினசரி நாளிதழ்களைக் காண்பதென்பது அரிதிலும் அரிதான ஒன்றாகிவிட்டது.

குறிப்பாக, வகுப்பறை வன்முறைகள் (Corporal Punishment) என்ற பதமானது, சமீப காலமாக பத்திரிகைகள், கட்டுரைகள், விவாதங்கள் உள்ளிட்டவைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டாண்டு காலமாக வகுப்பறைகளில் மட்டுமின்றி, தங்களது சொந்த வீடுகள், வேலைத் தளங்கள் போன்ற இடங்களிலும் குழந்தைகள் சொல்லொண்ணா வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை பல்வேறு ஆய்வுகளும், பதிவுகளும் உறுதியூட்டுகின்றன. வகுப்பறை வன்முறைகள் தொடர்பான குற்ற நிகழ்வுகளின் போதும், அது ஒரு தனிக் குற்றமாக பதிவு செய்யப்படாமல், பொதுவான குற்ற பிரிவுகளின் கீழேயே குற்ற வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்புக்காகவும், மகளிர் பிரச்சனைகள் குறித்து விசாரிக்கப்படவும் ஆணையம் உருவாக்குவது தொடர்பான சட்டங்கள் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே இயற்றப்பட்டுள்ளன. மேலும், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பட்டியல் சாதியினர் தங்களுக்கான பிரச்சனைகள் குறித்து கண்காணிக்கவும், அதில் தலையீடு செய்யவும் தேசிய மற்றும் மாநில அளவில் ஆணையம் வேண்டும் என்று தொடர்ந்து தலையீடு செய்து ஆணையங்களையும் பெற்றுவிட்டார்கள். ஆனால் நாட்டில் நான்கில் ஒரு பங்குள்ள குழந்தைகளுக்காக, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தொடர்பான சட்டம் பல்வேறு தடைகளைத் தாண்டி 2005ல் தான் இயற்றப்பட்டது.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம், 2005:

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைவான விசாரணைக்கு வழிவகுத்தல், குழந்தை உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் குறித்து விசாரித்தல், அதற்காக தேசிய மற்றும் மாநில அளவில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களையும் மற்றும் மாநில அல்லது மாவட்ட அளவில் குழந்தைகள் நீதிமன்றங்கள் உருவாக்கப்படுதல் என்பதையும் நோக்கமாகக் கொண்டு, கடந்த 2005ம் ஆண்டில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் தேசிய அளவில் இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2006ம் ஆண்டில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகள் உருவாக்கப்பட்டன.

சட்டம் இயற்றப்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பிறகு, கடந்த மார்ச் 2007ம் ஆண்டில்தான் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளாரான திருமிகு. சாந்தா சின்கா என்பவர் அந்த ஆணையம் தொடங்கப்பட்டது முதலாக தற்போது வரையிலும் அதன் தலைவராக இருந்து வருகிறார். இந்த ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் விதமாக, அதன் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அதன் அலுவலர்கள் ஆகியோர், பொது ஊழியர்களாக கருதப்படுவார்கள் என இந்த சட்டம் கூறுகிறது.

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்:

தேசிய அளவில் உள்ளது போல், ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இதன் காரணமாக நாட்டில், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகம், கோவா, பிகார், அஸ்ஸாம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் மட்டுமே மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் வேறுவேறு வடிவங்களில் அனுதினமும் மாநிலமெங்கும் பரவலாக நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவரும் சூழலில், இன்றளவிலும் தமிழ்நாட்டில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மாநில ஆணையம் உருவாக்கப்படவில்லை என்பதோடு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மாநில ஆணையத்திற்கான விதிகளும் உருவாக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது.

குழந்தைகள் நீதிமன்றம்:

மகளிருக்காக மகளிர் நீதிமன்றம், பட்டியல் சாதியினருக்காக சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்கனவே மாவட்ட அளவில் இயற்றப்பட்டுள்ளது போல, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த வழக்குகளில் விரைவான விசாரணைக்காக மாநில அளவில் ஒன்று அல்லது மாவட்டங்கள் தோறும் குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்பதும், அந்த நீதிமன்றங்களில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் இந்த சட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். ஆனால் தமிழ்நாட்டில், குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றமானது மாநில அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ இன்றளவிலும் உருவாக்கப்படவில்லை.

அதிகாரங்கள்:

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளின் போது, அதுதொடர்பான நபர்களுக்கு அழைப்பாணைகள் அனுப்புதல், வாக்குமூலம் பெறுதல், ஆவணங்களை தாக்கல் செய்ய கோருதல், விசாரணை செய்தல் என்பது போன்ற வழிமுறைகளைக் கையாளுதல், அதன்பிறகு தேவையின் பொருட்டு, உரிய அதிகாரம் பெற்ற நீதித்துறை நடுவருக்கு அந்த அறிக்கைகளை அனுப்பி வைத்தல், உரிய துறைக்கு தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செயதல், உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்பான தேவையான ஆணைகளைப் பெறுதல், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணம் அளித்திட உரிய அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்தல் போன்ற அதிகாரங்களைக் கொண்டது குழந்தைகளுக்கான தேசிய அல்லது மாநில ஆணையம்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம், 2009:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்குதல் தொடர்பான சட்டத்தில் மற்றும் அதனை தொடர்ந்து 2010ம் ஆண்டில் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள் ஆகியவற்றில், குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்படுதல், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விசாரித்தல் மற்றும் மறுஆய்வு செய்தல், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான புகார்களை விசாரித்தல், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் அவைகளைக் குறித்து கண்காணித்தல் ஆகிய பொறுப்புகள் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டமானது தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது அரசாங்கத்திடமிருந்தும், அரசு அதிகாரிகளிடமிருந்தும் அறிக்கைகள் மட்டும் வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் விரைவில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்படும் என்று 2012 ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் எதார்த்தத்தில், சட்டம் இயற்றப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்து போனபிறகும், இன்றளவும் குழந்தைகளுக்கான ஆணையமே மாநிலத்தில் உருவாக்கப்படவில்லை. உண்மை நிலை அப்படியிருக்கும் போது, குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்பான புகார்களை யாரிடம் கொடுப்பது, யார் அது குறித்து கண்காணிப்பது? சமூக தளத்தில் குழந்தைகளுக்கான குரல் வெளிவருவது மிகவும் அரிதானது. எனவே, அனைத்து தரப்பாரும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால்தான், நாட்டின் வருங்கால தூண்களை முதுகெலும்புள்ளவர்களாக நம்மால் பார்க்க முடியும். அதற்கு மாநில அளவில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், மாவட்ட அளவில் குழந்தைகள் நீதிமன்றமும் உருவாகிட வழிவகை செய்வதோடு, அவைகள் தொடர்ந்து சிறப்பாக இயங்கிட வழிவகுப்பதும் ஒரு படிக்கல்லாக அமையும்.