நமது நாடு ஒரு சுதந்திரமான, ஜனநாயக நாடு என்கிற முறையில் அனைவரும் சமமாக பாவிக்கப்படவேண்டுமென அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனால் 63 ஆண்டுக்கால சுதந்திர இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் பின்பற்றிய கொள்கைகளால் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே போகிறது. சமூகத்தின் மேல் தட்டிலுள்ள கனவான்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தேசத்தின் கடைக்கோடியிலிருக்கும் சாதாரண குடிமகனுக்கு மறுக்கப்படுகிறது. கல்வியில், வேலைவாய்ப்பில், சுகாதாரத்தில் என எங்கும் சமமான வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.

நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான, கல்வி கொடுப்பது குறித்து ஆய்வதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் அனைத்தும் பொதுப்பள்ளி முறையை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியது. 1960 களில் அமைக்கப்பட்ட கோத்தாரி கமிட்டி முதல் 1993 அமைக்கப்பட்ட யஷ்பால் கமிட்டி வரை பொதுப்பள்ளி முறை குறித்து வலியுறுத்தி பேசியுள்ளன. 1992ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய கல்விக்கொள்கை சாதி, மத, இன, இட வேறுபாடு இன்றி அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீரான கல்வி கிடைக்கச் செய்வோம் என்று கூறியது. ஆனாலும் அரசுகள் தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கையைக் கூட அமலாக்கவில்லை.

தமிழகத்தில் சற்று வித்தியாசமான வசதியானவனுக்கு ஒரு பாடத்திட்டம், சாதாரண மக்களுக்.கு ஒரு பாடத்திட்டம் என பள்ளிகளில் மட்டுமின்றி பாடத்திட்டத்திலும் கூட சமச்சீரின்மையே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் சமச்சீர்க் கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன் தலைமையில் 9 கல்வியாளர்கள் கொண்ட குழுவை 2006ஆம் ஆண்டு தமிழக அரசு நியமித்தது.

இக்குழு சமச்சீர்க் கல்வி குறித்த பரிந்துரைகள் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசிடம் ஒப்படைத்தது. இவ்வறிக்கை 2007ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்ததோடு நமது கடமை முடிந்துவிட்டது என தமிழக அரசு கருதியது இதற்கு முன் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் மோகன் தமிழ் வழிக் கல்விக்குழு, முனைவர் சிட்டிபாபு தலைமையிலான மழலையர் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆய்வுக்குழு, சிவஞானம் பாடச்சுமை குறைப்புக் குழு, நீதியரசர் சம்பத் குழு ஆகிய குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டது போலவே சமச்சீர் கல்விக்கான பரிந்துரைகளையும் அமல்படுத்திட நடவடிக்கை எடுக்காமல் இருந்தது தமிழக அரசு.

நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என பல தரப்பபினரும் குரலெழுப்ப கலைஞர் கமிட்டி மேல் கமிட்டி போட்டு காலங்கடத்துவதிலேயே குறியாயிருந்தார். ஆனாலும் இந்திய மாணவர் சங்கமும் இதர அமைப்புகளும் போராட்டங்கள் மூலம் தமிழக அரசை தொடர்ந்து நிர்ப்பந்தித்துக்கொண்டே இருந்தது. இறுதியாய் 2010_11 கல்வியாண்டியிலிருந்து ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர்க் கல்வி அமல்படுத்தப்படும். அதையடுத்த கல்வியாண்டிலிருந்து பிற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது தமிழக அரசு. இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டனர். ஒரு கோடி கையெழுத்து இயக்கம், ஒரு லட்சம் பேர் பேரணி என்றெல்லாம் போராட்ட அறிவிப்புகளைக் கூட வெளியிட்டனர்.

கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட சமச்சீர்க் கல்வியை விரைந்து அமல்படுத்த கேட்டு முதல்வரை சந்தித்து மனுகொடுக்கச் சென்ற மாணவர் சங்கத் தோழர்களை சந்திக்க மறுத்து காவல் துறை மூலம் மாணவர்களின் மண்டையை உடைத்த தமிழக அரசு, மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்ட உடனேயே அவர்களை சந்தித்து பேசியது. இந்த சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. பேரம் படிந்தது, மெட்ரி குலேசன் பள்ளிகளின் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சமச்சீர்க் கல்வி என்ற வார்த்தையே இல்லாத சமர்ச்சீர்க் கல்விக்கான சட்டம் முழுமையான தரமான சமச்சீர்க் கல்வியை அமல் படுத்தும் நோக்கம் தமிழக அரசிற்கு கிஞ்சிற்றும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.

பள்ளிக் கல்வி குறித்து தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்களும், விதிகளும், ஆணைகளும் பல்வேறு முரண்பாடுகளை கொண்டுள்ளது. எனவே முழுமையான பள்ளிக் கல்விச்சட்டம் இயற்ற வேண்டுமென முத்துக்குமரன் குழு வலியுறுத்தியது. இச்சட்டம் பள்ளிகள் தொடங்கல், அங்கீகரித்தல், வகைப்படுத்தல், ஆசிரியர் தகுதி, ஆசிரியர் நியமனம், பணிவரன் முறை, ஆசிரியர் எண்ணிக்கை நிர்ணயம், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடும் மானியங்களும் பள்ளிக் குழுக்கள் அமைத்தல், பொறுப்புகள், கிராமக் கல்விக்குழு அமைப்பு பணிகள், கலைத்திட்டம், தேர்வுகள், வேலை நாட்கள், விடுமுறை, மாணவர் சேர்க்கையும் நீக்கமும் மாணவர்க்கான படிப்பு தவித் திட்டங்கள், மாணவர் ஒழுங்கு விதிகள், ஆசிரியர் நடத்தை விதிகள், பள்ளிக் கணக்குப் பேணல், கட்டணங்கள், நூலகங்கள், பதிவேடுகள், பள்ளி ஆய்வு நடைமுறை விதிகள் பள்ளிக் கணக்குத் தணிக்கை, பொதுத்தேர்வு விதிகள், உறைவிடப் பள்ளிகள், மாணவர் விடுதிகள், பெற்றோர் ஆசிரியர் அமைப்பு விதிகள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைப்பு விதிகள் இருக்க வேண்டுமென முத்துக்குமரன் குழு பரிந்துரைத்தது.

மேலும் தமிழகத்தில் தற்போதுள்ள நான்கு வாரியங்களும், இயக்கங்களும் கலைக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாக ஒரு தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வி வாரியம் அமைக்க வேண்டும். இதன் பொறுப்புகளும், கடமைகளும் ஒரு பல்கலைக்கழக கல்விக் குழுவிற்கு உள்ள கடமைகளுக்கும், பொறுப்புகளுக்கும் இணையாக இருக்க வேண்டுமென்றாலும் முத்துக்குமரன் குழு பரிந்துரைத்துள்ளது. மிக முக்கியமாக பயிற்று மொழி தாய் மொழியாக இருக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முக்கியமான பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டு மெட்ரிகுலேசன் பள்ளி முதலாளிகளின் கல்வி வியாபாரத்திற்கு எந்த விதமான தடங்களும் ஏற்படாத வகையில் தான் தமிழக அரசின் சமச்சீர்க் கல்வி குறித்த அறிவிப்பும், அதனைத் தொடர்ந்த சமச்சீர்க் கல்விக்கான சட்டமும் உள்ளது.

மக்களிடையே மிதந்துள்ள ஆங்கில மோகத்தை பயன்படுத்தி இவர்கள் வியாபாரத்தை பெருக்கிட தடையில்லாத வண்ணம் பயிற்று மொழி ஆங்கிலமாகவும் இருக்கலாமென்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்பட்டமான விதிகளை மீறிய, அடிப்படை வசதிகள் இல்லாத, தரமான ஆசிரியர்கள் இல்லாத மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது சிறு நடவடிக்கைக்கூட எடுக்காத, மெட்ரிகுலேசன் இயக்குவதும் தொடருமென்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்படி சமச்சீர்க் கல்வியின் நோக்கத்தை சிதைத்து, மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தமிழக அரசு பல சலுகைகளை வழங்கியுள்ள நிலையிலும் தனியார் பள்ளி முதலாளிகள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். காரணம் ஒரே விதமான பாடப்புத்தகம், அதுவும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனமே வெளியிட்டு வழங்கும் என்கிற ஒன்றுதான்.

தரமான புத்தகம் என்ற பெயரில் தனியார் புத்தகம் வெளியீட்டாளர்களிடம் அதிகமான கமிசன் தொகையை பெற்றுக்கொண்டு இவர்கள் நடத்தி வந்த புத்தக வியாபாரத்திற்கு இச்சட்டம் தடைப்போட்டது. புதிய பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்கிற போர்வையில் ஒவ்வோராண்டும் பாடப்புத்தகங்களை மாற்றி தனியார் புத்தக வியாபாரிகளுக்கு துணை போன தோடு கமிசன் மூலம் இலட்சக்கணக்கில் சம்பாதித்த மெட்ரிகுலேசன் பள்ளி முதலாளிகளால் இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எனவே சமச்சீர்க் கல்வி தரமில்லை தனிமனித உரிமைகளை பறிக்கிறது என்ற புளித்துப்போன வாதங்களோடு உயர்நீதிமன்றம் சென்றார்கள் இவர்களின் சொத்தையான வாதத்திற்கு கூட தமிழக அரசு சரியான பதிலை நீதிமன்றத்தில் சொல்லவில்லை இறுதியில் சென்னை உயர்நீதி மன்றம் வழக்கம்போல் கல்வி வியாபாரிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ஒரே பாடநூல் என்பதற்கு பதிலாக அரசு தயாரிக்கும் புத்தகங்களையோ, அரசின் அனுமதி பெற்ற தனியார் வெளியிடும் புத்தகங்களையோ, தேர்ந்தெடுக்கும் உரிமை பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும், அரசு அங்கீகரித்த பாடநூல் பட்டியலை மே_15க்குள் வெளியிட வேண்டுமென்றும்.

சமச்சீர் கல்வியை பின்பற்றாத பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கத் தடை விதித்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்படுகிறோம் என்று சொல்லி தனியார் வெளியீட்டு புத்தகங்களை அங்கீகரித்து புத்தகங்களின் குறியீட்டு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பாடப்புத்தகங்களை எழுதி, பிழை திருத்தம் செய்து அச்சடிக்கும் பணியை தமிழக அரசால் ஆறுமாத காலமெடுத்தும் முடிக்க முடியாதபோது தனியார் நிறுவனங்கள் 10 நாட்களில் அப்பணியை முடித்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது.

டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மே தின விடுப்பு கேட்டு தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் தொழிலாளர்களுக்கு ஆதரவாய் மே தின விடுப்பு வழங்க வேண்டுமென உத்தரவிட்டபோது அதனை எதிர்த்து அடுத்த சிலமணி நேரங்களிலேயே மேல் முறையீடு செய்து தடையாணை பெற்ற தமிழக அரசு சமச்சீர்க் கல்வி வழக்கில் இத்தனை நாட்களாகியும் மேல் முறையீடு செய்யாதது ஏன்? அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே விதமான பாடத்திட்டம், கொண்டு வருவதன் மூலம் மட்டுமே கல்வியில் சமச்சீரை கொண்டுவர முடியாது ஆசிரியர்கள், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி, அறிவியல் ஆய்வகம் விளையாட்டு மைதானம், நூலக வசதி, கழிப்பறை வசதி, என அனைத்தும் தரமானதாகவும் சமமானதாகவும் இருக்கும் போதுதான் உண்மையான சமச்சீர்க் கல்வியைக் கொண்டு வர முடியும்.

ஊட்டி, ஏற்காடு மான்ட் போர்டு, தரமணி அமெரிக்கன் பள்ளி போன்ற பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் குறைந்த பட்சம் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் அதற்கான நிதி ஒதுக்கி, அரசியல் உறுதியோடு செயல்பட்டால் மட்டுமே முழுமையான சமச்சீர்க் கல்வி என்பது சாத்தியமாகும்.

இதனை இன்றைய தமிழக அரசு செய்யுமா என்பது சந்தேகமே! ஏனெனில் அதற்கு தமிழகத்திலுள்ள கோடான கோடி ஏழை, எளிய மக்களின் நலனை விட சில ஆயிரம் கல்வி வியாபாரிகளின் நலனே முக்கியம். தமிழக அரசு சமச்சீர்க் கல்வியில் முதல்படி வைத்தபோது உளமகிழ்ந்து வரவேற்றோம் ஆனால் அதன் நடவடிக்கை ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்றாகிவுள்ளது. ஆனால் மாணவர் இயக்கங்களும், மக்கள் இயக்கங்களும் முழுமையான சமச்சீர்க்கல்வியை அமலாக்கும் வரை ஓய்ந்திருக்காது.

Pin It