தமிழின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர். யாழ்ப்பாண வாழ்க்கையின் சிறந்த விமர்சனங்களாக அமைந்த நாடகங்களை எழுதி அளித்தவர். வடமாராட்சி பேச்சு வழக்கை மொழியியல் அடிப்படையில் பதிவு செய்தவர். தமக்குப்பின் தமிழ்ப் புலமை சார்ந்த பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர். தலைசிறந்த மொழியியலாளர், கவிஞர், நாவலாசிரியர், வரலாற்றாசிரியர், சமூகவியலாளர், பன்மொழிப் புலவர். அவர்தான் பேராசிரியர் கணபதிப்பிள்ளை!

கணபதிப்பிள்ளை 02.07.1903 அன்று பருத்தித்துறையைச் சேர்ந்த தும்பளை எனும் கிராமத்தில் க. கந்தசாமிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை புகழ்பெற்ற பாரம்பரிய தமிழ் மருத்துவர்.

KKanapathipillaiகணபதிப்பிள்ளை பருத்தித்துறையைச் சேர்ந்த ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் மரபு வழித் தமிழ், சமஸ்கிருதக் கல்வியைக் கற்றார். ஆங்கிலக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் பயின்றார்.

இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்து பயின்றார். சமஸ்கிருதம், பாளி ஆகிய இரு மொழிகளையும் கற்றார்.

இலங்கைப் பல்கலைக் கழகத்தில் இவரது தமிழாசிரியர் ‘பதிப்புச் செம்மல்’ சி.வை. தாமோதரம் பிள்ளையின் மகன் அழகசுந்தர தேசிகர் என்றழைக்கப்படும் ஃபிரான்சிஸ் கிங்ஸ்பெரி ஆவார். கிங்ஸ்பெரி தமிழ் உணர்ச்சி மிக்கவர். தமிழ் இலக்கியத்தை நவீன முறையில் நோக்கும் பண்புடையவர். தனித்தமிழ் நடையில் எழுதும் ஆற்றல் படைத்தவர்.

பி.ஏ. பட்டப்படிப்பில் 1930 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதன் காரணமாக அவருக்கு நான்கு ஆண்டுகள் வெளிநாடுகளில் படிப்பதற்கான ஊக்கத் தொகை கிடைத்தது. இந்த ஊக்கத் தொகையினை பயன்படுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கும் பின்னர் இலண்டன் பல்கலைக்கழக கீழைத்தேய ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளிக்கும் (School of Oriental and African Studies) உயர்கல்வி கற்கச் சென்றார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விபுலாநந்த அடிகளார், ‘சொல்லின் செல்வர்’ ரா.பி. சேதுப்பிள்ளை, பொன்னோதுவார் மூர்த்திகள், சர்க்கரை இராமசாமிப் புலவர், சோழவந்தான் கந்தசாமியார், பலராமையர் போன்ற தமிழறிஞர்களிடம்;; பயற்சி பெற்றதால் வாய்ப்பு பெற்றார். அதனால், தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை சிறப்பாக கற்றறிந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1932 ஆம் ஆண்டு ‘வித்துவான்’ பட்டம் பெற்றார்.

இலண்டன் பல்கலைக் கழக கீழைத்தேய ஆய்வுப் பள்ளியில் சேர்ந்து கல்வெட்டு இயல் (Epigraphy) ஆய்வில் ஈடுபட்டார். இவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு, ‘கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ்க் கல்வெட்டுகளின்; மொழிநடை’ (A study of the Language of the Tamil Inscriptions of 7th and 8th Centuries AD) பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார்.

இந்திய மொழிகள் பற்றிய ஆய்வில் மேல் நாடுகளில் மிகச் சிறந்து விளங்கிய இலண்டன் பேராசிரியர் ஆர்.எல்.ரேணரின் (R.L. Turner) வழிகாட்டலில் தமது ஆய்வை மேற்கொண்டார். கணபதிப்பிள்ளை பாரம்பரியத்தையும், நவீனத்துவத்தையும் இணைக்கின்ற, இந்திய ஆய்வு மரபையும், மேல்நாட்டு ஆய்வு முறையையும் பிணைக்கின்ற ஒரு தனிக் கண்ணோட்டத்தில் ஆய்வு முறையை மேற்கொண்டார்.

கணபதிப்பிள்ளை தமது முனைவர் பட்ட ஆய்வேட்டை 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், லண்டன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்று, 1936 ஆம் ஆண்டு இலங்கைக்கு திரும்பினார்.
இவரே தமிழ் கட்டுவெட்டுகள் குறித்து முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வாளராவார். இவரது ஆய்வின் மூலம் பல முக்கிய தமிழ் நிலைப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் வெளிவந்தன. இவரது முனைவர் பட்ட ஆய்வு நூலக இதுவரை வெளியிடப்படாதது தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சித் துறைக்கு பேரிழப்பாகும்.

கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது பற்றிய தகவல்களையும், சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்களிலுள்ள மொழியமைப்பு எவ்வாறு மாறுபாடு அடைந்துள்ளன எனும் உண்மையையும் வெளிப்படுத்தியது.

வரலாற்று அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளும் போது கி.பி. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகள் அரசு அமைப்பு, பொருளாதார அமைப்பு, சமூக அமைப்பு, பண்பாட்டு நிலைமை ஆகியனவற்றில் மிக முக்கியமான ஒரு மாறுநிலைக் காலமாகும் (Age of Transition). அதற்கு முன்னர் நிலவிய அரசு, பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைகளிலிருந்து வேறுபட்ட காலமாகும். இவரது ஆய்வில், தொல்காப்பியத்திலிருந்து நன்னூலுக்கு வருகின்ற தமிழ் இலக்கண வளர்ச்சிக்கான காரணிகளை அறிந்து நன்னூல், தொல்காப்பியத்திலிருந்து வேறுபடுவதற்கான பின்புலக் காரணிகளை தெளிவுபடுத்தினார். இதனால் இந்த இரண்டு இலக்கண நூல்களையும் தெளிவாக மதிப்பிடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1936 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராக நியமிக்;கப்பட்டார். இப்பல்கலைக் கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக சுவாமி விபுலாநந்த அடிகள் 1942 ஆம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். கணபதிப்பிள்ளை பேராசிரியராக 1947 ஆம் ஆண்டு பணி ஏற்றார். பின்னர் தமிழ்த் துறைத் தலைவராகப்;;; பணி புரிந்து 1965 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மொழிப்பீடத்தின் தலைவராகவும் பணியாற்றினார். கீழைத்தேய மொழியியல் மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் அளித்து உரையாற்றினார். 1964 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற கீழைத்தேய மாநாட்டில் இலங்கையிலிருந்து தனிநாயகம் அடிகளார், கா.பொ.ரத்தினம் ஆகியோருடன் கலந்து கொண்டார். அம்மாநாட்டின் முடிவில் தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு, பண்பாடு முதலியவற்றை ஆய்வு செய்திட உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை தோற்றுவிக்கப் பாடுபட்டவர்களுள் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை முக்கியமானவராக விளங்கினார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப் பாடமாகப் பயில்வோருக்குக் கல்வெட்டியல் கட்டாய பயில்நெறியாக அமைந்திருந்தது. பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை இப்பாடத்தை மாணவர்களுக்குக் கற்பித்தார். மேலும், தமிழ் இலக்கிய வரலாற்றையும், நவீன இலக்கியத்தையும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்காகவும் தீவிரமாக முயற்சித்து வெற்றி கண்டார்.

தமிழாய்வைக் குறிப்பிட்ட ஒரு சிறுவட்டத்துக்கு அப்பால் கொண்டு சென்று, தமிழ் பேசுகின்றவர்கள் அனைவருக்கும்; பொதுவான ஒரு புலமைச் சூழலை ஏற்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தினார்.

‘ஈழத்து வாழ்வும் வளமும்’ என்ற இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் வரலாறு, இலக்கிய வரலாறு, உயர் பண்பாட்டில் பேசப்படும் கலைக்கூறுகள், ஈழத்து இலக்கிய வளர்ச்சி, ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காறுகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் சிறப்பு பண்பாட்டின் உயர்நிலைக் கூறுகளையும் அடிநிலைக் கூறுகளையும் ஒரே நேரத்தில் ஒரே ஆய்வு மையத்துள் வைத்துக் கூறும் திறனாகும். மேலும், யாழ்ப்பாணத்தின் பண்பாடு என்று பேசும்பொழுது ஆறுமுக நாவலரையும், சி.வை.தாமோதரம்பிள்ளையையும் எத்தகைய பெருமித உணர்வுடன் குறிப்பிடுகின்றாரோ அத்தகைய பெருமித உணர்வுடன் அடுப்பு நாச்சி வழிபாட்டையும், கொத்தி வழிபாட்டையும் குறிப்பிட்டுள்ளார். ஆகம வணக்க முறைகள் பற்றிக் கூறும் அதே வேளையில் நாட்டார் நிலை வழிபாடுகள் பற்றியும் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

சைவப் பாரம்பரியத்தின் உயர்வை எடுத்துக் கூறும் அதே வேளையில் கிறித்துவத்தின் வழியாக வந்த இலக்கிய சிந்தனை ஊடாட்டங்களையும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, வழக்காறுகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, மட்டக்களப்பு வரலாறு வழக்காறுகளுடன் ஒப்பு நோக்கியும், வன்னி நடைமுறைகள் பற்றியும் விவரித்துள்ளார்.

மேலும், இந்நூலில் இலங்கையில் சிற்பக்கலை, யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர், நாகர்கோயில், யாழோசை, ஈழத்துத் தமிழர் கிராமியத் தெய்வ வழிபாடு, தாமோதரம்பிள்ளை, ஈழநாட்டில் தமிழ் வளர்ச்சி, நாட்டுக் கூத்து, வடபகுதித் துறைமுகங்கள், ஈழத்து ஊர்ப்பேர்கள், விஞ்ஞானமும்; அகராதியும், வன்னி நாட்டை அரசுபுரிந்த வனிதையர், கற்பகத் தரு, ஈழத்தமிழர் உணவு, யாழ்பாணத்துப் பழக்க வழக்கங்கள் முதலிய தலைப்புகளில் ஆழமான, விரிவான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூல் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பாக போற்றப்படுகிறது.

பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை சமூகத்தின் ஒரு பகுதியினரை மாத்திரமல்லாது, சகலரையும், சமூகம் முழுவதையும் தமது ஆய்வில் கொண்டு வந்தார். படித்தவர், படிக்காதவர், நாட்டவர், நகரத்தவர், அடிநிலைச் சமூகத்தவர், உயர்நிலைச் சமூகத்தவர், வைதிக வழிபாட்டு முறைமை, அது சாராத வழிபாட்டு முறைமை என்று பாராது தமிழ்ச் சமூகத்தை ஒரு முழுமையாகவே அவர் கண்டார். அவர் யாழ்ப்பாணப் பண்பாட்டை மாத்திரமல்லாது, வன்னி, மட்டக்களப்பு தென்னிலங்கை ஆகிய பிரதேசங்களிலுள்ள தமிழ் பேசுவோரின் பண்பாடு, மொழி, இலக்கியம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார்.

ஈழத்துத் தமிழர்களுடைய வரலாறு பற்றிப் பல இருட்டடிப்பு நடைபெற்ற வந்த காலத்தில், ஈழத்தமிழர்களுடைய அடிப்படை உண்மைகள் பறிபோய்க் கொண்டிருந்த காலத்தில், இவரது பத்து நாடகங்களை ஒன்றாக இணைத்து ஒரே தொகுதியாக, ‘கணபதிப்பிள்ளை நாடகத்திரட்டு’ என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. ‘இலங்கை வாழ் தமிழர் வரலாறு’ என்ற நூலை பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதினார். இந்நூல் ‘சங்கிலி’ நாடகத்திற்கு எழுதிய முன்னுரையாகும். பொதுவாக இலங்கை வரலாறு பாளி மொழியிலான மகாவம்ச சூளவம்ச பின்புலத்திலேயே பார்க்கப்பட்ட சூழலில் தென்னிந்திய இலக்கிய கல்வெட்டுச் சான்றுகளை முதன்மைப்படுத்தி, இலங்கைத் தமிழர் வரலாறும் யாழ்ப்பாண மன்னர்களின் ஆட்சி பற்றிய வரலாற்றுச் செய்திகளும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சரித்திரக் காலத்துக்கு முந்திய யாழ்ப்பாணம், உக்கிரசிங்கன் தொடக்கம் பாணன் வரை, பாணன் தொடக்கம் ஆரியச் சக்கரவர்த்தி வரை, ஆரியச்சக்கரவர்த்திகள் முதலாம் பரம்பரை, பிற்கால யாழ்ப்பாணத்தரசர், விடுதலைப் போராட்டம் முதலிய தலைப்புகளில் வரலாற்று ரீதியான கட்டுரைகளை இந்நூலில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதியுள்ளார்.

ஆராய்ச்சித் துறையில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் இலங்கைப் பல்கலைக் கழக ஆய்வு இதழிலும் (University of Ceylon Review), வேறு சில ஆய்வு இதழ்களிலும் வெளிவந்துள்ளன. மேலும், இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ் இதழான ‘இளங்கதிர்’ மற்றும் ‘ஈழகேசரி’, ‘தினகரன்’ முதலிய இதழ்களிலும் வெளிவந்தன.

கல்வெட்டு இயலில் இவருக்கு இருந்த தீவர ஆர்வம் காரணமாக, கல்வெட்டுகளை வாசிப்பதில் திறன் பெற்று விளங்கினார். இலங்கையிலுள்ள தமிழ்;;;;;;க் கல்வெட்டுகள் சிலவற்றை வாசித்துள்ளார். இரண்டாம் கஜபாகுக் காலத்து மாங்கனாய்த் தமிழகக் கல்வெட்டு நிசங்கமல்லனின் பண்டுவஸ் நுவரத் தமிழ் கல்வெட்டு, மொறஹகவெல தூண் கல்வெட்டு ஆகிய மூன்று தமிழ்;;;;;க் கல்வெட்டுக்களைப் படித்து விளக்கியுள்ளார்.

கல்வெட்டு இயல் துறையில் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, பேராசிரியர் கா. இந்திராபாலா ஆகிய இருவரை பயிற்றுவித்தார். பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை இடைக்காலக் கல்வெட்டுகளை ஆராய்ந்தவர். கா. இந்திரபாலா இலங்கை வரலாறு பற்றிய சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.

மொழி ஆய்வுத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, ஒலிப்பியலிலேயே (Phonology) எழுத்துக்கள் எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன, ஒலி வடிவங்களில் காணப்படும் வேறுபாடுகள் யாவை என்பன மிக நுண்ணிய முறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். ஒலிப்பியலிலிருந்த ஆர்வம் காரணமாக யாழ்ப்பாணப் பேச்சு வழக்கை,மிக நுண்ணியதாக ஆராய்ந்தார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ஆய்வுச் சிறப்புக்கு அவரது பன்மொழி அறிவே அடிப்படையாகும். தமிழ், ஆங்கிலத்தைத் தவிர, சிங்களம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளையும் அறிந்திருந்தார்.

ஈழத்துத் தமிழரின் வரலாறு, வாழ்வியல், இலக்கியம் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். பேராசிரியர் க. கணபதிபிள்ளையின் தீவிர முயற்சியினால் வரலாற்று ஆவணங்கள் ஆராயும் குழு இலங்கை அரசினால் அமைக்கப்பட்டது. அக்குழுவில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

செய்யுள், நாவல், சிறுவர் இலக்கியம், ‘காதலியாற்றுப்படை’, ’தூவுதும் மலரே’ முதலிய இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளார்.

‘காதலியாற்றுப்படை’ என்பது பழந்தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் ஆற்றுப்படை இலக்கிய வடிவத்தின் ஒரு புதிய அமைப்பு ஆகும். இது பருத்தித் துறையில் வசிக்கும் காதலனிடத்து, அவன் காதலியை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய வாழ்க்கை முறை மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அக்கால யாழ்ப்பாண வாழ்க்கை பற்றி அறிந்துகொள்வதற்கான மிகச் சிறந்த ஆவணமாக இச்செய்யுள் நூல் அமைந்துள்ளது.

‘தூவுதும் மலரே’ எனும் செய்யுள் தொகுதியில் நான்கு கதைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ‘சீதனக்காதை’ என்பது யாழ்ப்பாணத்தில் 1930, 40 களில் நிலவிய சீதனக் கொடுமை பற்றிய ஒரு கதைப்பாடல் ஆகும். ‘விந்தை முதியோன்’ என்பது எகிப்தியக் கதையாகும். ‘பாணர் புரவலன்’ என்பது மட்டக்களப்பில் வாழ்ந்த ஒரு புரவலர் பற்றியது. ‘தீவெட்டிக் கள்வர்’ என்பது யாழ்ப்பாணத்தில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி ஆகிய காலப் பகுதியில் நடைபெற்ற தீவெட்டிக் களவுகளை நடத்திய ஒருவரைப்பற்றியது. ‘நீரா மங்கையர்’ சிறுவர் இலக்கியமாகும். இது மேலைநாட்டுச் சிறுவர் இலக்கியத்தை தமிழ்படுத்தப்பட்டதாகும். இவரது அச்சேறாத கையெழுத்துப் பிரதிகளுள், ஜெர்மானிய நாட்டுச் சிறுவர் கதைகள், நம்பிக்கையுள்ள நாதன், சங்குபதி முதலியவையாகும்.

பேராசிரியர் கணபதிப்பிள்ளை நாடக ஆசிரியர் என்ற வகையிலே போற்றப்பட்டு வருகிறார். இவர், உடையார் மிடுக்கு, நாட்டவன் நகர வாழ்க்கை, முருகன் திருகுதாளம், கண்ணன் கடத்து, தவறான எண்ணம், பொருளோ பொருள், சங்கிலி, சுந்தரம் எங்கே, துரோகிகள், மாணிக்கமாலை முதலிய நாடகங்களை எழுதியுள்ளார்.

‘மாணிக்கமாலை’ ஹர்ஷவர்த்தனின் ‘இரத்தினாவலி’ எனும் வடமொழி நாடகத்தின் தமிழாக்கம். அதன் இலக்கியச் சுவைக்காக மொழிபெயர்க்கப்பட்ட நாடகமாகும்.

‘சங்கிலி’ வரலாற்று நாடகமாகும். இந்நாடகம் 1951 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரால் நடிக்கப்பட்டது. யாழ்ப்பாண அரசில் பணியாற்றிய சிலரின் சூழ்ச்சி காரணமாகப் பறங்கியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற வர, அவர்களைத் தோற்கடித்து, தனது அரச பதவியை தனது மகனான புவிராச பண்டாரத்திடம் சங்கிலி மன்னன் ஒப்படைப்பதை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. தமது நாடகங்களில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கைப் பதிவு செய்துள்ளார்.

1931 ஆம் ஆண்டு இலண்டனிலிருந்து திரும்பிய பின்னர் 1953 ஆம் ஆண்டு வரை, இவர் எழுதிய நாடகங்கள் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்து ஆண்டு விழாக்களில் பல்கலைக்கழக அரங்குகளில் நடைபெற்றது. 1954 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்துக்கு அப்பால், கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டன. இவருடைய நாடகங்களுள் அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றது ‘உடையார் மிடுக்கு’ எனும் நாடகமாகும். நாடகத்துறையில் ஈடுபாடு காட்டிய நாடகக் குழுக்கள் நடித்து வந்தன. கலையரசு சொர்ணலிங்கத்தின் குழுவினர் ‘உடையார் மிடுக்கு’ நாடகத்தை நடத்தினர்.

இவரது ‘தவறான எண்ணம்’, ‘சங்கிலி’, ‘துரோகிகள்’ முதலிய நாடகங்கள் அரசியல் நாடகங்களாகும். ‘துரோகிகள்’ எனும் நாடகம் ஈழத்தில் இளைஞர் எழுச்சியை 1956ஆம் ஆண்டிலேயே எடுத்துக் கூறியது. ‘புரட்சி’, ‘தேசிய இன விடுதலை’ முதலிய அரசியல் கருத்துக்கள் இந்நாடகத்தில் பேசப்பட்டது. அந்த நாடகம் ‘புலிநாடு’ என்ற நாட்டின் பகுதிக்கும் ‘மந்தை நாடு’ என்ற நாட்டுக்கும் நடைபெற்ற போராட்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

“பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை சிறந்த நாடக ஆசிரியர் என்னும் வகையிலே தான் தமிழிலக்கிய வரலாற்றிலே நிலைத்து நிற்கிறார்” என வித்துவான் க.சொக்கலிங்கம் (சொக்கன்) ‘பைந்தமிழ் வளர்த்த பதின்மர்’ என்னும் நூலில் புகழ்ந்துரைத்துள்ளார்.

“ஈழத்தின் தமிழ் நாடக வளர்ச்சியில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஒரு மைல் கல்லாக மிளிர்கிறார். பேராசிரியரின் நாடகங்கள் இயல்பு நெறியின் பாற்பட்டவையாகும். நவீன உரையாடல் அரங்கினை நன்கு பயன்படுத்தி யாழ்ப்பாணத்தின் சமூக அரசியல் பிரச்சினைகளை அலசிய அவர், ஈழத்துத் தமிழ் மக்களின் பாரம்பரிய நாடக வடிவமான நாட்டுக்கு கூத்துப் பற்றியும் சிரத்தை கொண்டிருந்தார்” என ஈழத்து மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கா. சிவத்தம்பி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

பூஞ்சோலை, வாழக்கையின் விநோதங்கள் முதலிய நாவல்களைப் படைத்து புனைகதைத்துறையிலும் ஈடுபட்டு உள்ளார். ஜெர்மன் நாட்டு நாவலாசிரியர் டோர் கதாம் என்பவர் எழுதிய ‘இம்மென்சே’ என்னும் நாவலைத் தழுவி அமைந்ததே ‘பூஞ்சோலை’ நாவல். பிரெஞ்சு நாவலாசிரியர் அபூ என்பவர் எழுதிய ‘இரட்டையர்’ என்னும் நாவலைத் தழுவி ‘வாழ்க்கையின் விநோதங்கள்’ என்ற நாவலைப் படைத்துள்ளார். இந்த நாவல்கள் தழுவல்களாக அமைந்த போதும், ஈழநாட்டு மாந்தர்களே கதை மாந்தர்களாக அமைந்துள்ளனர். இந்நாவல்களில் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் கற்பனைத் திறன், பாத்திரப் புனைவு, கலையுள்ளம் ஆகியவைகளை அறிய முடிகிறது.

பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் கீழ்க்கண்ட நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாக உள்ளன. இலங்கையில் கண்ணகி வழிபாட்டு வரலாறு, உண்மை அமைதியின் வாஞ்சை (செய்யுள்), தேவியர் பாட்டு (பாளி மொழிபெயர்ப்பு), இயற்கையமைப்பும், பாரதியாரும், பண்டை நாட்களில் இலங்கையும் சீனாவும், செருமனிய நாட்டுச் சிறுவர் கதைகள், நம்பிக்கையுள்ள நாயகன், சங்குபதி (Little Red Riding Hood), தீத்தட்டிக் குடுக்கை (மொழிபெயர்ப்பு), துரோகிகள் (நாடகம்), சுதந்திரம் எங்கே? (நாடகம்), கண்ணகி வழக்குரை.

மேற்கண்ட நூல்களை பதிப்பித்து அச்சில் கொண்டு வர வேண்டியது வரலாற்றுத் தேவையாகும்.

“பல்கலைக்கழப் பேராசிரியர் என்ற முறையிலே பரந்த நோக்கினையும். உரத்த சிந்தனையையும் அவர் என்றும் தூண்டுபவராக விளங்கினார். பாடங்களைக் கற்பிப்பதோடும். விளக்குவதோடும் நின்றுவிடாது புதிய வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைத் தேடத்தூண்டுபவராகவும், புதிய கருத்து வெளியீடுகளின்பால் மாணவர்களை ஆற்றுப்படுத்துபவராகவும் திகழ்ந்தார்’ எனப் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் குறிப்பிடப்பட்டுள்ளது பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் கற்பித்தற் திறனுக்குச் சான்றாக விளங்குகிறது.”

தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியிலும், நாடகங்களின் வளர்ச்சியிலும், தமிழிலக்கிய ஆய்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பாடுபட்ட பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை தமது அறுபத்தைந்தாவது வயதில் 12.05.1968 அன்று இயற்கை எய்தினார்.

- பி.தயாளன்