இமைய மலைத் தொடர்களிலிருந்து பெருக்கெடுத்து வரும் சிந்து நதியின் கரைகளில் தோன்றியது சிந்துவெளி நாகரீகம். கி.மு. ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே சிந்துப் பகுதிகளில் மனித குடியிருப்புக்களுக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன. இவைகள் கிராம குடியிருப்புகள். விவசாய நாகரீகத்தின் தொடக்க நிலை கிராம சமூக கட்டுமானத்தின் அடையாளங்களாக இவைகள் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து கி.மு. ஐந்தாயிரம் தொடங்கி நகர நாகரீகத்திற்கான அடையாளங்கள் தோன்றுகின்றன. சிந்துவின் நகர நாகரீகம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்ட பேரரசு கட்டுமானத்தை நோக்கி நகர்ந்து சென்றதா அல்லது பல அரசுகளைக் கொண்ட நகர நாகரீகமாகவே இறுதி வரை நீடித்திருந்ததா என்பதைக் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. சிந்து நாகரீக மொழியைப் படித்து புரிந்துகொள்ள முடியாததால் இந்த நாகரீகத்தின் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளை மீட்டுருவாக்கம் செய்வதில் பிரச்சனைகளும், சிக்கல்களும் தொடர்கின்றன.

indus valley civilization

சிந்து நாகரீகத்திற்கும், எகிப்து மற்றும் மெசபட்டோமிய நாகரீகங்களுக்கும் கலை, கலாச்சார, வணிகத் தொடர்புகள் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வந்திருக்கிறது. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் மூன்று நாகரீகங்களிலிருந்தும் கிடைக்கின்றன. அன்றைய நகர நாகரீக உலகின் கலைக் கலாச்சார நடவடிக்கைகளில் வலிமையான தாக்கங்களை இந்த மூன்று நாகரீகங்களும் செலுத்தியிருக்கின்றன. அதன் வழி இன்றைய நவீன மேற்கத்திய கலை செயல்பாடுகளின் ஆணி வேராக இருப்பவைகள் இந்த மூன்று நாகரீகங்களே. இந்த மூன்று நாகரீகங்களில் எது முதன் முதலில் நகர நாகரீகத்தைத் தொடங்கி அதன் வழி வரலாற்று உலக கலை நடவடிக்கைகளை முதலில் தொடங்கியது என்பதே இன்றைய ஆராய்ச்சிகளின் ஆயிரம் பொற்காசுகள் தரும் கேள்விக்கான பதில் தேடலாக இருக்கிறது.

சிந்து நாகரீக கலை வரலாறு

மெசபட்டோமிய மற்றும் எகிப்திய நாகரீகங்களின் குனிபார்ம் எழுத்து முறையும், ஹைகிலோகிரிப் எழுத்து முறையும் இன்றைய ஆராய்ச்சியாளர்களால் படிக்கப்பட்டு இந்த இரண்டு நாகரீகங்களின் ஏழாயிரம் ஆண்டு கால வரலாறு வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இந்த அதிர்ஷ்டம் இன்று வரை சிந்து நாகரீகத்திற்கு கிடைக்கவில்லை. சிந்து நாகரீகத்தின் எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்களால் படிக்க முடியவில்லை. இதன் காரணமாக சிந்து நாகரீகத்தின் ஏழாயிரம் ஆண்டுகால வரலாறானது இன்னமும் மறைபொருளாகவே இருந்து வருகிறது.

இந்தப் பின்னணியிலேயே சிந்து நாகரீகத்தின் கலைகளும் அணுகப்பட வேண்டியிருக்கிறது. சிந்து நாகரீகத்தின் சமகால நாகரீகங்களான மெசபட்டோமியாவும், எகிப்தும் தங்கள் கலைகளின் பேசுபொருள்களாக அரசன் மற்றும் மதக் கோட்பாடுகளை கொண்டிருக்க, சிந்து நாகரீகக் கலைகள் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. உதாரணமாக மெசபட்டோமிய, எகிப்திய கட்டிடக் கலைகள் அரசனின் அரண்மனைகள் மற்றும் கோயில்களை அடிப்படையாக கொண்டிருக்க சிந்து நாகரீக கட்டிடக் கலை சமூகம் சார்ந்த பொதுவான கட்டிடங்களையே – நகரின் மையத்திலிருக்கும் தானிய சேமிப்புக் கிடங்கு, பொது குளங்கள், சாமானிய மனிதர்களின் வீடுகள் என்று - சார்ந்திருக்கிறது. சிந்து நாகரீக அகழ்வாராய்ச்சிகள் ஆமை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருப்பதால் அதன் கலை வரலாற்றை அறிமுக அளவில் பார்ப்பது கூட கடினமான, அதே சமயத்தில் அரையும் குறையுமான காரியமாக முடிந்துவிடலாம். கி.மு. 6000-த்திலிருந்து தொடங்கும் சிந்து நாகரீகம் அதிகம் தென்னிந்திய மக்களுடன் தொடர்புடையது என்றாலும் சிந்து குறித்த பதிவுகள் சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் கிடைக்கப் பெறவில்லை. இருந்தும் சிந்து நாகரீக மொழியைப் படித்துப் புரிந்துகொள்ள தமிழ் மொழி ஆராய்ச்சி முக்கியம் என்பது இப்போதைய நிலை. சிந்து நாகரீக காலகட்டத்தை இரண்டு நிலைகளில் பிரிக்கிறார்கள். ஒன்று பழைய காலகட்டம் (கி.மு. 6000 – 2500), அடுத்தது முதிர்ந்த காலகட்டம் (கி.மு. 2400 – 1500).

இதுவரையிலான அகழ்வாராய்ச்சிகள் இரண்டு காலகட்டத்தை சேர்ந்த கலைப் பொருட்களையும் ஒரே அடுக்கில் (மண் அடுக்கு) வெளிக்கொண்டு வந்திருப்பதால் சிந்து நாகரீகக் கலைகளின் பாணியையும் வளர்ச்சியையும் அடையாளப்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது. சிந்து நாகரீக எழுத்துக்களும் இதில் நமக்கு உதவிக்கு வராத காரணத்தால் சிந்து நாகரீக வரலாறும் கலைகளும் இன்னமும் இருளிலேயே மூழ்கியிருக்கிறது.

சிற்பக் கலை

சிந்து நாகரீக முத்திரை சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவைகள். தொல்பழங்கால வரலாற்றுச் சின்னமாக, கலை வரலாற்று நோக்கில் சிந்து முத்திரை சிற்பங்கள் எதை உணர்த்துக்கின்றன என்பது இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே நின்று கொண்டிருக்கிறது. சிந்து நாகரீக கடவுள் கோட்பாடுகள் குறித்து தெளிவாக தெரியாததால் முத்திரை சிற்பங்கள் எத்தகைய சமூக சிந்தனையை வெளிப்படுத்துகின்றன என்பது புரிபடாத நிலை. பொதுவான கலைப் பாணியின் அடிப்படையில் பார்ப்பது என்றால், முத்திரை சிற்பங்கள் அப்ஸ்டிராக்ட் சிம்பாலிச கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன என்கிற முடிவிற்கு வர முடியும். முத்திரை சிற்பங்களில் மிருகங்களே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒரு சில முத்திரைகள் மட்டும் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு மனித உருவத்தை சித்தரிக்கின்றன. இந்த உருவம் தலையில் எருதின் கொம்புகளால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்திருக்கிறது. தொல் தமிழர்களின் கடவுளான உருத்திரனை (சிவன்) இந்த உருவம் சித்தரிக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

sivan sculpture

(தொல் தமிழ் கடவுள் உருத்திரன் (சிவன்). முத்திரை சிற்பம்)

அப்ஸ்டிராக்ட் சிம்பாலிசமும், ரியலிசமும் கலந்த பாணியில் இந்த முத்திரையில் உருத்திரன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். அவனைச் சுற்றி மான், எருமை, புலி, யானை மற்றும் காண்டாமிருகமும் இதே வகையிலேயே காட்டப்பட்டிருக்கிறது. மேல் பகுதியில் சிந்து எழுத்துக்கள் ஆறு பொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன என்பது புரிபடாத காரணத்தால் இந்த சிற்பத்தில் இருக்கும் உருவங்கள் எதை விளக்குகின்றன என்பதை அடையாளம் காண முடியவில்லை.

முழு உருவ சிற்பங்களை எடுத்துக்கொண்டால் வெண்கலத்தில் வார்க்கப்பட்ட சிற்பங்கள் சிந்து நாகரீகத்தின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. வெண்கல நடனமங்கையின் சிற்பம் இதற்கு எடுத்துக்காட்டு. இந்த சிற்பம் முதிர்ந்த காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.

dancing lady sculpture

(வெண்கல நடனமங்கை வார்ப்பு சிற்பம். கி.மு. 2400 – 1500)

சிற்பக் கலையில் கான்டிரப்போஸ்டோ என்று அழைக்கப்படும் உத்தியை வெளிப்படுத்தும் உலகின் முதல் சிற்பம் இது என்று சொல்வதில் தவறு இருக்க வாய்ப்பில்லை. (கான்டிரப்போஸ்டோ என்பது ஒரு முழு உருவ சிற்பம் நிற்கும் நிலையைக் குறிப்பது. சிலையானது ஒரு காலில் உடலின் முழு எடையையும் தாங்கியபடி நின்றுகொண்டு மற்றொரு காலை தளர்ந்த நிலையில் லேசாக வைத்துக்கொள்வதை கான்டிரப்போஸ்டோ என்பார்கள். இந்த நிலையில் நிற்கும்போது உடல் எடையை தாங்கும் கால் பகுதி உடல் இடுப்பிற்கு கீழே விரைத்து மேலேழுந்தும் மேல் பகுதி சுருங்கி கீழிரங்கியும் இருக்கும். தளர்ந்திருக்கும் கால் பகுதி உடல்கள் அங்கங்கள் முழுவதும் தளர்ந்து நீண்டு மேலேழுந்து இருக்கும். ஆர்காயிக் கால கிரேக்க சிற்பிகளே கான்டிரப்போஸ்டோ உத்தியை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்கள் என்று சொல்பவர்களும் உண்டு.) இந்த நிலையிலிருக்கும் சிற்பங்கள் ரியலிசத் தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

contrapposto model

(கான்டிரப்போஸ்டோ உத்தியை விளக்கும் மாதிரி வரைபடம்)

சிந்து நாகரீக நடனமங்கை சிற்பத்திற்கு ஒருவித ரியலிசத் தன்மையை உண்டாக்குவது இந்த கான்டிரப்போஸ்டோ உத்தியே. சிலை ஏசிமெட்டிரிக் பேலன்சில் வடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த நடனமங்கை தலையை கொஞ்சமாக உயர்த்தி வலது புறமாக சற்றே சாய்த்திருக்கிறாள். இதுவும் இந்த சிற்பத்தின் தனிச் சிறப்புகளில் ஒன்று. சிற்பங்களின் போசிங் மற்றும் கம்போசிஷனில் சிந்து நாகரீக சிற்ப கலைஞர்கள் பல சாதனை மற்றும் சோதனை முயற்சிகளை செய்து பார்த்துவிட்டார்கள் என்பதற்கு நடனமங்கை சிற்பம் அருமையான உதாரணம். சிந்து நாகரீக வீழ்ச்சிக்குப் பிறகு சுமார் ஆயிரத்து ஐந்நூறு வருடங்கள் கழித்து வந்த கிரேக்க சிற்பக் கலைஞர்களே சிற்பக் கலையில் இத்தகைய போசிங் மற்றும் கம்போசிஷன் உத்திகளை அறிமுகப்படுத்தியதாக சொல்லப்பட்டு வருகிறது. சிந்து நாகரீகம் குறித்த அகழ்வாராய்ச்சிகள் தூங்கி வழிவதன் காரணமாக சிந்து நாகரீக சிற்பக் கலைஞர்களின் சிறப்புகளையும் சாதனைகளையும் உலக அரங்கில் வலிமையாக எடுத்து வைப்பதற்கு வழியில்லாமல் இருக்கிறது.

இந்த நடனமங்கை இடது கை முழுவதும் அணிந்திருக்கும் வளையல்களும், அவளுடைய கூந்தல் அலங்காரமும் பார்ப்பவர்களின் கண்களை முதலில் கவரக் கூடியவைகள். இந்த நடனமங்கையின் முகத் தோற்றம் தென்னிந்திய பெண்களின் முகத்தை ஒத்திருப்பதாக மார்ட்டிமர் வீலர் கருதுகிறார்.

கல்லில் செதுக்கப்பட்ட முழு உருவ சிலை ஒன்றும் கிடைத்திருக்கிறது. ஆனால் முழுமையான தோற்றத்துடன் அல்ல. டார்சோ என்று சொல்லப்படும் தலை, கை, கால் அற்ற உடல் பகுதி மட்டுமே கிடைத்திருக்கிறது. இது ஆண் நடனக் கலைஞனை சித்தரிக்கும் சிலையாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

sindu male sculpture

(ஆண் நடன கலைஞன் கல் சிற்பம். கி.மு. 2400 – 1500)

சிந்து சிற்பக் கலைஞர்கள் தாங்கள் வடித்த சிற்பங்களில் ரியலிச மற்றும் நேச்சுரலிச பாணிகளை சர்வ சாதாரணமாக கையாண்டிருக்கிறார்கள் என்பதற்கான அச்சாரம் இந்த நடன கலைஞனின் சிற்பம். இது சிமெட்டிரிக்கல் பேலன்சில் வடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உடல் கூறுகளும் (அனாட்டமி) அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கலைஞன் தசைகள் முறுக்கேறிய உடல் அமைப்பை கொண்டிருக்கவில்லை. அதே சமயத்தில் சதைப்பிடித்த வலிமையான இளந்தொப்பையுடன் கூடிய உடற்கட்டுடன் காட்டப்பட்டிருக்கிறார். எகிப்திய மெசபட்டோமிய சிற்பிகள் மனித உடற் கூற்றை மெலிதாகவும் முறுக்கேறிய தசைகளுடன் காட்டுவதில் அதிக கவனம் செலுத்த, சிந்து சிற்பிகள் அதிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டு எதார்த்த மனித உடற் கூற்றை சித்தரிக்கிறார்கள். எகிப்திய மெசபட்டோமிய சிற்பிகள் அழியும் உடலுக்கு வீர காவியத் தன்மையை தர, சிந்து சிற்பிகள் அழியும் உடலை அதன் எதார்த்தத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சில எகிப்திய பாரோக்களின் சிற்பங்களும் இதே எதார்த்த தன்மையுடன் வடிக்கப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

- நவீனா அலெக்சாண்டர்