துட்டகாமணிக்குப்பின் அவனது தம்பி சதாதீச 18 ஆண்டுகள் ஆண்டான். அதன்பின் சதாதீசவின் மகன்கள் தூலதன, லஞ்சதீச, கல்லாதநாக ஆகியோர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆண்டனர். கல்லாதநாகவை அவன் படைத்தளபதி கொன்றான். ஆனால் படைத்தளபதியின் தம்பி வட்டகாமணி தனது தமையனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அதன்பின் ஏழு தமிழர்கள் படையுடன் வந்து அரசனை வென்று 14 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டனர். மறைந்து வாழ்ந்த வட்டகாமணி மீண்டும் படையோடு வந்து இறுதியில் ஆண்ட தமிழனை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். அதன்பின் அவன் 12 ஆண்டுகள் ஆண்டான். இவன் காலத்தில்தான் வாய்மொழியாக இருந்து வந்த திரிபிடகங்களும், அத்தகதாவும் நூல்களாக ஆக்கப்பட்டன என மகாவம்சம் குறிப்பிடுகிறது.

 Asoka the Buddhist Emperor of Indiaஅதன்பின் மகாசூளி மகாதீச என்பவன் 14 ஆண்டுகள் நன்முறையில் ஆண்டான். மகாவம்சக் கணக்குப்படி கிறித்து சகாப்தத்திற்கு முன் கடைசியில் ஆண்ட அரசன் இவன்தான் ஆவான். அதன்பின் கொரநாக முதல் சுபராஜா வரை 18 அரசர்கள் 127 ஆண்டுகள் ஆண்டனர் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. இதன்பின் வசப என்பவன் 44 ஆண்டுகள் ஆண்டான். இந்த வசப என்பவனின் ஆட்சிக்கு முந்தைய மகாவம்ச வரலாற்றை புகழ்மிக்க வரலாற்றுப் பேராசிரியர் வின்சென்ட் சுமித் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வசபவுக்குப்பின் வந்தவன் 3 வருடங்கள் மட்டுமே ஆண்டான். அதற்குப்பின் வந்தவன் தான் சிலப்பதிகாரம் சொல்லும் கயவாகு எனப்படும் கயவாகு காமணி ஆவான். அவன் புத்த சகாப்தத்திற்குப்பின் 654-676 வரை 22 ஆண்டுகள் ஆண்டதாக (கி.பி.171-193) மகாவம்சம் குறிப்பிடுகிறது.

 விஜய் அரசனின் ஆட்சி புத்த சகாப்தத்தில் இருந்துதான் தொடங்குவதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. புத்த சகாப்தம் என்பது புத்தர் இறந்தபின் தொடங்கும் சகாப்தம் ஆகும். கயவாகுகாமணிக்குப் பின் மகாசேன வரை 15 அரசர்கள் 159 ஆண்டுகள் ஆண்டதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. கடைசி அரசன் மகாசேன 27 ஆண்டுகள் ஆண்டான். இவை அனைத்தும் கடைசி 33-37(5) அத்தியாயங்களில் சொல்லப்படுகிறது. மகாவம்சம் கி.பி. 352 வரை மட்டுமே பேசுகிறது. மகாவம்சத்தை எழுதிய மகாநாமா கி.பி 6ஆம் நூற்றாண்டில் இதை எழுதியிருந்த போதிலும் தீபவம்சத்தில் சொல்லப்பட்ட காலம் வரை மட்டுமே பதிவு செய்துள்ளார். புத்த சகாப்தம் என்பது கி.மு. 483இல் தொடங்குகிறது. புத்த சகாப்த காலம் முதல் 835 வருடம் வரையான 61 அரசர்கள் குறித்து மகாவம்சம் பேசுகிறது(கி.மு.483-கி.பி.352). இதில் வசப அரசனுக்கு முன் வரையான 607 வருட கால வரலாற்றை (கி.பி.124வரை) வரலாற்றுப் பேராசிரியர் வின்சென்ட் சுமித் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இலங்கையின் பொய்க்கதைகள் - வின்சென்ட் சுமித்:

 இலங்கைக் கதையின் படி அசோகர் தனது 99 சகோதரர்களைக் கொன்றபின் ஆட்சிக்கு வந்தது பொய்யான தகவல் எனவும், பௌத்தவராக மாறுவதற்குமுன் அசோகர் தீயவராகவும், கொடூரமானவராகவும் இருந்தார் என்று சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை எனவும் வின்சென்ட் சுமித் கூறுகிறார்(1). பாறை ஆணை-2, மன்னர் ஆண்டியோகாஸ் பற்றியும், மற்ற கிரேக்கப் பகுதி நாடுகள் பற்றியும், சேர, சோழ, பாண்டியர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. இப்பகுதிகளுக்கெல்லாம் தூதுக் குழுக்கள் பௌத்த சமயப் பணிக்கு அனுப்பப்பட்டன(2).

 ஆனால் அசோகர் எந்தெந்த நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பினார் என்பது குறித்த இலங்கை புத்த பிட்சுகளால் எழுதப்பட்ட குறிப்புகளில் கிரேக்கம் சார்ந்த நாடுகளும், தமிழர்களின் நாடுகளும் விடப்பட்டுள்ளன. தமிழ் வழங்கும் பகுதியில் உள்ள நாடுகள் விடுபட்டதற்கு சிங்களர்களுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் இடையே இருந்த பகைமை உணர்ச்சியே காரணம். தாங்கள் வெறுக்கும் தமிழர்களிடமிருந்து பவுத்தம் இலங்கைக்கு வந்தது என்பதைக் கூறிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. தமிழர்கள் அரசாண்ட தென்பகுதி நாடுகளுக்கு அசோகர் சமயத் தூதர்களை அனுப்பினார் என்பதில் சந்தேகப்பட இடமில்லை-(3).

 அசோகரின் ஆணைகள் (Edicts) இலங்கையைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. ஆகவே அந்தத் தீவில் பேசப்படும் கதைகளுக்கு அசோகரின் ஆணைகளைச் சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது. இலங்கைக் கதைகள் வரலாற்றை அறிந்து கொள்ள நம்பகத்தன்மை உள்ளவையாக இல்லை. அசோகரின் மகள் எனக் கருதப்படும் சங்கமித்ரா பற்றிக் கல்வெட்டுகளில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அது போன்ற மகள் இருந்தாள் என்பதும் சந்தேகத்துக்குரியது. அசோகனின் சகோதரர் தான் மகேந்தரர். அவர் ஓர் உண்மையான பாத்திரம். ஆனால் அவர் அசோகனின் மகனல்ல. சீனப் பயணிகளின் குறிப்புகளின்படி தமிழ் நாட்டில் இருந்து தான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின-(4).

 தென்னிந்தியக் கல்வெட்டுகள் (South Indian Inscription) என்கிற 27 தொகுதிகளை மிகக் கவனமாக தொகுத்தளித்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கூல்ட்ச் (Hultzsch) என்பவர், முதலாம் கயவாகு மன்னனும், சேர மன்னன் செங்குட்டுவனும் ஒரே காலத்தவர் என்கிற கருத்தை ஏற்கத் தயங்கினார் எனவும், சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த ஈழ மன்னன் கயவாகு மகாவம்சத்தில் கூறப்படும் முதலாம் கயவாகு தான் என்று முதன்முதலில் கருதப்பட்டபோது கூல்ட்ச் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “வேறு பல காரணங்களும் காட்டப்பட்டு, ஈழ நாட்டு வரலாற்றின் கால வரையறை மேலும் நன்கு ஆராயப்பட்டால் அன்றி இக்கருத்தை ஏற்க முடியாது” என அவர் கூறியுள்ளார்(5).

இலங்கையில் தமிழர் - கா.இந்திரபாலா:

 தீபவம்ச நூல் அநுராதபுரத்தில் ஆட்சி செய்த முதல் தமிழ் மன்னர்களாகச் சொல்லும் சேன, குத்தக ஆகிய இரு சகோதரர்களையும் வெளியிலிருந்து வந்தவர்களாகக் கூறவில்லை. ஆனால் அவர்கள் வெளியிலிருந்த வந்தவர்களாக மகாவம்சம் குறிப்பிடுகிறது(6). அதுபோன்றே எலார மன்னன் குறித்து “எலார என்ற பெயருடைய சத்திரியன் அசேலனை வெற்றி கொண்டு 44 ஆண்டுகள் அற வழியில் ஆட்சி நடத்தினான்” என தீபவம்சம் குறிப்பிடுகிறது(7). ஆனால் மகாவம்சம் அவன் சோழ நாட்டிலிருந்து இங்கு வந்தவன் என்கிறது.

 தெற்கு இலங்கையில் மகாகாம என்ற இடத்தில் தோன்றிய குறுநில அரசு படிப்படியாகத் தன் ஆதிக்கத்தைப் பரப்பிப் பல குறுநில அரசுகளை வெற்றி கொண்டு அநுராதபுரத்தை நோக்கிப் படர்ந்தது. இதன் அரசனாகிய காமணி அபய என்பவன் குறுநிலத் தலைவர்களைத் தோற்கடித்து இறுதியில் அநுராதபுரத்தையும் கைப்பற்றினான். இந்த வரலாறு பிற்காலத்தில் ஒரு காவியமாக ஆக்கப்பட்டது. அக்காவியம் மகாவம்ச நூலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அக்காவிய விபரங்கள் பலவற்றை வரலாற்று உண்மையாக எடுத்துக் கொள்ள முடியாது…… எல்லாளைனைத் தமிழ்ப் பகைவன் என்பதற்காகவோ, பௌத்தனல்லாதவன் என்பதற்காகவோ காமணி அபய எதிர்த்துப் போராடவில்லை. அரசியல் நோக்குடன் ஆதிக்கம் பெறுவதற்காக காமணி இப்போரை நடத்தினான். எல்லாளனுடைய குடிகள் தம் மன்னன் மீது கொண்டிருந்த மதிப்பை காமணியும் எல்லாளன் மீது கொண்டிருந்தான் என்பதை எல்லாளன் இறந்த போது காமணி எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. எல்லாளன் இறந்த இடத்தில் ஒரு சைத்தியம் எழுப்பி அதனை மக்கள் வழிபடவேண்டும் என காமணி பணித்தான். கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் சிங்கள மக்கள் அதனை வழிபட்டு வந்தனர்(8). இவை இந்திரபாலா கூறும் தரவுகள் ஆகும்.

மாகாவம்சமும் வரலாறும்:

 வரலாற்று ஆசிரியர்களான வின்சென்ட் சுமித், கூல்ட்ச், இந்திரபாலா ஆகியோர் கூறுவதிலிருந்தும், மகாவம்ச நூலை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆய்வதிலிருந்தும் மகாவம்சம் ஒரு வரலாற்று நூல் அல்ல என்ற தெளிவு உறுதியாகிறது. எல்லாளன் போன்றவர்களை தீபவம்சம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாகச் சொல்லவில்லை. ஆனால் மகாவம்சம் திட்டமிட்டு அவர்களைத் தமிழகத்தில் இருந்து படையெடுத்து வந்தவர்களாகச் சித்தரிக்கிறது. தமிழகத்தில் இருந்துதான் பௌத்தமதம் இலங்கைக்குப் பரவியது. அசோகர் கல்வெட்டில் தமிழகத்தின் தாமிரபரணி நதி வரையிலும் உள்ள நாடுகள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளதே தவிர இலங்கை குறிப்பிடப் படவில்லை. இலங்கையின் வடமேற்குப் பகுதியில் இருந்த பொம்பரிப்பு அகழாய்வுப் பகுதியின் அருகில்தான் பண்டைய தம்பப்பண்ணி நகரம் இருந்துள்ளது. இலங்கையின் முதல் நாகரிகம் அங்குதான் உருவாகியது. இதனை ஆண்டவர்கள் பண்டு குடும்பத்தினர் எனவும் தம்பப்பண்ணியின் அதிகாரபீடம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் அநுராதபுரத்துக்கு மாறியது எனவும் பழைய பாலி நூல்கள் தெரிவிக்கின்றன. பாலி மொழியில் பாண்டியர் என்ற பெயர் பண்டு என வழங்கப்பட்டது(9). ஆகவே பாண்டியர்களின் கிளை அரசுகள்தான் தம்பப்பண்ணியை ஆண்டன எனலாம். மகாவம்சம் குறிப்பிடும் பாண்டுவாசுதேவ, பாண்டுகாபய முதலிய அரசபெயர்கள் பாண்டியர் குடும்ப அரசர்களையே குறித்தது எனலாம்.

 மகாவம்சத்தில் சொல்லப்படும் பல விடயங்களைப் பொய்க்கதைகள் எனவும் அபத்தங்கள் எனவும் தமிழர் வெறுப்பு அதில் புதைந்துள்ளது எனவும் வரலாற்றுப் பேராசிரியர் வின்சென்ட் சுமித் குறிப்பிடுகிறார். இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் ஒரே பகுதியாக இருந்தது. இரு பகுதியிலும் 7000 ஆண்டுகளுக்கு முன் ஒரேவித இனக்குழு மக்களே வாழ்ந்தனர். தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற தென்பகுதியிலிருந்து ஆதி இரும்புக்காலப் பண்பாடு இலங்கையின் வடமேற்குக்கரையில் இருந்த பொம்பரிப்புப் பகுதிக்குப்பரவி அதன்பின்னர் அப்பண்பாடு அநுராதபுரம் போன்ற உள்நாட்டுப் பகுதிக்குப் பரவியது. பொம்பரிப்புப் பகுதி இரும்புப் பண்பாடு அநுராதபுரத்திற்கு காலத்தால் முந்தியது என இலங்கை தொல்லியலாளர் செனவிரத்ன போன்றவர்கள் கருதுவது இதனை உறுதி செய்கிறது(10). ஆதிச்சநல்லூர் பொம்பரிப்புக்கு முந்தியது.

 கி.மு. 5ஆம் நூற்றாண்டு வாக்கில் பிராகிருதம் இந்தியாவின் பொது வணிக மொழியாக ஆகியிருந்தது. அதன்பின் சமண, பௌத்த, ஆசிவக மதங்களுக்கும் அது பொதுமொழியாக ஆனது. இலங்கையின் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு பகுதிகளில் தமிழ் இனக்குழுக்குள் வலிமைபெற்று அங்கு தமிழ் அப்பகுதிமக்களின் மொழியாக ஆனபொழுது இலங்கையின் தெற்கிலும், மத்திய பகுதியிலும் வளர்ச்சியடையாத இனக்குழுக்களே இருந்தன. அதன்பின் அப்பகுதியில் வடஇந்திய வணிகர்கள் பிராகிருதத்தைக் கொண்டு வந்தனர். இதன் காரணமாக அங்கு பிராகிருதம் மேல்மக்களின் மொழியாக ஆனது. அதன்பின் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் பரவிய பௌத்தமதம் பாலி மொழியை அங்கு அறிமுகப்படுத்தியது. உள்ளூர் இனக்குழு மொழிகளும் பிராகிருத, பாலி, தமிழ் மொழிகளும் இணைந்து கி.பி. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் சிங்கள மொழி உருவாகியது. புத்தமதம் இலங்கையில் பரவத் தொடங்கிய 1000 ஆண்டுகள் கழித்துத்தான் சிங்கள மொழி உருவாகியது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

மாகாவம்ச புனைவும் புத்த பிக்குகளும்:

 Ilangkaiyil Thamizar Indrapala 2006வங்கநாட்டு அரசனுக்கும் கலிங்கநாட்டு அரசிக்கும் பிறந்த பெண், சிங்கத்தோடு உடலுறவு கொண்டு பெற்றெடுத்த இரட்டையர்களான ஆணும் பெண்ணும் மணந்து கொண்டதன் விளைவாக உருவான விஜய், பாண்டிய இளவரசியை மணந்து புத்த சகாப்த ஆண்டில் இலங்கையின் முதல் சிங்கள அரசனாக ஆகிறான் என்கிற புனைகதை புத்த பிக்குகளால் காவிய நயத்தோடு படைக்கப் பட்டுள்ளது எனில் அது மிகையாகாது. பாண்டுகாபய காலத்தில் இலங்கையில் புத்தமதம் இருக்கவில்லை. அரசன் தேவநாம்பிய தீச போன்றவர்களே கற்பனைப் பாத்திரம் எனத்தான் கருத வேண்டியுள்ளது. அதனால்தான் இவனது வரலாறு குறித்த 10 அத்தியாயங்களையும் அபத்தங்களால் முடையப்பட்டவை என விசென்ட் சுமித் குறிப்பிட்டுள்ளார். அவர் வசப அரசனுக்கு முன் வரையான மகாவம்ச வரலாற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. துட்ட காமணி காலத்தில்தான் தெற்கே இருந்த இனக்குழு வளர்ந்து அநுராதபுரம்வரை தன் ஆதிக்கத்தை பரப்பியது எனலாம். அதற்கு முன்வரை தம்பப்பண்ணி, அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் பாண்டியர்களின் கிளை அரசர்களான பண்டு குடும்பத்தினரும் பிற தமிழ் சிற்றரசர்களும்தான் ஆண்டுவந்தனர் எனலாம்.

 துட்டகாமணி தெற்கேயிருந்து அநுராதபுரம்வரை படையெடுத்தான். அதற்கு வடக்காக அவன் தன் ஆதிக்கத்தைப் பரப்பவில்லை. அநுராதபுரம் வரையான தனது ஆதிக்கத்தை பரப்புவதற்கு அவன் 32 தமிழ் அரசர்களை வெல்ல வேண்டியிருந்தது. மகாகங்க நதியைத் தாண்டியவுடன் அவன் மகியங்கண என்ற இடத்தில் சந்தித்தது சத்த என்ற ஒரு தமிழ் அரசனைத்தான். அதன்பின் அநுராதபுரம்வரை 32 தமிழ் அரசர்களை வென்றுதான் இறுதியில் அநுராதபுர அரசன் எல்லாளனை வெல்லுகிறான். பலூக வடக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் ஆண்ட தமிழ் அரசன் எனலாம். ஆதலால் துட்டகாமணி அநுராதபுரத்தை ஆண்டபோதுகூட யாழ்ப்பாணமும் பிற வடக்கு, வட கிழக்குப் பகுதிகளும் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டு வந்தன. துட்டகாமணியின் காலம் வரை இலங்கையின் வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, மத்தியப் பகுதிகள் ஆகிய அனைத்தும் தமிழ் அரசர்களாலேயே ஆளப்பட்டு வந்தன. முறையான தொல்லியல் ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்தும் எனலாம். துட்டகாமணி காலம்வரை தென்னிலங்கைப் பகுதியில் மட்டுமே தமிழர் அல்லாத ஆட்சிப் பகுதி இருந்து வந்தது. மகாவம்ச ஆசிரியருக்கு பௌத்த வரலாற்றை, சிங்கள வரலாற்றை இலங்கையின் வரலாறாகக் காட்ட வேண்டிய தேவை இருந்ததனால் மகாவம்சம் தமிழ் அரசுகள் குறித்துப் பேசவில்லை

 தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்களை எழுதிய புத்த பிக்குகள் பௌத்த மதத்தைப் பரப்பவும், அதனை வலிமைப்படுத்தவும் விரும்பினர். மகாவம்சம் தமிழகத்தில் பக்தி காலகட்டம் தோன்றியபொழுது எழுதப்பட்டதாகும். அப்பொழுது சைவ வைணவ மதங்களால் சமண, பௌத்த மதங்கள் தமிழகத்தில் அழிவுக்குள்ளாகிக் கொண்டிருந்தன. இலங்கையில் பௌத்த மதத்திற்கு அந்நிலை ஏற்படக்கூடாது என புத்த பிக்குகள் விரும்பினர். அப்பொழுது இலங்கையில் சிங்கள் மக்கள் தங்களது சிங்கள மொழியை உருவாக்கித் தங்களது இனத்தை, தங்களது தனித்துவத்தை வெளிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

 அதனை நன்கு உணர்ந்து கொண்ட புத்த பிக்குகள் சிங்கள மக்களையும் பௌத்தத்தையும் ஒன்றிணைத்து தமிழர்களை அவர்களுக்கு எதிரானவர்களாகக் காட்டுவதன்மூலம் பௌத்தத்தைக் காப்பாற்ற முடியும் எனக் கருதினர். அதன் விளைவால் தமிழர் எதிர்ப்புக் கண்ணோட்டம் மகாவம்ச நூலில் விதைக்கப்பட்டது என்பதோடு சிங்களர்கள் தனித்துவமானவர்கள், அவர்களே இலங்கையின் வரலாற்றுக்கும் நாகரிகத்துக்கும் உரிமையானவர்கள், அவர்கள் வட இந்திய மக்களின் வாரிசுகள், பௌத்த மதத்திற்காகவே புத்தர் இலங்கையை புனிதமய மாக்கினார், தமிழர்கள் அந்நியர்கள், அகற்றப்பட வேண்டியவர்கள் போன்ற பல விடயங்கள் திட்டமிட்டு புகுத்தப்பட்டது எனலாம். இதே கருத்தில் பிற்காலத்த பிக்குகளும் அதில் பல இடைச்செருகல்களைச் செய்திருக்க நிறைய வாய்ப்புள்ளது. இன்று சிங்கள பௌத்தர்களுக்கு மகாவம்சம் ஒரு புனித நூலாக உள்ளது. மகாவம்ச நூலில் உள்ள சிங்களப்புனைவு வரலாறும், பௌத்த மத விடயங்களும், தமிழர் எதிர்ப்பும் அவர்களைப் பரவசம் கொள்ளச் செய்கிறது. இவை அனைத்தும் இணைந்து மாகாவம்ச நூல் இன்றுவரை சிங்கள பௌத்தப் பேரினவாதத்திற்கான அடிப்படையாக இருந்து வருகிறது எனலாம்.

சிங்களமயமாகிய தமிழர்கள்:

 சிங்களர்கள் கலப்புத் திருமணத்தை வரவேற்பவர்கள். சிங்கள ஜனத்தொகையைப் பெருக்குவதற்கு இது ஒரு வழியாக இருக்கலாம். சான்றாக பாணந்துறையிலிருந்து காலிவரை செறிந்து வாழும் சிங்களர் சலாகம சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 14ஆம் நூற்றாண்டில் இலங்கை வந்த சேரர் தமிழர். அவர்கள் சிங்களப் பெண்களை மணந்து சிங்களரானார்கள். அவ்வாறே துறவா சாதியாரும் சேரர் வழி வந்தவர்களே ஆவர். கண்டியை அரசாண்ட நாயக்கர்களும் மலைநாட்டுச் சிங்களருடன் கரைந்து போனார்கள். சிலாபம் தொடக்கம் வத்தளை வரையிலும் வாழ்ந்த கத்தோலிக்கத் தமிழ் மீனவர்களும் கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் சிங்களமயமானார்கள். இலங்கை பௌத்தருடைய தேசியம் மகாவம்ச காலத்திலிருந்து வளர்க்கப்பட்டுள்ளது. அதனைப் பிக்குகள் மிகச் சாதுர்யமாக பௌத்தச் சிங்கள தேசியமாக மாற்றுவதில் வெற்றி பெற்றனர். பௌத்தச் சிங்கள தேசியம் பிற இன மக்கள் தனது தேசியத்திற்குள் கரைந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஈழத்தமிழர்கள் அதனைப் புரிந்துகொள்ள மிக நீண்ட காலம் ஆகியது. இலங்கையில் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிர்வினையாக 1950க்குப்பின்தான் தமிழர் தேசியம் தோன்றியது. அதுவரை தமிழர் தேசியம் இலங்கையில் இருக்கவில்லை.

இந்தியத் தமிழர்கள் - எஸ்.பொ:

 இந்தியா என்பது பிரித்தானியரின் சிருட்டி. அடிமைகளைக்குறி சுட ஒரு வசதியான முத்திரை. சுதந்திரம் என்கிற பெயரால் ஒரு தந்திரம் நிகழ்ந்தது. அதிகாரம் கைமாறியது. பிரித்தானியருடைய கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு புதிய அதிகார வர்க்கம் தேசியம் என்கிற பெயரால், இந்தியப் பாமர மக்களின் தனித்துவ அடையாளங்களை நிராகரித்து வெற்றி சாதித்துள்ளது. இந்தியத் துணைகண்டத்தின் குடிமக்களாக இணைக்கப்பட்டுள்ள அனைத்துச் சிறுபான்மைகளின் தனித்துவமான மொழி சார்ந்த தேசிய வரலாறுகளையும், மரபுகளையும், உணர்வுகளையும் சிரத்தையிலே எடுத்துப் புதிய சமூகக் கட்டமைப்பினைத் தோற்றுவிக்கும் ஆளுமைகள் இன்று இல்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் தமது இனத்துவ அடையாளங்களைத் தொலைத்து, தமிழ் முகத்தை இழந்து, தமிழ் இந்தியர்களாக மாறியுள்ளனர். அன்று உழைப்புக்கூலிகளாக வெளிநாடுகளுக்குத் தமிழர்கள் ஓடினார்கள். இன்று மூளைக்கூலிகளாகத் தமிழ் இந்தியர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழ் முகங்களை இழந்தவர்கள்.

தமிழ் ஈழம் - எஸ்.பொ:

 வன்னியிலே இனச்சங்காரப் படுகொலைகள் நடந்தபோது உலகின் மனச்சாட்சிகளும், மனித நேயமும் மௌனித்தன. பொருளாதார வல்லரசு நாடுகளும், மார்க்சிய வேதம்பேசித் தம்மை வல்லரசுகளாக நிலைநாட்டிக்கொண்ட நாடுகளும், சத்தியமேவ ஜெயதே என காந்திய வேதம் பேசிய இந்தியாவும் வன்னியிலே நடைபெற்ற இனச்சங்காரம் மனித நேயத்தின் இன்னொரு வடிவமே என்று ஐக்கிய நாடுகள் சபையிலே சிங்கள இனவெறிக்கு ஆதரவு நல்கின. தமிழ் ஈழர் சர்வதேச அரங்கிலே அநாதைகளாக விடப்பட்டனர். இந்த அக்கிரமத்தின் வலிகளினால் துடித்த ஓர் அப்பாவிப் பாமரன் நான். மாந்த நேயத்தையும், மனசாட்சியையும், இனமானத்தையும் தொலைத்திடாத பாமரன். பதவியும், வசதியும் கண்டு வளையாத திமிர் சடைத்த பாமரன் என்கிறார் எஸ்.பொ அவர்கள்.

 ஈழம் என்கிற நாடும், அதிலே தமிழும், தமிழர் வாழ்வும் செழித்தன என்பதை ‘மகாவம்ச’ தோன்றுவதற்கு முன்னர் தோன்றிய சங்க இலக்கியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எண்பிக்கின்றன. ஈழத் தமிழர்கள் கேட்பது அதிகாரப் பகிர்வு அல்ல. வரலாற்று வழிமுறையில் அவர்கள் முழுமையாகப் பெற்றிருந்த உரிமைகளைக் கேட்கிறார்கள். இந்த உரிமை ஈழனுக்கு உள்ள பிறப்புரிமை. அந்த பிறப்புரிமையை இழந்துவிட்டால், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையுடைய உரிமைகளையும் மரபுகளையும் அவன் இழந்தவனாகிறான்.

 சிங்களமயமாகிய தமிழர்கள் குறித்தும், இந்தியத் தமிழர்கள் குறித்தும், தமிழ் ஈழம் குறித்தும் மகாவம்ச மொழிபெயர்ப்பு நூலின் முன்னீட்டில் எஸ்.பொ அவர்கள் கூறியுள்ளதின் சில முக்கியக் கருத்துக்கள் மேலே தரப்பட்டுள்ளன. இவை சிங்களப் பேரின வாதத்தின் போக்கையும், ஈழத்தமிழ் மக்களின் கருத்துக்களையும் பிரதிநிதிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

 இலங்கை அரசின் ஆதரவில், ஜெர்மானியரான வில்கெம் கெய்கர் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்திருந்த மகாவம்ச நூலை அடிப்படையாகக்கொண்டு அவரது கண்காணிப்பின் கீழ் திருமதி போடே(Mabel Hayes Bode) அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்நூல் 1912இல் வெளியிடப்பட்டது. இன்றுவரை அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட நூலாக அது உள்ளது. அந்நூலின் தமிழ்மொழி பெயர்ப்பு தான் இந்நூலாகும்.

குறிப்பு:

1.வின்சென்ட் ஆர்தர் சுமித்(Vincent.A.Smith), ‘அசோகர்-இந்தியாவின் பௌத்தப் பேரரசர்’ (Ashoka – The Budhist Emperor of India), தமிழில் சிவ. முருகேசன், சந்தியா பதிப்பகம், 2009. பக்: 18-21.

2. “ “ பக்: 350;

3. “ “ பக்: 36, 370.

4. “ “ பக்: 38, 39.

5.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 4, 69.

6.இலங்கையில் தமிழர்-கா.இந்திரபாலா, அக்டோபெர் 2006, பக்கம்: 174.

7. “ “ பக்: 185

8. “ “ பக்: 186

9. “ “ பக்: 126-127.

10. “ “ பக்: 113-114

- கணியன் பாலன், ஈரோடு.

Pin It