அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை வீம்ஸ் (Weems) என்பவர் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டான் அச்சிறுவன். அந்த வரலாற்று நூலைப் படிப்பதற்காகத் தேடி அலைந்தபோது, அது ‘கிராஃபோர்டு’ என்கிற விவசாயிடம் இருப்பதாக அறிந்தான். பன்னிரெண்டு மைல் தூரம் நடந்துபோய், ‘கிராஃபோர்டைச்’ சந்தித்தான். அவரிடம்? “வீம்ஸ் எழுதின ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ வாழ்க்கை வரலாற்று நூலைக் கொடுங்கள்; படித்துவிட்டுத் தருகிறேன்” என்று மன்றாடிக் கேட்டு வாங்கி வந்தான். வீட்டிற்கு வந்து அடுப்பு வெளிச்சத்தில் ஆர்வத்தோடு அந்நூலைப் படித்து முடித்தான். பின்னர் சுவரின் இடுக்கில் நூலைச் சொருகி வைத்துவிட்டுத் தூங்கிப்போனான். திடீரென்று காற்றுடன் கூடிய மழை கொட்டியது. இரவல் வாங்கி வந்த நூல் மழையில் நனைந்துவிட்டது. சில பக்கங்கள் கிழிந்தும்விட்டன. வெயிலில் நூலைக் காயவைத்தான். படிக்காமல் விட்ட சில பக்கங்களை மீண்டும் படித்தான்.

Abraham_Lincoln_1863விவசாயி ‘கிராஃபோர்டைப் பார்த்து, நூலை அவரிடம் திருப்பித் தருவதற்காக கிராமத்திற்குச் சென்றான். நனைந்த நூலைத் தந்தான். அவரிடம் மன்னிப்பும் கோரினான். “எனது கவனக் குறைவினால் நூல் நனைந்து கிழிந்துவிட்டது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றான். மேலும், “நூலுக்கான தொகையை வழங்க என்னிடம் பணம் இல்லை; ஆனால் அதன் விலைமதிப்புக்கு ஈடாக என் உழைப்பைத் தருகிறேன். உங்கள் வயலில் வேலை செய்து கழித்துவிடுகிறேன்” என்றான். நூலின் மதிப்பு எழுபத்தைந்து சென்ட்டுகள். மூன்று நாட்கள் வேலை செய்து கடனை அடைத்தான். அரிதான அந்நூல்தான், ‘தி லைப் ஆஃப் வாஷிங்டன்’ (The Life of Washington)அந்த நூலைப் படித்தபோது, அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தானும் ஆக வேண்டும் எனக் கனவு கண்டான். பிற்காலத்தில் அமெரிக்கக் குடியரசுத் தலைவராகவும் ஆகிப் புகழ் பெற்றான். அவன்தான் அடிமைகளின் சூரியனாக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன்.

 அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் ஹார்டின் என்ற இடத்தில் ஆப்ரகாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தாமஸ் லிங்கன்-நான்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

 ஆப்ரகாம் லிங்கனின் தந்தை தாமஸ் ஒரு தச்சுத் தொழிலாளி. கிடைத்த குறைந்த வருமானத்தைக் கொண்டு வறுமையில் வாழ்ந்து வந்தார். வாழ்க்கை நடத்த வருமானம் தேடி இண்டியானாவுக்குச் சென்று மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டார். அங்கு ஆப்ரகாம் லிங்கனின் தாய் திடீரென்று இறந்துபோனார். தந்தையும் மகனும் இணைந்து தாங்களே செய்த சவப்பெட்டியில் அவரது உடலை அடக்கம் செய்தனர்.

மூன்று குழந்தைகளைப் பெற்ற விதவைப் பெண்ணை லிங்கனின் தந்தை மறுமணம் செய்து கொண்டார். கிராமத்திற்கு வந்து பாடம் கற்பித்த மூன்று ஆசிரியர்களிடம் மாணவனாயிருந்து ஆபிரகாம் கல்வி கற்றார். கல்வியின் மீது தீராத பற்றுகொண்டு கையில் கிடைக்கும் நூல்களையும், செய்தித்தாள்களையும் தொடர்ந்து படித்தார். கரித்துண்டால் சுவரிலும், தரையிலும் எழுதிப் பழகினார். கட்டுரைகள் வரைந்தார்.

 வழக்குரைஞர்கள் வாதாடுவதைக் காண ஆசைப்பட்டு நீதிமன்றம் சென்று பார்த்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்திறமையைக் கண்டு வியந்து அவரது கரங்களைப் பிடித்து ஒருமுறை பாராட்டினார். அவர் ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் லிங்கனை வெறுத்து ஒதுக்கிச் சென்றுவிட்டார். இந்நிகழ்ச்சி லிங்கனின் மனதை மிகவும் பாதித்தது. தானும் ஒரு வழக்குரைஞராக வேண்டும் என்று அப்போது முடிவு செய்தார்.

 வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யப் படகு ஓட்டுபவனாகவும், படகில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலியாளாகவும் வேலை செய்தார். சம்பாதித்த பணத்தை தனது தந்தையிடம் கொடுத்துவிடுவார்.

 அணிவதற்குக் கூட ஆடைகள் இல்லாமல் வறுமையில் வாடினார். நான்சி என்ற பெண் ஆடைகள் தயார் செய்து விற்பனை செய்து வந்தார். அவரிடம் இரண்டு கால் சட்டைகளை வாங்கினார். சட்டைகளுக்குரிய பணத்தைக் கொடுக்க முடியாத நிலையில், நான்சி தைப்பதற்குத் தேவையான துணிகளை, துணி உருளையிலிருந்து வெட்டிக் கொடுத்து உழைப்பால் ஈடுசெய்தார். லிங்கனின் நேர்மையைக் கண்டு நான்சி மிகவும் வியந்து பாராட்டினார்.

 கடையில் எழுத்தராகவும், தேர்தல் அலுவலராகவும் லிங்கன் பணி புரிந்தார். உழைப்பை என்றும் உதாசீனப்படுத்தியது இல்லை. உழைப்பும், ஒழுக்கமும் மனிதனின் இரண்டு கண்கள் போன்றவை என்பது அவரது நம்பிக்கை. வெட்டியாக ஊர் சுற்றுவது, மது அருந்துவது, புகை பிடிப்பது, வம்புப் பேச்சில் ஈடுபடுவது, பொழுதை வீண் அடிப்பது ஆகியவற்றை அறவே வெறுத்து ஒதுக்கினார்.

 ஆங்கில இலக்கணத்தையும், ஆங்கில மொழியையும் முறையாகப் பயின்றார். இலக்கிய அரங்குகளில் நடைபெறும் பட்டிமன்றங்களிலும், பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொண்டு கருத்தாழமிக்க உரைகளை நிகழ்த்தினார். தனது பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்தார்.

 ஆப்ரகாம் லிங்கன் இருபத்து மூன்று வயதில் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று போட்டியிட்டார். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, “வங்கிகளைத் தேசியமயமாக்கவும், உள்நாட்டு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும் பாடுபடுவேன்; கடுமையான விலைவாசி உயர்வைக் கட்டுபடுத்துவேன்” என்பதை முன்வைத்தார். லிங்கன் அத்தேர்தலில் தோல்வி அடைந்தார் என்றாலும் அவருக்கு அது அரசியலில் தொடக்கப் பயிற்சிக் களமாக அமைந்தது.

 நியூ சேலத்தில் அஞ்சல் அலுவலராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின்பு நில அளவைத் துறையில் துணை அலுவலராகவும் செயல்புரிந்தார். லிங்கன் இல்லினாய்ஸ் மாநில சட்ட மன்றத் தேர்தலில் 1834 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் மூலம் பல அரசியல் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. வழக்குரைஞரும், சட்டமன்ற உறுப்பினருமான ஸ்டுவர்ட்டுடன் லிங்கனுக்கு நெருங்கிய நட்பு உருவானது. ஸ்டுவர்ட் லிங்கனை வழக்குரைஞருக்கு படிக்கும்படித் தூண்டினார். லிங்கன் தன் ஆர்வத்தினால் சட்டம் பயின்றார். சட்டப்புத்தகங்கனை நுணுகிக் கற்றார். வாதாடும் வல்லமையினால் சிறந்த வழக்குரைஞரானார். உச்ச நீதிமன்றத்தில் தன்னை வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார்.

 லிங்கன் 1836, 1838, 1840-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

லிங்கன் அமெரிக்காவில் நிலவும் அடிமை முறையை அறவே ஒழிப்பதைத் தன் உயரிய லட்சியமாகக் கொண்டார். மேலும் “மனிதர்கள் தங்களால் தனிப்பட்ட முறையில் செய்துகொள்ள முடியாத வசதிகளையும், தோற்றுவிக்க முடியாத வளர்ச்சிகளையும் அரசு முன் வந்து ஆற்றுதல் வேண்டும்” என்பதைத் தனது கொள்கையாகக் கொண்டார்.

 லிங்கன் அரசியலில் ஈடுபட்டு இருந்தாலும் தனது வழக்குரைஞர் தொழிலை விட்டுவிடவில்லை. பல்வேறு நகரங்களுக்கும் சென்று வழக்குரைஞராகப் பணிபுரிந்தார். தன்னிடம் வழக்கு நடத்துபவர்களிடம் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வார். ‘குறைந்த கட்டணம், நிறைந்த சேவை’ என்பதே அவரது கொள்கையாக இருந்தது. ஏழைகளையும், பரிதாபத்துக்கு உரியவர்களையும் சுரண்டி வாழ்வதை விட பட்டினி கிடந்து சாகலாம் என்றே எண்ணினார். எண்ணியவண்ணம் செயல்பட்டார். லிங்கன் புகழ்பெற்ற வழக்குரைஞராக விளங்கியதற்குக் காரணம் அவரது நேர்மையே. “உண்மைக்குப் புறம்பான எந்த வழக்கையும் ஏற்று நடத்துவதில்லை” என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார். “உண்மையில்லை என்று தெரிந்த ஒரு வழக்கை நான் வழக்காட ஏற்றால் ஒவ்வொரு வினாடியும் நான் பொய்யன் என்பதை எனது மனசாட்சி உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கும்” என்றார். லிங்கனின் இக்கூற்று அவர் மிகப் பெரிய நீதிபதியின் மனசாட்சியைக் கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது. கறுப்பின மக்களுக்காக விருப்பத்தோடு நீதிமன்றங்களில் வாதாடினார்.

 லிங்கன், மேரி டாட் என்பவரை 1842 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 4 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார். தம் இல்லற வாழக்கையைப் பற்றிச் சொல்லும்போது “மணவாழ்க்கை மலர்ப்படுக்கை அல்ல, அது போர்க்களம்” என்று குறிப்பிட்டார். லிங்கனுக்கு நேர் எதிரான குணம் படைத்தவர் மேரி டாட். கணவரின் தோற்றத்தைப் பற்றி மனைவி எப்போதும் குறை கூறிக்கொண்டிருப்பார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளை அன்பாக வளர்த்தார் லிங்கன்.

 லிங்கன் 1846 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். மேலும் அவர் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 லிங்கன் அடிமைமுறை ஒழிப்பதில் தீவிரம் காட்டலானார். அமெரிக்காவில் உழைப்பதற்காக ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடிமைகளாக அழைத்து வரப்பட்டனர். அடிமைகள் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டனர். அடிமைகள் மொட்டையடிக்கப்பட்டு, மார்பிலோ, நெற்றியிலோ அவர்கள் எந்த முகவர்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர் என்பதற்கான அடையாளமாக பச்சை குத்தப்பட்டது. கறுப்பினப் பெண் அடிமைகள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். பல ஆயிரக்கணக்கான பெண் அடிமைகள் சித்திரவதையால் உயிரிழந்தார்கள். அடிமைகள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை. அடிமைகளை வைத்துச் சூதாடுவது, அடமானம் வைப்பது, ஏலம் விடுவதன் மூலம் விற்பது – என மிகவும் கேவலமாக நடத்தப்பட்டனர். அடிமைகளுக்கு எவ்வித சட்டப்பாதுகாப்பும் கிடையாது. திருமணம் செய்து கொள்ளக் கூட உரிமை இல்லை. போதிய உணவு வழங்கப்படாமல் பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

 இந்த அடிமை முறைக்கு எதிராக முதல் குரல் எழுப்பியவர்கள் ‘லிபரேட்டர்’ (Liberator) என்ற இதழின் ஆசிரியரான ‘வில்லியம் லாயிட் காரிஷன்’ என்பவர். அதுவரை சுதந்திர அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க வேண்டுமென எந்த அதிபரும் முயற்சி எடுக்கவில்லை. ஆனால் லிங்கனோ அடிமை முறையை அறவே ஒழித்திட உறுதி பூண்டார்.

 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான லிங்கன், வாஷிங்டனில் ‘அடிமை ஒழிப்பு இல்லத்தில்’ வாடகைக்குத் தங்கினார். அடிமை முறையை ஒழிக்க அல்லும் பகலும் சிந்தித்தார். அதற்கு மாறாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ‘டக்ளஸ்’-என்பவர் அடிமை முறை நீடிப்பதை நியாயப்படுத்தி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அக்கூட்டத்திற்குச் சென்றிருந்த லிங்கன் மறுநாள் பதில் அளித்து உரையாற்றுவதாக அறிவித்தார். மறு நாள் மூன்றுமணி நேரம் லிங்கன் அங்கே உரையாற்றினார். “மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம். அதன்படி ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமையாக்குவது தார்மீக உரிமைக்குப் புறம்பானது” என்று வலியுறுத்திப் பேசினார்.

 அடிமை முறையை ஒழித்திடக் குரல் எழுப்பிய குடியரசுக் கட்சியில் லிங்கன் 1858 ஆம் ஆண்டு இணைந்தார். மாநில செனட்டர் தேர்தலில் போட்டியிட்டார். கறுப்பின மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை முன் வைத்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதே ‘டக்ளஸ்’ லிங்கனை எதிர்த்துப் போட்டியிட்டார். இருவரும் ஒரே மேடையில் உரையாற்றினார்கள். மக்கள் பெரும் அளவில் திரண்டனர். அச்சொற்போர் மூலம் லிங்கன் புகழ்மிக்கத் தலைவரானார். ஆனாலும் வெற்றிவாய்ப்பை இழந்தார். அடிமை வியாபாரிகளின் அன்றைய கனவைத் தகர்க்க முடியாதபடி அவலம் வென்றது. ஆனாலும் என்ன… சிகாகோவில் 1860 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 லிங்கன் அடிமை முறையை ஒழிக்கப் பாடுபடுகிறவர்; அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அடிமை வியாபாரம் பாதிக்கும். எனவே முதலாளிகள் பலர் லிங்கனைத் தோற்கடித்திட தீவிர முயற்சி செய்தனர். ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட அதே டக்ளஸ் என்பவருக்கும், குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட லிங்கனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அனைத்துத் தடைகளையும் முறியடித்து 1859 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவரானார். 1861 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் நாள் லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

ஒரு கூலித் தொழிலாளியின் மகன் வெள்ளை மாளிகையில் குடும்பத்துடன் குடியேறினார். வெள்ளை மாளிகையில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை அவருக்கு உறுத்தலாக இருந்தது. குதிரைப்படை வீரர்கள் வாசலில் எப்போதும் தயாராக நின்று கொண்டு இருப்பார்கள். ‘குடியரசுத் தலைவர் லிங்கன்’ வெள்ளை மாளிகைக்குள் வரும் போதும், வெளியே போகும் போதும் வீர முழக்கத்தோடு ராணுவ மரியாதை செய்வார்கள். அந்தக் குதிரைப்படையின் தலைவரைத் தம் அறைக்கு அழைத்து, “அந்த மரியாதை எனக்கு வேண்டாம். ஏனென்றால் நான் அரசனோ, குறுநில மன்னனோ இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் ஒருவன். குதிரைப்படை வீரர்களை அந்த இடத்திலிருந்து முதலில் அகற்றுங்கள்” என லிங்கன் உத்தரவிட்டார்.

 உள்நாட்டுப் போரை மிகவும் சாமர்த்தியமாக சமாளித்தார். அடிமை முறையை ஒழிப்பதை தென் மாநிலங்கள் எதிர்த்தன. அமெரிக்கக் கூட்டாட்சியில் இருந்து விலகிப் போவதாக அச்சுறுத்தின. 1861 ஆம் ஆண்டு தென்கரோலினா மாநிலம் கூட்டாட்சியிலிருந்து விலகியது. அதைத் தொடர்ந்து பிளோரிடா, அலபாமா, மிசிசிபி, ஜார்ஜியா, லூசியானா, டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்களும் பிரிந்தன.

 இதனால் வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே போர் மூண்டது. நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க லிங்கன் தொண்டர்படையை அமைத்தார். நான்கு ஆண்டு காலம் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. போரில் வெற்றி பெற்ற லிங்கன், தென் மாநிலத்தவரைப் பழிவாங்காமல் பெருந்தன்மையுடன் பொது மன்னிப்பு வழங்கினார்.

 லிங்கன் 1863 ஆம் ஆண்டு சனவரி 2 ஆம் நாள் அடிமை விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.

 பெனிசில்வேனியாவின் தெற்குப் பகுதியில் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் 1863 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி லீயின் படைகளும், அமெரிக்க யூனியன் படைகளும் மோதிக் கொண்டன. இரண்டு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம் ஏற்பட்டது. முடிவில் அமெரிக்க யூனியன் படைகள் வெற்றி பெற்றன. கெட்டிஸ்பர்க் போரில் சுமார் ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களைப் புதைப்பதற்குக் கூட குழி தோண்ட முடியாமல் தற்காலிகமாக மண்ணைத் தோண்டிப் புதைத்தனர். இறந்துபோன அனைத்து வீரர்களின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன. அந்தக் கல்லறையை நினைவுச் சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என்று அரசு தீர்மானித்தது.

 கெட்டிஸ்பர்க்கில் 1863 நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற நினைவுச்சின்னம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு லிங்கன் உணர்ச்சிமிகு உரை நிகழ்த்தினார்.

அவரது உரைச்சுருக்கம் வருமாறு:

“எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் மிகப் பெரிய உள் நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். போர்க்களத்தில் நாம் கூடியிருக்கிறோம். நமது நாடு நீடுழி வாழ வேண்டும் என்பதற்காகத் தங்களுடையை இன்னுயிரைப் பலர் தியாகம் செய்துள்ளனர். இங்கு போரிட்டு மடிந்தவர்கள் செய்து முடிக்காமல் விட்டுப்போன பணியைச் செய்து முடிக்க உயிரோடு இருக்கும் நாம் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். எந்த லட்சியத்தை அடைவதற்காக அவர்கள் தங்கள் உயிரை இழந்தார்களோ, அந்த லட்சியத்தை நாம் விசுவாசத்துடன் நிறைவேற்றுவோம். அவர்களின் தியாகம் வீண் போகாது. மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட மக்களின் அரசாங்கத்தை உலகத்திலிருந்து யாராலும் அழிக்க முடியாது”. அவரது அந்தச் சொற்பொழிவு “கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு” என வரலாற்றில் இன்றும் போற்றப்படுகிறது.

 குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் 1864 ஆம் ஆண்டு லிங்கன் மீண்டும் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக 1865, மார்ச் 4 ஆம் தேதி லிங்கன் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

 போர்ட்ஸ் நாடக அரங்கில் 1865, ஏப்ரல் 14 அன்று ‘அவர் அமெரிக்கன் கஸின்’ (Our American Cousin) என்ற நாடகம் நடந்தது. லிங்கனும் அவரது மனைவி மேரி டாட்டும் அங்கு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இனவெறியனான ‘ஜான் வில்க்ஸ் பூத்’ என்ற ஒரு நடிகன் துப்பாக்கியால் ஆபிரகாம் லிங்கனைச் சுட்டான். நாடக அரங்கிலேயே சுருண்டார். அவசரச் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. முடிவில் லிங்கன் 1865 ஏப்ரல் 15 ஆம் தேதி காலை மரணமடைந்தார்.

 அமெரிக்காவின் அடிமை முறைக்கு ‘ஆப்பு வைத்தவர்’ என்று அகிலமே புகழும் ஆபிரகாம் லிங்கன் இன்று வரலாறாகிவிட்டார். ‘அமெரிக்கக் குடியரசின் மக்கள் தலைவர்’ என்று இன்றும் ஆபிரகாம் லிங்கன் போற்றப்படுகிறார்.

 மக்கள் அரசுரிமை, இறையாண்மை, சனநாயக உணர்வு, அடிமைமுறை ஒழிப்பு, கறுப்பின மக்களின் சுதந்திரம் ஆகிய உயரிய உன்னத லட்சியங்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடி வெற்றி கண்டவர் ஆபிரகாம் லிங்கன்.

- பி.தயாளன்

Pin It