ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந்துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:

இந்நிலையில் தெற்கு ரொடீசியாவின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த இயான் சிமித், பிரித்தானியாவிடம் தெற்கு ரொடீசியா வுக்கான விடுதலையைக் கோரினார். ஆனால், பிரித்தானிய அரசாங்கமோ, பூர்வகுடி கறுப்பின பெரும்பான்மையினரின் ஆட்சி ஒப்படைக்கின்ற போதுதான் சுதந்திரம் பற்றி பரிசீலிக்க முடியும் என்று அறிவித்தது. இதனால் குடியேற்றப்பட்ட வெள்ளை இன மக்களின் சார்பில் 1965 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் தெற்கு ரொடீசியா ஒருதலைபட்சமான சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டது. இயான் ஸ்மித் தன்னை பிரதமராக அறிவித்தார். ரொடீசியாவின் இந்தப் பிரகடனத்துக்கு முன்னோடிப் பிரகடனமாக அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை ஸ்மித் சுட்டிக்காட்டினார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும் பொது நலவாய சபையும் இதனை எதிர்த்தன. அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க மறுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் முதல்முறையாக ரொடீசியா மீது 1968 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே தடை செய்யப்பட்ட இயக்கங்கள், கொரில்லா யுத்தங்களைத் தொடங்கின.

தென்னாப்பிரிக்க நாடு, ரொடீசியா மீது கரிசனை காட்டியபோதும் அங்கீகரிக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு நார்வேயில் இருந்த தனது மகனின் திருமணத்தில் பங்கேற்க தெற்கு ரொடுசியாவின் பிரதமராக அறிவித்துக் கொண்ட ஸ்மித்துக்கு நார்வே அரசாங்கம் அனுமதி அளிக்கவும் மறுத்தது. ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்துக்கு பின்னர் அனைத்துலகத்திலிருந்து தெற்கு ரொடீசியா தனிமைப்படுத்தப்பட்டதாக மாறியது. அனைத்துலக நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் முயற்சியில் 1979 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு இனப்பாகுபாடற்ற தேர்தல் நடத்த தெற்கு ரொடீசிய அரச தலைவராக இருந்த ஸ்மித் ஒப்புக் கொண்டார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்மித்தின் நிறவெறி அரசாங்கத்தை பூர்வகுடி கறுப்பின மக்கள் தூக்கியெறிந்தனர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்கர்கள் தேசிய ஒன்றியத்தின் தலைவர் முகபே வெற்றி பெற்று தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளார். தெற்கு ரொடீசியா, மீண்டும் ஜிம்பாப்வே என்ற பெயர் மாற்றம் அடைந்தது.

கடங்கா

காங்கோ ஜனநாயகக் குடியரசின் தென் மாகாணம் கடங்கா என்பதாகும். காங்கோ அரசாங்கமானது கடங்காவுக்கு 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூடுதல் சுதந்திரத் துக்கான அனுமதியை அளித்தது. அதனைத் தொடர்ந்து கடங்கா, தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதற்கு பெல்ஜியம் ஆதரவளித்தது. இதனிடையே 1961 ஆம் ஆண்டு காங்கோவின் பிரதமர் லூமூமாம்பா படுகொலை செய்யப்பட்டார். லூமூமாம்பாவின் மரணத்தைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டப்பட்டது. 1962 ஆம் ஆண்டு ஐ.நா. படை, கடங்கா மீது தாக்குதல் நடத்தியது. 1963 ஆம் ஆண்டு கடங்காவின் தனிநாட்டுப் பிரகட னத்தை ஐ.நா. முடிவுக்கு கொண்டு வந்தது.

மினெர்வா

1852 ஆம் ஆண்டு பசிபிக் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு மினெர்வா. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா இத்தீவை ஆக்கிரமித்திருந்தது. 1972 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் தன்னை ஒரு சுதந்திர நாடாக மினெர்வா பிரகடனம் செய்தது. சொந்த நாணயத்தையும் அது உருவாக்கியது. மினெர்வாவின் சுதந்திரப் பிரகடனம் குறித்து அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, டோங்கா, பிஜி உள்ளிட்டவை விவாதித்தன. இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் நாள், டோங்கா நாட்டு மக்களின் மீன்பிடித்தளமாக மினெர்வா இருப்பதாகவும் மினெர்வா மீது தமது நாட்டுக்கே உரிமை இருப்பதாகவும் டோங்கா அரசாங்கம் வெளியிட்டது. தற்போது வரை மினெர்வா விடுதலைப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

வடக்கு சைப்ரசின் துருக்கிய குடியரசு

பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து சைப்ரஸ் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாள் விடுதலை பெற்றது. அந்நாட்டில் கிரேக்க சைபீரியர்கள் 80 விழுக்காட்டினரும் துருக்கிய சைப்ரீயர்கள் 18 விழுக்காடும் உள்ளனர்.

1963 ஆம் ஆண்டு அந்நாட்டு முதலாவது அரச தலைவர் ஆர்ச்பிசம் மகாரியஸ், 13 அரசியல் சட்ட திருத்தங்களை பரிந்துரைத்தார். ஆனால் இத்திருத்தங்களை துருக்கிய சைபீரியர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து சைப்ரஸ் அரசாங்கத்துக்கும் சைபீரிய துருக்கியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை 1965 ஆம் ஆண்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சைப்ரஸ் மீது 1974 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் துருக்கி தாக்குதல் நடத்தியது. 1960 ஆம் ஆண்டைய அரசியலமைப்பு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த துருக்கி அழுத்தம் கொடுத்து இத்தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அப்பேச்சுக்கள் தோல்வியடைய சைப்ரசுக்குள் துருக்கியப் படை உள் நுழைந்தது. 37 விழுக்காட்டு பிரதேசத்தை துருக்கி ஆக்கிரமிக்க இலட்சக் கணக்கான கிரீக் சைபீரியர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.

இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளன்று வடக்கு சைப்ரசில் துருக்கிய குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் 541 ஆம் தீர்மானத்தின்படி 1983 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் இந்தப் பிரகடனம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. மேலும் வடக்கு சைப்ரசிலிருந்து துருக்கிய படைகள் வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. துருக்கி மட்டுமே அந்நாட்டை அங்கீகரித்தது. சைப்ரஸ் நாட்டை குறிப்பிடுகையில் “கிரீக் சைப்ரஸ் நிர்வாகப் பகுதி” என்றே இன்றளவும் துருக்கி குறிப்பிட்டு வருகிறது.

நாகாலாந்து

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நாகாலாந்துக்கு பிரித்தானியர்கள் 1832 ஆம் ஆண்டு சென்றனர். அது வரை எந்தவித அன்னிய தலையீடு இல்லாமல் சுதந்திர நாடாக நாகா பிரதேசம் இருந்து வந்தது. பிரித்தானிய இந்திய நிர்வாகத்தில்கூட நாகாலாந்து இணைக்கப்படவில்லை. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. அதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் நாள் இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான காந்தியை நாகா ழுழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். நாகா தேசிய இனமக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமை படைத்தவர்கள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை காந்தியார் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் நாளன்று நாகலாந்து சுதந்திர நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது.

1947 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துக்கும் சுதந்திர நாகாலாந்து நாட்டின் தேசிய சபைக்கும் இடையே 9 அம்ச ஒப்பந்தம் ஒன்றும் உருவானது. அதில் நாகா மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இந்தியா பின்னர் நிராகரித்து இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்திய அரசியல் சட்டத்தை ஏற்க மறுத்த நாகாலாந்துக்கு இந்திய ஒன்றியத்தில் இணையுமாறு பகிரங்க அழைப்பையும் இந்தியா விடுத்தது. இந்நிலையில் 1951 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாளன்று நாகாலாந்து தேசிய சபையானது பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தியது. 99.9 விழுக்காடு நாகா தேசிய இனமக்கள், இறைமையுள்ள நாகா சுதந்திர அரசாங்கத்துக்காகவே வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாகாலாந்து தனிநாட்டு அரசாங்கத்துக்கான இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆனால் 1960களில் நாகாலாந்தை இந்தியா ஆக்கிரமித்து தனது மாநிலங்களில் ஒன்றாக்கிக் கொண்டது. நாகாலாந்தின் சுய நிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. 1993 ஆம் ஆண்டு ஐ.நா. சபையைப் போன்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளின் ஒன்றியத்தில் நாகா விடுதலை அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் இணைந்து கொண்டது.

(நிறைவு) 

(நன்றி : புரட்சி பெரியார் முழக்கம் ஜூன் 2009)