1. செருப்புகளும் மதங்களும்

விற்பனை சந்தையில்
நிறைய
குவிந்து கிடக்கின்றன
செருப்புகள் போல்
மதங்களும்

தங்களுக்குள்
விவாதித்து விவாதித்து
தாங்களாகவே
அடித்துக் கொள்வதிலும்
சளைத்தவையில்லை
ஒன்றையொன்று

அளவுகளிலும்
அழகுகளிலும் தான்
வெவ்வேறாக
இருக்கின்றன

சில அறுந்தும்
சில தேய்ந்தும்
செருப்புகளை போலவே

பல வேளைகளில்
செருப்புகள்
உயர்வானவைதான்

மனிதயினத்தை
காவுகள் கேட்கும்
மதங்களைவிடவும்

2. பெரியாரும் பெருமானாரும்

அப்படியொன்றும்
பெரிய இடைவெளியில்லை
அவருக்கும்
இவருக்கும்

அவர் இனத்தலைவர்
இவர் இனமானத் தலைவர்

இருவரும் போராளிகளே
பெண்விடுதலைக்கும்
மண்விடுதலைக்கும்

பெரியவர் தொடங்கியதை
பெரியார் தொடர்ந்தார்

இருவருக்கும்
பிடித்தது கருப்பு
வெளிச்சத்தின்
திமிர் அடக்க

வினாக்களற்ற விடைகள்
நிறைய அவரிடம்

விடைகளற்ற வினாக்கள்
நிறைய இவரிடம்.

இவருக்கும் அவருக்கும்
வாரிசுகளாக மக்களே
இருந்தனர்

இருவரும்
உயர்குடியில் பிறந்தவர்கள்தான்

தாழ்குடிகளுக்காக
தங்களை இழந்தவர்கள்

அவருக்காவது
இறைவன் துணை
இவருக்கு
அறிவே துணை


கவிமதி, துபாய் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It