சாதியக் கருத்தியல் என்பது கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு புசுயமித்திரனால் தொடங்கப்பட்ட மகதப் பேரரசை ஆண்ட பார்ப்பன சுங்க வம்ச ஆட்சியிலும், அதன் பிந்தைய கன்வ வம்ச ஆட்சியிலும் உருவானது. இந்த இரு பார்ப்பன வம்சங்களும் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேல் மகத அரசை ஆண்டன (கி.மு.187–30). இக்காலகட்டத்தில்தான் வைதீக பார்ப்பனியமும் சாதியமும் தோன்றுவதற்கான அனைத்து அடித்தளங்களும் உருவாக்கப்பட்டன. இக்கருத்தியல்களைக் கட்டமைக்க பிரம்ம சூத்ரம் முதல் மனுசுமிருதிவரை பல்வேறு நூல்கள் எழுதப்பட்டன. இதிகாசங்களும் புராணங்களும் அதன்பின் உருவாகின. வேதம் முதலான அனைத்துப் பண்டைய நூல்களும் திருத்தப்பட்டன, இடைச்செருகல்கள் செய்யப்பட்டன. பார்ப்பன வம்சங்களின் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்கள், நிலபுலமும் செல்வ வளமும் ஆட்சி அதிகாரமும் சமூகச் செல்வாக்கும் கொண்ட ஆளும் வர்க்கமாக ஆகி சமூகப் படிநிலையில் மேல் நிலைக்கு உயர்ந்திருந்தார்கள். தங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் சாதியக் கருத்தியலைக் கொண்டு வந்து அதனைக் கடவுளின் பெயராலும் மதச் சடங்குகளின் பெயராலும் சமூகத்தில் நிலை நிறுத்தினார்கள்.

சத்ரிய வம்சம் என்பது இன்று இல்லை என்ற பொய்யைப் பரப்பி தங்களின் மதச்சடங்குகளின் மூலம் மட்டுமே ஒருவனை சத்ரியனாக, அரசனாக ஆக்க முடியும் என்ற கருத்தை வடஇந்தியச் சமூகம் முழுவதும் முதலில் கொண்டு சென்றார்கள். இதில் அவர்கள் வெற்றியடைந்ததால் அதன் பின் சாதியக் கருத்தியலையும் அவர்களால் கொண்டு செல்ல முடிந்தது. இவற்றைச் செய்து முடிக்க பார்ப்பனக் குழுக்கள் பல உருவாக்கப்பட்டன. அவை திட்டமிட்டு இவற்றைச் செயல்படுத்தப் பல பத்தாண்டுகளாக பாடுபட்டு வந்தன. இந்தியச் சமூகச்சூழ்நிலையும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. இதன்பின் வந்த குப்தர் காலத்தில் சாதியம் அரச அங்கீகாரம் பெற்று, சமூகம் முழுவதும் பல எதிர்ப்புகளுக்கிடையே நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதன்பின் இந்தியா முழுவதும் சிறிது சிறிதாக வைதீக பார்ப்பனியமும், சாதியக் கருத்தியலும் கொண்டு செல்லப்பட்டன.

குடிகளும் சாதிகளும்:

பழந்தமிழகத்தில் களப்பிரர் காலம் வரை(கி.பி.550) குடிகள் மட்டுமே இருந்தன. குடி என்பதும் சாதி என்பதும் வேறு வேறு. குடி என்பது ஒரு தொழில் பிரிவு. அது பிறப்பால் வருவதல்ல. அதில் அகமணமுறை இருக்காது. குடிகளுக்கிடையே கலப்பு மணமும் கலந்து உண்ணுதலும் இருக்கும். சமூக சமத்துவம் இருக்கும். சமூகப்படிநிலை இருக்காது. ஆனால் வர்க்க வகுப்பு வேறுபாடுகள் இருக்கும். பழந்தமிழகத்தில் நடைபெற்ற களப்பிரர் படையெடுப்பு (கி.பி.250) பழந்தமிழகத்திற்கு(கேரளம் உட்பட) மிகப்பெரிய பேரழிவைத் தந்தது. இந்தப்பேரழிவால் இரு சமூகமும் பின் தங்கிய பிற்போக்கான சமூகமாக ஆகிப்போனது. அதன்பின் நடைபெற்ற களப்பிரர் ஆட்சியின் காரணமாக இவை சமயம் சார்ந்த சமூகமாகவும் மாறிப்போயின. களப்பிரர் காலத்தின் இறுதியில் பழந்தமிழகத்தில் சமற்கிருத மயமாக்கல் நடந்தேறியது. பார்ப்பனர்களுக்கு முதல்முறையாக நிலதானங்களும் வழங்கப்பட்டன. இருந்த போதிலும் சாதியம் உருவாகவில்லை. குடிகள் மட்டுமே இருந்து வந்தன.

கி.பி. 550இல் களப்பிரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். தமிழகத்தின் வடக்கே பல்லவர்களும் தெற்கே பாண்டியர்களும் ஆண்டனர். கேரளாவில் சிறுகுறு அரசுகள் உருவாகி அவைகளுக்குள் இடைவிடாத போர்கள் நடைபெற்று வந்தன. கேரளாவில் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்தே பார்ப்பனக் குடியேற்றம் நடந்து வந்தது. கி.பி. 550க்குப்பின் அது பெருமளவில் அதிகரித்தது. அவர்களுக்கு நிலதானங்களும் பெருமளவில் நடைபெற்றன. நாளடைவில் பார்ப்பனர்கள் கேரள சமூகத்தில் நிலபுலங்களும் செல்வவளமும் ஆட்சி அதிகாரமும் சமூகச் செல்வாக்கும் கொண்டவர்களாக ஆகியிருந்தனர். இவற்றின் விளைவாக கி.பி. 800க்குள் சம்பந்தம், மறுமக்கள் தாயமுறை முதலியன கொண்டு வரப்பட்டு சாதியத்துக்கான அடித்தளங்கள் அனைத்தும் அங்கு உருவாகியிருந்தன. கி.பி. 9ஆம் 10ஆம் நூற்றாண்டுக்குள் கேரள சமூகத்தில் இருந்த குடிகள் அனைத்தும் சாதிகளாக மாற்றப்பட்டன என்பதோடு தீண்டாமையும் புகுத்தப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் 11ஆம் நூற்றாண்டுவரை குடிகள் மட்டுமே இருந்தன. சாதியம் உருவாகவில்லை. ஆனால் சாதியக் கருத்தியல் அறிமுகமாயிருந்தது.

சங்க காலத்தில் இருந்தே தமிழ்ச் சமூகத்தில் நான்கு வகுப்புகள் இருந்தன. தமிழ்க் குடிகளில் பெரும்பாலானவை நான்காம் வகுப்புக்குரியன. நான்காம் வகுப்புக் குடிகள் கீழ் மக்கள் என அழைக்கப்பட்டனர். முதல் மூன்று வகுப்புகளான அரசர், அந்தணர், வணிகர் & வேளாளர் ஆகியவற்றுக்குரிய குடிகள் மேல் வகுப்புகளாக இருந்தன. குடிகள் என்பன தொழில்பிரிவுகள் என்பதை இங்கு மனதில் கொள்ள வேண்டும். கீழ்மக்கள், மேல்மக்கள் ஆவதும், மேல்மக்கள் கீழ்மக்கள் ஆவதும் நடந்து வந்தன. அதாவது கீழ்க்குடிகள் மேல்குடிகள் ஆவதும் மேல்குடிகள் கீழ்க்குடிகள் ஆவதும் நடைபெற்று வந்தன. இவர்கள் அனைவருக்குமிடையே கலப்பு மணமும் கலந்து உண்ணுதலும் இருந்து வந்தன. அகமணமுறையோ சாதியோ இருக்கவில்லை. பழந்தமிழ்க் குடிகளுக்கிடையே வர்க்க வகுப்பு வேறுபாடுகள் மட்டுமே இருந்தன. அதனை இன்றைய மேற்குலகில் உள்ள வர்க்க வகுப்பு வேறுபாடுகள் போல எனலாம். ஆகவே தமிழகத்தில் இன்று இருக்கும் சாதிகளைப் பண்டையத் தமிழ்க்குடிகள் போலக் கருத முடியாது.

இன்றைய சாதிகளில் அகமணமுறை இருக்கிறது, படிநிலை இருக்கிறது, சாதிகளிடையே சமத்துவம் இல்லை. கலந்து உண்ணுதலும் கலப்பு மணமும் இருக்கவில்லை. உயர்வு, தாழ்வும், தீண்டாமையும் இருக்கிறது. ஆகவே பண்டைய தமிழ்க்குடிகள் வேறு, இன்றைய சாதிகள் வேறு. ஆனால் இன்றைய தமிழ்ச் சாதிகளை தமிழ்க்குடிகள் என அழைக்கும் பழக்கம் இன்று உருவாகியுள்ளது. ஆனால் இரண்டும் ஒன்றல்ல. இன்றைய தமிழ்ச்சாதிகள் பண்டைய தமிழ்க் குடிகள் போல மாற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அவை அப்படி அழைக்கப்படுகின்றன என நாம் கருதலாம். முதலில் சமூக நல்லிணக்கமும், சமத்துவமும் அவைகளுக்கிடையே உருவாக வேண்டும். படிநிலை என்பதும், உயர்வு தாழ்வும், தீண்டாமையும் ஒழிய வேண்டும். இறுதியாகக் கலந்து உண்ணுதலும், கலப்பு மணமும் உருவாக வேண்டும். அகமணமுறை ஒழிய வேண்டும். அவற்றின் மூலம் மட்டுமே இன்றைய தமிழ்க்குடிகள் பண்டைய தமிழ்க்குடிகள் போல ஆகமுடியும். முழுமையான தொழிற்துறை வளர்ச்சியும், தமிழ்த்தேசிய வளர்ச்சியும் அவற்றைச் செயல்படுத்தும் எனக்கருதலாம். 

சாதியும் வர்க்கமும்:

சமூக உற்பத்தியும் உற்பத்தி உறவுகளும் சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கிறது எனில் அதன்மேல் கட்டப்படும் அரசியல், கலை, பண்பாடு முதலியன அதன் மேற்கட்டுமானமாக இருக்கிறது. சமூகப் பொருளாதாரமும் அதன் உற்பத்தி உறவும் ஒரே நிலையில் இருக்கும் ஒரு தொழில்குழுவை ஒரு வர்க்கம் என வகைப்படுத்தலாம். வர்க்கம் என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கிறது. அப்படியானால் சாதி என்பது அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா? அகமண முறையைப் பின்பற்றுவதும், பிறப்பின் அடிப்படையில் இருப்பதும், சாதிகளுக்கிடையே படிநிலை இருப்பதும், உயர்வு-தாழ்வு தீண்டாமை முதலியன இருப்பதும் சாதியின் தனித்துவமான பண்புகள். சாதியின் இப்பண்புகள் சாதி என்பது சமூகத்தின் மேற்கட்டுமானமாக இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் சாதி என்பது முழுமையாக ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாக, ஒரு குறிப்பிட்ட வகுப்பாக இருந்து வந்தது. அத்தொழில்குழு என்பது ஒரு வகுப்பாகவும், ஒரு வர்க்கமாகவும் இருந்தாக வேண்டும். ஆகவே சாதி என்பது ஒரு அடிக்கட்டுமானமாகவும் இருந்து வந்தது. ஆகவே சாதி என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானமாக, அதன் மேற்கட்டுமானமாக என இரண்டுமாகவும் இருந்து வந்தது என்பதுதான் உண்மை.

ஆனால் தொழில்துறை வளர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாக இருந்து வந்ததில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் இப்பொழுதும் ஒவ்வொரு சாதியும் பெரும்பான்மையாக ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாகவே இருந்து வந்த போதிலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் வேறுபல தொழில் செய்வோரும் தொழில்குழுக்களும் உருவாகி வருகின்றன. ஆகவே இன்று ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்ட வர்க்கமாக இருக்கவில்லை. அதில் வேறு சில வர்க்கங்களும் இருக்கின்றன. அவை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன. சாதியம் குறித்தச் சிந்தனைப் போக்கிலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் சாதிகள் என்பன இன்றும் தமிழ்ச் சமூகத்தில் ஓரளவு வலிமையுடன்தான் இருந்து வருகின்றன. அதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாக உள்ளன.

தொழிற்துறை வளர்ச்சியும் சாதியின் அழிவும்:

இந்தியாவிலும், தமிழகத்திலும் தொழிற்துறை வளர்ச்சி போதிய அளவு இல்லாததுதான் சாதியம் இருப்பதற்கான முதற்காரணி. இந்தியாவில் பணி செய்பவர்களில் (Work force) 2020ல் இருந்த சுமார் 50 கோடிப்பேரில் 47 கோடிப்பேர் அமைப்புச்சாரா பணிகளிலும், 3 கோடிப்பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த பணிகளிலும் இருந்துள்ளனர். இவைபோக மத்திய மாநில அரசுகள், பொதுத்துறைகள் போன்றவற்றில் 4.5 கோடி மக்கள் பணிபுரிகின்றனர். மொத்தப் பணிகளில் சுமார் 15% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் அமைப்பு சார்ந்த பணிகளில் (Organised or Formal) உள்ளனர். 80% க்கும் அதிகமானவர்கள் அமைப்பு சாரா பணிகளில் (unorganized or informal)தான் இருக்கின்றனர். ஆனால் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் 10-20% க்கும் குறைவானவர்களே அமைப்புச் சாரா பணிகளில் இருக்கின்றனர். 80% க்கும் அதிகமானவர்கள் அமைப்பு சார்ந்த பணிகளில்தான் இருக்கின்றனர். தமிழகத்திலும் அமைப்பு சார்ந்த பணிகளில் 80%க்கும் அதிகமானவர்கள் பணிபுரியும் பொழுதுதான் சாதியின் தாக்கம் இல்லாமல் போகும்.

இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் கிராமப்புற மக்களில் 70% மக்களும், மொத்த மக்கள் தொகையில் 50% மக்களும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 2001ல் 49.2% மக்களும், 2011ல் 42.1% மக்களும் வேளாண்மையை நம்பி இருந்தனர். இன்றும் (2021) 40% க்கும் சற்று குறைவான மக்கள் வேளாண்மையை நம்பி இருப்பர். வளர்ந்த நாடுகளில் 10% க்கும் குறைவான மக்களே வேளாண்மையை நம்பி உள்ளனர். சான்றாக அமெரிக்க மக்களில் 1.5%க்கும் குறைவான மக்களே வேளாண்மையை நம்பியுள்ளனர். தமிழகம் அந்த நிலையை அடையும் பொழுதுதான் சாதியின் தாக்கம் இல்லாமல் போகும்.

அதுபோன்றே 2011ல் தமிழ்நாட்டில் நகரமயம் என்பது 48.5%, மகாராசுடிரத்தில் 45%, கேரளாவில் 47%, பஞ்சாபில் 37.5% இராசசுதானில் 25% ஆக இருந்துள்ளது. நகரமயம் என்பது 80% க்கும் அதிகமாக இருக்கும்பொழுதுதான் சாதியின் தாக்கம் குறையும். நகரமயத்தைவிட முதலில் கூறிய இரண்டிலும் முழு முன்னேற்றம் ஏற்படும் பொழுதுதான் சாதியின் தாக்கம் இல்லாமல் போகும்.

சாதியப்பெருமை:

சாதியப்பெருமைகளைப் பரப்புவதும் அதனை வளர்த்தெடுப்பதும், சாதியச் சங்கங்கள் உருவாக ஊக்குவிப்பதும் அவற்றிற்கு ஆதரவு வழங்குவதும் அவற்றை வளர்த்தெடுப்பதும் தமிழகத்தில் மிகநீண்டகாலமாக நடந்து வருகிறது. நாளடைவில் இந்த சாதிய சங்கங்கள் கட்சிகளாக மாறுவதும் அந்த கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு சீட்டுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இவைபோக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் சாதிய வர்ணங்கள் பூசப்பட்டு அவர்கள் அனைவரையும் சாதியத்தலைவர்களாகக் கொண்டாடும் மனநிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான அரசு விழாக்களில் இந்தச் சாதியத் தலைவர்கள் கலந்துகொண்டு இந்த தேசியத் தலைவர்கள் அனைவரையும் சாதியத் தலைவர்களாகக் கொண்டாடும் சூழ்நிலை இருந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இவற்றை ஆதரிக்கின்றன.

இதுபோன்ற நிகழ்வுகள் சாதியப் பெருமிதங்களை வளர்த்தெடுப்பதற்கும் சாதியச் சங்கங்கள் வலிமைபெறுவதற்கும் காரணமாகி விடுகின்றன. இந்நடவடிக்கைகள் சாதியப் பெருமைகளை சாதியவெறிகளாக உருமாற்றி சாதிகளுக்கிடையே பகைமை வெறுப்பு போன்றவற்றை கொண்டு வருவதோடு அவற்றிற்கு இடையே சாதியத் தகராறுகளையும் சாதியச் சண்டைகளையும் கொண்டு வருகின்றன. ஆணவப் படுகொலைகளுக்கும் காரணமாகின்றன. இவற்றின் விளைவாக சாதிகளுக்கு இடையே இருக்க வேண்டிய நல்லிணக்கம் ஒற்றுமை சமத்துவம் பரசுபர நம்பிக்கை முதலியன இல்லாது போகின்றன. அவற்றின் காரணமாக கலந்து உண்ணுதல் கலப்புமணம் முதலியனவும் இல்லாது போகின்றன. தேசியக் குடும்பநல ஆய்வின் (National Family Health Survey - NFHS-III, 2005-2006) படி, இந்திய அளவில் சாதிகளுக்கிடையே நடக்கும் கலப்புமணம் என்பது 11 விழுக்காடாக இருக்கிறது. கேரளாவில் சுமார் 20 விழுக்காடும் பஞ்சாபில் சுமார் 20 விழுக்காடும் மராட்டியத்தில் 17 விழுக்காடும் சாதிகளுக்கிடையே கலப்புமணம் இருந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் சாதிகளுக்கு இடையேயான கலப்பு மணம் என்பது 3 விழுக்காடு மட்டுமே நடந்து வருகிறது. இது வருத்தத்தையும் வியப்பையும் தருகிறது.

மேலே சொல்லப்பட்ட மூன்று மாநிலங்களைப்போலவே பலவகையிலும் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே தமிழ்நாடு இருக்கிறது. இருந்தபோதிலும் அந்த மூன்று மாநிலங்களைவிட மிகவும் குறைந்த அளவில் கலப்பு மணம் இருப்பதும் இந்திய சராசரியை விட மிகமிகக்குறைவாக இருப்பதும் பெருவியப்பைத் தருகிறது. இதற்கான காரணம் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். இராசசுதானில் நடக்கும் கலப்பு மணம் 3 விழுக்காடு. அதன் நகர்மயம் என்பது 2011ல் சுமார் 25% தான். தமிழகத்தைவிட 2.6 மடங்கு பரப்பும் அதிக மக்கள் தொகையும் கொண்டது இராசசுதான். ஆனாலும் அதன் மொத்த உற்பத்தி(GDP) என்பது தமிழக உற்பத்தியில் பாதிதான் இருக்கிறது. இருந்த போதிலும் இராசசுதான் அளவுதான் கலப்புமணம் தமிழகத்தில் இருக்கிறது. மேலும் கலப்பு மணம் பீகாரில் 6.14%, மத்தியபிரதேசத்தில் 4.39%, உத்திரபிரதேசத்தில் 11.33% இருப்பதும் இவை அனைத்தைவிடவும், இந்திய சராசரி அளவை விடவும் தமிழ்நாட்டில் குறைவாக இருப்பதும் ஆய்வுக்குரியது. தமிழகத்தில்தான் மிக அதிக அளவு சாதி ஒழிப்பு நடந்துள்ளது போன்ற ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் அது மாயை என்பதை இந்தக் கலப்புமணம் குறித்தத் தரவுகள் உறுதி செய்கின்றன. சாதி ஒழிப்பு என்பது இங்கு சாதி வளர்ப்பு என்பதாகவே இருந்துள்ளதுபோல் தோன்றுகிறது.

சாதி ஒழிப்புப் போராளிகள் சாதிகளுக்கு இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஒற்றுமை சமத்துவம் பரசுபர நம்பிக்கை போன்றனவற்றை வளர்த்தெடுக்கவும் சாதிகளுக்கு இடையே ஏற்படும் பகைமை வெறுப்பு போன்றனவற்றை நீக்கவும் பாடுபடவேண்டும். அவற்றின் மூலம் மட்டுமே சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் சமத்துவம் பரசுபர நம்பிக்கை முதலியன ஏற்பட்டு, கலந்து உண்ணுதல் கலப்புமணம் முதலியன அதிகரிக்க வாய்ப்பு உருவாகும். சாதி ஒழிப்புப் போராளிகள் சாதிகளுக்கிடையே பகைமை வெறுப்பு முதலியன உருவாகாமல் தடுக்கப் பாடுபடவேண்டும். தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 89% விழுக்காடு மக்கள் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்ச்சாதிகள். ஆகவே தமிழ் தேசியப் பெருமைதான் தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய உணர்வையும், தமிழ் தேசிய ஓர்மையையும் கொண்டு வந்து தமிழ்ச் சாதிகளுக்கிடையேயான பகைமை, வெறுப்பு முதலியனவற்றை அகற்றும். அவர்களுக்கிடையே நல்லிணக்கம் சமத்துவம் பரசுபர நம்பிக்கை ஒற்றுமை முதலியனவற்றைக் கொண்டு வந்து கலப்பு மணத்தை அதிகரிக்கச் செய்யும்.

தமிழ் தேசியப் பெருமிதம்:

தமிழக மக்களிடையே உள்ள சாதி மதப்பெருமைகளை அகற்றுவதற்கும் அவற்றை அழித்தொழிப்பதற்கும் தமிழ் தேசியப்பெருமிதங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழ் தேசியப் பெருமிதங்களின் மூலம்தான் தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய உணர்வையும், தமிழ் தேசிய ஓர்மையையும் கொண்டுவர இயலும். பஞ்சாப் கேரளம் போன்ற மாநிலங்களில் அவரவர் தேசியப்பெருமிதங்கள் வளர்க்கப்பட்டன. அந்த தேசியப் பெருமிதம்தான் அம்மாநிலச் சாதிகளுக்கிடையே 20 விழுக்காடு கலப்பு மணம் நடக்கக் காரணம். தாங்கள் மலையாளிகள், தாங்கள் பஞ்சாபிகள் என்ற தேசியப் பெருமிதத்தின் காரணமாக சாதிகளுக்கிடையே பகைமை, வெறுப்பு முதலியன இல்லாது போய் அவற்றிற்கிடையே நல்லிணக்கம், சமத்துவம், பரசுபர நம்பிக்கை முதலியன ஏற்படுவதால்தான் அங்கு 20 விழுக்காடு கலப்புமணம் நடக்கிறது. தமிழகத்தில் தமிழ்த் தேசியப் பெருமிதங்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதோடு சாதிகளுக்கிடையே பகைமை, வெறுப்பு முதலியன வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆதலால் அவற்றிற்கிடையே நல்லிணக்கம், நல்லுறவு, சமத்துவம், பரசுபரம் நம்பிக்கை முதலியன இல்லாது போயுள்ளது. ஆகவே சாதி ஒழிப்புப் போராளிகள் தமிழ்ச் சாதிகளிடையே தமிழ்த் தேசியப் பெருமிதங்களைக் கொண்டு செல்வதன் மூலமே சாதி ஒழிப்பு என்பதைச் சாதிக்க இயலும். தொழிற்துறை வளர்ச்சி அதிகரிக்கும்பொழுது மக்களிடையே தமிழ் தேசிய உணர்வும், தமிழ் தேசிய ஓர்மையும் அதிகரிக்கும். தொழிற்துறை வளர்ச்சியும் தமிழ் தேசிய ஓர்மையும் வளர்ச்சியடைந்து முழுமை அடையும்பொழுது சாதி இல்லாது போகும். தொழிற்துறை வளர்ச்சி முழுமையடைவதற்கு முன் தமிழ் தேசியப் பெருமிதங்களை தமிழக மக்களிடையே கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே சாதிமதப் பெருமிதங்களை அழித்தொழித்து சாதியின் தாக்கத்தைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். 

தமிழ் மொழியும் சமூக சமத்துவமும்:

திருமூலரும் காரைக்கால் அம்மையாரும் தோன்றிய கி.பி. 5ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் உருவாகியது. பக்தி இயக்கமாக இருந்த போதிலும் அது தமிழ் மொழியின் மறுமலர்ச்சியாகவும் இருந்தது. களப்பிரர் காலத்தில் முதலில் பாலி, பிராகிருத மொழியாலும் பின்னர் சமற்கிருத மொழியாலும் கீழ்மக்களின் மொழியாக மாற்றப்பட்ட தமிழ் மொழி மீண்டும் பக்தி இயக்கத்தால் அரியணை ஏறியது. ஆனால் தமிழில் இருந்த தத்துவார்த்த கலை அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் பலவற்றை சமற்கிருதம் மொழிபெயர்த்துத் தன்வயப்படுத்திக்கொண்டது. ஆதலால் தத்துவார்த்த கலை அறிவியல் தொழில்நுட்ப மொழி, உயர்கல்வி மொழி போன்ற பல தகுதிகளை சமற்கிருதம் கைப்பற்றிக் கொண்டது. தமிழில் இருந்த அவை சார்ந்த மூல நூல்கள் அனைத்தும் கவனிப்பாரின்றி அழிந்து போயின. ஆகவே தமிழ் அத்தகுதிகளை இழந்து போனது. தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு என இதனைக் கூறலாம்.

பக்தி இயக்கம் வலிமையாக இருந்த கி.பி. 9ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் சாதியம் நுழைய முடியவில்லை. தமிழ்மொழி அடிப்படையில் சமூகத்தில் சமத்துவத்தை பேணும் விழுமியங்களைக் கொண்ட மொழியாக இருக்கிறது. சங்கம் மருவிய காலம் வரை உருவான சங்க இலக்கியங்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் சமயச்சார்பற்றதாகவும், அறம் சார்ந்த வாழ்க்கையை வலியுறுத்துவதாகவும், சமூகத்தில் சமத்துவத்தைப் பேணும் விழுமியங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது என்பதால் தமிழ்மொழி வலிமை பெறும் பொழுதெல்லாம் சமூகத்தில் சமத்துவத்தைப் பேணுவதற்கான ஆதரவு பேரளவில் இருந்து வந்துள்ளது. பக்தி இயக்கத்துக்குப் பிந்தைய பிற்காலச் சோழர் காலம்வரை தமிழ் ஆட்சி மொழியாக இருந்து வந்தது. அதுபோன்றே பிற்காலப் பாண்டியர் ஆட்சியிலும் தமிழ்மொழிதான் ஆட்சி மொழியாக இருந்து வந்தது. ஆதலால் கி.பி. 11ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் சாதியம் நுழைய முடியவில்லை.

ஆனால் அக்காலகட்டத்தில் தத்துவார்த்த கலை அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தமிழில் இல்லாது போயிருந்தன. ஆகவே தத்துவார்த்த கலை அறிவியல் தொழில்நுட்ப மொழியாகவும், உயர்கல்வி மொழியாகவும் சமற்கிருதம் இருந்து வந்தது. இன்று ஆங்கிலம் இருப்பதைப்போல அன்று சமற்கிருதம் இருந்தது எனலாம். இருந்த போதிலும் அரசின் ஆதரவோடு தமிழ் ஆட்சி மொழியாக இருந்ததாலும் பொது மக்களிடத்தில் தமிழ் வலிமையோடு இருந்ததாலும் சமூக சமத்துவத்துக்கான ஆதரவு பேரளவு இருந்து வந்தது. அதன் காரணமாகத் தமிழ்ச்சமூகத்தில் சாதியக் கருத்தியல் பரவலாக அறியப்பட்ட போதிலும் தமிழ்க்குடிகள் சாதிகளாக மாறுவது கி.பி. 11ஆம் நூற்றாண்டுவரை தடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதன் பின் வந்த சோழர் ஆட்சியில் வைதீக பார்ப்பனியமும் சமற்கிருதமும் சிறிது சிறிதாக வலிமை பெறத் தொடங்கின. சாதியம் பற்றிய கருத்தியலும் சிறிது சிறிதாக வலிமை பெறத் தொடங்கியது. இருந்த போதிலும் கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் விசயநகர தெலுங்கு நாயக்கர் ஆட்சியில்தான் வைதீக பார்ப்பனியமும் சமற்கிருதமும் வலிமை பெற்று, தொழில் பிரிவுகளாக இருந்த தமிழ்க் குடிகளை சாதிகளாக மாற்றியமைத்தன. விசயநகர தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் சமற்கிருதமும் தெலுங்கும் ஆட்சி மொழிகளாக இருந்தன. தமிழ்மொழி மீண்டும் கீழ்மக்களின் மொழியாக ஆகிப் போனது. ஆங்கில ஆட்சியில் தமிழ்மொழி மீண்டும் மறுமலர்ச்சி பெறத் தொடங்கியது. சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழ் மீண்டும் புத்துயிர் பெற்று வளரத் தொடங்கியது.

ஆனால் 1967க்குப்பின் ஆங்கிலம் தமிழ்நாட்டின் முதல் மொழியாக ஆகி தமிழை இரண்டாம் இடத்துக்குத் தள்ளியது. 1980க்குப்பின் பள்ளிகளில் கூட தமிழ்வழிக் கல்வி இல்லாது போய் ஆங்கில வழிக்கல்வி பெருகியது. கல்வி வணிகமயமாகியது. ஆங்கில வழிக்கல்வி என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டதாகவும் சனாதனச் சிந்தனையை வளர்ப்பதாகவும் இருந்து வருகிறது. ஆங்கிலவழிக் கல்வியைப் போதிக்கும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இந்து மதச் சார்பும் சனாதனச் சிந்தனையும் கொண்டனவாக இருப்பது என்பது தற்செயலானதல்ல. ஆகவே சமூக சமத்துவச் சிந்தனைக்கு ஆங்கிலவழிக்கல்வி எதிரானது. ஆனால் தமிழ் வழிக்கல்வி சமூக சமத்துவத்திற்கு ஆதரவான சிந்தனைகளை வளர்த்தெடுப்பதாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் சமயச் சார்பற்றும், அறம் சார்ந்த வாழ்க்கையை வலியுறுத்தியும், சமூகத்தில் சமத்துவத்தை பேணும் விழுமியங்களைக் கொண்டும் இருக்கிறது. மேலும் தமிழ்வழிக்கல்வி மாணவர்களிடையே தமிழ் தேசியச் சிந்தனையைக் கொண்டு வருகிறது. ஆகவே தமிழ்வழிக் கல்வி என்பது சமூக சமத்துவத்திற்கு ஆதரவான சிந்தனைகளைப் பேரளவில் வளர்க்கும் என்பதையும் ஆங்கிலவழிக்கல்வி இதற்கு எதிரானது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வைதீக பார்ப்பனியமும் சாதியமும்:

இந்தியாவில் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே வைதீக பார்ப்பனியத்தால் சாதியம் தோன்றியது. ஆனால் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில்தான் சாதியம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது. அதன்பின்தான் அது இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது. சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், களப்பிரர் காலம் வரையிலும் கூட(கி.பி. 550வரை) தமிழகத்திலும், கேரளாவிலும் குடிகள் தான் இருந்தன. சாதிகள் இருக்கவில்லை. ஆனால் கேரளாவில் கி.பி. 500க்குப்பிறகு நடைபெற்ற பெருமளவிலான பார்ப்பனக் குடியேற்றங்களால் கி.பி. 800க்குள் சாதியத்துக்கான அடித்தளங்கள் உருவாக்கப்பட்டு கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குள் சாதியமும் தீண்டாமையும் அங்கு நிலைபெற்ற ஒன்றாக மாறியிருந்தன. ஆகவே வைதீக பார்ப்பனியம் அரசியல் அதிகாரமும், சமூகச் செல்வாக்கும் கொண்ட ஒரு ஆதிக்கமிக்க சக்தியாக உருவாகும் பொழுது அங்கு சமற்கிருதமயமாக்கலும் சாதியமும் உருவாகி விடுகிறது என்பதைக் கேரள வரலாறு உறுதி செய்கிறது.

1500 வருடங்களுக்கும் மேலாக சாதியம் பார்ப்பனர்களுக்கு பேரளவான நன்மைகளை வழங்கி வந்துள்ளது. ஆகவே பார்ப்பனியம் இன்றும் சாதிகளைப் பாதுகாக்கவே விரும்புகிறது. ஆனால் மிகப்பெரும் சமூகத்தீமையாக இருந்து வரும் சாதிகள் அழித்தொழிக்கப் படவேண்டும். சாதிகளை அழித்தொழிக்க வேண்டுமானால் முழுமையான தொழிற்துறை வளர்ச்சியும், மாநில மக்களிடத்தில் மொழிவழி தேசிய இன உணர்வும் தேசிய இன ஓர்மையும் தேவை என்பது முன்பே சொல்லப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மட்டுமே சாதியத்தையும், பார்ப்பனியத்தையும் வெற்றிகொள்ள முடியும். ஆகவே முதலில் முழுமையான தொழிற்துறை வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை முடுக்கிவிட வேண்டும். இரண்டாவதாக தமிழக மக்களிடத்தில் தமிழ் தேசியப் பெருமிதங்களைக் கொண்டுவந்து தமிழ் தேசிய உணர்வையும், தமிழ்தேசிய ஓர்மையையும் முன்னெடுக்க வேண்டும்.

பார்ப்பனர்கள் அனைவரும் மனித குலத்துக்கு எதிரானவர்கள் போல் இந்த கட்டுரைகள் சித்தரிப்பதாகச் சிலர் கருதலாம். ஆனால் அது உண்மையல்ல. பார்ப்பனர்களில் பலர் மிகச்சிறந்த மனிதர்களாக இருந்துள்ளனர். தமிழ் பார்ப்பனராகிய தமிழின் மகாகவி பாரதி ஒரு பார்ப்பனர். சங்ககாலக் கவிகளின் நவீன வடிவம்தான் இந்தத் தமிழ்க்கவி பாரதி. அவன் தமிழ் நாட்டின் ‘நீடுதுயில் நீக்கப் பாடவந்த நிலா’. ‘செந்தமிழ் நாடெனும்போதினிலே இங்கு தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற அவனது பாடல் புகழ்பெற்றது. அவன் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கவிஞன் மட்டுமல்ல உலகம் முழுவதற்குமான மகாகவி எனச்சொல்லும் தகுதி பெற்றவன். அது போன்றே இந்திய அளவில் இந்தியாவின் நவீன சிற்பி எனவும் ஆசிய சோதி எனவும் பலவாறு புகழப்பெற்ற, இந்திய நாட்டின் பிரதமராக இருந்த சவகர்லால் நேரு அவர்களும் ஒரு பார்ப்பனர்தான். இதுபோன்று மக்களின் நலனுக்காகப் பாடுபட்டுப் பெரும்புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான பார்ப்பனர்களை நாம் குறிப்பிட முடியும். அதே சமயம் அதிகம் புகழ்பெறாத மனிதகுல விடுதலைக்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். ஆகவே பார்ப்பனர்களில் பலர் மிகச்சிறந்த மனிதர்களாக இருந்துள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்களில் சிலர் சிறந்தவர்களாக இருந்த போதிலும் பார்ப்பனர்கள் ஒரு சமூகக் குழுவாக இயங்கும்பொழுது பார்ப்பன சமூகத்துக்கே உரிய பார்ப்பனியச் சிந்தனையோடுதான் அப்பார்ப்பனச் சமூகக்குழு இயங்குகிறது. முதலாளிகள் சிலர் தனிப்பட்ட முறையில் சிறந்தவர்களாக இருந்த போதிலும் முதலாளித்துவ வர்க்கம் முதலாளித்துவ வர்க்கச் சிந்தனையோடு இருப்பதுபோலத்தான் இங்கும் நடைபெறுகிறது. இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள் ஒரு தனி சமூகக் குழுவாகவே இயங்கி வந்துள்ளனர். அக்குழு வரலாறு முழுவதும் தனது சமூகக் குழுவின் நலன் சார்ந்த சிந்தனையோடுதான் இயங்கிவந்தது, தொடர்ந்தும் இயங்கி வருகிறது. பார்ப்பனர்களின் சமூகப்பொருளாதார அரசியல் அதிகார நலன்கள்தான் அச்சமூகக் குழுவின் அடிப்படைச்சிந்தனையாக இருந்து வருகிறது. ஆகவே இக்கட்டுரைகள், இந்திய வரலாற்றிலும், தமிழகம், கேரளம் போன்ற தேசிய இனங்களின் வரலாற்றிலும் இயங்கிய பார்ப்பனச் சமூகக் குழுக்கள் குறித்துத்தான் பேசுகிறதே ஒழிய தனிப்பட்ட பார்ப்பனர்கள் குறித்து பேசவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு நமது நோக்கமல்ல. ஆனால் உண்மையான வரலாறு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம். முற்றும்.

- கணியன் பாலன், ஈரோடு.