புசியமித்திரனுக்குப் பிறகு குப்த அரசன் சமுத்திர குப்தன்தான்(கி.பி.325-375) அசுவமேத யாகம் நடத்தினான். அவனுக்குப்பின் வந்த இரண்டாம் சந்திர குப்தன் (கி.பி. 375-415) காலத்தில் தான் குப்தப் பேரரசு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது. அவன் சாகர்களை வென்று மேற்கு இந்தியாவை குப்தப் பேரரசுடன் இணைத்தான். இவனுக்குப் பின் வந்த குமாரகுப்தர் (கி.பி.415-454) கால ஆட்சியில் அமைதி நிலவியது. அதன்பின் ஊணர்கள் இந்தியா மீது படையெடுத்து குபதப் பேரரசை தாக்கத் தொடங்கினர். கி.பி. 500க்குள் குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அதன்பின் ஊணர்கள் அரசன் தோராமானாவும் அவன் மகன் மிகரகுலாவும் இந்தியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.

early india romila thaparகுப்தர்கள் வைதீக பார்ப்பனியத்திற்கு முழு ஆதரவு வழங்கினர். அவர்களது காலத்தில்தான் அரசு நால் வருண சாதியை அங்கீகரித்து அதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தியது. குப்தர் காலத்தில் சமற்கிருதம் மறுமலர்ச்சி அடைந்து, சில நூற்றாண்டுகால பரிணாம வளர்ச்சியாலும், ஆட்சியாளர்களின் ஆதரவாலும் அம்மொழி ஒரு செவ்வியல் மொழி என்ற சிறப்பை அடைந்தது எனக் கூறுகிறார் டி.என். சா(1). கவி காளிதாசர் இக்காலத்தைச் சேர்ந்தவர். குப்தர்கள் காலம் வைதீக பார்ப்பனியத்திற்குப் பொற்காலமாக இருந்தது. ஆனால் பொது மக்களுக்கு அது பொற்காலமாக இருக்கவில்லை. வைதீக பார்ப்பனியம் குப்தர் காலத்தில் தன்னை வலுப்படுத்திக் கொண்டதோடு, வருணத்தை சாதியாக மாற்றியமைத்து, அரசும் சமூகமும் அதனை முழுமையாக ஏற்று அங்கீகரித்து நடைமுறைப்படுத்த வைத்தது. அதாவது கி.பி. 500க்குள் வைதீக பார்ப்பனியம் வட இந்தியா முழுவதும் தனது சாதியம் முதலான வைதீகக் கருத்தியல்களை உறுதியாக நடைமுறைப்படுத்தி, வலுப்படுத்தியதில் குப்த ஆட்சியின் பங்கு மிக முக்கியமானது எனலாம். அதன்பின் பார்ப்பனியம் இந்தியாவின் பிற பகுதிகளில் சாதியம் முதலான தனது வைதீகக் கருத்தியல்களைக் கொண்டு செல்லத்தொடங்கியது.

குப்தர் காலத்தில் வைதீகமும் பெண்களும் சாதியும்:

குபதர்கள் காலத்தில் வைதீக பார்ப்பனியக் கருத்தியல்கள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டன என்பதை அவர்கள் காலப் பெண்கள் நிலையும் சூத்திரர்களின் நிலையும் காட்டுகின்றன. குப்தர்கள் காலத்தில் பெண்களின் நிலை தாழ்ந்து கொண்டே சென்றது. கல்வி கற்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. பெண்களின் சிறு வயதுத் திருமணத்திற்கு அன்று ஆதரவு இருந்து வந்தது. பெண்களுக்குச் சொத்துரிமை முற்றிலும் மறுக்கப்பட்டது. அவர்களே சொத்தாகக் கருதப்படும் நிலைதான் இருந்து வந்தது. பெண்ணை மேலும் மேலும் ஆணுக்கு அடிமைப்படுத்த வேண்டும் என்ற ஆணாதிக்கப்போக்கே வளர்ந்து வந்தது. விதவைப் பெண் ஆண்களுடன் உறவு கொள்வது அனுமதிக்கப் படவில்லை(2). பெண் பலவிதங்களிலும் மனுநீதி நூலில் உள்ளபடி நடத்தப்பட்டதின் மூலம், வைதீக பார்ப்பனிய கருத்தியல்கள் குப்தர் கால சமூகத்தில் நடைமுறையில் இருந்தன என்பது உறுதியாகிறது.

மனுவின் காலத்தில் 61 ஆக இருந்த சாதிகளின் எண்ணிக்கை இப்பொழுது நூறாக ஆகியது. ஊணர்கள், குர்சார்கள் போன்ற அந்நியர்கள் இராசபுத்திரர்கள் என்ற புதிய சத்திரிய சாதிகளாக ஆனார்கள். இனக்குழுக்கள் வனப் பழங்குடிகள், கைவினைஞர்களின் கில்டுகள் முதலியன சாதிகளாக உள்வாங்கப்பட்டன. அதன் காரணமாக சூத்திர சாதிகள், தீண்டத்தகாத சாதிகள் ஆகியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குப்தர் கால எழுத்துகளில் வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் கூர்மையான வருண(சாதி) வேறுபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அன்று வீடு கட்டுவது முதற்கொண்டு அனைத்திலும் வருண வேறுபாடுகள் பார்க்கப்பட்டன. சட்ட முறையில் வருண வேறுபாடுகள் மிக அதிக அளவில் பார்க்கப்பட்டன. சாட்சி, சாமீன், சட்டம், நீதி போன்றவற்றில் வருண அடிப்படையில் சமத்துவமின்மை மிகப்பெரிய அளவில் நிலவியது. வருண அமைப்புக்கு அன்று எதிர்ப்பும் இருந்து வந்துள்ளது. சூத்திரர்கள் வருண அமைப்பு கொண்ட சமூகத்தின் மீது பகைமை பாராட்டினார்கள். இதனைச் சமாளிக்க பார்ப்பனர், சத்திரியர் கூட்டுறவு அவசியம் என்பதை குப்தர் காலத்தில் எழுதப்பட்ட மகாபாரத சாந்தி பருவத்தின் ஒன்பது பாடல்கள் வலியுறுத்துகின்றன. வருண அமைப்பை செயல்படுத்த, பாதுகாக்க மதமும் கடவுள்களும் பயன்படுத்தப்பட்டனர். அத்துடன் கீதையின் பக்திக்கோட்பாடும் கர்மவினைக் கோட்பாடும் வலியுறுத்தப்பட்டது போன்ற கருத்துகளை வரலாற்றாசிரியர் டி.என். சா குறிப்பிடுகிறார்(3). குப்த சமூகம் ஒரு வருண(சாதிய)ச் சமூகமாக, வைதீக பார்ப்பனியத்தின் கருத்தியல்களை நடைமுறைப்படுத்தும் சமூகமாக ஆகியிருப்பதை இவரது கருத்துகள் உறுதி செய்கின்றன.

குப்தர்களின் செவ்வியல் காலம்:

இரோமிலா தாபர், “குப்தர்கள் காலத்தைச் செவ்வியல் காலம் என்று வருணிப்பது சார்பு நிலையில் மேல் வகுப்புகளைப் பொருத்தவரை சரியே. அவ்வருணனைக்கு ஏற்றாற்போல் அவர்கள் அவர்களுடைய இலக்கியத்திலும், அவர்களுடைய கலையைப் பிரதிநிதித்துவப் படுத்துவதிலும் நன்றாகவே வாழ்ந்தார்கள். தொல்லியலிலிருந்து வருகிற மிகத்துல்லியமான எழுத்துச் சான்று பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கைப்பாணி ஒளிமயமாக இல்லை என்று காட்டுகிறது. தோண்டப்பட்ட இடங்கள் பொருள்நிறை வாழ்வில் சராசரி வாழ்க்கைத்தரம் இதற்கு(குப்தர் காலத்திற்கு) முந்தைய காலத்தில் உயர்வாக இருந்தது என்பதைத்தான் காட்டுகிறது” எனக் கூறுகிறார்(4). அதாவது குப்தர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த பெரும்பாலான மக்கள் குப்தர் காலத்தைவிட, உயர்ந்த பொருளாதார வாழ்வை வாழ்ந்தனர் எனத் தொல்லியல் சான்றுகள் தெரிவிப்பதாகக் கூறுகிறார் இரோமிலா தாபர்.

இரோமிலாதாபர் ‘குப்தர் காலத்திய செவ்வியல் என்பது குப்தர்களின் ஆட்சியிலிருந்து வெளிப்பட்ட ஒரு புதுமை (Innovation) அல்ல. ஏற்கனவே தொடங்கி நடைமுறையில் இருந்தவற்றின் உச்ச கட்டம். புதிய கலையியல் வடிவங்கள் வட இந்தியாவில் குப்தர்களுக்கு முந்தைய காலத்திலேயே தொடங்கி வைக்கப்பட்டன’ எனக் கூறுகிறார்(5). மேலும் இக்காலம் பார்ப்பனிய மறுமலர்ச்சிக்காலம் எனக் கருதப்படுகிறது. ஆனால் இக்காலத்தில் பல விடயங்கள் புத்த சமண மத மரபுகளிலிருந்தும் மறுமலர்ச்சி அடைந்தன. குப்தர் காலத்திய இலக்கியச் சூழலில் சிற்றின்ப இலக்கியம் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. குப்தர்காலத்தில் மத இலக்கியம் படைக்கப்படுவது அதிகரித்தது. மார்க்கண்டேய புராணம், பிரம்மந்த புராணம், விசுணு புராணம், பாகவத புராணம், மத்சயா புராணம் போன்ற பல பழைய புராணங்கள் இறுதியாகத் திருத்தி எழுதப்பட்டன. நாடோடி பாணர்கள் எழுதிய புராணங்களைத் தொகுத்துத் திருத்தி எழுதும் பணியை பார்ப்பனர் எடுத்துக் கொண்டனர் எனக்கூறுகிறார் வரலாற்றாசிரியர் டி.என். சா(6).

வரலாற்றாசிரியர் டி.என்.சா குப்தர்காலம் குறித்து இறுதியாக, ‘சாதி வேறுபாடுகளும், சாதி இறுக்கமும் முன்பைவிட கூர்மையடைந்ததும் அக்காலத்தில்தான். சட்டமும், நீதியும் மிகத் தெளிவாக மேல் சாதியினருக்குச் சாதகமான பாரபட்சத்தைக் காட்டியதும் அக்காலத்தில்தான்…. சீனப்பயணி பாகியான் பொதுவாக மக்கள் மகிழ்ச்சியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அது உண்மைதான். உயர் வர்க்கங்கள் மகிழ்ச்சியாகவும், வளமாகவும், வசதியாகவும், சுகமாகவும் வாழ்ந்தார்கள்… ஆனால் கீழ்த்தட்டு மக்களின் விடயத்தில் இது உண்மையாக இருக்க முடியாது. சீனப்பயணியே சண்டாளர்களின் அவலநிலை பற்றிப் பேசுகிறார். தீண்டத்தகாத வர்க்கம் முழுமையும் சமூகப் படி நிலையில் மேலும் தாழ்த்தப்பட்டது அக்காலத்தில்தான்; சமூகப் பதற்றங்கள் தொடர்ந்ததும் அக்காலத்தில்தான்; ஆனால் வருணங்களால் பிரிக்கப்பட்டிருந்த சமுதாயத்தைப் பாதுகாப்பதற்காக மதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதும் அக்காலத்தில்தான்’ எனக் கூறுகிறார்(7). ஆகவே குப்தர் காலம் என்பது இந்திய வரலாற்றில் வருண வேறுபாடுகளைக்கொண்ட, சமூக சமத்துவமற்ற, சாதியமும் வைதீக பார்ப்பனியமும் முதல் முதலாக நிலை நிறுத்தப்பட்ட காலம். அன்றைய செவ்வியல் காலம் என்பது மேல் வருணத்தாருக்கே பொருந்தும். பெரும்பாலான சாதாரண மக்கள் முந்தைய காலத்தைவிட மிகத் தாழ்ந்த நிலையில்தான் வாழ்ந்து வந்தனர்.

குப்தர்கால அரசும் சாதியமும்:

குப்தர்கால அரசுதான் முதல்முறையாக இந்தச் சாதிய முறையை ஏற்று அங்கீகரித்துச் சட்டமாக ஆக்குகிறது. அதற்கு முன் அது கருத்தியலாகவும் சமூகத்தில் சிறிய அளவிலும் தான் இருந்து வந்தது. அதற்கு அரசின் சட்ட அங்கீகாரம் இருக்கவில்லை. ஆகவே இந்தியாவில் சாதியம் என்பது கி.பி. 4ஆம் நூற்றாண்டில்தான் அரசினுடைய சட்ட அங்கீகாரம் பெற்ற ஒன்றாக ஆகிறது. அதன்பின் தான் சாதியம் என்பது முழுமையான சமூக அங்கீகாரத்தைப் பெறுகிறது எனலாம். நாளடைவில் அது ஒரு முழுமையான அரசுச் சட்டமாகவும், சமூகம் அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட ஒன்றாகவும் ஆகிறது. குப்தர் காலத்துக்குள் அதாவது கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குள் வட இந்தியா முழுவதும் சாதியம் என்பது சட்ட, சமூக அங்கீகாரம் பெற்ற ஒன்றாக ஆகி அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொண்ட ஒன்றாக ஆகி விடுகிறது. ஆனால் குப்தர் காலத்தில் இதனை முதல்முறையாக சட்டமாக மாற்றிய பொழுது சூத்திரர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்ததாகத் தெரிகிறது. ஆனால் பார்ப்பனியம் சத்திரியர்களுடன் இணைந்து அதனை அடக்கி ஒடுக்கி விடுகிறது. அதனால்தான் அக்கால நூல்கள் பார்ப்பனிய சத்திரிய ஒற்றுமை குறித்து நிறையப் பேசுகின்றன.

ஆனால் சாதியம் என்பது கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. பிற்கால பார்ப்பனிய நூல்கள் அதுபோன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதுதான் உண்மை. கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவில்தான் வகுப்புகளே உருவாகத் தொடங்குகின்றன. அதுவும் கங்கைச் சமவெளிப்பகுதியில் நகரமயமாதலைத் தொடர்ந்து இந்த வகுப்புக்கள் உருவாகின்றன. அன்று முன்பு குறிப்பிட்டதுபோல் பெரும்பாலான வடஇந்தியப் பகுதிகளில் இனக்குழு மக்களே இருந்து வந்தனர். இந்நிலை குப்தர் காலம் வரையிலுமே இருந்து வந்தது. ஆகவே முன்பே சாதியம் இருந்ததாகச் சொல்வது என்பது வரலாற்றை ஏரணக் கண்ணோட்டத்தில் பார்க்காததின் விளைவு எனலாம். புத்தர் காலத்திலோ, மௌரியர் காலத்திலோ சாதியம் இல்லை. வடஇந்தியா முழுவதும் பலபகுதிகளில் வகுப்புகளே முழுமையாக உருவாகாத நிலைதான் அன்று இருந்து வந்தது. அதனால்தான் அசோகன் கல்வெட்டுகள் வகுப்பு எனப்படும் வருணம் குறித்துக்கூட பேசவில்லை.

பார்ப்பன வம்சங்கள் ஆட்சிக்கு வந்தபின் உருவான வைதீக பார்ப்பனியம்தான் வருணத்தைச் சாதியாக மாற்றுகிறது. பண்டைய வேத இலக்கியங்களும் இன்ன பிற பண்டைய நூல்களும் கணம் குறித்தும், அகமணமுறை குறித்தும் பல்வேறுவிதமான திருமண முறைகள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளன. ஆகவே இவை அனைத்தையும் குறித்து விரிவாகவும் தெளிவாகவும் அறிந்து கொண்டிருந்த பார்ப்பனியம் அகமணமுறை மூலம் சாதியத்தைச் செயற்கையாக கொண்டு வருகிறது. முதலில் அவை தனது பார்ப்பன மக்களைத் தனிவகை மக்களாக, தனித்துவமான மக்களாக மாற்றுவதற்காக தங்களுக்குள் அகமணமுறையைக் கொண்டு வந்து தங்களைத் தனி சாதியாக ஆக்கிக் கொள்கின்றன. அதன்பின்னர்தான் அவை அனைத்து மக்களையும் சாதியாக மாற்றுவதால் தங்களுக்குக் கிடைக்கும் பலனை உணர்ந்து நால்வருண சாதிமுறையை அனைத்து மக்களுக்கும் செயல்படுத்துகின்றன. இவை அனைத்தையும் நடைமுறையில் கொண்டுவர இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகி விடுகிறது. அதனால்தான் பார்ப்பன வம்ச ஆட்சியில் இவற்றை அரசின் சட்டமாக ஆக்க முடியவில்லை. அதன் பின்னர் குப்தர் ஆட்சியில்தான் அதனை அரசின் சட்டமாக ஆக்க முடிந்தது. ஆகவே கி.முவுக்குப்பிறகுதான் இந்தியாவில் சாதியம் உருவாகத் தொடங்குகிறது எனலாம்.

வைசியர் சூத்திரர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே தான் சாதியம் அரச சட்டமாக ஆக்கப்படுகிறது. ஆகவே குப்தர் காலம் வரை சாதியம் முழுமையாக நடைமுறையில் இல்லை எனலாம். குப்தர் காலம்வரை, வைசியர், சூத்திரர் ஆகிய வகுப்புகளிடையே கலப்பு மணங்களும் கலந்து உண்ணுதலும் நடைமுறையில் இருந்து வந்தது. சிறிய அளவில் மேல் வகுப்பு பெண்களோடும் கலப்பு மணங்கள் நடந்து வந்தன. குப்தர் காலத்தில் இவை அனைத்தும் சட்டப்படி அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை செய்யப்பட்டு, மீறுவோர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப் பட்டன. இவற்றை எதிர்த்து வைசியர்களும் சூத்திரர்களும் போராடியதால், அவை பார்ப்பனர், சத்திரியர் ஒற்றுமையோடும், அரச ஆதரவோடும் கடுமையான வன்முறை கொண்டும் அடக்கி ஒடுக்கப்பட்டன. குப்தர் ஆட்சியின் தொடக்க காலமுதல் இவை அனைத்தும் நடந்து வந்தன.

குப்தர் காலத்தில் எழுதப்பட்ட மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில், அதன் பத்தி ஒன்றில், ஒரு கட்டத்தில் வைசியர்களும் சூத்திரர்களும் வேண்டுமென்றே பார்ப்பனர்களின் மனைவிகளுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது என்றும் அதே சமகால இலக்கியம் ஒன்று சூத்திரர்கள் குறித்து, பகையுணர்வு கொண்டவர்கள், வன்முறையாளர்கள், தற்புகழ்ச்சி பேசுபவர்கள், முன்கோபிகள், விசுவாசமற்றவர்கள், பேராசை கொண்டவர்கள், நன்றி கெட்டவர்கள், வைதீக விரோதிகள், சோம்பேறிகள், அசுத்தமானவர்கள் என்றெல்லாம் வர்ணிக்கிறது எனவும் கூறுகிறார் டி.என். சா(8). ஆகவே குப்தர் காலத்தில் முதல்முறையாகச் சாதியம் சட்டமாக்கப்பட்ட பொழுது எதிர்ப்புகள் இருந்து எனவும் அது அடக்கப்பட்டது எனவும் கருதலாம்.

எனவே சாதியம் என்பது இந்திய வரலாற்றின் தொடக்கம் முதல் இருந்து வருவதாகக் கூறுவது என்பது ஒரு மிகப்பெரிய புனைவு. கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் வைதீக பார்ப்பனியக் கருத்தியல் உருவான பின்பு சாதியம் செயற்கையான கருத்தியலாக உருவாக்கப்பட்டது என்பதே உண்மை. உலகம் முழுவது நாகரிகம் உருவாகும்பொழுது வகுப்புகள் உருவாவது போல்தான் இங்கும் வகுப்புகள் உருவாகின. ஆனால் வரலாற்றைப் புனைவுகள் மூலமும், புராணக் கதைகள் மூலமும், பழைய நூல்களை அழிப்பது, திருத்துவது, இடைச்செருகல் செய்வது, புதியதாகச் சேர்ப்பது போன்ற பலவகையிலும் பார்ப்பனியம், வேதகாலம் முதல் வைதீக பார்ப்பனியமும் சாதியமும் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளது. குப்தர்காலத்தில் தான் சாதியம் இந்திய சமூகத்தில் சட்ட, சமூக அங்கீகாரத்தைப் பெற்றது. அதற்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன் தான் வைதீக பார்ப்பனியமும், சாதியமும் இந்தியாவில் உருவானது. இவை பற்றிய தெளிவு இந்திய வரலாற்றாசிரியர்களிடம் இருக்க வேண்டும். பிராமணங்கள் மிகவும் பிற்காலத்தவை. ஆனால் அதர்வண காலம் முதல் பிராமணங்கள் உருவானதாகச் சொல்லப்படுகிறது. எனவே வைதீக பார்ப்பனியத்தின் புனைவுகளை, புரட்டுகளைப் புரிந்துகொண்டு ஏரணக் கண்ணோட்டத்தோடு வரலாற்றை அணுக வேண்டும்.

இனக்குழுக்களும் பூசாரி வகுப்பும்:

கி.மு. 600 முதல் கி.பி. 500 வரையான இந்திய வரலாற்றில் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பூசாரி வகுப்பு ஆட்சியைக் கைப்பற்றிய பின், வைதீக பார்ப்பனியக் கருத்தியலும் அதன் நால் வருணச் சாதியமும் உருவாகின்றன. சொத்துடமை உருவாகும்பொழுது உலகெங்கும் வகுப்புகள் மட்டுமே உருவானது. இங்குதான் மனித மாண்புக்கு எதிரான கொடூரமான சாதியமும் தீண்டாமையும் உருவாகிறது. நாகரிகம் உருவாகும்பொழுது உலகெங்கும் பூசாரி வகுப்பு அழித்து ஒழிக்கப்பட்ட பொழுது இந்தியாவில் பூசாரி வகுப்பு தப்பிப் பிழைத்ததோடு அது மகத அரசைக் கைப்பற்றி மனித சமூகம் அருவருக்கத்தக்கக் கொடூரமான சாதியத்தையும் தீண்டாமையையும் கொண்டு வருகிறது. கி.பி. 500க்குள் இந்த வைதீக பார்ப்பனியக் கருத்தியலும் அதன் சாதியமும் வட இந்தியச் சமூகம் முழுவதும் பரவி அனைத்து மக்களாலும் அரசாலும் முழுமையாக ஏற்று அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக, நடைமுறைப்படுத்தப்படுகிற ஒன்றாக ஆகிவிடுகிறது.

இந்தியச் சமூகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து நகர மயமாகி பேரரசுகளால் ஆளப்பட்டதாகத் தோன்றினாலும், குப்தர் காலத்தின் தொடக்கம் வரை இந்தியாவின் பெரும்பகுதி இனக்குழு அரசுகளால் ஆளப்பட்ட அநாகரிக மக்கள் வாழும் பகுதியாகத்தான் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாகத்தான் வட இந்தியாவில் பூசாரி வகுப்பும், அதன் வைதீகக் கருத்தியலும், சாதியமும் உருவாகி வளர்ச்சி பெற முடிந்துள்ளது. இனக்குழுக்களின் அநாகரிக நிலை என்பது பூசாரிகளுக்கும் சடங்குகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் ஒரு ஆதரவான சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. குப்தர்காலத்தின் தொடக்கம் வரை இந்தியாவின் பெரும்பகுதியில் இனக்குழுக்களைக் கொண்ட அநாகரிக மக்களே வாழ்ந்து வந்துள்ளனர் என்ற வரலாற்று உண்மையை நாம் மறந்துவிட முடியாது. வட மேற்கு இந்தியாவிலும், சிந்துவெளிப்பகுதியிலும், இராசசுதானிலும், கங்கைச் சமவெளிப் பகுதியிலும், அதனை ஒட்டியிருந்த வனப்பகுதிகளிலும், இமயமலையின் அடிவாரப்பகுதியிலும், இந்தியாவின் மத்தியப்பகுதிகளிலும்  கி.பி. 300இல் இனக்குழு அரசுகளே, இருந்து வந்தன. மக்கள் இப்பகுதிகளில் அநாகரிக நிலையில்தான் வாழ்ந்து வந்தனர். அங்கு தொழில் வளர்ச்சியோ, வகுப்புகளோ உருவாகி இருக்கவில்லை. இவைதான் பூசாரி வகுப்பு நிலைத்து நிற்பதற்கும் அவர்களின் சடங்குகளுக்கும் இன்னபிற மூட நம்பிக்கைகளுக்கும் ஒரு ஆதார இடமாக, ஒரு வளமான இடமாக இருந்து வந்துள்ளன. நகரங்களும் தொழில்வளர்ச்சி கொண்ட நாகரிக மக்கள் வாழும் இடங்களும் இந்த பூசாரி வகுப்புக்கும், அதன் சடங்குகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், அதன் வைதீக கருத்தியல்களுக்கும், சாதியத்துக்கும் எதிரானதாகவே இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனால் நகரங்களும் தொழில் வளர்ச்சியும் ஏற்பட்டு நாட்டின் பெரும்பாலான மக்கள் நாகரிக நிலையை அடைவதற்கு முன் பெரும்பாலான இனக்குழு மக்களைக் கொண்ட பேரரசுகள் உருவாகும் பொழுது அப்பேரரசுகள் பூசாரி வகுப்பையும், அதன் கருத்தியல்களையும் ஏற்கும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. நாகரிகமடைந்த, வளர்ச்சியடைந்த சமூகம் பூசாரிகளையும் அதன் கருத்தியல்களையும் ஏற்கும் சாத்தியக் கூறுகள் குறைவு. ஆனால் இந்தியச் சமூகத்தில் வைதீகப் பார்ப்பனியம் தனது கருத்தியல்களுக்கு மதத்தையும், கடவுளையும், வேதாந்தம், மீமாம்சம் போன்ற கருத்தியல்களையும், மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களையும், பல்வேறு புராணங்களையும், மனு சுமிருதி போன்ற சட்ட நூல்களையும் ஆதாரமாக வைத்துக் கொள்ளும் அளவு அப்பூசாரி வகுப்பு கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து ஆட்சியதிகாரத்தைக் கொண்ட வகுப்பாக, ஆளும் வகுப்பாக உருவாகி ஒரு அசுர வகுப்பாக, அசைக்க முடியாத வகுப்பாக வளர்ச்சியடைந்து விடுவதைக் காண முடிகிறது. இவ்வாறு வளர்ச்சியடைந்த அந்த வகுப்பு தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கு வட இந்தியாவின் பெரும்பகுதியில் வாழ்ந்து வந்த இனக்குழு அரசுகளே, அச்சமூகங்களில் வாழ்ந்து வந்த அநாகரிக மக்களே காரணமாக இருந்துள்ளனர் என்பதுதான் வரலாற்று உண்மை.

கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு, வைதீக பார்ப்பனியம், இந்திய சமூகத்தில் படிநிலையிலான சாதியத்தை அதன் தீண்டாமையை அரசதிகாரம் கொண்டு நடைமுறைப்படுத்தியதன் மூலம் அது ஒரு கொடூரமான கொடுங்கோல் ஆட்சியைத்தான் கொண்டு வந்தது. உலகின் பல நாடுகளில் இருந்து வந்த ஆண்டான் அடிமை முறையைவிட இந்த படிநிலை முறையிலான சாதியமும் அதன் தீண்டாமையும் மிக மிகக் கொடியது. பொற்காலம் எனச் சொல்லப்படும் குப்தர் காலத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது அதற்கு முந்தைய கால மக்களின் வாழ்க்கையைவிடக் கீழானதாக இருந்ததற்கு, அங்கு வைதீக பார்ப்பனியத்தின் சாதியத்தையும், தீண்டாமையையும் நடைமுறைப் படுத்தியதே காரணம். வைதீக பார்ப்பனியம் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தை அடிமை நிலைக்கும் கீழே கொண்டு செல்வதோடு, சமூகத்தின் மனித மாண்பை கேவலத்துக்குள்ளாக்கி, மனிதனது சுய உணர்வை விலங்கு நிலைக்கும் கீழே கொண்டு சென்று விடுகிறது.

மனித வரலாற்றில் கணச் சமூகத்தில் மக்களுக்கிடையே இருந்த சமத்துவத்தையும், முழுமையான மக்களாட்சியையும் கணக்கிலெடுத்து, வைதீக பார்ப்பனியத்தின் சாதியத்தையும், அதன் தீண்டாமையையும் ஒப்பிடும் பொழுதுதான் வைதீக பார்ப்பனியத்தின் சாதிய, தீண்டாமைக் கருத்தியலின் கொடூரத்தைப் புரிந்து கொள்ள இயலும். மனித சமூகம் தனது வரலாற்றில் பொருளியல் வளர்ச்சிக்காகத் தந்த விலை என்பது வர்க்க வகுப்பு வேறுபாடுகளாக இருந்தது. ஆனால் வைதீக பார்ப்பனியத்தின் சாதிய, தீண்டாமைக் கொடுமை என்பது எங்கும் இல்லாதது, இருக்கக் கூடாதது. இந்தியாவில் அதன் தனித்துவமான சூழலில், பண்டைய இந்தியாவின் இனக்குழுகாலச் சமூக நிலைமையைப் பயன்படுத்தி, பார்ப்பனியப் பூசாரி வகுப்பு உருவாக்கியதுதான் இந்த வைதீக பார்ப்பனியமும் அதன் சடங்குகளும் படிநிலையான சாதியமைப்பும். அறிவிலும், பண்பாட்டிலும் வளர்ச்சி பெற்ற சமூகங்கள், நேரம் வந்த பொழுது அவர்களது பழங்கடவுளர்களைத் தூக்கி எறிந்தார்கள். ஆனால் இந்தியர்கள் அதைச் செய்யவில்லை என பசாசு குற்றம் சாட்டுகிறார்(9). கிரேக்க அறிஞர் செனோபேனசு (Zenophanes), ‘மனிதர்கள் தங்களது சிந்தனையின் தகுதிக்கேற்ப தங்களுக்கான கடவுளர்களைப் படைத்துக் கொள்கிறார்கள்’(10) எனக் கூறுவதற்கேற்ப இந்திய மக்கள் பார்ப்பனியக் கடவுளர்களை, அதன் சடங்குகளை, அதன் சாதியத்தை இன்றும் பின்பற்றி வருவது என்பது இந்திய மக்கள் சமூகத்தின் அறிவு முதிர்ச்சி இன்மையைத்தான் காட்டுகிறது.

பார்வை:

1 பண்டையக்கால இந்தியா, டி. என். சா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 207.
2. பக்: 195.
3. பக்: 196 – 200.
4. முற்கால இந்தியா (Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 510.
5. பக்: 509.
6. பண்டையக்கால இந்தியா, டி. என். சா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 209 - 212.
7. பக்: 214.
8. பண்டையக்கால இந்தியா, டி. என். சா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 197-199.
9, 10. இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 50.

- கணியன் பாலன்