புரட்சிக்காரர்கள் தங்கள் தாய்த்திருநாட்டில் சுதந்திர ஒளியை ஏற்றி வைப்பதற்குத் தங்களையே மெழுகுவர்த்திகளாய்க் கொளுத்திக் கொண்டார்கள். பகத்சிங், ராஜகுரு ஆகியோரைத் தொடர்ந்து சுகதேவ், 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் மாலை லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். தூக்குமேடை ஏறும்போது அந்த இளஞ்சிங்கத்தின் வயது இருபத்து நான்கு தான்.

 பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில், லயால்பூரியில் 15.05.1907 ஆம் நாள் சுகதேவ் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் ராம் லால் தாப்பர். லயால்பூர் தன்பத்மல் ஆரியா பள்ளியில் ஏழாவது வகுப்புவரை பயின்றார். பின்னர், சனாதன உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.

 ஆரிய சமாஜ்க் கொள்கைகளில் மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். யோகா பயிற்சிகளிலும், மந்திரங்களை மனப்பாடம் செய்வதிலும், சொல்வதிலும் வல்லவராக விளங்கினார்.

 பஞ்சாபில் 1919 ஆம் ஆண்டு இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. சுகதேவுக்கு அப்போது பன்னிரெண்டு வயது. அவரது சித்தப்பா அசிந்தராமை இராணுவச் சட்டப்படி கைது செய்து சிறையிலடைத்தனர். சுகதேவ் சிறைக்குச் சென்று தனது சித்தப்பாவைப் பார்த்து வருவார். அப்போதே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மீது எதிர்ப்பும், வெறுப்பும், கோபமும் கொண்டார்.

 ஆங்கிலேய ஆட்சியாளர்கள் லயால்பூரியில் பள்ளி மாணவர்கள் அனைவரையும் ஒரு திடலில் கூட்டினர். அத்திடலில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யக் கொடியான 'யூனியன் ஜாக்' கொடியை ஏற்றினர். பின்பு மாணவர்கள் அக்கொடிக்கு சல்யூட் அடித்து வணங்கும்டி செய்தனர். ஆனால் சுகதேவ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

 லாகூர் தேசியக் கல்லூரியில் 1920 ஆம் ஆண்டு சேர்ந்து படித்தார். அங்கு பயிலும்போது தான் பகத்சிங் மற்றும் பல தோழர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது.

 மகாத்மா காந்தி 1921 ஆம் ஆண்டு அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் சுகதேவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஒத்துழையாமை இயக்கத்தைப் பார்த்த பின்பு அந்நிய ஆடைகளை தூக்கியெறிந்தார். கதராடைகளையே அணியத் துவங்கினார். தேசத் தொண்டு, நாட்டுக்கு உழைத்தல் போன்ற உயர்ந்த இலட்சியங்களை நெஞ்சில் ஏந்தினார்.

 இந்தியாவுக்கு சைமன் கமிஷ‌ன் வந்தபோது, நாடு முழுவதும் ‘சைமன் கமிஷ‌னே திரும்பிப் போ!’ - என்ற முழக்கம் எதிரொலித்தது. பகத்சிங்கும், அவரது தோழர்களும் சைமன் கமிஷ‌ன் வருகையை எதிர்த்துக் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். அப்பொழுது சுகதேவ் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். பின்பு ஊர்ப்பெரியவர்களின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டார்.

 சுகதேவின் தாயும், சகோதரிகளும் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினர். ஆனால், சுகதேவ் சுதந்திரப் போராட்டத்தில் தீவிர ஆர்வம் கொண்டிருந்ததால், திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

 ‘இந்துஸ்தான் குடியரசுப் படையில்‘ - சுகதேவ் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த அமைப்பில் உள்ள இளைஞர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் பணி சுகதேவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும்அப்பணியை ஒழுங்காகவும், வெற்றிகரமாகவும், நீண்ட காலம் செய்து வந்தார். இயக்கம் எத்தகைய பணியை அளித்தாலும், அதை மனம் உவந்து செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டார்; சுகதேவ், எப்பொழுதும் இயக்கத்தின் நலனை முன்னிறுத்தி செயல்பட்டார்.

 வெள்ளைக்காரக் காவல்துறை அதிகாரி ‘சாண்டர்ஸ்‘ கொலை உள்ளிட்ட லாகூர் சதி வழக்குக்காக 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.

 லாகூர் மத்திய சிறையில் 1930 ஆம் ஆண்டு தண்ணீர் கூட குடிக்காமல் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதப் போராட்டத்தின்போது மருத்துவமனைக்குக் கொண்டு போய் கட்டாயப்படுத்தி உணவு புகட்ட முயன்ற காவலர்களைத் தாக்கிவிட்டார். அதிகாரிகளையும் உதைத்து தள்ளினார். சிறைச்சாலையில் பகத்சிங் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

 சுகதேவ், தனிப்பட்ட முறையிலும் பகத்சிங்கிடம் அதிக அளவு அன்பு கொண்டிருந்தார்.

 பகத்சிங்கிற்கு அடுத்தப்படியாக, கம்யூனிசம், சோசலிசம் குறித்து அதிகம் கற்றவர் சுகதேவ். சுகதேவுக்கு அபார நினைவாற்றல் உண்டு. நிறைய நூல்களைப் படிப்பார். குறிப்புகள் எடுத்து வைக்காமல் தன் நினைவாற்றல் மூலம் பிறருக்கு மேற்கோள்களுடன் எடுத்து இயம்புவார்.

 நீதிமன்ற விசாரணையின்போது, சுகதேவ் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. புரட்சிகர இயக்கத்தின் கருத்துக்களையும், கொள்கைகளையும் விளக்குவதற்கு ஏற்ற முறையில் மட்டுமே, வழக்கு விசாரணையில் கலந்து கொண்டார். பகைவர்களின் நீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம் என்பது அவர் கருத்து. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த எவரிடமிருந்தும் நல்லெண்ணத்தையோ, நட்பையோ எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களிடம் அவர் அன்புடன் நடந்து கொள்ளவதும் இல்லை.

 மகாத்மா காந்தி புரட்சிப் போராளிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கை புரட்சியாளர்களை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. இது குறித்து பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் சிறைக்குள் விவாதித்தனர். இறுதியில், புரட்சியாளர்கள் சார்பாக மகாத்மா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுவது என்றும், அதை சுகதேவ் எழுத வேண்டுமென்றும் முடிவு செய்தனர். அம்முடிவின்படி, சுகதேவ் காந்திக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் வடித்திருந்த சிந்தனைச் சிதறல்களை சுதந்திர புரட்சிப் போராளிகளின் எண்ணங்களைத் தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தார் இப்படி :-

1. ”இந்த நாட்டில் சோசலிச சனநாயக அமைப்பை நிறுவுவதுதான் புரட்சியாளர்களின் இலட்சியம்; அந்த இலட்சியத்தில், திருத்தத்திற்கு இடமில்லை; புரட்சியாளர்கள் எவரும் வறட்டுக் கற்பனையாளர்கள் அல்ல. அவர்களுக்கு அழிவுச் செயல்களில் மட்டுமே மகிழ்ச்சி உண்டாகிறது எனத் தாங்களும் கருதமாட்டீர்கள்; இதை நான் நம்புகிறேன். இந்த உண்மையைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்; ஒவ்வொரு நடவடிக்கை எடுப்பதற்கும் முன்னால், நாங்கள் அனைத்து நிலைமைகள் பற்றியும் சிந்திக்கிறோம். நாங்கள் எங்கள் பொறுப்புகளை உணர்ந்து தான் இருக்கிறோம். நாங்கள் எங்கள் புரட்சிகரமான திட்டத்தில் ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கே பிரதான இடமளிக்கிறோம்; என்றாலும், இன்றைய சூழ்நிலையிலே அழிவுச் செயல்களைத் தான் அதிகமாக செய்ய வேண்டியுள்ளது.”

2. ”புரட்சியாளர்களின் தலைமையிலே, அவர்களுடைய கொடியின் நிழலில் நம் தாய்நாட்டு மக்கள் உயர்ந்த சோசலிச சனநாயகக் குறிக்கோளை நோக்கி நடைபோடும் நாள் வெகு தொலைவில் இல்லை. ”

3. காலத்தின் தேவைகளைப் பொறுத்து புரட்சியாளர்கள் தீர யோசித்து தங்களையும், தங்கள் போராட்ட வழிமுறைகளையும் மாற்றிக் கொள்வதுண்டு.

 எங்கள் நோக்கம் நிறைவேறும் வரைத் தொடர்ந்து போராட்டம் நடத்த நாங்கள் கடமைப்பட்டவர்கள்.

4. புரட்சியாளர்கள் போராட்டமுறை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக உருக்கொள்கிறது. சில நேரங்களில் அது வெளிப்படையாகவும், சில நேரங்களில் அது இரகசியமாகவும் உருவம் கொள்கிறது. சில சமயம் வெறும் கிளர்ச்சி மட்டுமே நடக்கிறது. சில சமயம் ஜீவமரணப் போராட்டமாக நடக்கிறது.

5. நாங்கள் போரை நிறுத்த வேண்டும் என்பதற்கு நீங்கள் காரணம் எதுவும் கூறவில்லை. ஆகவே, தாங்கள் வேண்டுகோளை ஏற்று கிளர்ச்சியை நிறுத்த எங்களுக்கு விருப்பமில்லை; உணர்ச்சி வசப்பட்ட வேண்டுகோள்கள் மட்டும் புரட்சிக்காரர்களின் போராட்டத்தை நிறுத்திவிட முடியாது.

6. பிரிட்டீஷாருடன் உடன்பாடு செய்து கொண்டு நீங்கள், கிளர்ச்சியை நிறுத்தி விட்டீர்கள்; அதனால் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டனர்; ஆனால், புரட்சியாளர்கள் இன்றும் சிறையில் வதைபடுகிறார்கள். 1915 ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட கதர் கட்சியைச் சேர்ந்த போராளிகள் தண்டனைக்காலம் முடிந்த பிறகும் சிறைக் கொட்டடிகளில் இன்னும் அடைபட்டுக் கிடக்கிறார்கள். தில்லி, சிட்டகாங், பம்பாய், கல்கத்தா, லாகூர் போன்ற சதி வழக்குகள் இன்னமும் நடந்து கொண்டே இருக்கின்றன. பல போராளிகள் தூக்குமேடையை எதிர்நோக்கி உள்ளனர்.

7. மேற்கண்ட பிரச்சினைகளிலிருந்தும் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று புரட்சியாளர்களுக்குத் தாங்கள் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறீர்கள். அவர்கள் போராட்டத்தை ஏன் நிறுத்த வேண்டுமென்பதற்கான காரணம் ஏதும் கூறவில்லையே ஏன்?

8. இதைப் பார்க்கும்போது தாங்களும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு புரட்சி இயக்கத்தை ஒடுக்க விரும்புகிறீர்கள் என்றே கருதுகிறோம். தங்கள் வேண்டுகோளின் நோக்கம் அதுதான்; தங்கள் வேண்டுகோள் மூலம் புரட்சி இயக்கத்திற்குள் பிளவையும், நம்பிக்கை துரோகத்தையும் தூண்டிவிடுகிறீர்கள். உங்கள் செயல், புரட்சிக்கு விரோதமான செயலாகும். புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் செய்யும் முயற்சிக்கு உதவுவதாகும்.

9. அப்படி இல்லையென்றால், நீங்கள் புரட்சி இயக்கத்தின் தலைவர்களை நேரில் சந்தித்து இதுபற்றி பேசி இருக்கலாம். ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை.

 இவ்வாறு முடிகிறது, விடுதலை வேள்வியின் வீரத்தியாகி சுகதேவ் காந்தியாருக்கு எழுதிய கடிதம்.

 கடைசிவரை, காந்தியிடமிருந்து புரட்சியாளர்களுக்கு உரிய உதவியோ, ஆதரவோ கிடைக்கவில்லை என்பதையே வரலாறு தெரிவிக்கிறது.

 இந்திய தேசிய விடுதலைக்குத் தூக்குமேடையை முத்தமிட்ட தியாகிகளின் நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம். அவர்களின் இலட்சியம் நிறைவேற, நமது பயணங்களை இன்றைக்கும் தொடர்வோம்.