அக்பர் தன்னுடைய தாயிடம் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். அவர் சொல்லை எப்போதும் தட்டாதவர். ஒரு முறை ஆக்ராவுக்கும் லாகூருக்கும் இடையே உள்ள ஓர் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தபோது, பணியாளர்களுடன் சேர்ந்து அக்பரும் தாயின் பல்லக்கை சுமந்திருக்கிறார். அந்தளவிற்குத் தாயை மதித்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒரு முறை தாயின் கட்டளையை ஏற்க மறுத்து விட்டார்.

போர்ச்சுகீசியர் ஒரு முறை முஸ்லீம்களின் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினார்கள். அந்தக் கப்பலில் கிடைத்த ‘குர்ஆன்’ நூலை ஒரு நாயின் கழுத்தில் கட்டி, ஓர் மூஜ் நகரத் தெருவிவிலே விட்டு, அடித்துத் துரத்தி விட்டார்கள். இதற்குப் பதில் நடவடிக்கையாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை ஒரு கழுதையின் கழுத்தில் கட்டியடிக்க வேண்டும் என்று அக்பரின் தாய் அவரிடம் கூறினார்.

அதற்கு அக்பர், “அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது ஓர் அரசனுக்கு அழகல்ல. எந்த மதத்தைப் பழித்துக் கூறினாலும் அது கடவுளை அவமதிப்பதேயாகும். எனவே உயிரற்ற அந்தப் புத்தகத்தின் மீது வஞ்சம் தீர்த்து, அந்த மதத்தினரைப் பழிக்க நான் விரும்பவிலை” என்று கூறிவிட்டார்.