Gandhiபோயர் யுத்தத்திறகுப் பிறகு, 1899-ம் ஆண்டு, மகாத்மா காந்தி அவர்கள் தென் ஆப்பிரிக்காவை விட இந்தியாவில்தான் தனக்கு வேலைகள் அதிகம் இருப்பதாய்க் கருதினார். இந்தியாவில் இருந்த அவரது நண்பர்களும் தாயகத்துக்குத் திரும்பி வரச் சொல்லி வற்புறுத்தி இருந்தார்கள். ஆகையால் காந்தி அடிகள் தனது சக ஊழியர்களிடம் தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்புதல் கிடைத்தது. தென்னாப்பிரிக்க இந்திய சமூகம் காந்தியை விரும்பினால் அவரை திரும்பவும் அழைத்துக் கொள்வது என்பதே அந்த ஒப்பந்தம்.

இந்தச் சமயத்தில் மகாத்மா காந்திக்கு நேட்டாலுடன் மட்டுமே நெருங்கிய தொடர்பு இருந்தது. நேட்டால் வாழ் இந்தியர்கள் தங்களது அன்பின் மிகுதியால் ஒவ்வோர் இடத்திலும் பிரிவு உபசார விழா நடத்தியதுடன், விலையுயர்ந்த வெகுமதிகளையும் வழங்கினார்கள். வெள்ளி, தங்கச் சாமான்களோடு விலை உயர்ந்த வைரச் சாமான்களும் வெகுமதியில் இடம் பெற்றிருந்தது.

‘இவைகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதற்கு தனக்கு என்ன உரிமை இருக்கிறது? இவைகளை வாங்கிக் கொண்டபிறகு ஊதியம் பெறாமல் சமூகத்துக்குச் சேவை செய்து வந்திருப்பதாக எப்படி எண்ணிக்கொள்ள முடியும்?’ என்பதே காந்தியடிகளின் யோசனையாக இருந்தது. கிடைத்த வெகுமதிகளில் 52 பவுன் பெறுமானமுள்ள தங்கச் சங்கிலியும் இருந்தது. இது கஸ்தூரிபாய்க்காக அளிக்கப்பட்டிருந்தது.

அன்று இரவெல்லாம் காந்தியடிகளுக்கு தூக்கமே வரவில்லை. ஒரு முடிவுக்கு அவர் வருவது என்பது அவ்வளவு எளிதாக இல்லை. இவ்வளவுக்கும் வீட்டில் விலை உயர்ந்த நகைகள் எதுவும் இல்லை. வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டதே அதற்குக் காரணம். மக்கள் நகைகளின் மீதுள்ள மோகத்தை விட்டு விட வேண்டும் என்று பல தடவை உபதேசம் செய்த காந்தி அடிகள் எப்படி அவைகளை உபயோகிக்க முடியும்?

முடிவில் இவைகளையெல்லாம் சமூகத்துக்குச் சொந்தமாகும் வகையில் சில தர்மகர்தாக்களை நியமித்து கடிதம் எழுதிக் கொண்டார். மறுநாள் காலையில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆலோசனை நடத்தி சரிசெய்து கொண்டார். இதற்கு குழந்தைகளை சம்மதிக்க வைப்பதில் சிரமம் அதிகமில்லை. “விலையுயர்ந்த வெகுமதிகள் தேவையில்லை என்பதுடன், அவை தேவைப் படும்போது வாங்கிக் கொள்ளலாம்.” என்று குழந்தைகள் ஒப்புக் கொண்டன. இதனையே தங்கள் அம்மாவிடம் சொல்லச் சொல்லி குழந்தைகளை துணைக்கழைத்துக் கொண்டார் காந்தி.

“நீங்கள் தட்டிக் கொடுத்தால் குழந்தைகள் சுலபமாக வேண்டாமென்று சொல்லிவிடும். நான் இவைகளைப் போட்டுக் கொள்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் என் மருமகப் பெண்கள் வரும்போது அவர்களுக்கு நகைகள் வேண்டியிருக்கும். அன்பின் மிகுதியால் அளிக்கப்பட்ட இவைகளை திரும்பக் கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்.” என்று கண்ணீர் மல்க கஸ்தூரிபாய் மறுத்து விட்டார்கள்.

எப்படி இருந்தாலும் நகைகளை இறுதியாக திரும்பக் கொடுத்து விடுவது என்று காந்தி உறுதியோடிருந்தார். இறுதியில் கஸ்தூரிபாயையும் சம்மதிக்க வைத்து வெற்றியும் கண்டார்.

அப்புறம் என்ன? 1896,1901ம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் யாவும் திரும்பிக் கொடுக்கப்பட்டன. ஒர் தர்மகர்த்தா பத்திரம் தயாரிக்கப்பட்டு வெகுமதிகளெல்லாம் ஒரு வங்கியில் சேர்த்தார் காந்தியடிகள். அவரின் விருப்பப்படியோ அல்லது தர்மகர்தாக்களின் விருப்படியோ அந்த நிதியை சமூக சேவைக்குப் பயன்படுத்த ஏற்பாடும் செய்தார்.

இது காந்தியடிகளின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். தற்சமயம் இவற்றைக் கேட்கும்போது ஏதோ ஒரு கற்பனை உலகில் மிதப்பதைப்போல் ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா?

பொதுஜன சேவையில் ஈடுபடுபவர்கள் விலை உயர்ந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது காந்திஜீயின் அபிப்பிராயம். அபிப்பிராயம் மட்டுமல்ல காந்தியின் ஆணித்தரமான கருத்தும் கூட. மேற்கண்ட நிகழ்ச்சியை இன்றைய சூழ்நிலையில், நாமும் நம் அரசியல்வாதிகளும் ஞாபகத்துக்குக் கொண்டு வருவது நல்லதுதானே!

குறைந்த பட்சம் நாமாகிலும் ஞாபகப்படுத்திக் கொள்வோமாக!

அனுப்பி உதவியவர்: சி.வ.தங்கையன்