ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா! 

அண்ணாத்துரை - அறிஞர் அண்ணா ஆனது எப்படி?

புகழ் பெற்ற எழுத்தாளர் கல்கி இரா. கிருட்டினமூர்த்தி ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கூட்டத்திற்கு வருவதாக இருந்த முதன்மைப் பேச்சாளர்கள் வரவில்லை. அந்நிலையில் கூட்டத்தில் இருந்தோரை நோக்கி 'உங்களில் யாரேனும் பேசுகிறீர்களா?' எனக் கல்கி கேட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த அண்ணாத்துரை எழுந்து சென்று பேசினார். அவரது பேச்சைக் கேட்ட கல்கி, 'இன்று முதல் இவர் அண்ணாத்துரை இல்லை! அறிஞர் அண்ணா!!' என்று பாராட்டிப் பேசினார். அதுவே அவரது பெயராக நிலைத்து விட்டது.

ஏ,பி,சி,டி - இல்லாத நூறு ஆங்கில வார்த்தைகள்

அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.

கின்னசு சாதனை

சென்னை மாகாணம் என்ற பெயரைத் 'தமிழ்நாடு' என மாற்றியவர் அறிஞர் அண்ணா. அவர் காலமானபோது அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தவர்கள் 1.5 கோடிப் பேர். ஒரு தலைவருக்கு இந்த அளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடியது இன்றளவும் கின்னசுச் சாதனையாகும்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணா

“ இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே”

- முத்துக்குட்டி