பதிப்புத் துறையில் தனியிடத்தைப் பெற்று தமிழ் நூல்களைச் சிறப்பாக வெளியிட்டு வருகின்ற சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைக் கட்டிக் காத்து வளர்த்தவர்.

                திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வயிரமுத்து சுந்தரத்தம்மையார் இணையருக்கு 22.09.1897 ஆம் நாள் நான்காவது மகனாகப் பிறந்தார் சுப்பையா பாளையங்கோட்டையில் பயின்று பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

                பின்னர், நெல்லை இந்துக் கல்லூரியில் சேர்ந்து இரண்டாண்டுகள் கற்று இடைநிலை வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.

                அவரது அண்ணன் திருவரங்கன், இலங்கையில் தமது வணிகத்துடன் புத்தக விற்பனை நிலையத்தையும் நடத்தி வந்தார். அவர் தாயகம் திரும்பி வந்த பின்னர், நெல்லையிலும், சென்னையிலும் புத்தக விற்பனை நிலையங்களைத் திறந்தார். சென்னை புத்தக விற்பனை நிலையத்தை சுப்பையா கவனித்துக் கொண்டார்.

                திருவரங்கன், மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகையைத் திருமணம் செய்து கொண்டார். சுப்பையா, மங்கையர்க்கரசி அம்மையாரை மணந்தார் அண்ணன் திருவரங்கன் திடீரென்று 1944 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். அதனால், அண்ணன் குடும்பத்தையும், தமது குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு சுப்பையாவுக்கே வந்தது. ‘தருமம்மிகு’ சென்னையைத் தன் இருப்பிடமாகக் கொண்டு நீடு வாழ்ந்தார்.

                சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவினார். தொடக்கத்தில் பிறர் வெளியிட்ட நூல்களை விற்பனை செய்து வந்தார். பின்னர், தாமே பல நூல்களைப் பதிப்பித்து வெளியிடலானார்.

                மூவர் தேவாரங்களையும், திருவிளையாடற் புராணத்தையும் விளக்கவுரையுடன் வெளியிட்டார். சைவ சமயக் குரவர்களின் வரலாறுகளையும் வெளியிட்டார். தமிழறிஞர் மு. வரதராசனாரின் தொடர்பால், சிறுவர் நூல்கள், இலக்கிய நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் முதலியவற்றைக் கொண்டு வந்தார். மு.வ.வின் திருக்குறள் தெளிவுரையைச் சிறிய நூலாக வெளியிட்டார். அந்த நூல் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் கண்டு, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி தமிழகத்தில் ஓர் உலக சாதனையைப் படைத்தது.

                ஓளவை சு. துரைசாமிப் பிள்ளையின் துணையோடு, இலக்கிய நூல்கள், காப்பியச் சுருக்க நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், உரைநூல்கள் முதலியவற்றை முனைப்புடன் வெளியிட்டார்.

                ‘பன்மொழிப் புலவர்’ கா. அப்பாதுரையார் மூலம், பிற மொழிக் கதை நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கச் செய்து வெளியிட்டார். ‘மொழி ஞாயிறு’ தேவநேயப்பாவாணரின் பல ஆய்வு நூல்களையும் வெளிக் கொணர்ந்தார்.

                ‘தணிகைமணி’ சு.செங்கல்வராயபிள்ளையின் மூலம், பன்னிரு திருமுறைகளுள் ஒன்பது திருமுறைகளுக்கு ஒளிநெறிக் கட்டுரை நூல்கள் வெளியிட்டு தமிழுக்குப் புது நெறி புகட்டினார்!. க.அ. இராசாமிப் புலவரைக் கொண்டு முப்பத்து மூன்று தமிழ்ப் புலவர்களின் வரலாற்று நூல்களைப் பதிப்பித்தார்.

                இளவழகனார் சில ஆண்டுகள் கழகப் புலவராக அமர்ந்து தமிழ்த் தொண்டு ஆற்றியபோது, சங்க இலக்கிய இன்கவித் திரட்டு, ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டது. உலகம் முழுவதும், தமிழ் இலக்கியப் பெருமையையும், சிறப்பையும் அது பறைசாற்றியது!

                புலவர்கள் கா.கோவிந்தன் தொகுத்த புலவர்களின் வரலாறுகளையும், வித்துவான் ‘செஞ்சொற்புலவர்’ அ.சு. நவநீதகிருட்டிணன் ஆக்கிய திருக்குறள் ஆய்வு நூல்களையும் பதிப்பித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை என்.கே. வேலன் உறுதுணையோடு தமிழில் வெளியிட்டு அறிவியல் துறை, தமிழகத்தில் வளர்ச்சி பெற சுப்பையாப் பிள்ளை தொண்டாற்றியுள்ளார்.

                ‘ஆட்சித் துறைத் தமிழ்’ ‘நகராட்சிமுறை’, ‘சட்ட இயல்’, ‘தீங்கியல் சட்டம்’, ‘குறள் கூறும் சட்ட நெறி’, ‘ஆவணங்களும் பதிவு முறைகளும்’ முதலிய நூல்களைத் தமிழில் எழுத வைத்து தமிழே ஆட்சி மொழியாக வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டார். மேலும், தமிழ்ப் புலவர்கள் பலரைக் கொண்டு, தமிழ் இலக்கண நூல்களும், பள்ளிப் பாடநூல்களும், துணைப் பாட நூல்களும், வெளியிட்டு கல்வித் துறை வளர்ச்சிக்குத் துணை நின்றார்.

                ‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ எனப் போற்றப்படும் மறைமலையடிகளின் அனைத்து நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளார்! சென்னை லிங்கி செட்டித் தெருவில் ‘மறைமலையடிகள் நூல்நிலையத்தையும்', பல்லாவரத்தில் ‘மறைமலையடிகள் கலைமன்றத்தையும்’ நிறுவினார்.

                இலக்கிய மாநாடுகளில் தமிழ் அறிஞர்கள் ஆற்றும் சொற்பொழிவுகளை முன்னதாகவே பெற்று அச்சிட்டு, நூலாக்கி, மாநாட்டில் வெளியிட்டு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கினார். ஆலயங்கள் முழுதும், அன்னைத் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென்று, வாழ்நாளெல்லாம் பாடுபட்டார்.

                தமிழ்ப் புலவர்களுக்குப் பாராட்டு விழா, நூல் வெளியீட்டு விழா, மொழி வளர்ச்சிக்கான விழா எனப் பல விழாக்களை நடத்தி, நற்றமிழ் வளர்த்தார்! பார்முழுதும் தமிழ் மொழி பரவிடவும், உயர்வு பெறவும் உண்மையுடன் பாடுபட்டார்.

                திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டும், ‘திருவள்ளுவர் கழகம்’ நிறுவியும் வள்ளுவம் பரவிட உள்ளம் சோராது உழைத்தார்.

                ‘சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்’ பதிப்புப் பணிளைச் செய்வதோடு, தமிழ் மொழித் திறன்களையும், தரணியெங்கும் வெளிப்படுத்தி வருகிறது. அவ்வகையில் ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் திங்கள் இதழையும் வெளியிட்டு வருகிறது.

                சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்து வெளியிட்ட சிறந்த நூல்களுக்கு, தமிழக அரசும், நடுவணரசும் பல பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டி உள்ளன.

                மயிலை சிவமுத்துவால் ‘தமிழ் நூற்காவலர்’ என்னும் பட்டமும், தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையினரால், ‘சித்தாந்தக் காவலர்’ என்னும் பட்டமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

                இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். ஜாகிர் உசேன் அவர்களால் 1969ஆம் ஆண்டு, சுப்பையாபிள்ளைக்கு ‘தாமரைச் செல்வர்’ (பத்மஸ்ரீ) விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

                தமிழக அரசு சார்பில் 1979 ஆம் ஆண்டு அந்நாளைய முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்னும் பட்டமளித்துப் பாராட்டினார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் ‘பேரவைச் செம்மல்’ என்னும் விருதளித்துப் பாராட்டியது.

                வையம் புகழ்ந்திட வாழ்வாங்கு வாழ்ந்து, தமிழ்ப் பதிப்புத் துறையில் சாதனை நிகழ்த்தி, தமிழுக்குத் தொண்டு புரிந்த வ.சுப்பையாப்பிள்ளை, தமது எண்பத்து அய்ந்தாவது வயதில் 24.01.1983 ஆம் நாள் காலமானார்.

- பி.தயாளன்