“பண்டையத்தமிழ் மக்கள் வணிகத்திலும், தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்கினர் என்பதை அண்மைக்காலத் தொல்லியல், கல்வெட்டியல், நாணய இயல் சான்றுகள் உணர்த்துகின்றன. இதனைச் சங்க இலக்கியங்கள் முழுமையாக வெளிப்படுத்தவில்லை” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள்(தொல்லியல் நோக்கில் சங்ககாலம், பக்: 79). தமிழர்கள் இரோம் நாட்டிற்கும், தாய்லாந்திற்கும் சென்று தங்கி வணிகம் புரிந்ததையோ, அவர்களின் பரவலான கல்வியறிவையோ சங்க இலக்கியம் குறிப்பிட வில்லை என்கிறார் அவர்(பக்: 80) சங்க காலத்தில் “எஃகும், வார்ப்பு இரும்பும் மேலை நாடுகளுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலவாணி ஈட்டப்பட்டுள்ளது. இரும்புத் தொழிநுட்பத்தில் திறமை மிக்கவர்களாகத் தமிழக மக்கள் திகழ்ந்துள்ளது போல் ஆடை நெய்வதிலும், சங்கு அறுப்பதிலும் நீர்ப்பாசனத்திலும் தமது தொழிநுட்பத்திறனைக் கொண்டிருந்தனரென்பதை எண்ணற்றத் தொல்லியல் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள். வார்ப்பு இரும்பு செய்யத் தனி நிபுணத்துவம் வேண்டும். காரணம் 1300 சென்டிகிரேடில் இரும்பை உருக்கி அதே வெப்ப நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கவேண்டும். இத்தகைய நிபுணத்துவத்தை தமிழர்கள் பெற்றிருந்தனர் என்கிறார் அவர்(அதே நூல், பக்: 130)

ka rajan bookசங்ககாலத் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்களில் மேன்மை பெற்றவர்களாக இருந்தனர் எனவும், அதன் மூலம் வளர்ச்சி பெற்று, பன்னாட்டு வணிகத்திலும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் மிக உன்னத நிலையை அடைந்திருந்தனர் எனவும் தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்ற தனது நூலின் 52 பக்கங்களில்(பக்: 79 முதல் 130வரை), விரிவாகக்கூறியுள்ளார் முனைவர் கா.இராசன் அவர்கள். அதனைச் சுருக்கமாகக் காண்போம். கி.மு.1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் பகுதி மக்கள் நுண்கற்கருவி பண்பாட்டிலும், வடபகுதி மக்கள் புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்தனர் எனவும், கி.மு 1000 வாக்கில் இவ்விரு பண்பாடும் இரும்புப் பண்பாட்டோடு இணைந்து, தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சி ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகக் கி.மு 1000 வாக்கிலேயே தமிழகம் எல்லாவிதங்களிலும் வளர்ச்சி அடைவதற்கு வித்திடப்பட்டது எனவும் தெரிவிக்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள். மேலும் தமிழர்கள் தங்களது கருத்து பரிமாற்றத்திற்கு ஒருவித வரிவடிவத்தை அன்றே பயன்படுத்தினர் என்கிறார் அவர். இந்த மக்கள்தான் தமிழகத்தில் இனக்குழு தோன்றவும், தொழில்நுட்பம் பெருகவும், அதன் மூலம் வெளிநாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொள்ளவும், தமிழகத்தில் எழுத்தறிவு எழவும், அரசு தோன்றவும், இறுதியாகச் சங்க இலக்கியங்கள் உருவாகவும் வழிவகை செய்தனர் என்கிறார் அவர். தங்களது இறுதிக் காலமான கி.மு.4-5ம் நூற்றாண்டில் சமண, புத்த, வைதீக இந்து மதங்களின் தாக்குதலுக்கு அவர்கள் உள்ளாகினர் என்கிறார் அவர்(பக்: 76).

  மேலைநாட்டுடனான வணிகம், முசிறி-அலெக்சாண்ட்ரியா வணிக ஒப்பந்தம், இலங்கை நாட்டுடனான வணிகம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான வணிகம் ஆகிய நான்கு தலைப்புகளில் திரு.இராசன் அவர்கள் தனது நூலில் பக்: 79 முதல் 108 வரை தமிழகத் தொழில்கள், அவைகளின் தொழிநுட்ப மேன்மை, உலகளாவிய வணிகம் முதலியன குறித்து விரிவான ஆதாரங்களோடு எழுதியுள்ளார். தமிழகத்தின் பண்டையத் துறைமுகங்கள், வணிக மையங்கள் முதலியன பல நூற்றாண்டுக் காலம் நிலைத்து நின்று தமது பணியைச் செய்து வந்துள்ளன என்பதை இவ்விடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகள் புலப்படுத்துகின்றன எனவும், இவை பன்னாட்டளவில் ஒருங்கிணைந்த மையங்களாக இயங்கி உள்ளமையும் தெரிகிறது எனவும், துறைமுகங்கள், தலைநகரங்கள், வணிக மையங்கள் ஆகியவற்றின் நிலவியல் அமைவிடத்தை நோக்கும்பொழுது அக்காலகட்டத்தில் மிகச் சிறந்த வணிகப் பெருவழிகள் உருவாகிவிட்டது புலனாகிறது எனவும் தெரிவிக்கிறார் இராசன் அவர்கள்(பக்: 80, 81).

 இலட்சத் தீவு, கள்ளக் கிணறு, திருப்பூர் ஆகியவற்றில் கிடைத்த இரோமக் குடியரசு நாணயங்கள் மூலம் அகத்தஸ் ஆட்சிக்கு முன்பே இரோமுடன் தமிழகம் வாணிகம் புரிந்துள்ளது. இந்தியாவில் கிடைக்கும் இரோம நாணயங்களில் 90% க்குமேல் பண்டைய சேரர் கொங்குப் பகுதிகளில்தான் கிடைத்துள்ளது. பிளினி சேர வணிகர்களைத் தனியாகக் குறிப்பிடுவதால், அவர் சொல்லும் 100 மில்லியன் செசட்டரஸ் (sesterces) தொகையில் பெரும்பகுதி சேர வணிகர்கள் தான் ஈட்டினர் (பக்.85 – 90). யவனர்கள் இலங்கைக்குச் செல்லாமலேயே அந்நாட்டுப் பொருட்களைப் பெற்றனர் எனப் பெரிப்ளஸ் சொல்வதன் மூலம் அவை தமிழகம் வந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நேரடியாக இரோம் நாடு சென்று வணிகத்தில் ஈடுபட்டனர் (பக்.85). தென் கிழக்கு ஆசிய நாடுகளோடு வணிகம் புரிந்த தமிழர்கள் 10 டிகிரி நீரோட்டம் (10 degree channel) என்ற கடல் நீரோட்டத்தைப் பயன்படுத்தி நேராக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பாலி, வியட்னாம் போன்ற நாடுகளுக்கு வணிகப் பயணம் மேற்கொண்டனர். கீழை நாடுகளுடனான வணிக உறவில் தமிழர்கள் கை ஓங்கியிருந்தது. இவை இராசன் அவர்கள் தெரிவிக்கும் தரவுகளாகும்.

 ஓதம்(TIDE) என்று அழைக்கப்படும் கடல் நீர் மட்டத்தில் ஏற்படும் உயர்வு தாழ்வுகள் முக்கியமானவைகளாகும். ஓதம் ஏற்படும்பொழுது கடல் நீர் ஒரு மைல் அளவிற்கு முன்னோக்கியும், பின்னோக்கியும் நகரும். இதை முன் ஓதம்(HIGH TIDE), பின் ஓதம்(LOW TIDE) என அழைப்பர். இதன் தன்மையை நன்கு அறிந்து, தமிழர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என நற்றிணையும் (117,335), அகநானூறும்(123, 220, 300) குறிப்பிடுகின்றன. கப்பலைத் துறைமுகத்திற்கு உள்ளே கொண்டுவரவும், வெளியே கொண்டு வரவும் இதன் சக்தியைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்கிறார் இராசன் அவர்கள். தமிழகத்தில் அன்று கல் நங்கூரங்கள் பயன்படுத்தப்பட்டன எனவும் நங்கூரத்தின் பயன்பாட்டை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது(375-379) எனவும் இராசன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 “முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம்” என்பது முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகன் ஒருவனுக்கும், எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் இருந்த அலெக்சாண்ட்ரியா நகரில் வாழ்ந்த கிரேக்க வணிகன் ஒருவனுக்கும் கி.பி.150 வாக்கில் ஏற்படுத்தப்பட்ட வணிக ஒப்பந்தமாகும்(எகிப்து நாடு அன்று இரோமப் பேரரசின் கீழ் இருந்தது). அந்த வணிக ஒப்பந்தப்படி, ஒரு தமிழ் வணிகன் ஒரு கப்பலில் ஒரு தடவை கொண்டு சென்ற வணிகப் பொருட்களின் பண மதிப்பீடு என்பது 2,94,84,000 கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது எனவும் வெள்ளி ஒரு கிராம் ரூ.10 எனக் கணக்கிட்டால் அதன் மதிப்பு சுமார் ரூ.30 கோடி ஆகிறது எனவும் கூறுகிறார் முனைவர் இராசன் அவர்கள்(பக்.89,90). தினமணி நாளிதழ்(20/3/2014) படி வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.48 ஆகும். ஒரு கிராம் வெள்ளியின் விலை சராசரி ரூ.40 எனக் கணக்கிட்டால் கூட அந்த வணிகப் பொருட்களின் இன்றைய மதிப்பு ரூ.120 கோடி ஆகிறது. அதாவது இன்றைய மதிப்புப்படி குறைந்தது சுமார் ரூ.100 கோடிக்கு மேல் ஒரு சங்ககாலத் தமிழ் வணிகன் ஒரு கப்பலில் ஒரு தடவைவணிகம் புரிந்துள்ளான். இச்செய்தி மிகமிக வியப்புக்குரியதாகும். அதனால் தான் நிறைய இரோம் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன எனலாம்.

தமிழகத்தில் அன்று மரக்கலங்களின் உரிமையாளர்களும், மரக்கலங்களின் தலைவர்களும், பெரும் வணிகர்களும் இருந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தந்தை ஒரு மாநாயகன் ஆவான். அதாவது பல மரக்கலங்களுக்குச் சொந்தமானவன் என்பது அதன் பொருளாகும். அதுபோன்றே கோவலனின் தந்தை மாசாத்துவான் என அழைக்கப்படுகிறான். சாத்து என்பது வணிகக் குழுவைக் குறித்தச் சொல் ஆகும். மாசாத்துவான் என்பது பெருவணிகன் எனப் பொருள்படும். இலங்கையில் சாத்துவன் அல்லது மகாசாத்துவன் எனப் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. ஆகவே இந்தப் பெரும் வணிகர்கள் சொந்தமாகக் காசுகளை வெளியிடும் அளவு சுய அதிகாரம் பெற்றவர்களாக இருந்துள்ளனர். தமிழகத்தில் மன்னர்களைத் தவிர்த்து மற்றவர்கள் காசுகளை வெளியிடவில்லை. தமிழ் வணிகர்கள் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருந்துள்ளனர் என்பதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. பண்டையத் தமிழகத்தின் பொருளுற்பத்தியும், தொழில்நுட்ப மேன்மையும், வணிகத்திறனும், உலகளாவிய வணிகமும் அவர்களைப் பெரும் செல்வந்தர்களாக ஆக்கியுள்ளது எனலாம்.

 கி.மு.5 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே நன்கு நெறிப் படுத்தப்பட்ட வணிகக் குழுக் கட்டமைப்புகள் இந்தியாவில் தோன்றிவிட்டன(அன்று இந்தியா என்பது பெரும்பாலும் பண்டைய தமிழகத்தையே குறிக்கும்). கீழை நாட்டு மெலுக்காவில்(Moluccas) விளையும் கிராம்பு (clove), எஜினியா அரோமேடிகா (Eugenia Aromatica) என்பதன் மொட்டுக்கள் முதலியன புகாருக்குக் கொண்டுவரப்பட்டு, பின் முசிறிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகின. ஆதிச்சநல்லூர், கொடுமணல் பகுதிகளில் கிடைக்கும் வெண்கலப் பொருட்கள் தாய்லாந்திலிருந்து இறக்குமதியாகன. தாய்லாந்தில் ‘பெரும்பதன்கல்’ என்ற தமிழ் எழுத்துப் பொறிப்புடன் கூடிய உரைகல் ஒன்றும், சங்ககாலச் சோழர் செப்புக்காசு ஒன்றும் கிடைத்துள்ளது. பண்டைய தமிழகத்தின் தயாரிப்பான அரிய கல்மணிகளும், கண்ணாடி மணிகளும் தாய்லாந்திலும், வியட்நாமிலும், தென் சீனத்திலும் கிடைக்கின்றன. தொழில் நுட்பத்தின் மேன்மை காரணமாகப் பொட்டாசியம் சிலிக்கா கலந்த மணிகள் தயாரிப்பு, தமிழகத் தொழில்நுட்ப வல்லுனர்கள் கையில் நீண்ட காலம் தங்கியிருந்தது என மணி ஆய்வில் புகழ் பெற்ற பிரான்சிஸ் (Francis) என்பவர் கூறுகிறார்.

  மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும், இலங்கையுடனும் தமிழகம் மேற்கொண்டிருந்த உறவுகள், பண்பாட்டுப்பரவல் என்பதற்கும் மேலானது என்கிறார் இராசன் அவர்கள். ‘கப்பல் கட்டும் திறன், கடல் நீரோட்டம் பற்றிய அறிவு, பருவக் காற்று என்னும் இயற்கைச் சக்தியை தன் வசப்படுத்திக் கொள்ளுதல், இறக்குமதி நாட்டின் எதிர்பார்ப்புக்குத் தக்கவாறு பொருட்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளப் பேணும் தொழில் நுட்பத் திறன், தனித்து இயங்காமல் வணிகக் குழுவாக இயங்குகின்ற தன்மை, பிற நாடுகளின் மொழி பண்பாடு ஆகியவற்றை அறிந்து அவற்றுடன் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய சமூக இணக்கம் போன்றவையே தமிழகம் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பன்னாட்டுடன் தொடர்ந்து வணிக உறவுகளை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தமைக்குக் காரணங்களாகும். இதற்குப் பெரும் துணையாக இருந்த ஒரு மிக முக்கியக் காரணி ‘தொழில் நுட்பத்தின் மேன்மை’ எனலாம்’(பக்.107,108) என்கிறார் இராசன் அவர்கள்.

  இராசன் அவர்கள், எஃகு செய்தல், மணிகள் தயாரித்தல, மரக்கலங்கள் கட்டுதல் ஆகியவற்றில் தமிழர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப மேன்மையைப் பெற்று, சிறப்புற்று விளங்கினர் என்பதை அகழாய்வுச் சான்றுகள் தெரிவிக்கின்றன என்கிறார்(பக்.108). கொடுமணல் பகுதியில் பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, சூதுபவளம், சேசுபர், அகேட், குருந்தம், வைடூரியம், மாவுக்கல் முதலிய அரிய கற்களைக் கொண்டு மணிகள் செய்யும் தொழில் சிறப்பாக நடந்து வந்துள்ளது எனவும், மேற்கூறியவற்றில் வைடூரியம், சூதுபவளம், அகேட் போன்றவை மூலப் பொருட்களாக இந்தியாவின் பிற பகுதியிலிருந்து தருவிக்கப்பட்டு இங்கு ஆபரணங்களாக உருவாக்கப் பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர்(பக்.122). மயிரிழை அளவு துளைகள் கொண்ட மணிகள் கொடுமணலில் கிடைப்பதால், இதில் தமிழர்கள் தொழில் நிபுணத்துவம் உடையவர்களாக இருந்துள்ளனர் எனவும், இத்தொழில் சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கியதோடு, அதிக அளவு அந்நியச் செலவாணியை தமிழகத்திற்கு ஈட்டித் தந்துள்ளது எனவும்(பக்.124) கூறுகிறார் முனைவர் இராசன் அவர்கள்.

 பிளினி தமது இயற்கை வரலாறு என்ற நூலில் இரும்புப் பொருட்கள் இரோம் நாட்டிற்குச் சேர நாட்டிலிருந்து வந்தன எனச் சொல்லியுள்ளார் எனவும், இரும்பு, எஃகு, கொல்லன், கருமைக்கொல்லன், உலை, உலைக்கூடம், துருத்தி, விசைவாங்கி, மிதியுலை, குடம், குறடு, குறுக்கு போன்ற இரும்புத் தொழில்நுட்பம் சார்ந்த சொற்கள் சங்க இலக்கியத்தில் வந்திருப்பது, இத்தொழில் சிறப்புற்று இருந்ததைத் தெளிவு படுத்துகின்றது என்கிறார் இராசன் அவர்கள்(பக்.128). இரும்பை உருக்க 1100 டிகிரி சென்டிகிரேடு வெப்பமும், எஃகாக மாற்ற 1300 டிகிரி சென்டிகிரேடு வெப்பமும் தேவை. இதனைக் கொடுமணலில் கிடைத்த உலைக்கலங்கள் அடைந்தன என்பதை இலண்டன் பல்கலைக்கழக உலோகவியல் பகுப்பாய்வும், இந்தியத் தொழில்நுட்பக் கழக பகுப்பாய்வும் உறுதி செய்துள்ளது எனவும், வார்ப்பு இரும்பு செய்ய தனி நிபுணத்துவம் தேவை எனவும், அதனைச் செய்ய 1300 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் இரும்பை உருக்கி நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டும் எனவும், தகடூர் பகுதியில் குண்டூர் என்ற இடத்தில் கிடைத்த உலைக்கலங்களின் மீது நடத்திய உலோகவியல் ஆய்வு இதனை உறுதி செய்துள்ளது என்கிறார் அவர்(பக்130). எனவே, எஃகு இரும்பும், வார்ப்பு இரும்பும் அன்றே தமிழகத்தில் மிக அதிக அளவு செய்யப்பட்டு மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதை இவை உறுதி செய்கின்றன என்கிறார் avarஇராசன் அவர்கள்.

 கப்பல் கட்டும் திறன், கடல் நீரோட்டம் பற்றிய அறிவு, பருவக்காற்று என்னும் இயற்கைச் சக்தியைத் தன்வயப்படுத்திக் கொள்ளுதல், இறக்குமதி நாட்டின் எதிர்பார்ப்புக்குத் தக்கவாறு பொருட்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளப் பேணும் தொழில்நுட்பத் திறன், தனித்து இயங்காமல் வணிகக் குழுவாக இயங்குகின்ற தன்மை, பிற நாடுகளின் மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிந்து, அவற்றுடன் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய சமூக இணக்கம் போன்றவையே தமிழகம் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பன்னாடுகளுடன் தொடர்ந்து வணிக உறவுகளை நிலைநிறுத்திக் கொள்ளக் காரணங்களாகும். இதற்கு பெருந்துணையாக இருந்த மிக முக்கியக் காரணி பழந்தமிழகத்தின் தொழில்நுட்ப மேன்மை தான் என்கிறார் அவர்.

  பண்டைய தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை ஆடம்பரப் பொருட்களாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை அத்தியாவசியப் பொருட்களாகவும் இருப்பதைக் காணலாம். ஏற்றுமதி செய்யப்பட்டவைகளில் வாசனைத் திரவியங்களும், மலைபடு பொருட்களும், பருத்தித் துணிகளும், எஃகுப் பொருட்களும், அரிய கல்மணிகளும் முக்கியப் பொருட்களாகும். இதில் பருத்தித் துணிகளும், எஃகுப் பொருட்களும், அரிய கல்மணிகளும் பழந்தமிழர்களின் உயர்தொழில்நுட்பம் கொண்டு உருவானவைகளாகும். பண்டையத் தமிழர்கள் நேரடியாக மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் தங்கள் சொந்தக் கப்பல்களில் பயணம் செய்து வணிகம் புரிந்துள்ளனர். அதனால் கப்பல் கட்டும் தொழில், கப்பல் பயணம் மேற்கொள்ளல் ஆகிய உயர்தொழில்நுட்ப விடயங்களிலும் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கினர் எனலாம்.

ஆதித்த நல்லூர் தொழில்நுட்பம்:

  ஆதித்த நல்லூர் அகழாய்வு பழந்தமிழர்களின் தொழிநுட்ப மேன்மையை வெளிப்படுத்துகிறது எனலாம். அகழாய்வின் போது பழந்தமிழ் மக்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்தன எனலாம். அவைகளில் பொன்நெற்றிப்பட்டங்கள், வெண்கலக்கிண்ணங்கள், வெண்கல ஏனங்கள், மூடிகள், குடுவைகள், கிண்ணங்கள், பூச்சாடிகள், வெண்கலச் சல்லடைகள், வெண்கலச் சட்டிகள், வெண்கல அணிமணிகள், இரும்பு வாள்களும் குத்துவாள்களும், இரும்பு ஈட்டிகள் அம்புகள், இரும்புக் கோடாரிகளும், மண்வெட்டிகளும், பல்வேறுவிதமான மட்பாண்டங்கள் ஆகியன அங்கு கிடைத்த முக்கியமான பொருட்களாகும். ஆதித்த நல்லூரில் கிடைத்த பொன்நெற்றிப் பட்டங்கள் 47 கிராம் வரை இருந்தன, பெரும் பாலானாவை 20கிராம் எடைக்கு மேல் இருந்தன.

கலையழகுமிக்க வெண்கலப்பொருட்கள்:

  அழகுமிக்க வெண்கலக்கிண்ணங்கள் பல இருந்தன. ஒரு வட்டமான அழகுத்தட்டின் மீது நிற்கும் இரண்டு புலிகளின் மேல் உள்ள இரண்டு தண்டுகளின் மீது பூச்சட்டி வைக்கப்படுமாறு ஒரு வெண்கலப் பூச்சட்டி இருந்தது. இன்னொரு பூக்கிண்ணம் வளைந்த கொம்புள்ள நான்கு எருமைச் சிலைகள் மீது அமைக்கப்பட்டிருந்தது. மற்றொரு பூக்கிண்ணம் வளைந்த கொம்புள்ள நான்கு காளைச் சிலைகள் மீது அமைக்கப்பட்டிருந்தது. இவை கலையழகுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. கலைஅழகுள்ள வெண்கல மூடிகள்பல கிடைத்துள்ளன.ஒரு மூடியின்மேல் வளைந்த கொம்புள்ள எருமை உள்ளது. இன்னொரு வெண்கலமூடியின் மீது கலையழகுமிக்க சேவல் நின்றுகொண்டுள்ளது. வேறொரு வெண்கலமூடியின் நடுத்தண்டில் நான்கு பறவைகள் நின்று கொண்டுள்ளன. ஒரு மூடியின்மேல் ஒரு விலங்கும் மூடியைச் சுற்றிலும் வளைவுகள், இலைகள், மொட்டுகள் ஆகியனவும் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு மூடிகள் கிடைத்துள்ளன.

மட்பாண்டங்கள்:

 ஆதித்த நல்லூர் அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களில் மட்பாண்டங்களே மிக அதிக அளவில் இருந்தன. அங்கு கிடைத்த மட்பாண்டச் சில்லு ஒன்றில் ஒரு மரம், ஒருமான், ஒரு முதலை, ஒரு நாரை ஆகியவற்றுடன் ஒரு பெண் நிற்பது போன்ற புடைப்பு உருவங்களைக் கொண்ட மட்பாண்டச்சில்லு குறிப்பிடத்தக்கதாகும். இவை ஆதித்த நல்லூரின் தொழில்நுட்பம் குறித்து அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும்(1.அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 52-60. 2.ANNUAL REPORT 1902-03, 1903-04, ARCHAEOLOGICAL SURVEY OF INDIA, NEW DELHI, 2002, P. 117- 163)

செம்பு உணர் கொம்புடை வாள்கள்:

 இந்த செம்பு உணர் கொம்புடை வாள்கள்(COPPER ANTENNAE SWORD) தமிழகத்தில் மூன்று இடங்களில் கிடைத்துள்ளன. 1980ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள சாவினிப்பட்டி என்கிற சிற்றூரில் ஒரு வாள் முதலில் கிடைத்தது. அதன்பின், 2000ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டம், அப்புக்கல் என்கிற சிற்றூரில் 4000 ஆண்டு பழமை வாய்ந்த எட்டு செம்பு உணர் கொம்புடை வாள்களும், 2001ஆம் ஆண்டில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலைப் பகுதியில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 8 செம்பு உணர் கொம்புடை வாள்களும் கிடைத்துள்ளன. இவைகள் முறையே 4000, 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என எம். காந்தி-வேலூர், சி.மகேசுவரன்-சென்னை ஆகிய இரு அருங்காட்சியகக் காப்பாட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இவை அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும்(1.அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 63-64; 2.M. GANDHI, COPPER ANTENNAE SWORDS OF APPUKKAL, MUSEUM’S JOURNAL , DECEMBER 2001, CHENNAI PP. 102-103; 3. LETTER FROM DR. C. MAHESWARAN, CURATOR, GOVERNMENT MUSEUM, CHENNAI)

ஆதித்த நல்லூர் புகழ்பெற்ற தொழில்நகரம்:

  ஆதித்த நல்லூரிலும், கிருட்டிணாபுரத்திலும் நடத்திய அறிவியல் ஆய்வுகள்படி, அவை சுரங்கத்தொழில் நகரங்களாக இருந்துள்ளன. அப்பகுதியில் காணப்பட்ட சுட்ட செங்கற்கள், உருக்கிய உலோகக் கசடுகள், உலையிலடப்பட்ட கரிக்கட்டைகள் பயன்படுத்தப்பட்ட தாதுமூலப்பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இப்பகுதியில் கிடைத்த தங்கம், இரும்பு, தாமிரம் ஆகிய உலோகங்கள் உள்ளூரிலேயே தோண்டி எடுக்கப்பட்டு உருக்கப்பட்டவைகளாகும். இரும்புத்தாதுப்பொருட்களில் டிட்டானியம், வனடியம், கார்பன் போன்ற பல தனிமங்கள் சேர்ந்திருந்ததால், இரும்பு உருக்கு ஆகிய பொருட்கள் மிகவும் உயர்ந்த தரம் வாய்ந்தவைகளாக இருந்தன. தாமிரப்பொருட்களின் தனிமக் கலவையில் உள்ளீயம் 4 முதல் 6 விழுக்காடு சேர்க்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு விழுக்காடு உள்ளீயமும் தாமிரத்தின் உறுதித்தன்மையை அதிகரிக்கச் செய்யும். அதன் காரணமாகவே அவை சேர்க்கப்பட்டிருந்தன.

  இரும்புப் பொருட்களின் தனிமக் கலவைகளில் டிட்டானியம், கார்பன், ஆக்சைடு, கார்பனேட் முதலியன சேர்க்கப்பட்டிருந்தன. உருக்குக்கலவையில் இருந்த தீதான வேதிப்பொருட்களை நீக்கும் தன்மையுள்ள வெண்ணாகம் உருக்கை உயர் விறைப்புத்தன்மையுடன் இழுக்க உதவும். எளிய கார்பன் உருக்கைவிட எவ்விதத் தீங்குல் இல்லாமல் மிகப்பெருஞ்சூட்டில் உருக்கை உறுதிப்படுத்த வெண்ணாகம் உதவுகிறது. ஆதலால் கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு அளவு வெண்ணாகம் உருக்குக் கலவையில் சேர்க்கப்பட்டிருந்தது.

  பி.சசிசேகரன், எசு.சுந்தரராசன், தி.வெங்கட்ராவ், பி.இரகுநாதராவ், எசு.பத்ரி நாராயணன், எசு.இராசவேல், தி.சத்தியமூர்த்தி, ஆர்.கே.கார்சியா ஆகிய தொல்லியல் வல்லுநர்களும், அறிவியல் அறிஞர்களும் ஆதித்த நல்லூரிலும், கிருட்டிணாபுரத்திலும் பல்வேறு ஆய்வுகளை நடத்தியபின் இந்த இரண்டு ஊர்களிலும் தொன்மைக்காலத்தில் நிலத்தின் மேற்பகுதியிலேயே நீண்ட தொலைவுக்குச் சுரங்கங்கள் இருந்தன என அறிவித்துள்ளனர். அங்கு நடைபெற்ற சுரங்கத்தொழில் பற்றியும், அந்தச் சுரங்கங்களில் கிடைத்த உலோகங்களின் தன்மைகள் பற்றியும் அவர்களுடைய அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆதித்த நல்லூரிலும், கிருட்டிணாபுரத்திலும் நடந்த சுரங்கத்தொழில் பற்றிய இவை அனைத்தும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும்(1.அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 88-93. 2.B.SASISEKARAN et al. ADICHANALUR: A PREHISTORIC MINING SITE, INDIAN JOURNAL OF HISTORY OF SCIENCE, 45. 3 (2010) PP. 369- 394 3.D. VENKAT RAO et al., RECENT SCIENTIFIC STUDIES AT ADICHANALLUR: A PRE HISTORIC MINING SITE , IN SANGAM: NUMISMATICS AND CULTURAL HISTORAY, NEW ERA PUBLICATIONS, CHENNAI- 2006, PP. 146-154)

 இவ்விதமாக ஆதித்தநல்லூர் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், VEnKALAPPORUTKAlவெண்கலப்பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும், அதனால்தான் அவர்களால் கலையழகுமிக்க மிகச் சிறந்த வெண்கலப்பொருட்களை தயாரிக்க முடிந்தது எனவும் கருதலாம். அதனால் பண்டையத் தமிழகம் தொழில்நுட்பம், பொருளுற்பத்தி, வணிகம் முதலிய பல துறைகளில் ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தது எனவும், ஆனால் இவைபற்றியப் பல செய்திகள் சங்க இலக்கியத்தில் இல்லை எனவும், அகழாய்வுத் தரவுகள் தான் இவைகளை வெளிக் கொணர்ந்துள்ளன எனவும், அந்த அகழாய்வுகளும் மிகமிகக் குறைந்த அளவே (ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு) நடத்தப் பட்டுள்ளது எனவும் முனைவர் கா.இராசன் அவர்கள் தெரிவிக்கிறார். ஆகவே தொடர்ந்து நடத்தப்படும் அகழாய்வுகள்தான் பண்டைய தமிழகத்தின் வளர்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தும் எனலாம்.

செவ்வியல் இலக்கியமும் பன்முக வளர்ச்சியும்:

  ஒரு மொழியின் இலக்கியம் செவ்வியல் தரத்தை எட்டியுள்ளது என்றாலே, அக்காலகட்டத்தில் அம்மொழிக்கான சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு, ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய, ஒரு வரலாற்றுப் பொற்கால கட்ட சமூகமாக இருந்துள்ளது என்பதாகிவிடும் எனவும், வேறுவகையில் சொல்லப்போனால், பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியடையாத ஒரு மொழிச்சமூகம் செவ்வியல் தரமுடைய ஒரு இலக்கியக் காலகட்டத்தைப் படைக்க முடியாது எனவும் முன்பே குறிப்பிட்டுள்ளோம். அந்த அடிப்படையில், செவ்வியல் தரமுடைய இலக்கியங்களைப் படைத்த சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய சமூகமாக இருந்துள்ளது. அதனை, முனைவர் கா.இராசன், முனைவர் அ. இராமசாமி போன்றவர்கள் தரும் பழந்தமிழர்களின் உயர் தொழில்நுட்ப மேன்மை, பொருளுற்பத்தி, உலகளாவிய வணிகம் பற்றிய தரவுகள் உறுதிப் படுத்துகின்றன எனலாம்.

கணியன் பாலன்

Pin It