தமிழ் இலக்கிய வளர்ச்சியில் வியத்தகு பணிபுரிந்த செம்மல்களுள் முக்கியமானவர் பேராசிரியர் க.நா. சிவராஜபிள்ளை. அவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், படைப்பாளர் எனப் பன்முகத் திறமை படைத்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வாழ்ந்து, நாற்பது ஆண்டுகள் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டாற்றியவர்.

குமரி மாவட்டம் வீமநகரி என்னும் கிராமத்தில் நாராயணபிள்ளை – முத்தம்மை வாழ்விணையருக்கு 1879 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். கங்கை கொண்டான் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி படிப்பை முடித்தார். நாகர்கோவிலில் உயர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். பின்னர், கோட்டாறு ஆங்கில உயர் நிலைப் பள்ளியில் பயின்று மெட்ரிக்குலேசன் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றார். பின்னர், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பில் தத்துவப் பாடத்தை சிறப்புப் பாடமாகக் கற்று, முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமை உடையவராக விளங்கி, 'நல்மாணவர்' என ஆசிரியர்களால் பாராட்டப்பட்டார்.

திருவிதாங்கூர் அரசின் காவல்துறை மேலதிகாரியாக நியமனம் பெற்றார். மேற்கொண்ட தொழிலில் சிறந்து விளங்கிய இவர் நேர்மை தவறாதவர். வெள்ளையர் ஒருவர் காலமான அன்று உண்மைக்கு மாறாகச் செயல்பட மறுத்த சிவராஜபிள்ளை தமது வேலையை உதறித்தள்ளினார். பின்னர், திருவனந்தபுரத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த ‘மனோன்மணீயம்' சுந்தரம்பிள்ளையை தொடர்பு கொண்டார்.

சிவராஜபிள்ளை 1926 – ஆம் ஆண்டு தமிழ் ‘லெக்சிகன்' பணிக்குச் சென்னை வந்தார். பின்பு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிப்பாசிரியராகத் தமிழ்த்துறையில் சேர்ந்தார். 1927 ஆம் ஆண்டு முதுநிலை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். தொடர்ந்து இணைப் பேராசிரியராகவும் பணியாற்றித் தமிழ்த் துறை தலைவரானார். அப்பணிக் காலத்தில் பாடநூல் குழு உறுப்பினர், ‘லெக்சிகன்’ கொளரவ உதவியாளர் எனப் பணியாற்றினார்.

‘புறநானூற்றின் பழைமை' என்னும் ஆய்வு நூலைத் தமிழில் 1929-ஆம் ஆண்டு வெளியிட்டாh. மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் ஆங்கிலத்தில், ‘தமிழ் நாட்டில் அகத்தியர்’ (Agastya in Tamil Land) என்னும் நூலை 1930 ஆம் ஆண்டும், ‘பண்டைத் தமிழரின் காலவரிசை' (The Chronology of the Early Tamils) என்னும் ஆய்வு நூலை 1932- ஆம் ஆண்டிலும் வெளியிட்டார். 1934- ஆம் ஆண்டு பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.

நாகர்கோவில் தங்கி, ‘ஐனமித்திரன்’ என்னும் தமிழ் இதழை சில காலம் நடத்தினார். அப்பொழுது திருவிதாங்கூர் பல்கலைக் கழகம் உருவானது. இவரது ஆய்வுக்கு திருவிதாங்கூர் அரசு மாத ஊதியம் அளித்து வந்தது. நூல்களைக் கற்பது நூல்களை ஆய்வு செய்வது, கவிதைகள் எழுதுவது என இவரது தமிழ்ப் பணி தொடர்ந்தது.

'நாஞ்சில் நேசன்' என்னும் தமிழ் வார இதழை நாகர்கோவிலிருந்து நடத்தி வந்தார். அக்காலத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட கொடுமைகள் , அடக்கு முறைகள், லஞ்ச லாவண்யங்கள், ஊழல்கள் முதலியவைகள் குறித்து துணிச்சலுடன் செய்திகளை எழுதி வெளியிட்டார். அதனால், திருவிதாங்கூர் அரசு அடக்குமுறைகளைக் கையாண்டு , இதழ் வெளிவராமல் தடுத்தது. ‘நாஞ்சில் நேசன்' ஒராண்டு மட்டுமே வெளி வந்தது.

திருவனந்தபுரம் மன்னர் கல்லூரியில் பேராசிரியராக விளங்கிய ‘மணேன்மணீயம் 'சுந்தரம்பிள்ளை , சிவராஜபிள்ளையை இதழாசிரியர் பணிக்கு அழைத்து, அவர் நடத்தி வந்த 'people’s opinion' ( மக்கள் கருத்து) என்னும் ஆங்கில இதழுக்கு துணை ஆசிரியராகப் பணியமர்த்தினார். இவருக்கு இதழியலில் குருவாக விளங்கியவர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு, மொழி ஆய்வு எனப் பல்துறையில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார். Malabar Quarterly Review (மலபார் காலாண்டு மீன் பார்வை) என்னும் ஆங்கில இதழைச் சுந்தரனாருடன் இணைந்து நடத்தினார். பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மறைவுக்குப் பின்பும் அந்த இதழை சிவராஜபிள்ளை தொடர்ந்து நடத்தி வந்தார். 1934 ஆம் ஆண்டு மீண்டும் நாகர்கோயிலிருந்து ‘ஐனமித்திரன்' என்றும் அரசியல் சமூக பண்பாட்டு இதழை நடத்தினார். ‘மதம்' என்னும் பொருள் குறித்து சிறந்த கட்டுரை ஒன்றை எழுதிப் பரோடா மன்னரிடம் ஜநூறு ரூபாய் பரிசிலும் பாராட்டும் பெற்றார்.

திருவனந்தபுரத்தில் இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், 'இந்திய சமூக விருப்பம் - ஒரு மீள் பார்வை' என்னும் பொருளில் ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வழங்கினார். பின்னர், 'குடிமக்கள் உரிமைச் சங்கம்' நடத்திய மாநாட்டில் 'இன்றைய சூழலில் மக்கள் கடைமையும் அரசின் கடமையும்’ என்னும் தலைப்பில் உரைநிகழ்த்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, 'மனோன்மணீயம் 'நூலின் இரண்டாம் பதிப்பை 1922 ஆம் ஆண்டு வெளியிட்டார். இப்பதிப்புக்கு பேராசிரியர் சிவராஜபிள்ளை ஆங்கிலத்தில் ஆய்வு மதிப்புரை எழுதி அளித்தார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தம் பதிப்புரையில் , “ஆய்வு மதிப்புரை எழுதியளித்த சிவராஜபிள்ளைக்கு ஒப்பான கல்வியாளர் தமிழ் நாட்டில் மிகச்சிலரே” என்று பாராட்டிப் புகழ்ந்துரைத்துள்ளார்.

இலங்கை யாழ்ப்பாண பொன்னம்பலம் இராமநாதன் கம்பராமாயணத்துக்கு ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரை நூலைச் சீர் செய்து அச்சிட வேண்டி இரண்டு ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் தங்கி அதனைச் சிறப்புறச் செய்து, அந்நூலுக்கு பதிப்புரையும் எழுதினார்.

திருவனந்தபுரம் செந்தமிழ்க் கழகத்தில் , 'தமிழ் கவிவாணருக்கு ஒரு விண்ணப்பம்' என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அச்சொற்பொழிவு 'செந்தமிழ்' இதழில் வெளியானது.

'மேகமாலை' , 'நாஞ்சி வெண்பா' , 'வாழ்க்கை நூல்', 'கம்பராமாயணக் கௌஸ்துபம்' , 'சிறுநூற் தொகை' 'புது ஞானக் கட்டளை' முதலிய கவிதை நூல்களை வெளியிட்டார்.

'நாஞ்சி வெண்பா' என்னும் கவிதை நூல் நாஞ்சில் நாட்டின் வரலாறு , நாட்டு எல்லை, இயற்கை அழகு, தெய்வங்கள், சாதிகள் , அரசு , ஆறுகள், ஏரிகள், அணைக்கட்டுகள், மக்களின் பழக்க வழக்கங்கள், நாணயங்கள் , விளையாட்டுகள், விழாக்கள், ஆசிரியர்கள் , பண்பாடு ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.

‘வாழ்க்கை நூல்' – இந்நூலில் , பொதுவியல் , இல்லொழுக்கவியல், தன்னொழுக்கவியல், சமுதாய ஒழுக்கவியல் , இயற்கையியல் ஒழியியல் என ஆறு இயல்களை உடையது. இந்நூல் இதுவரை அச்சில் வெளிவரவில்லை.

நாட்டுப்பாடல்கள் என்னும் தலைப்பில் , நாட்டுப்பற்று, சுதந்திர வேட்கை, சாதி வெறி, பெண்ணுரிமை முதலிய 26 தலைப்புகளில் பாடல்கள் எழுதியுள்ளார்.

பேராசிரியர் சிவராஜபிள்ளையால் எழுதப்பட்ட 'The Derivation of the words Tamil' என்றும் ஆங்கில ஆய்வுக் கட்டுரையை சென்னைப் பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

மேலும், “மொழிகள் மற்றும் நாடுகளின் பெயர்கள் பெரும்பாலும் அந்த மொழிகளைப் பேசுகிற அல்லது அங்கு வாழ்ந்த மக்கள் அல்லது இனங்களின் பெயர்களிலிருந்தே தோன்றியுள்ளன. உலக நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பல எடுத்துக் காட்டுகள் இதற்கு ஆதராவாக உள்ளன. ஒரு மொழிப்பெயர் , நாட்டு இனப்பெயருக்கு காலத்தால் முந்தித் தோன்றியிருக்க வழியில்லை ; காரணம் ஒரு நாட்டின் வாழ்வில் எழுதும் கலையும் இலக்கியமும் பிறந்த பின்னரே மொழி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ் மொழியைப் பொறுத்த வரையிலும் சங்கப்புலவர்கள், தமிழ் எனும் சொல் முதன் முதலாக மக்களையும் அவர்கள் நாட்டையும் குறிப்பிடுவதாகவே கொண்டுள்ளனர். தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து போன்ற கூற்றுகள், தமிழினஞ் சார்ந்த போர் வீரர்களைக் குறிப்பதெனில் , 'வையக வரைப்பில் தமிழகங்கேட்ப' போன்ற கூற்றுகள், தமிழர் வாழும் நாடாகக் குறித்து நிற்கின்றன. இவற்றால் 'தமிழ்' ஒரு இனப்பெயர் என்பது அது ஒரு மொழிப் பெயர் என்பதை விடக் காலப்பழமையானது என்று முடிவு கட்டமுடிகிறது. ” –என்று தமது ஆய்வுரையில் தெளிவுப்படுத்தி உள்ளார்.

உரைத்திறன் திறனாய்வுக்கும் வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தில் உரை காண முற்பட்ட முன்னோடிகளில் முதலிடத்தைப் பெறுபவர் சிவராஜபிள்ளை என்பது பதிப்பாசிரியர் மெய்யப்பன் கருத்து. அறிவியல் ஆய்வுமுறை இன்மையாலே பிறமொழிகள் அளவுக்குத் தமிழாய்வு சிறந்து விளங்கவில்லை என்பது சிவராஜபிள்ளையின் ஆதங்கம் !

“ 'சில தமிழ்ச்சொல்' ஆராய்ச்சி மூலம் சிவராஜபிள்ளை எழுபத்தொன்பது சொற்கள் குறித்து நுண்ணிய ஆராய்ச்சிக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இச்சொல்லாராய்ச்சியுடன் மேற்கோள் விளக்க முறை , பொருள் விளக்க முறை எனும் இரு சிறந்த கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். சிவராஜபிள்ளை, இந்நூலில் தம் நுண்மாண் நுழைபுலம் கொண்டு, சொற்களின் உண்மைப் பொருளைக் கண்டு அவற்றிற்குத் தக்க சான்றுகளும் காட்டித் தெளிவாக்கியுள்ளார்" என இந்நூலின் முன்னுரையில் டாக்டர் மு. வ. குறிப்பிட்டுள்ளார்.

சிவராஜபிள்ளை தமது ஆய்வினை கீழ்க்கண்டவாறு அமைத்துள்ளார்.

1. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி நன்கு அறிந்து தெளிதல்.

2. ஆய்வுக்குரிய பொருளின் இலக்கியச் சான்றுகள் முடியும் வரையும் திரட்டித் தருதல். (அ) முதல் தரச்சான்றுகள் , (ஆ) இரண்டாம் தரச் சான்றுகள்

3. ஆய்வுக்குரிய பொருளோடு தொடர்புடைய பிற கருத்துகளை ஆராய்தல் (ஒப்பீடு) .

4. வரலாற்றுக் கண்ணோட்டத்துடன், வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளைப் பயன்படுத்தி ஆராய்தல்.

5. கால ஆராய்ச்சி செய்தல்.

6. சான்றுகளை முதலாவது இரண்டாவது என வகுத்தும், தொகுத்தும் தருதல்.

7. தம்முடைய முடிவை முதலிலேயே கூறிவிட்டுப் பின்னர் அதற்குச் சான்றுகள் காட்டி நிறுவுதல்.

8. மாறுபாடுடைய கருத்துகளைச் சான்றுகளுடன் மறுத்துத் தம் கருத்தை நிறுவுதல்.

9. இலக்கியங்களில் காணப்படும் குறைகளை ஆழ்ந்து நோக்குதல்.

10. அறிவியல் கண்கொண்டு இலக்கிய ஆராய்ச்சி செய்தல்.

இலக்கிய ஆய்வு செய்வோர்க்கு இக்கருத்துகள் ஒரு வழிகாட்டியாக என்றும் நிற்கும்.

பேராசிரியர் சிவராஜபிள்ளை தமது 62 ஆவது வயதில் 1941 ஆம் ஆண்டு மறைந்தார்.

தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்த பேராசிரியர் சிவராஐபிள்ளை தமிழ் வரலாற்றில் ஒரு இலக்கியச் சிற்பி எனப் போற்றப்பட்டார்.