“தமிழன் என்றொரு இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;”

“தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா”

namakkal kaviஎன்று தமிழர்களைத் தட்டியெழுப்பியவர் நாமக்கல் கவிஞர். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு ‘சிந்தையினால், வாக்கினால், செய்கையினால்’ நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட‌வர். “நீர் ஒரு புலவன் ஐயமில்லை! நீர் எம்மை ஓவியத்தில் தீட்டும்; நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்” என்று மகாகவி பாரதியின் திருவாயால் பாராட்டைப் பெற்றவர். காட்சிகளைச் சிறப்பாகச் சித்தரிக்கும் ஓவியர். தமிழ்நாட்டின் தவப்புதல்வர். அவர் தாம் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்.

நாமக்கல்லில் வெங்கட்ராம பிள்ளைக்கும் - அம்மணி அம்மாளுக்கும் 19.10.1888 ஆம் நாள் அருமைப் புதல்வராகப் பிறந்தார்.

இளவயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்டு வளர்ந்தார். பாடங்கள் படிப்பதைக் காட்டிலும் படம் வரைவதில் இடைவிடாது ஈடுபட்டார்.

தொடக்கக் கல்வியை நாமக்கல்லில் உள்ள நம்மாழ்வார் பள்ளியில் பயின்றார். கோவையில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்தார். திருச்சியில் எஸ்.பி.ஜி. கல்லூரியில் (தற்போதைய பிசப் ஈபர் கல்லூரி) எம்.ஏ. படித்தார்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டுவிழா தில்லியில் 1912 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் நாள் நடைபெற்றது. பொறியாளரும் தமிழறிஞருமாகிய பா.வே. மாணிக்க நாயக்கருடன் அவ்விழாவுக்குச் சென்றார். அங்கு கவிஞரின் ஓவியங்களைக் காட்சிக்காக வைத்தனர்.

பாரத அன்னையே இங்கிலாந்து அரசருக்கு முடிசூட்டுவது போலவும், பக்கத்தில் அரசியார் இருப்பதாகவும் வரைந்து வைத்த ஓவியம் தங்கப்பதக்கத்தையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.

தந்தையின் விருப்பத்துக்காக சில மாதங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிந்தார். ஆனால், ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் எழுத்தர் பணியை உதறினார்.

தந்தையின் வற்புறுத்தலுக்காக நாமக்கல் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியரானார். பிரபல நாடக நடிகரான எஸ்.ஜி கிட்டப்பா, கவிஞருக்கு நன்கு அறிமுகமானவர். கிட்டப்பா சகோதரர்களின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதிக் கொடுப்பதும், நாடகத்திற்கான காட்சிகளை வரைந்து கொடுப்பதும் கவிஞருக்குப் பிடித்த பொழுதுபோக்கானது.

திருச்சி மாவட்டம், கரூர் வட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1906 ஆம் ஆண்டு முதல் விளங்கினார். திருச்சியில் 1914 ஆம் ஆண்டு ஒரு அரசியல் மாநாட்டைக் கூட்டினார். அம்மாநாட்டில் அன்னிபெசன்ட் அம்மையார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது, காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கிய நேரம். வட இந்தியாவில் ‘தண்டி’ எனும் இடத்தில் உப்புக் காய்ச்சத் தம் தொண்டர்களுடன் காந்தியார் நடந்து சென்றார். அதே தினத்தில் இராஜாஜி தலைமையில் தமிழகத்தின் வேதாரணியக் கடற்கரையில் உப்பு எடுக்கத் தொண்டர்கள் திரன்டனர். இவர்கள் தம் பயணத்தின்போது, தேச பக்தியை வளர்க்கும் வகையில் கீழ்க்கண்ட கவிஞர் இயற்றிக் கொடுத்த பாடல்களை உற்சாகத்துடன் பாடிக் கொண்டே நடந்தனர்.

“கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்”

கவிஞர், முத்தம்மாள் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். ஆனால், அவர் தீராத வயிற்று வலி நோய்க்கு ஆளாகி, சில ஆண்டுகளிலேயே இயற்கை எய்திவிட்டார். பின்னர் அவரது தங்கை சவுந்திரம் என்பவரை மணந்து கொண்டார். மூன்று ஆண் மக்களும், இரண்டு பெண் மக்களும் கவிஞருக்குப் பிறந்தனர்.

‘நாட்டுக்கும்மி’ எனும் தலைப்பில் நூறு தேச பக்திப் பாடல்களை எழுதி சேலம் விஜயராகவாச்சாரியாரின் பாராட்டுக்களைப் பெற்றார்! சென்னையில் 1924 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மகா சபை கூட்டத்தில், கவிஞருக்கு, ‘காங்கிரஸ் புலவர்’ என்ற பட்டமும், தங்கப் பதக்கமும் அளித்துச் சிறப்பித்தனர்.

“தம்மரசைப் பிறர் ஆளவிட்டுத்
தாம் வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்”

-என்ற கவிஞரின் பாடலைக் கேட்டு மகாகவி பாரதி பாராட்டினார்.

கவிஞரின் ‘என் கதை’ சுய சரிதை நூலைப் படித்தால் அக்காலத் தமிழ் வசன நடையை அது நமக்கு விளக்கும்!

‘அவனும் அவளும்’ என்ற இவரது காப்பியம் எளிய நடையில் அமைந்தது என்பர் இலக்கிய விமர்சகர்கள்.

நாமக்கல் கவிஞர், தமிழ்நாட்டு மக்களுக்கு, உயர்ந்த பல இலக்கிய நூல்களைப் படைத்துத் தந்திருக்கிறார். அவை நாட்டுப் பற்றையும், சுதந்திர உணர்வையும் ஊட்டுவன.

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு 1932 ஆம் ஆண்டு, ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார். வேலுர் சிறையில் அனைவருக்கும் திருக்குறள் வகுப்பு நடத்தினார்.

கவிஞரின் சிறைவாசத்தில் உருவான ‘மலைக் கள்ளன்’ என்னும் நாவல் மிகவும் அற்புதமானது. அந்நாவல் கோவை ஸ்ரீராமுலு நாயுடு அவர்களால் திரைப்படமாக்கப்ப‌ட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இந்திய குடியரசுத் தலைவரின் விருது வழங்கப்பட்டது. ‘அன்பு செய்த அற்புதம்’ என்ற சிறந்த நாவலையும் நாமக்கல்லார் படைத்து அளித்துள்ளார்.

சிறந்த உரையாசிரியராக விளங்கிய கவிஞர் ‘திருக்குறள் புது உரை’-என்ற உரைநூலை எழுதினார்.

‘சங்கொலி’, ‘தமிழன் இதயம்’, ‘தமிழ்த்தேன்’, ‘கவிதாஞ்சலி’, ‘இலக்கிய இன்பம்’, ‘தாயார் கொடுத்த தனம்’, ‘காந்தி அஞ்சலி’, ‘ தமிழ் மொழியும் தமிழரசும்’, ‘தேமதுரத் தமிழோசை’, ‘திருவள்ளுவர் திடுக்கிடுவார்’, ‘நாமக்கல் கவிஞர் பாடல்கள்’, ‘பிரார்த்தனை’-ஆகிய நூல்களைத் தமிழ் மக்களுக்கு அளித்துள்ளார்.

சென்னை கோகலே மண்டபத்தில் 11.08.1945 ஆம் நாள் கவிஞருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் பெருந்தலைவர் காமராஜர், திரு.வி.க, பி.இராமமூர்த்தி, இராஜாஜி, கல்கி ஆகியோர் கலந்துக் கொண்டு பாராட்டினார். பரிசாகப் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக 1947 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.

காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது, 09.03.1956 ஆம் நாள், கவிஞர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) நியமிக்கப்பட்டார். மீண்டுமொருமுறை 1962 ஆம் ஆண்டும் நியமனம் செய்யப்பட்டார்.

சாகித்ய அகாதெமியின் உறுப்பினராக 1953 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார் கவிஞர். மத்திய அரசு, 1971 ஆம் ஆண்டு ‘பத்மபூஷன்’ எனும் உயரிய விருதை அளித்துச் சிறப்பித்தது.

தமிழ் மொழியை, “அமிழ்தம் எங்கள் தமிழ் மொழி”, என்று நாளும் போற்றுவார்!

காந்தியுடன், நேரு, திலகர், தாதாபாய், வ.உ.சி, கோபாலகிருஷ்ண கோகலே, கவிதாகூர், வ.வே.சு. ஐயர், உ.வே.சா, பாரதியார், காமராஜர் எனப் பலத் தலைவர்களையும் புகழ்ந்து பாடியுள்ளார்.

தீண்டாமை என்ற தீய வழக்கம் ஒழிந்திட வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார்.

குடியினால் வரும் கேடுகளைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகிறார்.

"மக்களை வதைத்திடும்; மனைவியை உதைத்திடும்; பாடுபட்ட கூலியைப் பறிக்கும் இந்தக் கள்ளினை வீட்டைவிட்டு விரட்ட வேண்டும்.

மனைவி மக்கள் கஞ்சியின்றி வீட்டில் தவிக்க வைக்கும், கள் குடிப்பதன் விளைவாக மெய் தளரும்; மேனி கெடும்; கை நடுங்கும்; கால் நடுங்கும்.

கூலியைத் தொலைப்பதும், தாலியை இழப்பதும், கூசிட ஏசிடப் பேசுவதும், சாலையில் உருண்டு சவமெனக் கிடப்பதும், சந்தி சிரிப்பதும் கள் குடிப்பதனால் ஏற்படுகிறது. அதனால் கள்ளை நாடக்கூடாது. குடிப்பதைத் தடுப்பதே கோடி புண்ணியம்!" என்றெல்லாம் குடியின் தீமையை வலியுறுத்தியுள்ளார்.

கவிஞராக, நாவலாசிரியராக, விடுதலைப் போராட்ட வீரராக, பாடலாசிரியராக, ஓவியராக, சமூக சீர்திருத்தவாதியாக வாழ்ந்த நாமக்கல் கவிஞர், தமது 84-வது வயதில், 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 24 ஆம் நாள் மறைந்தார்.

சென்னை தலைமைச் செயலகம் ‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ என்று அவரது பெயரால் அழைக்கப்படுகிறது! அதன் மூலம், அவரது புகழும் பெயரும் செந்தமிழ் நாட்டாரால் சிறப்பிக்கப்பட்டு வருகிறது!

- பி.தயாளன்

Pin It