'சமையலறையே கதி - கணவனே கண் கண்ட தெய்வம் - குடும்பமே உலகம் - குழந்தை பெற்றுக் கொடுப்பதே வாழ்க்கை' என்று பெண்கள் வீட்டிற்குள்ளே அடிமைப்பட்டுக் கிடந்த காலம் அது! வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தைப் பெண்களுக்குத் தன் எழுத்து மூலமும், பத்திரிக்கைகள் வழியாகவும் காட்டிய பெருமைக்குரியவர் நாவலாசிரியை வை.மு.கோதைநாயகி! தமிழ் நாவல், இலக்கியத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்! இயல், இசை, நாடகம், பத்திரிக்கை, தேச விடுதலை, சமூக சேவை என்று பலதுறைகளில் பங்கேற்று முத்திரை பதித்தவர்.

 இந்திய தேச விடுதலைக்கு முற்பட்ட காலத்திலேயே, 'எழுத்துலக நாயகி' என்று போற்றப்பட்டவர்! அவர்தான் வை.மு. கோதைநாயகி!

 சென்னை திருவெல்லிக்கேணியில் 01.12.1901 ஆம் நாள் என்.எஸ். வெங்கடாச்சாரியார் - பட்டம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது பெண் மகவாகப் பிறந்தார். ஐந்தரை வயதானபோது 1907 ஆம் ஆண்டு மு. பார்த்தசாரதி என்பவருக்கு அப்போதைய "பால்ய விவாகம்" என்ற பெயரில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதனாலேயே முறையாகக் கல்வி பயிலும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது.

 ஆனாலும், கதை சொல்வதில் மிகுந்த ஆர்வமுயைவராகவும், திறமை மிக்கவராகவும் திகழ்ந்தார். அவரது கணவர், பல நாடகங்களுக்கு அவரை அழைத்துப் போவார். எழுதவோ, படிக்கவோ தெரியாவிட்டாலும் நாடகங்களைப் பார்த்த வை.மு.கோதைநாயகிக்கு, தானும் நாடகம் எழுத வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் அடிமனதில் முளைவிட்டது. விளைவு? வாய்மொழியாய்ச் சொல்லச் சொல்ல அவரது தோழி டி.சி.பட்டம்மாள் கையால் எழுதினார். இப்படித்தான் அவரின் முதற்படைப்பு "இந்திர மோகனா" - என்ற பெயரில் 1924 ஆம் ஆண்டு நாடகமாக வெளிவந்தது.

 வை.மு.கோதைநாயகியின் அந்நாடகத்தை சிறந்த நாடக ஆசிரியரான பம்மல் சம்பந்த முதலியார், புகழ்பெற்ற நாவல் ஆசிரியர் வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஆகியோர் பாராட்டினார்கள். தொடர்ந்து எழுதும்படி ஊக்கமளித்தனர். பத்திரிக்கைகளும் மிகவும் பாராட்டி எழுதின.

 நாடகம் எழுதிய வை.மு.கோதைநாயகியின் அடுத்த முயற்சி, நாவலாக மலர்ந்தது. தேவதாசிகளின் வாழ்வையும், அவர்களுக்கு ஏற்பட்ட மனக்காயங்களையும் மையக் கருத்தாகக் கொண்டு "வைதேகி" என்ற நாவலை எழுதி முடித்தார்.

 "ஜகன்மோகினி" என்ற தமிழ் மாத இதழை 1925 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கி நடத்தினார். அதில் தனது வைதேகியை தொடர் நாவலாக ஓராண்டு வெளியிட்டார். அப்பத்திரிக்கையை முப்பத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்திப் பெரும் சாதனை புரிந்துள்ளார். பள்ளி சென்று படிக்காதவர்தான்! ஆனாலும், நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிக் குவித்துள்ளார்.

 தான் எழுதும் கட்டுரையோ, சிறு கதையோ, நாவலோ, நாடாகமோ அதில் சமூகத்துக்கான கருத்துக்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார்.

 "ஜகன் மோகினி" பத்திரிக்கையைப் பெண்களைப் பெருமைப்படுத்தவும், பெண்களுக்கு வாய்ப்புத் தரவும், மாதர் முன்னேற்றத்துக்காகவுமே நடத்தலானார்.

தமது இதழில் அரசியல், சமயம், குடும்பம், வாழ்க்கை வரலாறு, மருத்துவம் குறித்து எல்லாம் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார். சிறுகதை, இசைப்பகுதி, விமர்சனப் பகுதி, பாலர் பகுதி, நாடகப் பகுதி எனப் பன்முகப் பத்திரிக்கையாக அதை நடத்தினார்.

"ஜகன் மோகினி" பத்திரிக்கையின் முகப்பில் பொலிவு இப்படி எடுப்பாயிருக்கும்;- "பயனுள்ள பொழுதுபோக்கு - சமூக சீர்திருத்தம் - மற்றும் மறுமலர்ச்சி" என்ற சொற்றொடரை மேற்கோளாகச் செதுக்கியிருந்தார்.

"ஜகன் மோகினி" பத்திரிக்கையை தமிழக இராணுவ வீரர்கள், தமிழக சிறைக் கைதிகள் ஆகியோரின் பொழுது போக்கிற்காக அரசாங்கமே விலை கொடுத்து வாங்கி வழங்கியது.

"ஜகன் மோகினி" - தன் பெயருக்கு ஏற்ப கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங்கு, இரங்கூன், ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் தீவு என தமிழர்கள் வசிக்கும் உலக நாடுகளுக்கு எல்லாம் கூட அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விற்பனையானது.

ஆணாதிக்க சமூகத்தின் நடுவே தனி ஒரு பெண்ணாக இருந்து, பல பெண் எழுத்தாளர்களை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளார் வை.மு.கோதைநாயகி.

 பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி பல கட்டுரைகள் வரைந்துள்ளார். தனது பத்திரிக்கையில் வெளியான கட்டுரைகள் மூலம் பெண்களுக்கு இலக்கிய அறிமுகத்தையும், உலக அறிவையும் ஊட்டினார். தமிழகத்தில் நடுத்தர மக்களிடையே பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.
 
வை.மு.கோதைநாயகி தனது நாவல்களில், விதவை மறுமணம், வரதட்சணைக் கொடுமை, தேவதாசி முறை ஒழிப்பு, கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் துயரம், கைம்பெண்களின் அவலம் போன்ற பெண்களின் வாழ்வியல் துன்பங்களைக் கூறி, அவற்றிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளையும் பதிவு செய்துள்ளார்.

மது, விபச்சாரம், சூதாட்டம், குதிரைப் பந்தையம் போன்றவற்றால் வரும் சீர்கேடுகளையும், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், தேர்தல் தில்லு முல்லுகள், திரைப்படங்களால் ஏற்படும் சமூக சீரழிவுகளையும் தம் நாவல்களில் சாடியுள்ளார்.

தேச விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார் வை.மு.கோதைநாயகி. கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிப் புறக்கணிப்பு, தீண்டாமை ஒழிப்பு, சுதேசிப் பொருட்கள் ஊக்குவிப்பு போன்ற காந்தீயக் கொள்கைகளையும் தம் நாவல்கள் மூலம் பரப்பியுள்ளார்.

"பெண்கள் முன்னேற கல்வியே அவர்களின் கண்கள்" - என்றார். கற்பு என்பது இருபாலருக்கும் பொது என்பதையும் வலியுறுத்தினார்.

தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாக ஒதுக்கி, இழிவாக நடத்தும் உயர் சாதியினரைப் பார்த்து, உரத்த குரலில் சாடினார்! "தாழ்த்தப்பட்டவர்களின் இரத்தத்தாலும், அவர்கள் சிந்திய வியர்வைத் துளிகளாலும் விளைவித்த தானியங்களை உண்டு வாழ்வது மட்டும் எப்படி சரி? " - என்று கேட்டார். உழைப்பை உறிஞ்சியும் அவர்களை அடக்கியும், ஒடுக்கியும் இழிவுபடுத்துவது மட்டும் அடுக்குமா? என்று பொங்கிச் சினந்தார். தனது "மகிழ்ச்சி உதயம்" நாவலில், சாதிக் கொடுமையை தோலுரித்துக் காட்டியுள்ளார்.

சென்னை மைலாப்பூருக்கு 1925 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்தபோது, வை.மு.கோதைநாயகியும், அவரது தோழிகளும் காந்தியை சந்தித்தனர். பளபளக்கும் பட்டுப் புடவையுடனும், மினு மினுக்கும் நகைகளுடனும், அலங்காரப் பதுமைகளாக காட்சியளித்தனர். இவர்களைப் பார்த்த காந்தி, "நம் தாய்நாடு அடிமை விலங்கை பூண்டிருக்கும்போது, நீங்களும் ஆபரண விலங்கை அணிந்திருக்கிறீர்களே?" - என்று கேட்டார். கதரின் மகத்துவத்தை உணரும்படி அவர்களுக்கு எடுத்துரைத்தார் அண்ணல்! அது முதல், பட்டாடை வெறுத்துக் கதர் ஆடையைத் தனது இறுதி நாள் வரை அணிந்தார் வை.மு.கோதைநாயகி. கதர் பிரச்சாரத்திலும், விற்பனையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஊர்வலங்களில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். பாரதியார் பாடல்களைப் பாடிப் போனார் ; தாமே எழுதிய தேச பக்த பாடல்களையும் பாடி முழங்கினார்.

காந்தி 1931 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டுமென அறிவித்தார். திருவெல்லிக்கேணியில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்கு தாமே தலைமையேற்று நடத்தினார் வை.மு.கோதைநாயகி.

அகில இந்திய காங்கிரஸ் இயக்கம் 1932 ஆம் ஆண்டு லோதியன் குழுவை எதிர்த்து ஊர்வலம் நடத்தும்படி அறிவித்தது. சென்னையில் ஆங்கிலேய அரசின் தடை உத்தரவை மீறி நடைபெற்ற ஊர்வலத்தில் வை.மு.கோதைநாயகி கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் ஆறு மாதம் அடைக்கப்பட்டார்.

"மகாத்மாஜி சேவா சங்கம்" - என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்து, அதன்மூலம் ஏழை, எளிய மக்கள் கண் அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை பெற வழி வகுத்தார். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்தார். ஏழைப் பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கிக் கொடுத்து படிக்க உதவினார்.

திரைப்படத் தணிக்கை குழுவில் உறுப்பினராகப் பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார். தணிக்கை செய்யப்பட்ட திரைப்படக் காட்சிகள், திரையரங்குகளில் மீண்டும் காட்டப்படுகின்றனவா? என்பதை மாறுவேடத்தில் சென்று பார்த்து வருவார். தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தால், அத்திரைப்படத்தை மீண்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பச் செய்வார்.

வை.மு.கோதைநாயகி இயல், இசை, நாடகம் என்ற முத்தமிலிலும் ஈடுபாடு கொண்டு "முத்தமிழ் வித்தகி"யாகத் திகழ்ந்தார். நாடு நமக்கு என்ன செய்யுமென்று அவர் எதிர்பார்த்ததில்லை. ஆனால், நாட்டுக்கு அவர் செய்த தொண்டு வரலாற்றில் என்றும் நிலைபெற்று விளங்கும்.

வை.மு.கோதைநாயகிக்கு கவியோகி சுத்தானந்த பாரதியார் "கலையரசி", "நாவல் ராணி" ஆகிய பட்டங்களை வழங்கிப் பாராட்டினார். மகாத்மாஜி சேவா சங்கம் "கலா சேவகி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.

வை.மு.கோதைநாயகி அம்மாள் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றதையும், சமூக சேவையையும் பாராட்டி அரசாங்கம் அவருக்கு பத்து ஏக்கர் நிலத்தை வழங்கியது. அம்மையார் அந்த நிலத்தை பூமிதான இயக்கத்துக்காக வினோபாபாவிடம் கொடுத்து விட்டார்.

வை.மு.கோதைநாயகி அம்மாள் காசநோயால் பாதிக்கப்பட்டு, தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி 20.02.1960 ஆம் நாள் காலமானார்.

வை.மு.கோதைநாயகி அம்மாள் தம் வாழ்வை எழுத்துப் பணிக்காகவும், சமூகப் பணிக்காகவும், நாட்டு விடுதலைக்காகவும் ஈந்தவர்! "பெண்ணிற் பெருந்தக்கயாவுள" - என்னும் குறள் மொழிக்கு ஏற்ப, பெண்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெருந்தகையாளர்!