இந்திய விடுதலைப் போராட்டத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான இந்தியத் தொழிலாளி வர்க்க அமைப்பு, தனது உரிமைகளுக்காகப் போராடியதுடன், தாய் நாட்டின் அடிமைத்தளையறுக்கவும் வீரம் செறிந்த போராட்டங்களை எழுச்சியுடன் நடத்தியது.

                ஆலைத் தொழிலாளர்கள், இரயில்வேத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு பிரிவுத் தொழிலாளர்களும், மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், சூரத், சென்னை, கோவை, வார்தா முதலிய இடங்களில் பலவகையான போராட்டங்களை நடத்தினர்.

                sakkarai_chettiyar_310இங்கிலாந்தைச் சேர்ந்த முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், இந்தியர்களால் நடத்தப்படும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் போட்டிகளை எதிர்கொள்ளவும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள், 1881 ஆம் ஆண்டு ‘தொழிற் சாலைகள் சட்டத்தை’க் கொண்டு வந்தனர். அச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் இயக்கம் கடுமையாகக் குரல் எழுப்பியது . மேலும், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நடத்திய தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களின் நலனுக்காகவும் போராடியது.

                தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும், இரயில்வேத் தொழிலாளர்களையும் ஆங்கிலேயர் அடக்குமுறையால் சுரண்டுவதை எதிர்த்து, தேச அளவில் போராட்டங்கள் வெடித்தன.

                இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொழிலாளர் வர்க்கம் எண்ணிக்கையில் வளர்ச்சி பெறத்துவங்கியது. சக்தி வாய்ந்த முதலாளிகளிடமிருந்து தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திடவும், உரிமைகளைப் பெறவும் சட்டங்கள் தேவை என்ற கருத்து தேசிய அறிவாளிப் பிரிவினர் கருதினர். தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராட ஒன்றுதிரண்டு சங்கங்கள் அமைக்க வேண்டுமெனவும், 1903 ஆம் ஆண்டு தேசப்பற்று கொண்ட தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.

                சென்னையில் ஆங்கிலேயரால் நடத்தப்பட்ட, 'பக்கிங்காம் அண்ட் கர்னாடிக் மில்லில் ( பி & சி )', 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் நாள் 'சென்னை தொழிலாளர் சங்கம்' துவக்கப்பட்டது.

                விடுதலைப் போராட்ட வீரரும், தலை சிறந்த தமிழறிஞருமான திரு. வி.க., வழக்கறிஞர் சக்கரை செட்டியார், செல்வபதி செட்டியார் ஆகியோர் இச்சங்கத்தை தோற்றுவிப்பதில் முக்கிய பங்காற்றினார்கள். 

                சென்னை தொழிலாளர் சங்கத்தை தோற்றுவிப்பதில் முதன்மையாக விளங்கிய, சக்கரை செட்டியார் 1878 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தையார் கேசவலு செட்டியார்; தாயார் ஆண்டாள் அம்மாள்.

                சென்னை கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் பயிலும் போதே ஆங்கில மொழியிலும், ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார். ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றார். கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று பி. ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போது கல்லூரி மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். அந்நாளில் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு, ஒரு முறை கிறித்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிட வருகை புரிந்தார். இறுதியில், மாணவர் தலைவரான சக்கரை செட்டியார் நன்றியுரையாற்றினார். அவரது தூய ஆங்கில உரையைக் கேட்ட கர்சன் பிரபு மிகவும் பாராட்டினார்.

                கிறித்துவ போதனைகளால் கவர்ந்து ஈர்க்கப்பட்ட, சக்கரை செட்டியார் கிறித்துவ மதத்தைத் தழுவினார். ஆங்கிலத்தில் புலமை பெற்று விளங்கினாலும், தாய் மொழியாகிய தமிழ் மீது பற்றுக் கொண்டு, தமிழாசிரியர்'பரிதிமாற் கலைஞரிடம்’ தமிழ் பயின்றார். இரண்டு ஆண்டுகள் பெண்கள் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், 1902 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். சிறிது காலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

                சுக்கரை செட்டியார் 1910 ஆம் ஆண்டு செஞ்சுலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தமிழிலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு மறைமலையடிகளாரோடு நட்புக் கொண்டார். மேலும், மகாகவி பாரதியாரின் மிக நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். 1922 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாரதியின் பாடல் தொகுப்பான 'சுதேச கீதங்கள்' என்னும் நூலுக்கு, சக்கரை செட்டியார் முன்னுரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                சக்கரை செட்டியார் தேச விடுதலை இயக்கத்தில் ஆர்வம் கொண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சென்னை நகரக் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் சில காலம் பணியாற்றினார். சூரத்தில் 1907ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், வ.உ.சி, மகாகவி பாரதியார், சுப்பிரமணிய அய்யர் ஆகியோரோடு சென்று கலந்து கொண்டார். இந்த மாநாட்டில்தான், காங்கிரசின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மிதவாதிகளுக்கும், தீவரவாதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திலகரின் தலைமையில் அணிதிரண்ட தீவரவாதிகள் பிரிவினரோடு, சக்கரை செட்டியார், பாரதியார், வ.உ.சி. ஆகியோர் ஒன்று சேர்ந்தனர்.

                காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தும் பணியாற்றினார். ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம், வேல்ஸ் இளவரசர் வருகையைப் புறக்கணிப்பதற்கான போராட்டம் ஆகியவற்றைச் சென்னையில் நடத்துவதில் முக்கிய பங்காற்றினார் சக்கரை செட்டியார். தொழிற்சங்கத் தலைவராகவும் அவர் இருந்ததால், ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாகத் தொழிலாளர்களை அணிதிரட்டினார்.

                பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக்கில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற படுகொலையைக் கண்டித்து, சென்னையில் தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்.

                காங்கிஸ் கட்சி உள்ளாட்சி அமைப்புகளிலும், சட்ட மன்றங்களிலும் பங்கேற்க வேண்டும் என்ற கருத்து 1922 ஆம் ஆண்டு ஒரு பிரிவினரால் வலியுறுத்தப்பட்டது. திரு. வி.க., சக்கரை செட்டியார், எஸ். சீனிவாச அய்யங்கார் முதலியவர்களைக் கட்சி வேட்பாளர்களாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைத்து, காங்கிரஸ் வெற்றி பெற வைத்தது.

                திருவண்ணாமலையில் 1924 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15, 16 தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு, திரு. வி.க. தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில், காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்னும் தீர்மானத்தை சக்கரை செட்டியார் ஆதரித்தார்.

                காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும், முற்போக்கான எண்ணங்களைக் கொண்ட தம்மைப் போன்ற இளையதலைமுறையினரைக் கட்சியின் பெரிய தலைவர்கள் அடக்குவதாகவும் அறிவித்து விட்டு, சக்கரை செட்டியார், காங்கிரஸ் கட்சியிலிருந்து 1927 ஆம் ஆண்டு வெளியேறினார். பின்னர், நீதிக்கட்சியில் சேர்ந்தார். மத்திய சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ் .சீனிவாச அய்யங்காரை எதிர்த்து, நீதிக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். 1928 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் நாள் நீதிக் கட்சியிலிருந்தும் விலகினார். அதன் பின்னர் எந்தக் கட்சியிலும் உறுப்பினராகச் சேரவில்லை.

                சென்னையில் பி & சி ஆலையில் தொழிற்சங்கம் அமைப்பதிலும், அமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தை வழி நடத்துவதிலும் சக்கரை செட்டியார் முக்கிய பங்காற்றினார். தொழிற்சங்கத்தைத் துவக்குவதில் சக்கரை செட்டியாரோடு திரு. வி. க.வும், செல்வபதி செட்டியாரும் உறுதுணையாக விளங்கினர். 1917 ஆம் ஆண்டில் 'வெங்கடேச குணாம்ருத வர்ஷிணி சபா’ என்னும் அமைப்பின் பொதுச் செயலாளராகச் செல்வபதி செட்டியார் இருந்தார். இந்தச் சபாவில் தொழிலாளர்களுக்கெனத் தனிப் பிரிவு ஒன்றிருந்தது. 1917 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று தொழிலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தொழிலாளர்களின் நிலைமை பற்றி விவாதிக்கப்பட்டது.

                அந்நாட்களில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. பண்டிகைக்கான விடுமுறை நாட்களும் மிகக்குறைவு . விடுமுறை நாட்களை ஈடு செய்வதற்காகத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இக்குறைகளை நிர்வாகத்திற்கு தெரிவித்து, இவற்றிற்குத் தீர்வு காணத் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என அக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் முடிவு செய்தனர்.

                'சென்னை தொழிலாளர் சங்கம்' 27-04-1918 அன்று துவக்கப்பட்டது. பி.பி. வாடியா தலைவராகவும், திரு.வி.க, சக்கரை செட்டியார் இருவரும் துணை தலைவர்களாகவும், செல்வபதி செட்டியார், ராமானுஜூலு ஆகியோர் செயலாளர்களாகவும் பொறுப்பேற்றுச் சங்கத்தை வழி நடத்தினர்.

                எம்.எஸ்.எம் இரயில்வே தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய்த் தொழிலாளர் சங்கம் முதலிய தொழிற்சங்கங்கள் 1919 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டன. இந்தத் தொழிற்சங்கங்களை, திரு .வி.க, சக்கரை செட்டியார், ஈ.எல். அய்யர், வ.உ.சி, கஸ்தூரி ரங்க அய்யங்கார், எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் முதலிய காங்கிரஸ் தலைவர்களே தலைமை தாங்கி வழி நடத்தினார்கள். இவர்கள் தலைமை தாங்கி நடத்திய தொழிலாளர் போராட்டங்கள், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான போராட்டங்களாக மட்டுமன்றி, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தன.

                தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டான 'சிந்தனைச் சிற்பி ' சிங்கார வேலர் இத்தொழிற் சங்கங்களை அமைப்பதற்கும், தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் பேருதவி செய்தார்.

                தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு அமைப்பு 1920 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பிற்குத் திரு.வி.க. தலைவராகவும், மிருணாளினி சட்டோபாத்யாயா செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் சக்கரை செட்டியார் இந்த அமைப்பின் தலைவராகச் செயல்பட்டார்.

                வேலை நிறுத்தத்தைத் தூண்டியதற்காகத் தொழிற்சங்கத் தலைவர்களை நாடு கடத்தப் போவதாக வெள்ளைக்கார கவர்னர் வெலிங்டன் அறிவித்தார் . அன்று ஆட்சியிலிருந்த நீதிக்கட்சித் தலைவர்களான பி.தியாகராய செட்டியார், பனகல் அரசர் முதலியோர், வெள்ளைக்கார கவர்னரின் முடிவு எங்கள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும், இதன் விளைவாக எங்களது கட்சி ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறினார்கள். அதனால், தொழிற்சங்கத்தலைவர்களை நாடு கடத்தும் முடிவைக் கைவிட்டார் கவர்னர்!

                பர்மா ஆயில் கம்பெனியைச் சார்ந்த மண்ணெண்ணைய்த் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 1927 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போராட்த்தில் பதினொரு தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். அப்போது, சென்னை மாநகராட்சி உறுப்பினராக சக்கரை செட்டியார் இருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநகராட்சி நிதியிருந்து உதவிகள் வழங்கிட ஏற்பாடு செய்தார்.

                ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சி, தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களைத் தடை செய்திட சட்டம் கொண்டு வந்தது. அச்சட்டத்திற்கு எதிரான பல்வேறு போராட்டங்களையும் சக்கரை செட்டியார் தலைமையேற்று நடத்தினார்.

                இந்தியத் தொழிலாளர்களின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்திட 'விட்லி கமிஷன்' இந்தியாவிற்கு வருகை புரிந்த போது, அக்குழுவில் இந்தியப் பிரதிநிதிகள் சம அளவில் இடம் பெறவில்லை என்பதை எதிர்த்து சக்கரை செட்டியார் போராட்டங்களை நடத்தினார்.

                இந்தியாவில். முதல் மத்திய தொழிற் சங்க அமைப்பான 'அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸ்' (ஏ. ஐ. டி. யு. சி. ) 1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக லாலா லஜபதிராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரும் இந்த அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டனர்.

                சக்கரை செட்டியார், ஏ. ஐ. டி. யு. சி. யின் தமிழ் மாநிலத் தலைவராக 1943 முதல் 1945 வரையிலும், மீண்டும் 1951 முதல் 1956 வரையிலும் பொறுப்பு வகித்தார். 1948-1949 ஆம் ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் தடைசெய்யப்பட்டன. கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டவும் சக்கரை செட்டியார் வீரத்தோடும், உறுதியோடும் போராடினார்.

                சென்னை மாநகர மேயராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் செயல் பட்டார். ஆட்சி மொழி மசோதா 28.01.1956 அன்று தாக்கல் செய்யப்பட்டதை, முழு மனதோடு வரவேற்றும் ஆதரித்தும் உரையாற்றினார்.

                விடுதலைப் போரில் பங்கேற்று, தொழிலாளர்களின் நலன் காக்க தொழிற்சங்கம் கண்டு, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி, உழைக்கும் மக்களின் நலனுக்காக தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சக்கரை செட்டியார் 1958 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி மறைந்தார்! அவர் மறைந்தாலும், அவரது தொழிற்சங்கப் பணிகள் வரலாற்றில் நிலைத்திருக்கும்!

Pin It