பாண்டியனின் படைத் தளபதியாக விளங்கியவர் லிங்கையன். வீரமும் விவேகமும் இணைந்து விளங்கப் பெற்ற லிங்கையன், பிரதான அமைச்சருக்கு நிகராக மன்னராலும் மக்களாலும் மதிக்கப்பட்டவர்.

ஏராளமான சிறப்பியல்புகளைக் கொண்ட லிங்கையனுக்கு ‘காலிங்கராயன்’ என்ற சிறப்புப் பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தார் பாண்டிய மன்னர். ‘உத்தர மந்திரி’ என்று அழைக்கப்பட்ட காலிங்கராயன் ‘வெள்ளோடு’ என்ற ஊரை தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டை நிர்வகித்து வந்தார்.

‘வெள்ளோடு’ என்னும் ஊர் ஈரோட்டிலிருந்து பதினான்கு கிலோ மீட்டர் தொலைவில் சென்னிமலை செல்லும் வழியில் உள்ளது. இவ்வெள்ளோட்டின் அருகில் உள்ள ‘கனகபுரம்’ எனும் சிற்றூரில் பிறந்தவர்தான் காலிங்கராயன்.

தனது முப்பதாம் வயதில் ஆட்சி அலுவலில் சேர்ந்த காலிங்கராயன் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், குலசேகர பாண்டியன் என்ற மூன்று கொங்குப் பாண்டிய மன்னர்கள் காலத்தில் சுமார் நாற்பது ஆண்டுகள் அரசியல் தலைவராக விளங்கிய பெருமை பெற்றவர். கொங்கு நாட்டில் ஆதிக்க சக்திகள் வாழ்ந்த சில பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் கால்களில் செருப்பணிந்து செல்லக்கூடாது. அவர்களின் வீடுகளின் மங்கள காரியங்களோ, தீய காரியங்களோ நடந்தால் மங்கள வாத்தியங்கள், பேரிகை முதலியன வாசிக்கக் கூடாது.

இந்தத் தடையுத்தரவுகளை தவிடுபொடியாக்கி, அத்தனையையும் ரத்து செய்து, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவித்தவர் காலிங்கராயன். இதைக் கல்வெட்டில் தானே உத்தரவாய்ப் பதித்ததோடு, “தேவைப்படும் இடங்களிலெல்லாம் இந்த உத்தரவை கல்லிலும், செம்பிலும் வெட்டிக்கொள்க” என்றும் உத்தரவிட்டார் காலிங்கராயன். இந்த உத்தரவு பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களை கொங்கு நாட்டு கோயில்களில் இன்றும் ஏராளமாகக் காணலாம். 

நன்றி : (ஸ்டாலின் குணசேகரன் எழுதிய ‘வரலாற்றுப் பாதையில்’ நூலிலிருந்து)