1932 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி காந்தியடிகள் தனது இரண்டாவது சட்டமறுப்பு இயக்கத்தினைத் துவக்கினார். மறுநாள் ஆங்கிலேய அரசு காந்தியடிகளைக் கைது செய்து எரவாடா சிறைக்கு அனுப்பியது. காந்தியடிகளின் திடீர் கைது நாடெங்கிலும் கொந்தளிப்பை உருவாக்கியது.

கைதுக்கு அடுத்த நாள் 5 ஆம்தேதி ராஜபாளையம் நகரம் முன்னெப் போதைக் காட்டிலும் பரப்பரப்புடன் காணப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டுக் கிளர்ந்தெழுந்த தேசபக்தர்கள், 6 ஆம் தேதி ராஜபாளையம் நகரம் முழுக்க ‘கதவடைப்பு’ நடத்த முடிவு செய்தனர்.

போராட்ட அறிவிப்பையடுத்த 5ஆம்தேதி நள்ளிரவு முதல் ராஜபாளையம் நகரில், ஒருமாத காலத்திற்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 6ஆம் தேதி காலையில் ராஜபாளையத்தில் ஒரு கடைகூட திறக்கப்படவில்லை. கதவடைப்பு பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் வெற்றி பெற்றது.

ராஜபாளையம் தாலுகாவின் அன்றைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் கைது செய்யப்பட்டனர்.

ராஜபாளையம் நகர காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்டது.

8ஆம் தேதி மீண்டும் கதவடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அரசின் ஒவ்வொர் அடக்குமுறை அரிவிப்பும் அச்சமூட்டுவதற்குப் பதிலாக எழுச்சியை உண்டாக்கியது.

பிப்ரவரி 13 ஆம் தேதி மீண்டும் ராஜபாளையம் நகரில் ஊர்வலம் நடந்தது. மாலை 4 மணியளவில் ஜவகர் மைதானத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.ஒந்த ஊர்வலத்திற்கு பிள்ளையார்சாமித் தேவர் தலைமையேற்றார்.

ஊர்வலத்தில் வருவோர் நகர காவல் நிலையத்தைக் கடக்கும்போது, சிவகாசி சப்கலெக்டர் தலைமையில் காவலர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஊர்வலத்தினரை வழிமறித்தனர். தொண்டர்கள் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பலர் நினைவிழந்து சுருண்டு விழுந்தனர். ரத்தம் சிந்தி கொண்டிருந்த இந்தச் சுழலிலும் அடுத்தகட்ட ஊர்வலம் புறப்பட ஆயத்தமானது.

4.30 மணிக்கு, அடுத்தச் ஊர்வலம் அதே ஜவகர் மைதானத்திலிருந்து புறப்பட்டது. இந்த சித்தியாக்கிரகப் படைக்கு அரங்கசாமி ராஜா தலைமையேற்றார். இந்த ஊர்வலம் அதே காவல் நிலையத்தைக் கடக்கும் வேளையில், ஆத்திரத்தின் உச்சகட்டத்திலிருந்த காவல்துறை இளம் ஆய்வாளர் முத்தையா பிள்ளை, ‘லத்தி சார்ஜ்’ என்று காவலர்களை நோக்கி ஆவேசமாகக் கத்தினான்.

களம் இறங்கிய காவலர்கள் முதலில் அரங்கசாமி ராஜாவின் கையிலிருந்த மூவர்ணக் கர்தர்க்கொடியைப் பிடுங்கினர். கொடியை இறுகப் பற்றிக்கொண்டு, “வந்தே மாதரம்” , “வந்தே மாதரம்” என்று வீரமுழக்கமிட்ட அரங்கசாமி ராஜாவை நையப் புடைத்தனர். மற்ற தொண்டர்களையும் அடித்து நொறுக்கினர்.

“சப் இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு போலீசார் அரங்கசாமி ராஜாவைத் துவம்சம் செய்தனர். அரைமணி நேரத்திற்கும் மேலாக அடிபட்டுக் கொண்டிருந்தவர்களின் கதர்ச் சட்டைகள் அனைத்தும் இரத்தக் கறைபட்டு வண்ணம் மாறிக் கொண்டிருந்தது.

அரங்கசாமி ராஜாவின் கையை போலீசார் பூட்ஸ் கால்களால் மிதித்துக் கொண்டே அவர் கையிலிருந்த கொடியை பறித்துக் கிழித்தனர். அதை அவர் எதிர்க்க முயன்றபோது பூட்ஸ்கால்களால் அவரது வாயிலும் தலையிலும் மிதித்து அவர் சுயநினைவிழக்கின்ற அளவிற்கு அடித்தனர்” என்று ராஜபாளையம் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள பேராசிரியர் வி.வென்ங்கட்ராமன் குறிப்பிடுகிறார்.

தொண்டர்கள் ஆறு பேருக்கு அரசு மருத்துவமணையில் சிகிச்சை அளித்தனர். நல்ல நினைவு வந்த பிறகு தொண்டர்களைப் போலீஸ் ஜீப்பில் ஏற்றி , நகரைத் தாண்டி 4 கிலோ மீட்டருக்கு அப்பால் காட்டுப் பகுதியில் தூக்கிப் போட்டுவிட்டு வந்தனர்.

மீண்டும் அரங்கசாமி ராஜா தலைமையில் காட்டிலிருந்து தட்டுத் தடுமாறி, கைகால்களில் பலத்த அடி விழுந்த காரணத்தினால் நொண்டி நொண்டி நகரத்திற்குள் வந்தனர். இந்தக் கோலத்தில் இவர்களைப் பார்த்தவுடன் நகரமக்கள் ஆத்திரமடைந்தனர்.

மீண்டும் அதே காவல் நிலையத்தின் வழியே, கொதித்துப் போயிருந்த மக்கள் சூழ, அரங்கசாமி ராஜா தலைமையில் ஊர்வலம் பொனது. அரங்கசாமி ராஜாவின் மீது காவல்துறையின் கவனம் முழுக்கக் குவிந்தது.

இளம் ஆயவாளர் முத்தையா பிள்ளை அரங்கசாமி ராஜாவின் கால்களை கயிற்றால் கட்டினான். கயிற்றின் மறுமுனையை போலீஸ் ஜீப்பின் பின்பகுதியில் இறுக்கிக் கட்டினான். ஜீப்பின்மீது ஏறி ஜீப்பை எடுத்து ஆத்திரத்தில் வேகமாக ஓffஇனான். கயிற்றில் கட்டப்பட்ட அரங்கசாமி ராஜா ‘தரதர’ வென ரோட்டில் உரசிக் கொண்டே இழுத்து வரப் பட்டார்.

காவல் நிலையத்திற்கு வந்தவுடன் மயங்கிக் கிடந்த அரங்கசாமி ராஜாவின் உடல் மீது தண்ணீர் ஊற்றி, ஒரு நாற்காலிமீது சிரமப்பட்டு அமர வைத்தனர். உடல் பூராவும் ரத்தக் காயம். நெஞ்சில் ஈரமில்லாத காவலர்கள் வெளியிலிருந்து பொடிமணலை எடுத்து வந்து, அரங்கசாமி ராஜாவின் உடல் மீது தூவி, அவரை நாற்காலியில் கயிற்றால் இறுக்கிக் கட்டினர். அப்பொதும் ஆத்திரமடங்காத அவர்கள் அரங்கசாமி ராஜாவை காவல் நிலையத்திலிருந்த பரண்மீது தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மகிழ்ந்தனர்.

உயிர் போய்விடும் என்ற கடைசிக் கட்டத்தில் அரசு மருத்துவமனையில் அரங்கசாமி ராஜா சேர்க்கப்பட்டார். மயிரிழையில் உயிர் பிழைத்தார்!

பெரிய தலைவர்கள் மட்டுமல்ல, பெயர் தெரியாத எத்தனையாயிரம் பேர் இந்தியச் சுதந்திரத்திற்குத் தமது உயிரைக் கொடுத்து உரமேற்றியுள்ளனர். ராஜபாளையம் அத்தகு தியாகத்திற்கு கண்முன் தெரிகிற சாட்சியாகும்.

நன்றி: