பழமையான தமிழ் எழுத்துகள் 'பிராமி’ என்று குறிக்கப்படுகின்றன. தமிழ் பிராமியைப் பழமையான தமிழ் எனும் பொருளில் 'தமிழி’ என்று அறிஞர்கள் குறிப்பிடுவதும் நோக்கற்குரியது.

'தமிழ் பிராமி கல்வெட்டுகள் காட்டும் தமிழகச் சமூகப் பொருளாதார நிலை’ எனும் கட்டுரையில், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை சிறப்பு ஆணையர் திரு. தி. ஸ்ரீ. ஸ்ரீதர் அவர்கள், பழந் தமிழரிடையே தொழிலை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள்தாம் இருந்தனவே தவிர சாதியை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.  சாதி, இன ஏற்றத்தாழ்வுக் கொள்கை என்பது இந்தியப் பண்பாட்டோடு பின்னிப்பிணைந்தது என்றும் இக்கொள்கை இந்தியரின் மிகப் பழமையான கொள்கை என்றும் கூறப்படும் கருத்துகள் தவறானவை.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஆரியவர்த்தத்தில் ஆரியரால் உருவாக்கப்பட்ட கொள்கையே சாதி, இன ஏற்றத்தாழ்வுக் கொள்கை. இக்கொள்கை இந்தியாவிற்கு வந்த அந்நியர் உருவாக்கிய கொள்கை. இக் கொள்கை இந்தியரின் கொள்கை அன்று,  இந்தியப் பண்பாட்டோடு பின்னிப் பிணைந்த பழமையான கொள்கையும் அன்று.

இக்காலத்தில் ஒரே குடும்பத்தில் பொறியாளர், ஆசிரியர், மருத்துவர் எனப் பல தொழில்களைப் புரிபவர்களும் இருப்பதைப் போன்று சங்க காலத்தில் இருந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறிகின்றோம். உலகம் முழுவதும் தொழில் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், சாதி வேறுபாடு இந்தியாவில் மட்டுமே இருக்கின்றது. சாதி, தொழில் அடிப்படையில் வந்தது என்பது தவறான கருத்தாகும். சாதிக்கும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் 'இழிதொழில்’ ஆதிக்கவாதிகளால் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. யாராவது 'மலம் அள்ளும் தொழிலை’ விரும்பி ஏற்பார்களா? யாருமே விரும்பி ஏற்கமாட்டார்கள்தானே. ஆனால், இந்த 'இழிதொழில்’ இந்தியாவில் அடக்குமுறை சார்ந்ததாக உள்ளது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள் காணப்படாமல் தொழிலை அடிப்படையாகக் கொண்ட பெயர்களே பழந் தமிழரிடையே இருந்தன என்பதை அறிந்து கொள்ளத் துணை புரிகின்றது இக்கட்டுரை. ஆழ்ந்து நோக்குவோம்.

- தெ. தேவகலா

'தமிழ் பிராமி கல்வெட்டுகள் காட்டும் தமிழகச் சமூகப் பொருளாதார நிலை’
- தி. ஸ்ரீ. ஸ்ரீதர்

தமிழ் பிராமி கல்வெட்டுகள் மூலமாக அக்காலச் சமூகம், பொருளியல் வாழ்வைப் பற்றி அறியக் கிடைக்கும் செய்திகள் குறைவே.  பொன்னையும் பொருளையும் வெறுத்து, துறவு வாழ்வை மேற்கொண்ட துறவியரையும் அவர்களது இருப்பிடங்களையும் அவற்றை உருவாக்கிக் கொடுத்த கொடையாளர்களையும் பற்றியே இவை கூறுகின்றன. எனினும் இக்குகைத்தளங்களைக் கல்தச்சர்களைக் கொண்டு பொருள் செலவுசெய்து உருவாக்கிய கொடையாளிகள் மற்றும் அவர்கள் அளித்த கொடைகள் மூலம் சமூகப் பொருளாதாரச் செய்திகளை நம்மால் ஊகிக்கமுடியும்.

குடிகள்

நால்வருணப் பாகுபாட்டை தமிழ்-பிராமி கல்வெட்டுகள் குறிப்பிடவில்லை. பல்வேறு தொழில் செய்த குடியினர் பெயர்களே அறக்கொடையாளராகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. சங்ககாலச் சமூகம் தொழில் அடிப்படையில் பிரிந்த குடிநிறை சமூகமாகவே இருந்துள்ளது என்பதை இலக்கியங்களும் காட்டுகின்றன. தமிழ் – பிராமி கல்வெட்டுகளில் கீழ்க்காணும் குடியினர் பற்றித் தெரியவருகிறது.

இளையர்

சித்தன்னவாசல் கல்வெட்டில் முனவர்களது குகைத்தளத்தை உருவாக்கிய அறக்கொடையாளராக இளையர் என்ற குடியினர் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் படைத் தொழிலை மேற்கொண்ட குடியினராகச் சங்ககாலத்தில் திகழ்ந்துள்ளனர். முத்துப்பட்டி கல்வெட்டில் குறிப்பிடப்படும் எளமகன் (இளமகன்) இக்குடியினரைச் சார்ந்தவனாகவே இருக்க வேண்டும். செங்கம் நடுகல் கல்வெட்டுகளில் போர்த் தொழில் செய்த படைவீரர்கள் இளமகன் என்றே குறிப்பிடப்படுகின்றனர். எனவே இளமகன் அல்லது இளமக்கள் என்பவர்கள் அரசனிடத்திலோ அல்லது சிறுகுடித்தலைவர்களிடத்திலோ பணிபுரிந்த படைத்தொழில் புரியும் குடியினராக இருக்க வேண்டும் எனலாம்.

ஈழக் குடும்பிகன்

திருப்பரங்குன்றம் கல்வெட்டில் ஈழக்குடும்பிகன் போலாலயன் என்பவன் குறிப்பிடப்படுகின்றான். இவன் எருகாட்டூரில்இருந்த ஈழநாட்டைச் (இலங்கை) சார்ந்த குடியினராக இருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். சங்க இலக்கியப் புலவர்களில் ஒருவராக ஈழத்துப் பூதன்தேவனார் விளங்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...

மலைய்வண்ணக்கன் - மணிய்வண்ணக்கன்

அரச்சலூர் கல்வெட்டில் வரும் அறக்கொடையாளர் பெயரை இருவிதமாகப் படித்துள்ளனர். மலைய்வண்ணக்கன் என்று இதனைப் படித்த மகாதேவன் மலைசார்ந்த குடியினைச் சார்ந்தவன் என்று இவனைக் கருதுகின்றார்.2 கொங்கு நாட்டில் கொங்கு வேளாளரில் வண்ணக்கர் கோத்திரம் என்ற பிரிவு இன்றும் வழங்கப்படுகிறது. வண்ணக்கன் என்பதற்கு மேலும் ஒரு பொருள் சொல்லப்படுகிறது. வர்ணகா என்பதற்கு பாடல் வல்ல இசையாசிரியன் என்று பொருள் கூறி இவன் அரச்சலூர் இசைக்கல்வெட்டை உருவாக்கியவன் என்று கருதுகின்றனர். மணிய் வண்ணக்கன் என்று இக்கல்வெட்டைப் படிப்பவர்கள் மணிகளைப் பரிசோதிக்கும் தொழிலை மேற்கொண்டவன் இவன் என்று கருதுகின்றனர்.

சங்கப் புலவர்களில் வண்ணக்கன் என்ற பெயரைப் பெற்ற புதுக்கயத்து வண்ணக்கன் சம்பூர்கிழான், வடம வண்ணக்கன் தாமோதரன்,வண்ணக்கன் கோமருங்குமரனார் என்ற புலவர்கள் இருந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.

வேள்

வேள் என்று பெயர் பெற்ற குடியினர் சங்க காலத்தில் புகழுடன் வாழ்ந்துள்ளனர். கடையேழு வள்ளல்களில் சிலர் இவ்வேளிர் குடியினரைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். மேட்டுப்பட்டி கல்வெட்டில் குவிரஅந்தை வேள் அதன் (வேளாதன்) என்பவன் குறிப்பிடப்படுகின்றான்.

கொல்லர், தச்சர்

பொன் செய் கொல்லன், பாறையை உடைத்துக் கட்டடங்களை உருவாக்கும் தச்சர் பெயர்கள் அழகர்மலை, மாமண்டூர் தமிழ் – பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

வணிகர்

வணிகர்கள் பெருமளவு சமண சமயத்திற்கு ஆதரவு அளித்திருக்கின்றனர். அழகர்மலை, மாங்குளம், புகளூர் முதலிய இடங்களிலுள்ள கல்வெட்டுகள் இதற்குச் சிறந்த சான்றுகளாக உள்ளன. பாண்டியரின் தலைநகரான மதுரை வணிகத்தில் சிறந்து விளங்கிய நகரமாக இருந்துள்ளதை மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.  பல்வேறு வணிகம் செய்த வணிகரின் கடைத்தெருக்கள் மதுரையில் இருந்துள்ளன. பல நாடுகளைச் சார்ந்த வணிகர் இதில் தங்கியிருந்து வணிகம் செய்துள்ளனர். மதுரையில் இருந்து பல பொருட்களைக் கொண்டு வணிகம் செய்த வணிகர்கள் சேர்ந்து அழகர்மலைப் பள்ளியை உருவாக்கியுள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது.

1. மதிரை பொன்கொல்வன் அதன்அதன்
2. உபு வாணிகன் வியகன் (உப்பு வணிகன்)
3. பாணித வாணிகன் நெடுமலன்
4. கொழு வாணிகன் எளசந்தன்
5. வெண்பள்ளி அறுவை வணிகன் எளஅ அடன்

இவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக அமைந்த நீண்ட இரு கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றனர். தொடக்கத்தில் குறிக்கப்படும் மதிரையை (மதுரை) இவர்கள் அனைவருக்கும் உரிய ஊர் என்று கொள்ளலாம்.   மதுரையைச் சார்ந்த பொன்வணிகன் இங்கு குறிப்பிடப்படுகின்றான். ஆனால் இவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.  சங்க காலத்தில் உப்பு வணிகம் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்றிருக்கிறது.  நெல்லும் உப்பும் ஓரே விலையாகச் சங்ககாலத்தில் இருந்துள்ளன. நெல்லை வாங்கிக் கொண்டு உப்பை அதே அளவு பண்டமாற்றாகக் கொடுத்துள்ளனர். (அகம் 140, 340). இதனால் உப்பு வணிகர் வணிகர்களில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர். அழகர்மலைக் கல்வெட்டில் வியகன் என்ற உப்புவணிகன் குறிப்பிடப்படுகின்றான்.

பாணிதவாணிகன் நெடுமலன் என்பவன் அழகர்மலைக் கல்வெட்டில் அறக்கொடையாளராக இடம் பெற்றுள்ளான்.  பணிதம் என்றால் சர்க்கரை என்று பொருள் கூறி இவன் சர்க்கரை வியாபாரியாக இருக்க வேண்டும் என்று ஐராவதம் மகாதேவன் கருதுகின்றார். பளிதம் என்ற சொல்லே கல்வெட்டில் பாணித என்று குறிப்பிடப்படுகிறது.  பளிதம் என்றால் பச்சைக்கற்பூரம் என்று பொருள்.  சங்க காலத்தில் அதனை அடைகாயோடு (பாக்கு) சேர்த்து அருந்தினர். எனவே, பாணித வணிகன் என்பவன் பச்சைக்கற்பூர வியாபாரியாக இருக்க வேண்டும் என்று மயிலை. சீனி. வேங்கடசாமி கருதுகின்றார்.3 கொழு வணிகன் கலப்பை வியாபாரம் செய்யும் வணிகன் என்று ஐ.மகாதேவன் கருதுகின்றார்.4 இரா. நாகசாமி இவன் இரும்பு வியாபாரியாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.5 சங்க காலத்தில் துணியை வியாபாரம் செய்த வணிகர்கள் அறுவை வணிகர் என்றழைக்கப்பட்டனர். வெண்பள்ளி என்ற ஊரைச் சார்ந்த இளஆட்டன் (எளஅஅடன்) அழகர்மலைக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றான். மதுரையில் அறுவை வாணிகம் செய்த சங்கப்புலவர் ஒருவர் இருந்துள்ளார். இவர் இளவேட்டனார் என்றழைக்கப்பட்டுள்ளார். சங்கப் பாடல்கள் சிலவற்றைப் பாடியுள்ள மதுரையைச் சார்ந்த புலவர்கள் சிலர் வணிகர்களாக இருந்தமை இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. அவர்கள் மதுரைக் கொல்லன் புல்லன், மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார், மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராய்த்தனார், மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் ஆகியோராவர்.

சங்ககாலத்தில் சேரரின் தலைநகராக விளங்கிய கருவூரும் வணிகச் சிறப்பு பெற்ற நகரமாகத் திகழ்ந்துள்ளது. கருவூருக்கு அருகில் அமைந்த புகளூர்ச் சமணப் பள்ளிக் கல்வெட்டில், கருவூர் பொன்வணிகன் நந்தி என்பவன் குறிப்பிடப்படுகின்றான். இவனும் சமண முனிவர்களுக்குப் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளான். புகளூர் கல்வெட்டில் எண்ணைவணிகன் வெநிஆதன் (வெண்ணி ஆதன்) என்பவன் குறிப்பிடப்படுகின்றான்.

நிகமம்

வெள்ளறை என்ற ஊர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் வணிகத் தளமாக விளங்கியதை மாங்குளம் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இவ்வூர் நிகமத்தினைச் சேர்ந்தவர்கள் மாங்குளம் மலையில் முனிவர்களது உறைவிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்.   நிகமம் என்றால் வணிகர்குழு அல்லது வணிகருக்குரிய கடைத்தெரு என்று பொருள்.  நிகமம் என்பதே சங்க இலக்கியத்தில் நியமம் என்று குறிப்பிடப்படுகிறது. சங்க காலத்தில் பல முக்கிய நகரங்களைச் சார்ந்து நியமங்கள் இருந்திருக்கின்றன. 

மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் வெள்ளறை மாங்குளம் மலைக்கு அருகில் அமைந்த ஊராகும்.  தற்போது இது வெள்ளரிப்பட்டி என்ற பெயரில் வழங்குகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் இவ்வூரில் இருந்த நிகமத்தில் பல வணிகர்கள்சேர்ந்து குழுவாக வாழ்ந்துள்ளனர். மதுரைக்கு அருகில் அமைந்த இவ்வூரில் பாண்டியரின் தலைநகரில் வணிகம் செய்ய ஏதுவாக நிகமம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  இது பெருவழியில் பயணம் செய்த வணிகர்கள் தங்கவும் பொருள்களை வைத்துப் பாதுகாக்கவும், விற்பனை செய்யவும் பயன்பட்டிருக்க வேண்டும்.  காவிதி என்ற பட்டம் பெற்ற வணிகர்கள்வெள்ளறை நிகமத்தில் இருந்துள்ளதை மாங்குளம் கல்வெட்டு தெரிவிக்கிறது.

தொழில்கள்

பொன்னைக் கொண்டு ஆபரணங்கள் செய்தல். கடலிருந்து உப்பை எடுத்தல், கரும்பிலிருந்து சர்க்கரை எடுத்தல், ஆடை நெய்தல், இரும்பை உருக்கி கலப்பை போன்ற பொருட்கள் செய்தல் எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தல் முதலிய தொழில்கள் சிறப்பாகநடைபெற்றுள்ளதை அழகர்மலை, புகளூர் கல்வெட்டுகள் மூலம் உய்த்தறிய முடிகிறது.  கல்லை உடைத்து கட்டடங்களை உருவாக்குதல் சங்க காலத்திலேயே தொடங்கி விட்டது  என்பதற்குத் தமிழ்பிராமி கல்வெட்டுக் குகைத்தளங்களே சிறந்த சான்றுகளாகும்.  மாமண்டூர் கல்வெட்டில் அக்குகைத்தளத்தினை உருவாக்கிய தச்சன் பெயர் குறிப்பிடப்படுகிறது.  மலையைக் குடைந்து குகைத்தளத்தினை உருவாக்கும் தொழிலை 'குயித்தல்’ (குடைத்தல்) என்று கொங்கர்புளியங்குளம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

செலாவணி (காசுகள்)

கொங்கர்புளியங்குளம், அழகர்மலை கல்வெட்டுகளில் குகைத்தளங்களை உருவாக்கியவர்களின் பெயர்கள் உள்ள கல்வெட்டுகளில் அவர்கள் பெயருக்குப் பின்னர் குறியீடுகள் காணப்படுகின்றன. இவை குகைத்தளத்தினை உருவாக்கச் செலவுசெய்த பொன்னைக் குறிக்கும் குறியீடுகள் என்று மயிலை. சீனி. வேங்கடசாமி கருதுகின்றார். இக்குறியீடுகள் முத்திரை குத்திய காசுகளில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.  கொங்கர் புளியங்குளம் கல்வெட்டில் காசினைக் குறிக்க வரும் வெபோன் என்ற சொல் சங்ககாலத்தில் காசுகள் வழக்கத்தில் இருந்ததைக் காட்டுகிறது. 'வெண்பொன்’ என்பதே கல்வெட்டில் 'வெபோன்’ என்று குறிப்பிடப்படுகிறது. இக்காசு தமிழ்-பிராமி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட காலத்தில் இந்தியநாடெங்கும் புழக்கத்தில் இருந்த முத்திரை குத்தப்பட்ட வெள்ளி நாணயமாக இருக்க வேண்டும்.

வேளாண்மை

விக்கிரமங்கலம் கல்வெட்டில் வரும் பேர்அயம் என்ற சொல் ஏரியைக் குறிப்பதாக மகாதேவன்கருதுகின்றார்.6 வரிச்சியூர் கல்வெட்டு நூறு கலம் நெல் பற்றித் தெரிவிப்பதாகக் கூறுகின்றார்.7  இவை தமிழ் - பிராமி கல்வெட்டுகளின் காலத்தில் வேளாண் நீர் பாசன வசதிகள், வேளாண் விளைச்சல், அவற்றின் விளைச்சல் மிகுதி, பகிர்மானம் ஆகியவற்றை உணர்த்துகின்றன.

தமிழ் -பிராமி கல்வெட்டுகளின் காலத்தில் இருந்த சமுதாயப் பொருளாதார நிலை வருமாறு:

1. வேள் நிலையிலிருந்து வேந்தர் நிலைக்குமாறியதாகவும் வேள் மற்றும் குடிநிலை எச்சங்களை உடையதாகவும் விளங்கியது.

2. வேளாண்மை வளர்ச்சிக்கு உறுதுணையான பாசன வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டதால் ஏரி பராமரிப்புகள் (பேரயம்) நெல், கரும்பு, எள், பருத்தி முதலிய பயிர் உற்பத்திகள்; கரும்பிலிருந்து சர்க்கரை (பாணித), எள்ளிலிருந்து எண்ணெய், பஞ்சிலிருந்து துணி (அறுவை), உழவிற்கு உபகரணமான கொழு (கலப்பை) உற்பத்தி என வேளாண்சார் ஆலைத் தொழில்கள் இவை தொடர்பான வணிகம் ஆகிய குறிப்புகள் தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன எனலாம்.

3. பொன், வெள்ளி, மணிக்கற்கள், பற்றிய குறிப்புகள் தமிழ் – பிராமி கல்வெட்டுகளில் காணப்படுவதும், முத்திரை குத்திய காசுகளின் குறியீடுகள் காணப்படுவதும் அக்கால செலாவணிகளின் தன்மையையும் சமூகத்தின் போகத்துய்ப்பு நிலையையும் காட்டுகின்றன.

4. முசிறி, தொண்டி முதலிய பண்டைத் துறைமுகங்களின் பெயர்கள் கடல் கடந்த பன்னாட்டு வணிகத்தை உணர்த்துகின்றன.

5. அழகர்மலையில் ஐந்து வகை வணிகர்களும் புகளூரில் இருவகை வணிகர்களும், மாங்குளத்தில் வணிகநிகமமும் தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் குறிக்கப்படுவதிலிருந்துபல்வகை வணிகர்களும் ஓரிடத்தில் கூடும் நடைமுறை இருந்ததையும் அவர்கள் கட்டுக் கோப்புடன் குழுக்கள் அமைத்துக் கொண்டதையும் அறிய முடிகிறது.

6. ஆட்பெயர்களில் நிறைய பிராகிருதப் பெயர்கள் உள்ளதும் சாதவாகனர் காசில் தமிழ்-பிராமி உள்ளதும் தமிழ் நாட்டுடனான தக்கண, வட இந்திய வணிகத்தைக் காட்டுவனவாகும்.

7. பானை ஓடுகளில் கீரல்களாக உள்ள தமிழ்-பிராமி சொற்கள் கடல் கடந்து இந்தோ - ரோமானிய வணிகத்தையும், உரைக்கல்லில் காணப்படும் தமிழ்-பிராமி பொறிப்பு கிழக்காசிய வணிகத்தையும் தமிழகம் பெற்றிருந்தது எனத் தெளிவாகக் காட்டுகின்றன.

அடிக்குறிப்புகள்

1. I Mahadevan, Early Tamil Epigraphy,p. 584
2. மேலது, பக். 616-617.
3. மயிலை. சீனி. வேங்கடசாமி, சங்ககாலத்துப் பிராமி கல்வெட்டுகள், கழக வெளியீடு, சென்னை, 1981, பக். 57.
4. I Mahadevan,. Ibid, p. 573,
5. கல்வெட்டியல், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1980, பக்.52
6. I Mahadevan,. Ibid, p. 568-569,
7. மேலது பக். 558

(கட்டுரை: 'தமிழர் சமயம்' 2012 ஜனவரி இதழில் வெளியானது)