" பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழிஇக், கங்கை
நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ! " (அகம் - 265)

என்கிறார் சங்ககாலக் கவிஞர் மாமூலனார். மகதத்தை ஆண்ட நந்தர்கள் பெரும் புகழை உடையவர்களாகவும், பெரும் படை உடையவர்களாகவும் இருந்ததோடு, மிகப் பெரிய அளவிலான செல்வத்தையும் கொண்டிருந்தனர் என்கிறார் அவர். நந்தர்கள் காலம் கி.மு.4 ம் நூற்றாண்டு ஆகும். நந்தர்கள் குறித்து பேசிய அவர், தனது வேறு இரு சங்கப் பாடல்களில் நந்தர்களுக்குப் பின் வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்து

" ..................................மோகூர்
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த" (அகம் - 251) எனவும்

"முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து
எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த " (அகம் - 281) எனவும் இருபாடல்களை பாடியுள்ளார்.

அதில், பாண்டியர் படைத் தலைவன் மோகூர் பழையன் போன்ற, தமிழரசுகளின் எல்லைக் காவல் படைத்தலைவர்கள், பணியாததால் வடுகர்கள் வழிகாட்ட, வம்ப மோரியர்கள் (மோரியர் என்பது பிராகிருதச் சொல்லாடல் ஆகும்), மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைக் குன்றுகளை வெட்டி தகர்த்து, பாதையமைத்து, பெரும்படை கொண்டு தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தனர் என்கிறார் மாமூலனார். நந்தர்களுக்குப் பின் வந்த மௌரியர்களை புதியவர்கள் என்ற பொருளில், முதல் பாடலில் மட்டுமே வம்ப மோரியர் என்கிறார். (வம்ப என்றால் புதிய எனப் பொருள் படும்.). இரண்டாவது பாடலில் மோரியர் என்றே குறிப்பிடுகிறார்.

மாமூலனார் தவிர வேறு சில சங்கக்கவிஞர்களும், மௌரியர்களின் படையெடுப்பு குறித்து குறிப்பிட்டுள்ளனர். வேங்கடமலைத் தலைவன் ஆதனுங்கனைப் பாட வந்த கள்ளில் ஆத்திரையனார்,

"விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர.
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த" (புறம் - 175) என்கிறார்.

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் தனது அகப் பாடலில், காதலன் கடந்து சென்ற பாதை குறித்து,

"விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த (அகம் - 69) என்கிறார்.

இச்சங்கப் பாடல்கள், மோரியர்கள் தங்களின் தேர்படை முதலான பெரும்படைகளைக் கொண்டு வர மலைக் குன்றுகளை வெட்டி பாதை அமைத்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றன.

நந்தர்களை அகற்றிய பின், ஆட்சி ஏற்ற மௌரியர்கள் வட இந்தியாவில் பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின் தென் இந்தியா மீது படை எடுத்ததும், இன்றைய மைசூர் வரை தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தியதும், வரலாற்று மாணவன் அறிந்த செய்தி தான். ஆனால் மௌரியர்கள், வடுகர்கள் துணையோடு தமிழகத்தை தங்கள் பெரும்படை கொண்டு தாக்கினர் என்கிற, மேலே உள்ள சங்கப் பாடல்கள் தரும் செய்தி பல வரலாற்று மாணவர்களுக்கு ஒரு புதிய செய்தியே! இவை நடந்த காலம் கி.மு.4ம், 3ம் நூற்றாண்டுகள் ஆகும்.மௌரியர்களின் இந்தத் தமிழகப் படையெடுப்பு, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தலைமையில் தமிழக அரசுகளால் முறியடிக்கப்பட்டது. இளஞ்சேட்சென்னியின் தந்தையான பெரும்பூட்சென்னி குறித்தும் அவனது கழுமலப் போர் குறித்தும் அகம் 44இல் பாடியவர் குடவாயிற் கீரத்தனார் என்ற சங்ககாலக் கவிஞர் இக்கவிஞர் கி.மு.4ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்; மாமூலனாருக்கும் முற்பட்டவர்.

அடுத்ததாக படுமரத்து மோசிகீரனார் என்பவர் பாடிய குறுந்தொகை 75ம் பாடலில், தனது காதலன் வரவைச் சொல்லிய பாணனிடம், "என் காதலன் வரவை நீ பார்த்தாயோ, பார்த்தவர் சொல்லிக் கேட்டனையோ, உண்மையைச் சொல், உனக்குப் பரிசாகத் தருகிறேன், யானைகள் உலவும், சோனையின் கரையிலிருக்கும் பாடலிப் பொன் நகரை" என்கிறாள் பெருமகிழ்ச்சி அடைந்த தலைவி.

இப்பாடலில், மகத அரசின் தலைநகராக, கி.மு.4ம், 3ம் நூற்றாண்டுகளில் புகழ் பெற்று விளங்கிய பாடலிபுத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சங்க காலக் கவிஞர்கள் நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கும் முந்தைய கால நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே குறிப்பிடப்படுகின்றன. உதாரணமாக பரணர் என்ற சங்ககால கவிஞர் இந்த மௌரியப் படையெடுப்புக்குப் பின் சில ஆண்டுகள் கழித்து வாழ்ந்தவர். மௌரியப் படையெடுப்பை முறியடித்த இளஞ்சேட்சென்னியின் மகனான முதலாம் கரிகாலன் காலத்தில் வாழ்ந்தவர். அவர்தான் அதிக அளவான வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட பாடல்களைப் பாடியவர். எனினும் அவர் மௌரியர்களைக் குறித்தோ அவர்களின் படையெடுப்பு குறித்தோ எங்கும் குறிப்பிடவில்லை. அவர் தனது காலத்தில் நடந்த நிகழ்வுகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மௌரியப் படையெடுப்பு அவர் காலத்துக்கு முன்பே நடந்து விட்டதால், அது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

ஆகவேதான் மேலே குறிப்பிடபட்டுள்ள சங்ககாலப் பாடல்களைப் பாடிய மாமூலனார், குடவாயிற் கீரத்தனார், கள்ளில் ஆத்திரையனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், படுமரத்து மோசிகீரனார், பொன்றவர்கள் கி.மு.4ம், 3ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் எனக் கூறமுடியும்.

மேலும் “ஒரு வீட்டில் சாவு, இன்னொரு வீட்டில் மணவிழா. சாவு வீட்டில் துக்கம். மணவீட்டிலோ மகிழ்ச்சி. இவ்வாறு இன்பமும் துன்பமும் கொண்டதுதான் வாழ்க்கை. இதனைப் படைத்தவன் பண்பில்லாதவனே! எனினும் வாழ்க்கையின் இயல்பை உணர்ந்தவரே அதில் இனிமையைக் காணமுடியும்." என்று பொருள்படும் புகழ்பெற்ற புறம் 194வது பாடலைப் பாடிய பக்குடுக்கை நன்கணியார் என்பவர்தான், ஊழியல், ஒருமையியம் என்கிற அணுவியத்தை தோற்றுவித்த, கி.மு.5-ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த, பகுத கச்சாயனார் ஆவார் எனப் பேராசிரியர் பே.க. வேலாயுதம் என்பவர் ஆய்ந்தளித்துள்ளார். ‘தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” என்ற நூலை எழுதிய முனைவர் க.நெடுஞ்செழியன் என்பவர் அக்கருத்தை மேலும் ஆய்ந்து உறுதி செய்துள்ளார். (ஆதாரம்: வள்ளுவத்தின் வீழ்ச்சி” பக்.44, ஆசிரியர் : பெங்களூர் குணா). ஆக சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது எனலாம்.

அசோகரின் கல்வெட்டுகள்:

மௌரிய அரசர் அசோகர் தனது 32 கல்வெட்டுகளில், இரண்டு கல்வெட்டுகளில் மட்டுமே தனது எல்லைக்கப்பாலுள்ள அரசுகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். இரண்டிலும் (2வது, 13வது) தமிழரசுகளின் பெயர்கள் வருகின்றன. 2வது கல்வெட்டில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான மருத்துவப் பணிகளை எந்தெந்த பகுதிகளில் செய்து வருகிறேன் என்று சொல்ல வந்த அசோகர், சோழர்கள், பாண்டியர்கள், சத்ய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் ஆகிய தமிழக நாடுகளின் நான்கு அரசகுலப் பெயர்களையும் முதலில் சொல்லிவிட்டு, அதன் பின்னரே கிரேக்க அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். 13வது கல்வெட்டில், தர்ம நெறி எந்தெந்த நாடுகளில் பரவ வேண்டும் என்று சொல்ல வந்த அசோகர் முதலில் கிரேக்க அரசர்களின் பெயர்களையும், பின்னர் சோழர்கள், பாண்டியர்கள் என இரு தமிழரசுகளின் பெயர்களையும் குறிப்பிடுகிறார்.

இரண்டு கல்வெட்டுகளிலும் தமிழக அரசுகளில் சோழர்களே முதன்மையாகக் குறிப்பிடப்படுகின்றனர். புகழ்பெற்ற அரச குலங்களால் ஆளப்படும் புகழ் பெற்ற மக்களைக் கொண்ட நாடுகள் என்பதால்தான் கிரேக்க மன்னர்களுக்கு முன் தமிழக அரசுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பல துறைகளிலும் தனித்துவமிக்க வளர்ச்சியும், சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்கள் படைக்கப்பட்டுக் கொண்டுமிருந்த தமிழக அரசுகளின் வலிமையையும், பண்பாட்டு பாரம்பரியத்தையும் அசோகர் உணர்ந்திருந்ததன் காரணமாகவே தனது கல்வெட்டில் தமிழரசுகளை முதலில் பதிவு செய்துள்ளார் எனில் அது மிகையாகாது.

மெகஸ்தனிசும் சாணக்கியரும் :

அசோகருடைய ஆட்சிக்காலம் கி.மு.269 முதல் கி.மு.232 ஆகும். அசோகரின் தாத்தா சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்தில், இந்தியா வந்திருந்த கிரேக்க தூதர் மெகஸ்தனிசின் காலம் கி.மு.350 முதல் கி.மு.290 வரை எனக் கருதப்படுகிறது. அதே காலகட்டத்தில் (கி.மு.350 முதல் கி.மு.283 வரை) வாழ்ந்தவர்தான் நந்தர்களிடமிருந்து மகத அரசைக் கைப்பற்ற உதவிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் ஆவார். மெகஸ்தனிஸ் மற்றும் அர்ரியன் என்பவர்கள் எழுதிய தகவல்களைக் கொண்டு 1877ல், ‘மெகஸ்தனிஸ் மற்றும் அர்ரியன் அவர்களால் விவரிக்கப்படும் பழமை இந்தியா” (Ancient India as described by Megasthenes and Arrian” By J.W. Mccrindle, M.A.,) என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. அந்நூலில் ‘கெராக்கிளிஸ் (Herakles) என்பவருக்கு பல மகன்களும், பாண்டைய் (Pandai) என்ற ஒரு மகளும் இருந்தனர் என்றும், தனது அன்புக்குரிய மகளுக்கு தென்பகுதியிலுள்ள முத்து விளைகிற பாண்டிய நாட்டைக் கொடுத்து விட்டு இந்தியாவின் வேறு சில பகுதிகளை தனது மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டு, தான் பாடலிபுத்திர அரசை வைத்துக் கொண்டார் என்றும், மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பாண்டிய அரசியின் சந்ததிகள் 300 நகரங்களும், 1,50,000காலாட் படைவீரர்களும், 4000 குதிரைப் படைகளும், 500 யானைகளும் கொண்ட அரசை ஆண்டு வருகின்றனர் என்றும், அங்கு முத்து விளைகிறது என்றும், பாடலிபுத்திர அரசு 6,00,000 காலாட்படைகளும், 30,000 குதிரைப் படைகளும், 9000 யானைகளும் கொண்டு ஆண்டு வருகிறது என்றும் குறிப்பிடுகிறார். (நூலின் பக்கங்கள் : 39, 114, 139, 147, 156, 158, 201 to 203)

‘மெகஸ்தனிசும், இந்திய மதமும்” (Megasthenes and Indian Religion) என்ற நூலை எழுதிய ஆலன் (Allan Dahlaguist) என்பவர், தனது நூலில் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ள கெராக்கிளிஸ் என்பவர் இந்திரனா, கிருஷ்ணனா, சிவனா என்பது குறித்து பல்வேறு மூல இந்து புனித நூல்கள், புராணங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு முடிவுகள் கல்வெட்டுகள் முதலியன கொண்டு ஆய்வு செய்து, கெராக்கிளிஸ் என்பவர் இந்திரனே என்றும், பாண்டைய் என்ற இளவரசிக்கு வழங்கப்பட்டது பாண்டிய நாடே என்றும், அது கி.மு.400க்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்றும், அன்று அங்கு இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்தது என்றும், கிருஷ்ணன்தான் கெராக்கிளிஸ் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கி.மு.4-ம் நூற்றாண்டில் இல்லை என்றும் விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

மேலும் இந்திய வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் மெகஸ்தனிஸ் பயணம் செய்த இந்தியப் பகுதிகள் குறித்த உறுதியான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவர் பாண்டிய அரசின் தலைநகர் மதுரைக்கு பயணம் செய்ததற்கான தகவல் குறிப்புகள் உள்ளதாகவும் (மதுரை அப்பொழுது வளர்ச்சி பெற்ற விறுவிறுப்பான நகரமாக இருந்தது) விக்கிபீடியா குறிப்பிடுகிறது. அர்ரியன், மெகஸ்தனிஸ், ஆலன் ஆகியவர்களின் மேற்கண்ட பல ஆதாரக் குறிப்புகள் இந்தியாவில் கி.மு.4-ம் நூற்றாண்டளவில் மகதப் பேரரசுக்கு அடுத்த நிலையில் பாண்டிய அரசு இருந்தது என்பதையும், கி.மு.4-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பாண்டிய அரசு இருந்து வருகிறது என்பதையும் உறுதி செய்கின்றன.

சாணக்கியன் தனது அர்த்தசாஸ்திரம் என்ற நூலில் பாண்டிய நாட்டிலிருந்து பாண்டிய கவாடகா, தாமிரபரணிகா எனப்படும் பல்வேறு வகை முத்துக்களும், பல்வேறு வகை கல்மணிகளும், முசிறி துறையிலிருந்து சௌர்ணியா என்ற வகை கல்மணிகளும், முத்துக்களும் மகதத்துக்கு விற்பனைக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெண்மையும், மென்மையும் உடைய ‘துகுளா”, ‘வங்கா” (துகில், வங்கம் ஆகிய தமிழ் சொற்களுக்கு துணி என்பது பொருள்) என்கிற பலவகைப் போர்வைத் துணிகளும், கருப்பாகவும், மதிப்பு மிக்க நவரத்ன கல்மணிகளின் மேற்பகுதி போன்று மிகவும் மென்மையாகவும் உள்ள ‘பாண்ட்ரகா” என்ற போர்வைகளும், கசௌமா, பாண்ட்ரகா, சௌர்ணா குடியகா என்ற பல்வேறு வகையான ஆடை வகைகளும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, மகதத்துக்கு விற்பனைக்கு வருவதாகவும் சாணக்கியர் தனது நூலில் குறிப்பிடுகிறார். ஆதாரம் : ஆங்கில நூல் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் – ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு திரு. சு. சாமசாஸ்திரி அவர்கள் பக் : 101, 107, 109, 110 முதலியன.

ஆக கி.மு.4-ம் நூற்றாண்டு அளவிலேயே பல்வேறு வகையான முத்துக்களும், நவரத்ன கல்மணிகளும், பல்வேறு வகையான போர்வைத் துணிகளும், பல்வேறு வகையான ஆடை வகைகளும், பல்வேறு வகையான வாசனைப் பொருட்களும் தமிழகத்திலிருந்து முக்கியமாக பாண்டிய நாட்டிலிருந்து பெருமளவில் உற்பத்தியாகி மகதப் பேரரசின் சந்தைகளுக்கு விற்பனைக்கு போயிருந்திருக்கின்றன என்பதை சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் தெரிவிக்கிறது.

சங்க கால வணிகம்:

தலைவன் பொருள் தேடுவதற்காக தலைவியைப் பிரிந்து மொழிபெயர்தேயம் (இன்றைய கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்கள்) கடந்து சென்று பல மாதங்கள் தங்கி இருந்து வணிகம் செய்து வந்தனர் என்ற தகவல் நூற்றுக்கணக்கான சங்க கால அகப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக பாலைப் பாடல்கள் பாடிய மாமூலனார் போன்ற சங்க கால புலவர்கள் இச்செய்தியை மிக விரிவாகவும், விளக்கமாகவும் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆக கி.மு.4-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே மகதப் பேரரசு மட்டுமில்லாமல், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழ்வணிகர்கள் நேரடியாகச் சென்று அங்கு தங்கி, வணிகம் செய்து வந்துள்ளனர் என்பதை சங்க கால அகப் பாடல்களில் உள்ள குறிப்புகளும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும் உறுதி செய்கின்றன.

ஆக சங்க இலக்கியங்கள் மகதஅரசு மற்றும் அதன் தலைநகர் பாடலிபுத்திரம் குறித்தும், அதன் அரச வம்சங்களான நந்தர்கள், மௌரியர்கள் குறித்தும் பேசுகின்றன. அசோகரின் கல்வெட்டும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், மெகஸ்தனிசின் இண்டிகாவும் தமிழரசுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. ஆக அன்று வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு, முக்கியமாக வணிகத் தொடர்பும், பண்பாட்டுத் தொடர்பும் இருந்து வந்துள்ளது என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.

தமிழகத்திலிருந்து வணிகம் செய்ய வடநாடு செல்பவர்கள், முதலில் வெய்யூர் (இன்றைய வேலூர்) வழியாக அல்லது கொங்கு நாட்டிலுள்ள தகடூர் (இன்றைய தர்மபுரி) வழியாகச் சென்று, இன்றைய கர்நாடகத்தைக் கடந்து சாதவ கன்னர்களின் தலைநராக இருந்த படித்தானம்(இன்றைய ஒளரங்காபாத் அருகே) போய்ச் சேர்ந்தனர். சேர நாட்டிலிருந்து துளு நாட்டு வழியாகவும் படித்தானம் போய்ச் சேர முடியும். பின், படித்தானத்திலிருந்து தக்காணப் பாதை வழியாக உஜ்ஜயினி முதல் பாடலிபுத்திரம் வரையான வடநாட்டு நகரங்களுக்குச் சென்று வந்தனர்.

சங்க காலத்தில் ஆந்திர, கலிங்க நாடு வழியாக வடநாடு செல்லும் பாதையும் இருந்துள்ளது. மாமூலனார் தனது அகம்-61, 295, 311, 359, 393 ஆகியபாடல்களில் புல்லி என்ற குறுநில மன்னனின் வேங்கடமலையை (இன்றைய திருப்பதி)க் கடந்து மொழிபெயர் தேயம் வழியாக தமிழர்கள் சென்றது குறித்து பாடியுள்ளார். இவ்வழியில் செல்பவர்கள் கலிங்கத்துக்கு வணிகம் செய்யச் சென்றவர்களாக இருத்தல் வேண்டும். பின் கலிங்கத்திலிருந்து வடநாடு செல்ல பாதைகள் இருந்தன. ஆனால் கர்நாடகம் வழியாக படித்தானம் சென்று, பின் வடநாடுகள் போகும் பாதையே புகழ்பெற்ற தக்காணப் பாதையாக இருந்துள்ளது.

இந்த ஆந்திர, கன்னட நாடுகளைக் கொண்ட தக்காணப் பகுதியும், இந்த வணிகப் பாதைகளும் தமிழகத்தின் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்தது என்றும், இந்தத் தக்காணப் பகுதியில் கொடுந்தமிழே மக்கள் மொழியாக இருந்தது என்றும், தமிழகத்தின் வட எல்லைக்கு அப்பால் வடக்கே செல்லச் செல்ல தமிழ்மொழி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொடுந்தமிழாக மாறியது என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

வட இந்திய மகத ஆட்சியும், சமண, பௌத்த மதமும் தக்காணத்தில் பரவியபோது, கொடுந்தமிழுடன் பிராகிருதம், சமற்கிருத மொழிக் கலப்பு ஏற்பட்டு கி.பி.5ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கன்னட, தெலுங்கு மொழிகள் உருவாகின. சங்க காலத்தில் அங்கு கொடுந்தமிழே பேசப்பட்டது. கொடுந்தமிழ் என்பது அடிப்படையில் தமிழே. தமிழ்தான் திரிக்கப்பட்டு வட இந்தியர்களால் திராவிடம் என அழைக்கப்பட்டது. பண்டைய தமிழ் எழுத்தான ‘தமிழி” என்பது முதலில் வட இந்தியாவில் ‘தம்ளி” என அழைக்கப்பட்டுவந்து, பின்னர் ‘திராவிடி” என திரித்து வழங்கப்பட்டது. (ஆதாரம் : தமிழெழுத்தின் வரி வடிவம்” பக்.18, 19, ஆசிரியர் சி. கோவிந்தராசனார் அவர்கள்). அதுபோலவே தமிழ் என்பதும் திராவிடம் எனதிரிக்கப்பட்டது. ஆக தமிழ் என்பதன் வடமொழி உச்சரிப்புதான் திராவிடம் ஆகும்.

அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவ கன்னர்கள் தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள் தக்காணத்தை ஆண்டனர். ஒரு சமயத்தில் இவர்கள், மகதத்தையே பிடித்து சிறிது காலம் ஆண்டனர். சாதவ கன்னர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் (சாதவ என்பது சதம், அதாவது நூறு ஆகும்) என்பர். இவர்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு ஆட்சி செய்தனர். அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் பிராகிருதமும் இருந்தன. (ஆதாரம் : 24ஃ6ஃ2010, இந்து ஆங்கில நாளிதழில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதிய, ‘An epigraphic perspective, on the antiquity of Tamil' என்ற கட்டுரை)

ஆக, கி.மு.4-ம், 3-ம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. (கி.மு.1500 வாக்கில் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டு வந்ததாக அம்பேத்கார் குறிப்பிடுகிறார் என்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கவும். ஆதாரம் : வள்ளுவத்தின் வீழ்ச்சி - பெங்க@ர் குணா) வடக்கே பிராகிருதமும், தெற்கே தமிழும் செல்வாக்கு பெற்றிருந்தன. அதனால் தழிழர்கள் இடைப்பட்ட பகுதியை, தமிழ்மொழி தேய்ந்து, கொடுந்தமிழ் பேசப்பட்ட பகுதியை, மொழி பெயர் தேயம் என்றனர். (வடமொழி என்பது பொதுவாக சமற்கிருதம் எனக் கருதப்படுகிறது. அது தவறு. கி.பி.2ம் நூற்றாண்டு வரை வடமொழி என்பது பெரும்பாலும் பிராகிருதம் அல்லது பாலி மொழியையே குறிக்கும்). இந்த மொழி பெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை மாமூலனாரின் அகம் 31வது பாடல்,

‘தமிழ்க்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர்தே எத்த” என உறுதிப்படுத்துகிறது.

காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு :

மொழி பெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்துவந்தது என்றால் தமிழ் அரசுகள் முக்கியமாக மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்துசெயல்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு ஒன்று சேர்ந்து செயல்பட அவர்களிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்திருக்க வேண்டும். கலிங்க மன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணி குறித்துப் பேசுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165ஆகும்.

அத்திக்கும்பா கல்வெட்டு :

11வது வரி : ’11-ம் ஆட்சியாண்டில், 1300 ஆண்டுகளாக இருந்து வந்த, புகழ்பெற்ற நாடுகளைக் கொண்ட, தமிழரசுகளின் கூட்டணியை உடைத்து, முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட, ‘பித்துண்டா” என்ற நகரத்தைப் பிடித்து, அதனை கழுதை கொண்டு உழுது,பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக் கொண்டேன்”.

13வது வரி : ‘12ம் ஆட்சியாண்டில் பாண்டிய அரசன் நூறு ஆயிரம் அளவிலான, விலை மதிப்பற்ற கற்களையும், முத்துக்களையும், ஆபரணங் களையும் கலிங்கத்தின் தலைநகருக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன்” என்கிறான் கலிங்க மன்னன் காரவேலன். (ஆதாரம் : www.jatland.com/home/Hathigumpha - inscription). சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய ‘சிரி காரவேலா” என்ற நூலில் இப்பகுதி உள்ளது.

‘11வது வரியில் சமற்கிருதத்தில் புகழ்பெற்ற ‘ஜனபத்” என்பதை ஆங்கிலத்தில் புகழ்பெற்ற கிராமங்கள் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஜனபத் என்பது நாடுகளைக் குறிக்கும். எனவே புகழ்பெற்ற நாடுகள் என இங்கு மாற்றி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழரசுகளின் கூட்டணி என்பது நாடுகளின் கூட்டணியே அன்றி கிராமங்களின் கூட்டணி அல்ல. அடுத்ததாக ‘பித்துண்டா” என்ற நகரம் முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்நகரம் கலிங்கத்தின் தென் எல்லையோரத்தில்தான் அமைந்திருக்க வேண்டும்.

கலிங்கத்தின் தென் எல்லையேரத்தில் இருந்த, முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்நகரம் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் நகரமாக இருந்தது என்றால் அதன் கருத்து என்ன? தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் காவல் அரணாக பித்துண்டா நகரம் இருந்து வந்துள்ளது என்பதும், தமிழகத்தின் வட எல்லையில் இருந்து, கலிங்கத்தின் தென் எல்லை வரையான இன்றைய ஆந்திரத்தின் சில பகுதிகள் தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்து வந்துள்ளது என்பதும் அதன் பொருளாகிறது. அதன்மூலம் மொழிபெயர் தேயம் என்பது தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின்கீழ்தான் இருந்து வந்தது என்ற மாமூலனார் அவர்களின் செய்தி, இக்கல்வெட்டின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

மேலும், இந்நகரம் மீண்டும் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கீழ் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அது தரைமட்டமாக்கப்பட்டு கழுதை கொண்டு உழப்பட்டுள்ளது. www.freeindia.Org/biographies/kharavela/index.htm என்ற இணைய தளப் பக்கத்தில் D.N. சன்பக் (Shanbhag) என்பவர், தனது கட்டுரையில், தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகள் பலமுறை கலிங்க அரசுக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், காரவேலன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்ற போது, அவை கலிங்கத்தை, தங்கள் காவல் அரணான பித்துண்டா நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு தாக்கியதாகவும், அதற்கு பதிலடி தரும் விதமாகத்தான் காரவேலன் பித்துண்டா நகரத்தை தாக்கி, தமிழரசுகளின் நீண்ட கால ஐக்கியத்தை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாகவும், பித்துண்டா என்பது ஒரு துறைமுக நகரம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சன்பக் அவர்கள் தரும் செய்திகள், பித்துண்டா என்பது கலிங்கத்தின் தென்கிழக்கு எல்லையில் இருந்த தமிழக அரசுகளின் காவல் அரண் என்பதையும், மொழிபெயர் தேயமான ஆந்திரத்தின் சில பகுதிகள் தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்துள்ளது என்பதையும் உறுதி செய்கின்றன. தமிழக அரசுகள் மகதத்துக்கு அருகிலுள்ள வலிமையான, காரவேலனின் கலிங்க அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அளவு வலிமை மிக்கனவாக இருந்தன என்ற அவரது செய்தி, தமிழரசுகளிடையே ஐக்கிய கூட்டணி இருந்தது என்பதை, மொழிபெயர் தேயப் பகுதிகள் இக்கூட்டணி அரசுகளின் கீழ் இருந்தன என்பதை சந்தேகமின்றி ஆதாரத்தோடு உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

அடுத்த வருடம் (13வது வரியில்), காரவேலனின் வலிமையை உணர்ந்த பாண்டிய அரசன் தொடர்ந்து வடநாடுகளோடு வணிகம் செய்ய, காரவேலனின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்து, அவனோடு சமாதானம் செய்து கொள்ளும் பொருட்டு, பெரும் அளவிலான பரிசுப் பொருட்களை அனுப்பி, காரவேலனோடு நட்புக் கொண்டுள்ளான். இதைத்தான் கல்வெட்டின் 13-வது வரி குறிப்பிடுகிறது எனலாம்.

ஆக மாமூலனாரின் பாடல்களும், காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதையும், மொழி பெயர் தேயப் பகுதிகளான ஆந்திரம், கர்நாடகம் முதலியன தமிழக அரசுகளின் கூட்டணியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

தமிழரசுகளின் கடல் வல்லமை :

தமிழ் அரசுகள் அன்று மாபெரும் கடல் வல்லரசுகளாகவும் இருந்தன. இதுகுறித்து வின்சென்ட் யு.ஸ்மித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், ‘தமிழ் அரசுகள் வலிமை மிக்க கடற்படைகளை வைத்திருந்தனர். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வாணிபக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன” என்று தனது இந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிடுவதாக கார்த்திகேசு சிவதம்பி அவர்கள் பண்டைத் தமிழ் சமூகம் என்ற தனது நூலின் முன்னுரையில் தெரிவிக்கிறார். வின்சென்ட் யு. ஸ்மித் அவர்கள் தனது அசோகர் என்ற மற்றொரு நூலில் ‘தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகள் பராமரித்து வந்துள்ளன” எனக் குறிப்பிடுகிறார். (ஆதாரம் : ‘அசோகர்” வின்சென்ட் யு. ஸ்மித், தமிழில் சிவமுருகேசன் பக்: 79) தென்னிந்திய நாடுகள் என்பன தமிழக நாடுகளே ஆகும்.

பண்டையத் தமிழக அரசுகள் வலிமை மிக்க கடற்படைகளைக் கொண்டிருந்த போதிலும் அவர்களிடையே நடைபெற்ற போர்கள் அனைத்துமே நிலப் போர்களாகவே இருந்தன. அவைகளுக்கிடையே கடற் போர்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் கடம்ப மன்னர்களை, அவர்களின் கடற் கொள்ளைகளைத் தடுக்கும் பொருட்டு, தங்கள் கடற்படை கொண்டு அவர்களைத் தாக்கி அழித்தனர். தமிழக கடல் வாணிபத்துக்குத் தடையாக இருந்த கடற் கொள்ளையர்களையும் தாக்கி அழித்தனர் என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அதுபோன்றே சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்செட் சென்னியும், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் தென் பரதவர்களை, அவர்களின் கடல் வல்லமையை, தங்கள் கடற்படை கொண்டு அடக்கினர் என சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

ஆக கடற் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே கடற்படை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. கடல் வணிகத்தை பாதுகாப்பதிலும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி இருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான் தமிழரசுகளுக்கிடையே கடற்போர் எதுவும் நடைபெறவில்லை. ஆக வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வாணிகத்தை பாதுகாக்கவும், வடக்கிலிருந்து வடுகர்கள் போன்ற அநாகரிக மக்களைகட்டுப்படுத்தி வைக்கவும், மொழி பெயர் தேயப் பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிகநீண்ட காலமாக இருந்து வந்தது என்பதை மேலே சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

புகழ்பெற்ற நெடியோன் எனப்படும் நிலந்தருதிருவிற்பாண்டியன் கி.மு.5-ம்நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படை வைத்திருந்தான் எனவும், ‘சாவகம்” (இன்றைய இந்தோனேசியா தீவுகள) அன்றே அவனது கடற் படை கொண்டு கைப்பற்றப்பட்டது எனவும், அப்பாதுரை அவர்கள் குறிப்பிடுகிறார். அதன்மூலம் ‘கிராம்பு” எனப்பட்ட வாசனைப் பொருள் வணிகம் தமிழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது எனத் தெரிகிறது.

கிராம்பு என்பது உலகிலேயே இந்தோனேசியாவில் மட்டுமே விளைந்தது என்றும், உலகம்முழுவதும் அதற்கு மிக அதிகத் தேவை இருந்தது என்றும் அறிகிறோம். கி.மு.500 க்கு முன்பிருந்தே அத்தேவை கடல் வணிகம் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. அதனால்தான் அவ்வணிகத்தை தமிழர்கள் தமது கடற்படை கொண்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். சங்க காலத்தில் சாவகத்தில் தமிழ் பேசப்பட்டதாக மணிமேகலை காப்பியத்தின் கூற்று அச்செய்தியை உறுதிப்படுத்துகிறது. (ஆதாரம் : கா. அப்பாதுரை அவர்களின் தென்னாட்டு போர்க்களங்கள் பக் : 43 முதல் 48 வரை).

மேலும் நரசய்யா அவர்களின் ‘கடல் வழி வணிகம்” என்ற நூல் தமிழர்களின் பண்டையக் கடல் வணிகம் குறித்து பல விரிவான தகவல்களைத் தருகிறது. ஆக கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே பண்டைய தமிழக அரசுகள் கடற் போரிலும், கடல் வணிகத்திலும் புகழ் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக இருந்துள்ளனர்.

பண்டைய தமிழ் அரசுகள் :

பண்டைய தமிழக அரசுகளை, அசோகர் தனது கல்வெட்டுக்களில் சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரள புத்திரர்கள் என பன்மையில்தான் குறிப்பிட்டுள்ளார். சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் ஒவ்வொருவரிலும் பலர் இருந்து ஆண்டு வந்துள்ளனர். அதாவது சேரர்களில் மூன்று நான்கு பேரும், பாண்டியர்களில் மூன்று நான்கு பேரும் சோழர்களில் மூன்று நான்கு பேரும் இருந்து ஆண்டு வந்துள்ளனர். இதனைக் கவனத்தில் கொண்டுதான் பண்டைய தமிழக வரலாற்றை ஆராய வேண்டும். சேரர்கள் வஞ்சி, கரூர் ஆகிய இடங்களிலும், சோழர்கள் உறையூர், காவிரிப் பூம்பட்டினம் ஆகிய இடங்களிலும், பாண்டியர்கள் மதுரை, கொற்கை ஆகிய இடங்களிலும் இருந்து கொண்டு மூன்று நான்கு சேர, சோழ, பாண்டிய பரம்பரையினர் ஆண்டு வந்துள்ளனர்.

உதாரணமாகச் சேரன் கடற்பிற கோட்டிய செங்குட்டுவன் காலத்தில் அதற்குச்சற்று முன்பும் பின்பும் (1) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,(2) பல்யானைச்செல் குழுகுட்டுவன், (3) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்,(4) சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதன், (5) களங்காய்கண்ணி நார்முடிச்சேரல், (6) ஆடு கோட்பாட்டு சேரலாதன், (7) தகடூர் எறிந்த நெடுஞ்சேரல் இரும்பொறை, (8) சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை ஆகிய 8 பேர் இருந்துள்ளனர். செங்குட்டுவனையும் சேர்த்து 9 பேர் ஆகிறது. இதேபோன்றுதான் சோழ, பாண்டிய அரசர்களும் இருந்துள்ளனர். அதனால்தான் அசோகர் தனது கல்வெட்டுகளில் தமிழக அரசர்களை பன்மையில் குறிப்பிட்டுள்ளார்.

சோழர்களின் முதன்மை

மெகஸ்தனிஸ், சாணக்கியர் குறிப்புகளில் இருந்தும், அசோகரின் கல்வெட்டுகளில் இருந்தும் தமிழக வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வை அறிய முடிகிறது. கி.மு.325 முதல் கி.மு.300 வரையான காலகட்டத்தில், அதாவது கி.மு.4-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழக மூவேந்தர்களில் முதன்மையான அரசாக மெகஸ்தனிஸ், சாணக்கியர் ஆகிய இருவரும் குறிப்பிடுவது பாண்டிய அரசைத்தான். ஆனால் கி.மு.3-ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பொறிக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகளில் முதன்மை பெற்றிருப்பது சோழ அரசுதான்.

பாண்டிய அரசு இரு கல்வெட்டுகளிலும் இரண்டாவது இடத்தில் தான் குறிக்கப்பட்டுள்ளது.(அசோகர்-வின்சென்ட் A ஸ்மித், தமிழில் சிவ. முருகேசன், பக்: 123, 139)அரை நூற்றாண்டுக்குள் சோழர்கள் முதன்மை பெற்று, பாண்டியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்று, அது அன்றைய இந்தியாவெங்கும் பிரதிபலித்துள்ளது. அந்நிகழ்வு என்ன என்பதை அறிவோமாக!

சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலம் கி.மு.321 முதல் கி.மு.292 ஆகும். அவர் மகன் பிம்பிசாரரின் ஆட்சிக் காலம் கி.மு.293 முதல் கி.மு.272 ஆகும். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்திலேயே, கி.மு. 300-க்கு பின் தக்காணத்தைக் கைப்பற்றும் பணி தொடங்கி விடுகிறது. ஆனால் பிம்பிசாரரின் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.மு.293-க்குப் பிறகு அது தீவிரப்படுத்தப் படுகிறது.

இதுகுறித்து கா.அப்பாதுரையார் அவர்களின் ‘தென்னாட்டுப் போர்க் களங்கள்” என்ற நூல், முனைவர் எம். இராசமாணிக்கனார் அவர்கள் சங்க இலக்கியங்களில் இருந்து திரட்டிய தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விரிவான விளக்கத்தை வழங்குகிறது. தென்னிந்தியாவை கைப்பற்றிய காலம் அசோகரின் ஆட்சிக் காலம் என்கிறது அந்நூல். ஆனால் பிந்துசாரரின் ஆட்சிக் காலத்தில் தான் அது நடைபெறுகிறது. அசோகரின் ஆட்சிக் காலத்தில் அது நடந்திருக்க வாய்ப்பில்லை.

பிந்துசாரன் ஆட்சிப் பொறுப்பேற்ற போது வடக்கு, மத்திய கிழக்கு இந்தியாவும், ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகளும் மௌரிய ஆட்சியின் கீழ் இருந்தன என்றும், பிந்துசாரன் காலத்தில் தான் தெற்குப் பகுதியில் பேரரசு விரிவு பெற்றது என்றும், இரு கடல்களுக்கு இடைப்பட்ட நிலத்தை கைப்பற்றியவன் என பிந்துசாரன் புகழப்படுகிறான் என்றும், விக்கிமீடியா குறிப்பிடுகிறது. பிந்துசாரன் ஆட்சிக் காலத்தில் இன்றைய மைசூர் வரை மௌரியப் பேரரசு விரிவு பெற்றது.

தமிழக அரசுகள் பிந்துசாரரின் நட்பு நாடுகள் என்பதால், அதனைக் கைப்பற்றும் முயற்சி எதுவும் நடைபெற வில்லை என்ற சில வரலாற்று அறிஞர்களின் கருத்தை, சங்க இலக்கியக் குறிப்புகள் மறுக்கின்றன. பெருஞ்செல்வமும், நல்ல வளமும், வணிக விரிவாக்கமும் பெற்றுத் திகழ்ந்த தமிழக அரசுகளைக் கைப்பற்ற, மௌரியப் பேரரசு தனது முழுப் பேராற்றலை பயன்படுத்தி முயற்சித்தது என்பதை சங்க இலக்கியக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

ஏரணக் கண்ணோட்டத்திலும், வரலாற்று அனுபவ முறையிலும் அதுவே பொருத்தமான செய்தியாகும். தக்காணத்தையும், தமிழகத்தையும் கைப்பற்றும் மௌரியர்களின் படையெடுப்பு கி.மு.293 முதல் கி.மு.280 வரையான காலங்களில் மிகத் தீவிரத்தோடும், மௌரியப் பேரரசின் முழு ஆற்றலோடும் நடைபெற்றது. தக்காணத்தின் பல பகுதிகள் பிடிக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தை பொருத்தவரை அப்படையெடுப்பு ஒரு பெரும் தோல்வியில் முடிந்தது என்பதுதான் வரலாறு. சங்க இலக்கியங்கள் தரும் செய்தியும் அதுவே. பாரசீகப் பேரரசு கி.மு.5-ம் நூற்றாண்டில் கிரேக்க அரசுகளைக் கைப்பற்ற முயன்றபோது அம்முயற்சி பெருந்தோல்வியில் முடிந்தது. அதுபோன்ற நிலையே மௌரியப் பேரரசின் தமிழகப் படையெடுப்புக்கும் ஏற்பட்டது. பின் பிம்பிசாரரின் கடைசி ஆட்சி ஆண்டுகளில் தமிழகரசுகளோடு நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

மௌரியப் பேரரசின் படையெடுப்பு :

மௌரியர்கள் முதலில் வடுகர்கள் துணை கொண்டு துளுவ நாட்டைத் தாக்கி, அதனை ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து, அவனது தலைநகர் பாழியை கைப்பற்றிக் கொண்டனர். பின் அதனை ஒரு வலிமையான அரணாக மாற்றியமைத்து, அங்கிருந்து அவர்கள் அதியமான் மரபினனாகிய எழினியையும், சோழ நாட்டின் எல்லையிலுள்ள அமுந்தூர்வேல் திதியனையும், பாண்டிய நாட்டு எல்லையிலுள்ள மோகூர்த் தலைவனையும், படிப்படியாகத் தாக்கத் தொடங்கினர். சேரர் எல்லையில் இருந்த நன்னனை முதலிலேயே தாக்கியழித்திருந்ததால், முதலில் சேரர்களைத் தாக்கினர்.

சேரர் படைத் தலைவன் பிட்டங்கொற்றன் மோரியர்களோடு பல தடவை போர் புரிகிறான். போர் வெற்றி தோல்வி இல்லாமல் தொடர்கிறது. பின் மௌரியர்களை அதியமான் மரபினன் எழினி என்பான் முதலில் வட்டாறு என்ற இடத்திலும், பின் செல்லூர் என்ற இடத்திலும் எதிர்த்து தாக்குதல் நடத்துகிறான். இறுதியில் செல்லூர் போரில் எழினி வீர மரணமடைந்து பெரும் புகழடைகிறான். அதன் பின்னரும் அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து தொடர்ந்து இறுதிவரை தாக்குதல் நடத்தினர். அதன் காரணமாகவே அசோகரின் கல்வெட்டில், அவர்களின் அரச குல வடமொழிப் (பிராகிருதம்) பெயரில் ‘சத்திய புத்திரர்கள்’ என மூவேந்தர்களுக்கு இணையாக இடம் பெற்றனர் எனலாம்.

சோழ நாட்டெல்லையில் உள்ள அமுந்தூர்வேல் திதியனும், பாண்டிய நாட்டெல்லையிலுள்ள மோகூர்த் தலைவனும் மோரியர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களைத் தடுத்து நிறுத்து கின்றனர். இறுதியில் திதியனும் மோகூர்த் தலைவனும் மோரியர்களைப் போரில் தோற்கடித்து தங்களது எல்லையை விட்டு துரத்தி விடுகின்றனர். மோரியர் படை பின்வாங்கி துளுவ நாட்டை அடைந்து, பாழி நகரில் நிலை கொள்ளுகிறது.

மௌரியப் பேரரசின் படை இதுவரை முழுமையாக போரில் ஈடுபடவில்லை. அதன் தென்பகுதி படைத்தலைவர்களே வடுகர்களின் துணை கொண்டு போரை நடத்தி வந்தனர்.தமிழக எல்லையில் ஏற்பட்ட பெருந்தோல்வி மௌரியப்பேரரசினை கொதித்தெழச்செய்தது.உடனடியாக பெரும்படை திரட்டப்பட்டது.முதலில் துளு நாட்டையும், எருமை நாட்டையும் கடந்து வரும் வழிகளிலுள்ள பாறைகளை வெட்டிச் செப்பனிட்டு மௌரியப் பெரும்படை வருவதற்கான பாதைகள் உருவாக்கும் பணி நடைபெற்றது.

இந்த பெரும் போருக்கான ஆயத்தப் பணிகள் சில ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெரிகிறது. இப்பாறைகளை வெட்டி பாதை அமைக்கும் பணி குறித்தும், மோகூர் தலைவன் பணியாதது குறித்தும், வடுகர் வழி காட்டியாக இருந்து மோரியர்களுக்கு உதவினர் என்பது குறித்தும் சங்க புலவர்கள தங்கள் பாடல்களில் தெரிவித்துள்ளனர். இந்த பெரும்போருக்கான ஆயத்தப் பணிகள் முடிந்த பின் மௌரியப் பேரரசின் பெரும்படை துளுவ நாட்டில் வந்து தங்கி, தமிழகத்தின் மீது படையெடுக்கத் தயாராகியது.

தமிழகத்தின் பெருவெற்றி :

தமிழகத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தை, சோழ அரசன் இளஞ்செட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான். எல்லையிலுள்ள படைத் தலைவர்களை வேளீர்கள் மற்றும் சிற்றரசர்களை மட்டும் இப்பெரும் போருக்கு பொறுப்பாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்றெண்ணி, தமிழர் ஐக்கிய கூட்டணி அரசுகளை (மாமூலனார் மற்றும் கலிங்க மன்னர் குறிப்பிடும் தமிழக அரசுகளின் கூட்டணி) ஒன்று திரட்டி, தனது தலைமையில் பெரும் படையைத் திரட்டுகிறான். இப்போர் தமிழகப் போராக, தமிழக கூட்டணி அரசுகளின் போராக நடைபெற்ற போதிலும், இப்போரின் வெற்றி சோழர்களின் வெற்றியாகவே வடவரிடத்திலும், நமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் பதிவாகி, சேர, பாண்டியர்களை விட சோழர்கள் பெரும் புகழடைகின்றனர்.

தமிழக கூட்டணி அரசுகளுக்கும், மௌரியப் பேரரசுக்குமிடையே பெரும் போர் துவங்கியது. சோழ நாட்டெல்லையிலேயே பல தடவை மௌரியர்கள் தோல்வியுற்றனர். எனினும் தொடர்ந்து புதுப் புதுப் படைகளை போருக்கு அனுப்பினர். மௌரியப் பேரரசின் முழு ஆற்றலும் திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம் தாக்கப்பட்டது. தமிழகத்தின் வடபகுதி முழுவதும் மௌரியப் பெரும்படையால் தாக்கப்பட்டது. வட ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற இடத்தில் நடைபெற்ற பெரும்போரில், இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெருந்தோல்வியடையச் செய்து துரத்தியடித்தான்.

வல்லம் போர் குறித்து அகம் 336-ல் பாடிய பாவைக் கொட்டிலார்என்ற பெண்பாற் புலவர், மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிடுகிறார். மௌரியர்கள் தங்களைஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர். (இது கி.மு.3-ம் நூற்றாண்டுப் பாடல் ஆகும். இதில் குடும்ப மகளிர்கள், ‘கள்” அருந்தி தங்கள் கணவன்மார்களின் பரத்திமை நடத்தை குறித்து வம்பளந்து கொண்டிருப்பது குறித்த குறிப்பு வருகிறது). அதன்பின்னரும், மௌரியர்கள் சளைக்காமல் தொடர்ந்து பல தடவை, பெரும் படைகளை அனுப்பிக் கொண்டேயிருந்தனர்.

ஆனால் போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய, அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத் தெரியவில்லை.இறுதியில் தொடர்ந்து அடைந்து வந்த தோல்விகளால் தாக்குப்பிடிக்க இயலாமல் பெரும் இழப்போடு பாழி நகருக்குப் பின்வாங்கினர். இளஞ்செட் சென்னி போரை தொடர்ந்து நடத்தி, பாழி நகர் வரை படையெடுத்துச் சென்று, அதனைத் தாக்கி, இறுதியில் பெரும் வெற்றியை தமிழகத்துக்கு வாங்கித் தந்தனன்.

இளஞ்செட் சென்னியின் பாழி நகர் வெற்றி குறித்து இடையன் சேந்தன் கொற்றனார் என்பவர் அகம் 375-ல் பாடியுள்ளார். அதில் மௌரியர்களை அவர் வம்ப வடுகர் என்கிறார். தமிழகத்தின் வடக்கே வாழ்பவர்களை வடுகர் என்பது பொது வழக்கு. வடக்கேவாழும் வடுகர்களை அவர் அறிவார். ஆனால் மௌரியர்களை அவர் அறியார். ஆனால் மௌரியர்களும் வடக்கிருந்தே வருவதால், புதிய வடுகர்கள் என்பதால், அவர்களை வம்ப வடுகர் என்கிறார்.

பாழி நகரில் நடந்த இறுதிப் பெரும் போருக்குப் பின்னர் மௌரியர்கள் தமிழக அரசுகளைப் படைகொண்டு வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்து கொண்டு நிரந்தரமாக பின்வாங்கினர். தமிழகத்தைக் கைப்பற்றும் முயற்சி கைவிடப்பட்டு தமிழக அரசுகளோடு நட்பு கொண்டனர். கி.மு.293-ல் பிம்பிசாரன் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்ட தக்காணப் படையெடுப்பும், தமிழகப் படையெடுப்பும் 13 ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததாகக் கொண்டு, பாழி நகரில் நடந்த இவ்விறுதிப் பெரும்போர் கி.மு.280 வாக்கில் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தப் பெரும்போரில் சோழர் பெற்ற பெரும் புகழின் காரணமாகவே, அசோகன் தனது இரு கல்வெட்டுகளிலும் சோழர்களை முதன்மைப்படுத்தியுள்ளான்.

‘இந்தியாவின் வரலாறு” என்ற நூல் கொ.அ. அன்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின் ஆகிய இரு இரசிய வரலாற்று அறிஞர்களால் எழுதப்பட்டு, முன்னேற்றப் பதிப்பகத்தால் 1987ல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அசோகன் இளவரசனாக இருக்கையில் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்ட அவந்தி மாநிலத்துக்கு தனது தந்தையால் அனுப்பப்பட்டு அப்பகுதியை அவன் நிர்வகித்து வந்தான் என்ற செய்தி தரப்பட்டுள்ளது. (பக்.93)

தக்காணத்தின் துவக்கத்தில் அவந்தி மாநிலம் இருப்பதால் தமிழகப் படையெடுப்பு குறித்த முழு விபரத்தையும் அசோகன் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இதே புத்தகம் பக்.104-ல் இன்னொரு முக்கிய தகவல் உள்ளது. அசோகன் ஆட்சிக் காலத்தில் தனிப்பட்ட தெற்கு மாநிலம் அமைக்க, பிந்துசாரன் ஆட்சிக் காலத்தில் இருந்த, முக்கியத்துவம் பெற்றிருந்த ‘தெற்குப் பிரச்சினையே”காரணம் என்றும், பிற மாநில ஆட்சித் தலைவர்கள் குமாரர்கள் என பட்டம் பெற்றிருந்த போது, தெற்கு மாநில ஆளுநர் மட்டும் பட்டத்து இளவரசன் என்கிற‘ஆர்ய புத்ர” என்ற பட்டத்தைப் பெற்றிருந்தான் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது.

ஆக ‘தெற்கு பிரச்னை” என்பது என்ன? அதுவும் பிம்பிசாரன் ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த தெற்குப் பிரச்னை என்பது என்னவாக இருக்க முடியும்? தமிழக கூட்டணி அரசுகளிடம் மௌரியப் பேரரசு பெருந்தோல்வி அடைந்ததும், பேரரசின் தெற்கிலுள்ள தமிழக அரசுகளிடமிருந்து எப்பொழுதும் பேரரசுக்கு ஆபத்து இருப்பதையுமே அது சுட்டிக்காட்டுகிறது. மேலும் மொழி பெயர் தேயம் எனப்படும் ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள பல காவல் அரண்கள் தொடர்ந்து தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆக தமிழரசுகளின் புகழையும், செல்வாக்கையும், வலிமையையும் அறிந்திருந்ததால்தான் அசோகர் தமிழரசுகளை, கிரேக்க மன்னர்களுக்கு முன் தனது கல்வெட்டில் பதியச் செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது. மேலும் கி.மு.230-ல், அசோகர் இறந்த உடன், சாதவ கன்னர்கள் தமிழக அரசுகளின் ஆதரவோடு தனி அரசாகினர் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்வது நல்லது. சாதவ கன்னர்கள் (நூற்றுவர்கன்னர்), தமிழரசுகளோடு நட்பு கொண்டிருந்தனர். சேரன் செங்குட்டுவன் சாதவ கன்னர்களின் துணையோடுதான் வட நாடுகள்மீது படையெடுத்தான் என சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

சிலப்பதிகார காலம் :

சிலப்பதிகாரம் குறித்துப் பேசும் பொழுது இராம.கி அவர்களின் சிலம்பின் காலம் கட்டுரையில் உள்ள ஒரு முக்கிய தரவை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. இலங்கை அரசன் கயவாகு, கண்ணகி விழாவுக்கு வந்திருந்ததாக ‘வரம்பறுகாதை” குறிப்பிட்டுள்ள செய்தியைக் கொண்டு செங்குட்டுவனின் படையெடுப்பு காலம் கி.பி.177 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இளங்கோவடிகள், செங்குட்டுவனின் தம்பி எனவும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியம் எனவும் கருதப்படுகிறது. வரம்பறுகாதை என்பது பிற்காலத்திய இணைப்பு என்றும் அதில் தரப்பட்டுள்ள இதுபோன்ற செய்திகள் ஆதாரமற்றவை என்றும் இராம.கி அவர்கள் தனது கட்டுரையில் ஆதாரத்தோடு நிறுவுகிறார்.

அதன்படி கி.பி.177 என்ற ஆண்டு நிர்ணயம் தவறாகி விடுகிறது. அதற்குப் பதில் சிலப்பதிகாரகால படையெடுப்பு ஆண்டு நிர்ணயம் கி.மு.75 என அவர் குறிப்பிட்டுள்ளார். அது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு கருதுகோள் ஆகும். எனினும், தமிழக கூட்டணி அரசுகளின் மௌரியப் பேரரசுக்கெதிரான இறுதிப் பெரும்போரான செருப்பாழிப் போரின் காலம் கி.மு.280 எனும்பொழுது சேரன் செங்குட்டுவனின் காலம் கி.பி.177 என்பது பொருந்தி வராது. எனவே கி.பி.177 என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழக வரலாற்றின் காலத்தை நிர்ணயிப்பது ஒரு தவறான அடிப்படை என்ற இராம. கி அவர்களின் கருத்து மிக மிகச் சரியாகும்.

சிலப்பதிகாரச் சிறப்பு :

மணிமேகலை போன்று சிலப்பதிகாரம் ஒரு மதச் சார்பான நூல் அல்ல. சிலப்பதிகாரம் தமிழ் தேசிய ஒற்றுமையை வலியுறுத்துகிறது. தமிழக வணிகம் ஒரு உயர்வளர்ச்சியடைந்த காலத்தைக் குறிக்கிறது. பண்டைய தமிழிசையின், தமிழ்க் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது. தமிழ் சமுதாயத்தின் பரந்துபட்ட மக்களின் பண்பாட்டை எடுத்துக் காட்டுவதோடு, முதலாளித்துவத்துக்கு முந்திய வளர்ச்சியடைந்த வணிகக் குழுக்களின் முடி அரசுக்கெதிரான கருத்தை பிரதிபலிக்கிறது. தமிழ் தேசியத்துக்கான கருவைக் கொண்டு, தனித்துவமிக்க தமிழ்ச் சமுதாயத்தின் முதல் காப்பியமாகத் திகழ்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகக் காப்பியங்கள் அனைத்தும் கடவுளையும், வேந்தனையும் கொண்டு புனையப்பட்டதற்கு மாறாக, சாதாரண ஒரு வணிகனை, அதுவும் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு புனையப்பட்டதோடு, முடி அரசுக்கு சவால்விட்டு, நியாயத்தின் அடிப்படையில் அதனை எரித்து அழிக்கும் ஆற்றல் பெற்ற பெண்ணாகவும் படைக்கப்பட்டுள்ளது.

வரம்பறுகாதை போன்ற பிற்கால இணைப்புகளையும், இன்னபிற இடைச் செருகல்களையும் நீக்கிப் பார்க்கும்பொழுது சிலப்பதிகாரம் ஒரு மதச் சார்பற்ற படைப்பே ஆகும். இக்காப்பியத்தில் வருகிற மதக் கருத்துக்களும் உயர்நவிற்சி மிக்க கற்பனைகளும், அக்காலத்திய தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கைகளையும், காப்பியத்துக்குத் தேவையான கற்பனை புனைவுகளையும் கொண்டு படைக்கப் பட்டதாகவே கருத முடியும். எனவே இதனையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியம் என்பது தவறு. கோவலன் - மாதவியின் மகள் மணிமேகலை என்பதைத் தவிர இரு காப்பியங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எனவே மணிமேகலையின் காலத்தைக் கொண்டு சிலப்பதிகாரத்தின் காலத்தை நிர்ணயிப்பதோ அல்லது சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கொண்டு மணிமேகலையின் காலத்தை நிர்ணயிப்பதோ தவறு ஆகும்.

சிலப்பதிகாரம் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்பு. அன்றே தமிழ்ச் சமுதாயம் வணிக வளர்ச்சியில், பொருள் உற்பத்தியின் வளர்ச்சியில், ஒரு உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருந்தது. அக்காலகட்டத்தில், முதலாளித்துவக் கூறுகளும், தமிழ் தேசியக் கூறுகளும் தமிழ் சமுதாயத்தில் முளைவிட்டிருந்தன, கருக்கொண்டிருந்தன என்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது. கி.பி.15-ம் நூற்றாண்டில் ஐரோப்பா அடைந்த வளர்ச்சியை, கிறித்துவ சகாப்தத்தின் தொடக்கத்திலேயே அதனை அடைய தமிழகம் முயற்சி செய்திருப்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது.

அதனால்தான் ஒரு வணிகப் பெண், காப்பியத்தின் தலைவியாக ஆக முடிந்தது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்ற சங்க இலக்கியப் படைப்புகளின் உயர்தரமும், தமிழ் சமுதாயம் ஒரு உயர் கட்ட வளர்ச்சியை அடைந்த சமுதாயமாக இருந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது.

ஆய்வு முடிவு:


ஆக ஒட்டுமொத்தமாக, கீழ்க்கண்ட ஆய்வு முடிவுகளை இக்கட்டுரை வழங்குகிறது எனலாம்.

 

(i) தமிழ் சமுதாயம் உயர் வளர்ச்சி பெற்றதாக, வலிமை மிக்கதாக இருந்ததால்தான் அசோகர் தனது கல்வெட்டில் தமிழரசுகளை, கிரேக்க மன்னர்களுக்கு முன் பதிவு செய்துள்ளார்.

 

(ii) மௌரியப் பேரரசுக்கெதிரான செருப்பாழிப் போரின் பெருவெற்றி காரணமாக அசோகரின் கல்வெட்டுகளில் சேர பாண்டியர்களைவிட சோழர்கள் முதன்மை பெற்றனர்.

 

(iii) செருப்பாழிப் போரின் காலமான கி.மு.280 என்பது தமிழக வரலாற்றுக்கு ஒரு அடிப்படையாக இருக்க முடியும். மாமூலனாரின் சங்க காலப் பாடல்கள் இக்காலத்தை நிர்ணயிக்கக் காரணமாகின்றன.

 

(iv) பண்டைய தமிழகத்தில் தமிழரசுகளிடையே பல நூற்றாண்டுகளாக ஒரு ஐக்கிய கூட்டணி இருந்து வந்துள்ளது. அக்கூட்டணியின் பாதுகாப்பில்தான் தென் இந்தியக் கடல் பகுதிகளும் மொழிபெயர் தேயமும் இருந்து வந்துள்ளன.

Pin It