“நமது பரத கண்டத்திலே, இந்தக் காலத்திலே மேலைத் தேசங்களில் பிரசித்திபெற்று விளங்கும் பிராகிருத சாத்திரக்கொள்கைகள் நுழைந்து, எமக்குப் பிதிரார்ச்சிதமாகக் கிடைத்த தெய்வக் கொள்கையைப் பெரிதுந் தளர்புறுத்துவனவாயின. ஏறக்குறைய 45, 50 வருடங்களுக்கு முன்னே சென்னை இராசதானியிலே `தத்துவ விசாரிணி’ `தத்துவ விவேசினி’ என்னும் இரண்டு தமிழ்ப் பத்திரிக்கைகள் தோன்றி, இங்கிலாந்து தேசத்தில் இருந்துகொண்டு நாத்திகப் பிரசங்கஞ் செய்துகொண்டுவந்த பிறாட்லா (Bradlaugh 1833-1891) என்பாருடைய கொள்கையைப் பிரதிபாதித்தலிற் பெரு முயற்சி செய்வனவாயின. அந்தப் பத்திரிக்கைகளால் நமது தேசத்துக்கு உண்டாகிய கேட்டைக் கண்டு சகிக்கலாற்றாது, அவற்றின் ஆபாசங்களையெல்லாம், அந்தக் காலத்திலே யாழ்ப்பாணத்திலே நடைபெற்றுவந்த `உதயபானு’ என்னும் பத்திரிக்கையிலே எடுத்துக்காட்டிக் கண்டித்து வந்தோம். அங்ஙனம் நாம் அப்பத்திரிக்கையில் எழுதிய வியாசங்களே பின்னர் `ஈச்சுர நிச்சயம்’ என்னும் பெயரோடு புத்தக வடிவமாக எம்மால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டன. அந்நூல் வெளிப்பட்டபின், திருவருள் காரணமாக நாத்திகப் பிரசங்கமும் ஒருவாறு ஒழிந்துவிட்டதெனலாம்.” (பிரபஞ்ச விசாரம். ஈச்சுவர நிச்சயத்தின் இரண்டாம் பாகம், ச. சபாரத்தின முதலியார். 1918 முகவுரை)

“பௌதிகவாத சேட்டராகிய பிறாட்லா (Bradlaugh) முதலாயினாரது துர்வாதங்களை வாசித்துணர்ந்த நம்மவரிற் பலர் அக்கொள்கையின் கண்ணே பேரபிமானமுற்று, அதனை எடுத்துப் பத்திரிக்கைகள் வாயிலாகப் பிரதிபாதிக்கத் தொடங்கிக் கொண்டார்கள். இன்றைக்குப் பல வருடங்கட்கு முன்னே, சென்னைபுரியிற் பிரசுரிக்கப்பட்டு வந்த`தத்துவ விசாரிணி’, `தத்துவ விவேசினி’ என்னும் பத்திரிக்கைகளிலே இப்பௌதிகவாதம் பெரிதும் பிரதிபாதிக்கப்பட்டு வந்தமை காரணமாக, நாம் அந்தக் காலத்திற்றானே, அக்கொள்கைகளையும் அவற்றுக்கு ஆதாரமாயுள்ள உலோகாயத முதலிய நிரீச்சுவரக் கொள்கைகளையும் கண்டித்து, யாழ்ப்பாணம் `உதயபானு’ பத்திரிக்கை வாயிலாகப் பற்பல கடிதங்களை எழுதிப் பிரசுரித்து வந்தோம் ...” (ஈச்சுவர நிச்சயம், ச. சபாரத்தின முதலியார், முதல் பதிப்பு 1895, இரண்டாம் பதிப்பு1954. முதல் பதிப்பில் ஆசிரியரின் முகவுரை.)

யாழ்ப்பாணத்துக் கொக்குவில் குகதாசர் என அழைக்கப்பெறும் சைவப்புலவர் ச. சபாரத்தின முதலியார் எழுதிய இரண்டு நூல்களின் முகவுரையில் காணப்படும் செய்திகளை மேலே கொடுத்துள்ளேன். இதன்மூலம் தமிழகத்தில் நாத்திகம் தொடர்பான இயக்கம் செயல்பட்டதை அறிகிறோம். அவ்வியக்கம் தொடர்பான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் செயல்பட்ட முதல் நாத்திக இயக்கத்தை அறிமுகப்படுத்துவதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாத்திகக் கோட்பாடு என்பது கடவுள் இருப்பை மறுப்பது. கௌதம புத்தர் (கிமு 563-483?) காலம் தொடங்கிப் பெரியார் ஈ.வெ.ரா. காலம் வரை (1879-1973) இக்கோட்பாடு கடவுள் இருப்பு தொடர்பான உரையாடல்களை முன்வைப்பதை நாம் அறிவோம். இக்கோட்பாட்டில் பல அணுகுமுறைகள் உள்ளன. பௌத்தம் போன்ற சமயங்கள் இதனை வரையறை செய்வதும், 18ஆம் நூற்றாண்டு முதல் உருப்பெற்று வளர்ந்து வரும் புத்தொளி சார்ந்த தத்துவக் கோட்பாடுகள் நாத்திகத்தை வரையறை செய்வதும் அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்டது. தமிழ்ச் சூழலில் பௌத்தம் போன்ற சமயங்கள் முன்னெடுத்த நாத்திக மரபு குறித்த உரையாடல்கள் இங்கு நமது நோக்கமன்று. ஐரோப்பியப் புத்தொளி மூலம் உருவான நாத்திக மரபு தமிழ்ச்சூழலில் எவ்விதம் உள்வாங்கப்பட்டது என்பது தொடர்பான உரையாடலே இங்கு நமது நோக்கம்.

பிரெஞ்சு புரட்சி மற்றும் ஐரோப்பாவில் உருவான தொழிற்புரட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து ஜெர்மன், பிரான்சு, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் `சுதந்திர சிந்தனையாளர் இயக்கங்கள்’ (Free thought movements) உருவாயின. இவ்வியக்கத்தின் தாக்கம் பின்னர் உலகின் பல பகுதிகளிலும் ஏற்பட்டது. கிறித்தவ சமயம், அதிகார வெறி கொண்ட தேவாலயங்களை உருவாக்கியது. நமது மண்ணில் நிலவுடைமையாளர்களும் கோயில் நிர்வாகமும் இணைந்து செயல்பட்டதைப் போல் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் தேவாலயங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாகச் செயல்பட்டன. இவ்வகையான தேவாலயங்களை எதிர்த்து இயக்கங்கள் உருவாயின. இவ்வியக்கங்களில் செயல்பட்டோரைக் கடுமையாக ஒடுக்கினர். புரூனோ (1548-1600) உயிரோடு கொளுத்தப்பட்ட காலம் முதல் இவ்வியக்கங்கள் பல அணுகுமுறைகளில் செயல்பட்டன. `சுதந்திர சிந்தனையாளர்கள்’, `தேவாலய எதிர்ப்பாளர்கள்’, `நாத்திகர்கள்’, `சோசலிசவாதிகள்’ எனப் பல பரிமாணங்களில் பெயரிட்டு அழைக்கப்பட்டனர். இவ்வகையான இயக்கங்கள் இலண்டன் நகரைத் தலைமை இடமாகக் கொண்டு பதினெட்டாம் நூற்றாண்டில் செயல்படத் தொடங்கின.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சீர்திருத்தம் செய்வதை அடிப்படையாகக் கொண்ட சார்டிச (Chartism) அமைப்பு உருவானது (1837-48). இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் ஓட்டளிக்கும் உரிமை கோரப்பட்டது. இதன் மூலம் குடியரசு உருவாக்கம் குறித்தும் பேசினர். இவ்வமைப்பு பின்னர் சமதர்மம் குறித்தும் பேசியது. இதன் தொடர்ச்சியாகச் சமயச் சார்பற்ற சுதந்திர சிந்தனையாளர் இயக்கம் 1850 களில் உருவானது . இவ்வியக்கம் வால்டேர் (1694-1778), தாமஸ் பெயின் (1737-1809) மற்றும் இங்கர்சால் (1833-1899) ஆகியோர் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டனர். சார்லஸ் டார்வின் (1809-1882) கண்டறிந்த உயிர்களின் தோற்றம் குறித்த கருத்துநிலை இவ்வியக்கத்தினர் உரையாடலில் முக்கிய இடம் பெற்றது.

1850களில் உருவான இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை செல்வாக்குடன் செயல்பட்டதைக் காண்கிறோம். இவ்வியக்கத்தின் தலைவராக சார்லஸ் பிறாட்லா செயல்பட்டார். ‘The National Reformer’, ‘The Free Thinker’, ‘The Secular Review’, ‘The Malthusiar’, ‘The Truth Seeker’, ‘Secular Thought’, ‘The Liberation’ ஆகிய இதழ்களை இவ்வியக்கத்தினர் நடத்தி வந்தனர். இவ்வியக்கத்தினர், இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சி நடத்துவது தொடர்பான விமரிசனங்களைச் செய்தனர். 1851ஆம் ஆண்டில் செயல்பட்ட தேவாலய நிர்வாகம், தேவாலயத்திற்கு வருவோர் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. உண்மையில் 13.5 மில்லியன் பேர் கோயிலுக்கு வரவேண்டும். ஆனால் 7.5 மில்லியன் பேர் மட்டும் வந்தனர். இதன் மூலம் இங்கிலாந்தில் பரவிவரும் `தேவாலய எதிர்ப்பு இயக்கம்’ குறித்து அறிய முடிகிறது. (பார்க்க: Religion and unbelief, Edward Royle 1971:4) சமயச் சார்பற்ற இவ்வியக்கம், இந்தியாவில் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்தது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இவ்வியக்கம் செயல்பட்டது. இலண்டனிலிருந்து வெளிவந்த இவ்வியக்க நூல்கள், இதழ்கள் ஆகியவை சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. இவ்வியக்கம் தொடர்பான விவரங்களை நாம் தொடர்ந்து உரையாடலுக்கு உட்படுத்துவோம்.

இலண்டனில் இயங்கிவரும் சுதந்திர சிந்தனையாளர்கள் சங்கத்தின் செல்வாக்கால் 1878ஆம் ஆண்டில், சென்னை நகரத்திலும் அவ்வகையான சங்கம் நிறுவப்பட்டதாக அறிகிறோம். இச்சங்கத்தின் இதழாகத் `தத்துவ விசாரிணி’ எனும் தமிழ் இதழ் வெளிவந்ததாக அறிகிறோம். ‘Philosophic Inquirer’ எனும் ஆங்கில இதழையும் இச்சங்கம் நடத்தியது. (இந்த விவரங்கள் தத்துவ விவேசினி இதழில் - 2:12. செப். 16, 1883 - பதிவாகியுள்ளன.) இவ்விதழ்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இச்சங்கத்தின் இதழான `தத்துவ விவேசினி’ 1882ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கியிருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கு முன் இச்சங்கம் நடத்திய தமிழ் மற்றும் ஆங்கில இதழ்கள் தொடர்ந்து வெளிவந்தது குறித்தும் அறிய இயலவில்லை. ஆனால் இவ்விதழ்களின் தொடர்ச்சியாகத் `தத்துவ விவேசினி’ மற்றும் ‘Thinker’ ஆகிய இதழ்கள் வெளிவரத் தொடங்கின. இவர்கள் தங்களைச் ‘சுயாக்கியானிகள்’ என்றும் தங்களது சங்கம் `சென்னை சுயாக்கியான சங்கம்’ என்றும் இதழ்களில் பதிவு செய்துள்ளனர். இச்சங்கம் `உபயோகமான அறிவைப் பரவச் செய்யும்’ என்றும் எழுதினர். தங்களது செயல்பாடுகளை `Exercise of Free Thought’ என்று ஆங்கிலத்தில் கூறிக்கொண்டனர்.

தத்துவ விவேசினி முதல்24 இதழ்கள் கிடைக்கவில்லை. 25ஆவது இதழ் (1882-செப்.7, தொகுதி 1) முதல் கிடைக்கிறது. இவ்விதழ்களில் காணப்பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டில் இச்சங்கம் செயல்பட்ட விவரங்களை அறிய முடிகிறது. 1886ஆம் ஆண்டு சனவரி முதல், ஆங்கில ஆண்டை இதழில் போடுவதைத் தவிர்த்தனர். 286 என்ற எண் போடப்பட்டது. புரூனோ உயிரோடு எரிக்கப்பட்ட ஆண்டிலிருந்து கணக்கிட முடிவு செய்தனர். எனவே கிபி1600இல் புரூனோ எரிக்கப்பட்டார். 1600+286 =1886 என்பது கணக்கு. இலண்டனில் செயல்பட்ட சுயாக்கியானிகள் இவ்விதம் கணக்கிட்டார்களா? என்பதை அறிய இயலவில்லை. ஆனால் தமிழ் நாட்டுச் சுயாக்கியானிகள் இவ்விதம் இதழில் ஆண்டைக் குறித்துள்ளனர். புரூனோ மீது இவர்கள் கொண்டிருந்த மதிப்பை இதன் மூலம் அறிய முடிகிறது. 1882ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி 1888 ஆம் ஆண்டு மார்ச்சு 18 வரை உள்ள இதழ்கள் கிடைக்கின்றன. ஆண்டை முதலில் 286 என்று வெறுமனே போட்டுள்ளனர். பின்னர் 287, 288 ஆம் ஆண்டுகளில் 288. A.S. என்று போட்டுள்ளனர். A.S. என்பதின் பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

மேற்குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 1878 தொடங்கி 1888ஆம் ஆண்டுவரை சுமார் பத்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் இச்சங்கம் இயங்கி வந்துள்ளது. இத்தகவல்களை இப்போதுதான் முதல்முறையாக நம்மால் அறியமுடிகிறது. ஐரோப்பியப் புத்தொளி மரபில் உருவான சுதந்திர சிந்தனையாளர்கள் அமைப்பின் நேரடிக் கிளையாகச் சென்னையில் இவ்வமைப்பு செயல்பட்டுள்ளது. `தத்துவ விவேசினி’ (1882-88), `The Thinker’ (1882-1884) ஆகிய இதழ்கள் வழியும் இவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள் மற்றும் விற்பனை செய்த நூல்கள் ஆகியவற்றின் மூலமும் தமிழக வரலாற்றில் இதுவரை அறியப்படாத நிகழ்வுகளை இங்குப் பதிவு செய்ய முடிகிறது. இச்சங்கம் பல்வேறு தருணங்களில் எவ்வகையான பெயரில் செயல்பட்டது என்பதைத் தொகுப்போம்.

இச்சங்கம் ஆங்கிலத்தில் `Hindu Free Thought Union’ என்று அழைக்கப்பட்டது. தமிழில் `இந்து சுயாக்கியானிகள் சங்கம்’ என்று கூறப்பட்டது. சுதந்திர சிந்தனை என்பதைச் சுயாக்கியானம் என்று கூறினர். சங்கத்தின் பெயரில் உள்ள `இந்து’ இன்றைய சூழலில் அறியப்படுவதைப் போல் இந்து மதத்தைக் குறிப்பதன்று. இந்து என்ற சொல் ஐரோப்பியர் அல்லாத இந்தியர்கள் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது. இச்சங்கம், 'The Free Thought Tract Society’ என்றும் அழைக்கப்பட்டது. இதுவே பின்னர் `Madras Free Tract Society’ என்று அழைக்கப்பட்டது. இவர்கள் வெளியிட்ட நூல்கள் `Madras Free Thought Scociety Tracts’ என்றும் கூறப்பட்டன. இவர்கள் இவ்வமைப்பு மூலம் வெளியிட்ட முதல் சிறு நூல் ம. மாசிலாமணியவர்களால் இயற்றப்பட்ட `வருண பேதச் சுருக்கம்’ (1885) ஆகும். இதனைப் பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகிறது.

இவர்கள் தற்காலம் ஓர் சங்கமாகக் கூடியிருக்கிறார்கள். அவர்கள் இதுகாறும் `இந்து சுயாக்கியான சங்கத்’தினராயிருந்தவர். இந்து எனும் பதம் ஐரோப்பியர் முதலானோர்களை நீக்குகின்றமையாலும், சுயாக்கியானிகளாவர் யாவரேனும், எவ்வருணத்தாரேனும், எத்தேசத்தாரேனும் சமத்துவ அங்கங்களாக விருக்கக் கூடியதேவென வெண்ணிச் `சென்னை இலௌகிக சங்க’ மெனும் பெயரால் ஒர் சங்கம் ஸ்தாபித்திருக்கிறார்கள். இது லண்டன் நகரத்தில் ஸ்தாபித்துள்ள `சர்வஜன இலௌகிக சங்கத்’தின் கிளையாகும். இன்னும் இதனோடு அனுப்பப்பட்டிருக்கிற அனுபந்தத்தைக் கண்டால் சர்வ விஷயமும் விளங்கும் (தத்துவவிவேசினி-4:13, செப்.27, 1885.)

இவ்வகையில் `இந்து சுயாக்கியான சங்கம்’ (Hindu Free Thought Society) இறுதியில் `சென்னை இலௌகிக சங்க’மாயிற்று (Madras Secular Society).

தமிழக வரலாற்றில், ஐரோப்பியப் புத்தொளி மரபை உள்வாங்கிச் செயல்பட்ட இச்சங்கத்தினர் தங்களை எவ்விதம் அடையாளப்படுத்திக்கொண்டனர்? தமிழக வரலாற்றில் இவர்களது முக்கியத்துவம் எவ்வகையில் அமைகிறது? இவர்களது செயல்பாடுகள் ஏன் அறியப்படாமல் போனது? ஆகிய பிற உரையாடல்களை விரிவாக மேற்கொள்ள வாய்ப்புண்டு. இச்சங்கத்தின் செயல்பாடுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ள முடியும்.

யாழ்ப்பாணத்துச் சைவர் திரு சபாரத்தின முதலியார், இவர்களை நாத்திகர்கள்; கடவுளை மறுப்பவர்கள் என்று புரிந்துகொண்டு, அதற்கான மறுப்பு நூலை எழுதினார். இதனை இக்கட்டுரையின் தொடக்கத்தில் காணலாம். அப்படியானால் இவர்கள் நாத்திகர்களா எனில், ஆம். அவர்கள் தங்களை நாத்திகர்கள் என்றே அழைத்துக்கொண்டார்கள். `சங்கா நாத்திகர்கள்’ என்று குறிப்பிடுகின்றனர். இலண்டனில் செயல்படும் `பிறாட்லா’ அவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அவரோடு இருந்து செயல்பட்டு, பின்னர் இந்தியாவிற்கு வந்து, `பிரம்ம ஞான சபை’ என்று அழைக்கப்படும் `தியாசபிகல் சொஸைட்டி’யில் தன்னை இணைத்துக் கொண்ட அன்னிபெசன்ட் அம்மையாரை (1847-1933) கடுமையாக விமரிசனம் செய்துள்ளனர். தமிழகத்தில் செயல்பட்ட சமய நிறுவனங்கள் குறித்து இவர்கள் மதிப்பீடு கீழ்வருமாறு அமைகிறது.

`இப்பரத கண்டமாகிய நாடக சாலையில்’ சைவர் தங்கள் குழாங்களோடு ஒருபுறம் நடிக்கின்றனர். வைணவர் ஒருபுறம் குதிக்கின்றனர். விவிலியர் ஒருபுறம் ஆடுகின்றனர். இம்மூவர் கூத்தைக் கண்டு சுயாக்கியானிகள் ஒருபுறம் நகைக்கின்றனர். இத்தகைய நடன மேடையாகிய இவ்விந்து தேசத்தில் தியாசப்பியாரும் பிராமண குருமார்களால் ஏற்படுத்தப்பட்டு மறைந்து கிடந்த பன்மத சாரமாகிய நாடகங்காட்டியாடத் தலைப்பட்டனர். இதனைப் புகழ்வோர் சிலர், இவ்விருட் குழாத்திற்கு வைரியான சுயாக்கியான சூரியன் தோன்றி நாலு,ஐந்து வருடங்களாகத் தனது சாவாகிரணங்களைப் பரப்பி வேடதாரிகளின் வேடங்களைத் தனது மெய்ஞ்ஞான ஜோதியால் விளக்கிக் கொண்டு வருகிறான் (தத்துவ விவேசினி 1:27:31:12:1882).

இவ்வகையில் சமய மறுப்பாளர்களாக இவர்கள் செயல்பட்டதை அறிகிறோம். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் செயல்பட்டமை குறித்து விரிவான தகவல்களை அறிய முடிகிறது. சாதி அமைப்பைக் கடுமையாக விமரிசனம் செய்துள்ளனர். பார்ப்பனர்கள் சாதிப்பிரிவுகளைக் கட்டிக்காப்பதில் அக்கறையுடன் செயல்படுவதாகக் கருதினர். ஒடுக்கப்பட்ட பெண்கள், மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்பதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகள் வழி விளக்கியுள்ளனர்.

இவர்களது முதல் வெளியீடான 'வருணபேதம்' நூல், இதழில் தொடராக வெளிவந்து பின்னர் நூலாக்கப்பட்டது. இந்நூலின் முகவுரை பின்வருமாறு கூறுகிறது.

மிகு விவேகமும் பெருந் தகைமையும் உடைய எனது ஜனன தேசத்தவர்களே! பிராமணர் நம்மை விலங்கினுங் கடையராகக் கீழ்ப்படுத்தி நமது கஷ்டார்ஜிதமாகிய செல்வங்கள் முழுமையுமே கவறுவான் வேண்டி, வேதங்களையும், ஆகமங்களையும், புராணங்களையும், இதிகாசங்களையும், மநுதரும நூலையும் எழுதி வைத்தனர்.... அவ்வேதாகமாதி நூல்களையும் அவற்றை எழுதி சமஸ்கிருத பாஷையையும் நாம் கற்கப்படாதென்றும் நமக்குப் பயமுறுத்திக் காலந்தோறும் நம்மை நிர்மூடராக்கி வருத்தி வருகின்றனர். ’ (ம. மாசிலாமணி, வருணபேதச்சுருக்கம், 1885.)

இதன் மூலம் சாதியம் குறித்த இக்குழு கொண்டிருந்த கருத்துநிலைகளை அறிய முடிகிறது. இவ்விதழ்களில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு களான தனிமங்கள் குறித்து விரிவாக எழுதினார். நவீன அறிவியலை மக்கள் அறிய வேண்டுமெனக் கருதினர். `பள்ளிகள்’ எனப்படும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு, ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிகளை, ஆதிக்கச் சாதிக்காரர்கள் எவ்வாறு அபகரித்துக்கொண்டனர் என்பதைக் கடித வடிவில் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், தத்துவ விவேசினியில் எழுதினார். இவரது `பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவரம்’ எனும் நூல் இதனை உறுதிப்படுத்துகிறது. பெரியபாளையத்தம்மன் கோவிலில் நடைபெறும் மூடச்சடங்குகள் குறித்து மிக விரிவான செய்திகளைத் தத்துவவிவேசினி வெளிப்படுத்தியுள்ளது. அச்சடங்குகளைத் தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இவ்விதம் `சென்னை இலௌகிக சங்கம்’ கீழ்க்காணும் அடையாளங்களோடு செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

-      கடவுள் நம்பிக்கையை மறுத்து, அந்நம்பிக்கை தொடர்பான அனைத்துச் செயல்களையும் விமர்சனத்துக்குட் படுத்தியுள்ளனர்.

-      சாதி என்னும் நிறுவனச் செயல்பாட்டை மறுத்து, அதற்கான காரணங்களைப் பேசியுள்ளனர். அதனை ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளனர்.

-      மதங்களை ஏற்றுக்கொள்ளாது, அதன் பல்வேறு செயல்பாடுகளையும் விமரிசனம் செய்துள்ளனர்.

-      மூட நம்பிக்கைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் (1878-1888) செயல்பட்ட இவ்வமைப்பு, இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் உருவான சுயமரியாதை இயக்கம் மற்றும் கடவுள்-சாதி-மூடநம்பிக்கை மறுப்பு இயக்கத்தின் முன்னோடி வடிவமாக, வரலாற்றில் இனம்காணும் தேவையுண்டு. இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டிய தேவை இருப்பதை இங்குப் பதிவு செய்யலாம்.

சான்று நூல்கள் மற்றும் இதழ்கள்:

1878-1888 - தத்துவ விவேசினி இதழ்கள்.

1882-1884 – The Thinker இதழ்கள்.

1885 - மாசிலாமணி. ம. வருண பேதச் சுருக்கம், சென்னை நகர் ஸ்ரீ கிருஷ்ண ரத்நாகர அச்சு இயந்திரசாலை.

1918 - சபாரத்தின முதலியார் பிரபஞ்ச விசாரம் (ஈச்சுவர நிச்சயத்தின் இரண்டாம் பாகம்), திருமயிலாப்பூர் சே.வெ. ஜம்புலிங்கம் பிள்ளையால், சென்னை வேப்பேரி செங்கல்வராய நகர், ஆர்ப்பனேஜ் அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

1954 - சபாரத்தின முதலியார்.ச. ஈச்சுவர நிச்சயம் (1895), ஆசிரியரின் மருகர் ஞிஷீநீtஷீக்ஷீ வே. மாணிக்கவாசகர். விரும்பியபடி திருமயிலை சே.வெ. ஜம்புலிங்கம் பிள்ளை பதிப்பித்து, கிரீன் அண்டு கம்பெனி, பார்வதி அச்சுக்கூடம், சென்னை -5.

1967 – Robert Robson, Ideas and Institutions of Victiorian Britan, G.Bell & Sons Ltd, London

1970 – John Saville, A Selection of the political pamphlets of Charles Bradlaugh with a preface & Bibiliogracical notes, Augustus M, Kelly publishers New York.

1970 – John Saville, A selection of the Social and Political pamphlets of Annie Besant with a Preface & Bibliographical Notes.

1995 ஆனைமுத்து. வே. (பதி) வெங்கடாசல நாயகர். அ., பார்ப்பாரும் வேளாளரும் பறித்துக்கொண்ட வன்னியரின் மன்னவேடு ஊர்கள், மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமை கட்சி வெளியீடு

2000  ரத்னம்.க. (பதி.) பாயக்காரிகள் மிராசுதார்களோடு செய்த போராட்டம், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை -5.

(மாற்றுவெளி ஆகஸ்ட் 2011 இதழில் வெளியானது)