இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் நிகழ்ந்துள்ள ஊழலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசையில் ஒரு லட்சத்து எழுபத்தியாறு லட்சம் கோடி (1,76,000) ரூபாய் வரை தொலைதொடர்பு துறைக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது, இதுவரை இந்தியாவில் நடந்துள்ள ஊழல்களில் மிகப்பெரிய ஊழலாக இது இருக்கும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது, இதற்கு தான் பொறுப்பல்ல ட்ராய் அமைப்பின் சட்டதிட்டப்படி தான் வழங்கினேன், அவர்கள்தான் ஆலோசனை சொன்னார்கள் என ஆ.ராசா கலாய்க்கிறார், எப்படி இருந்தாலும் அந்தத் துறையில் நல்ல திட்டங்கள் அமலானால் அதற்கு காரணம் நான் தான் என்றும். இது போன்ற ஊழல் பிரச்சனைகள் என்றால் அதிகாரிகள் தான் என்றால் பால்குடிக்கும் குழந்தை கூட நம்பாது, அவரின் தலைவரோ இது கடுகளவு தொகையே என்கிறார். இது கடுகளவு என்றால் இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும் என்கிறாரா?

முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், டிராய் பரிந்துரையின் பேரில்தான், அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றதாக ஆ.ராசா கூறி உள்ளார். ஆனால், இதனை டிராய் தலைவர் என். மிஸ்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு (15.11.2008) அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு;

2007 இல் டிராய் செய்த பரிந்துரையில் இன்றைய இந்தியாவின் சுறுசுறுப்பான செயலாக்கம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் இதுவரை இல்லாத வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும் போது 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் உரிமம் பெறுவதற்கு சரியானதாக இருக்காது. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்தக் கட்டணம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று சொல்லப்படவில்லை.

தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு 2007, அக்டோபர் 19 மற்றும் 2008, ஜனவரி 14 ஆகிய நாட்களில் இரு கடிதங்கள் எழுதி உள்ளேன். அமைச்சரவை எடுக்கும் முடிவு மற்றும் நடவடிக்கை களை இந்தப் பரிந்துரையில் இடம்பெறாதவற்றுடன் தொடர்பு படுத்துவது நியாயம் அல்ல. அது தவறாக வழிநடத்துவதாகும். டிராய் அமைப்பின் ஒட்டு மொத்த பரிந்துரை மீறப்படும்போது அதிகாரப் பூர்வமான முறையில் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அப்படி இருந்தும் டிராய் அமைப்பை கலந்து ஆலோசிக்காமல் அதனுடைய பரிந்துரைகளுக்கு புறம்பாக தொலைத்தொடர்புத்துறை பல தடவை செயல்பட்டு உள்ளது. நிறுவனங்கள் இணைப்பு மற்றும் பங்குகள் கையகப்படுத்தும் நடைமுறையிலும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை;

மேலும் இந்த அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் கட்டமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இப்படித்தான் ஸ்வான், யூனிடெக் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று உள்ளன.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மிஸ்ரா தெரிவித்துள்ள தகவல்கள் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தெரிவித்ததோடு, மத்திய அமைச்சராக அவர் பதவி பிரமாணம் ஏற்கும் போது சொன்ன சட்டத்தின் ஆட்சியை புறந்தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

டிராய் தலைவர் மிஸ்ரா தக்க பதிலடி கொடுத்தவுடன், இப்பொழுது ராசா கூறுகிறார், பிரதமர் அனுமதியுடன்தான் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று. இவ்வளவு பெரிய மோசடிக்கு மெகா ஊழலுக்கு பிரதமர் அனுமதி அளித்துள்ளார் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை உடன் அழைத்து உள்ளார். ஆனால், இதுவரை பிரதமர் இது குறித்து வாய் திறக்கவில்லை. முன்னாள் தொலைதொடர்புத்துறை செயலாளர் மாத்துர் அவர்கள் இந்த அலை வரிசைக்கான அனுமதி குறித்து ஆரம்ப நிலையிலேயே தனது ஆட்சேபணையை தெரிவித்து இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என கூறியுள்ளார். தற்போது தேவைப்பட்டால் இது குறித்த அனைத்து ஆவணங்களையும் அளிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

அதேபோல் தற்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டி, மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு இரண்டிலும் நடைபெற்ற ஊழல்களில் இந்தியாவின் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி இரண்டு கட்சியை சார்ந்தவர்களும் சம்பந்தபட்டுள்ளது நாற்றெமெடுத்து நாறுகிறது. நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென பிஜேபியும், முடியாது என காங்கிரசும் சபையை ஸ்தம்பிக்க வைக்கின்றன. இடது சாரிகள் சொல்வதைப்போல குற்றம் செய்த, ஊழல் செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை என்பது குறித்து பேசவேண்டும்.

எது சொன்னாலும் மக்கள் இளிச்சவாயர்கள், தேர்தல் நேரத்தில் பணத்தை காட்டி வாக்கை வாங்கி விடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையில் தான், இன்று ஊழலை தேசியக் கொள்கையாக மாற்றி விட்டார்கள்,

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் காலத்தில் நடைபெற்ற மாருதி ஊழல், ராஜீவ் காந்தி காலத்தில் போபர்ஸ் ஊழல், நரசிம்மராவ் காலத்தில் தொலை தொடர்புத்துறை ஊழல், சர்க்கரை இறக்குமதி ஊழல், வாஜ்பாய் காலத்தில் சவபெட்டி, ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல், மன்மோகன்சிங் காலத்தில் மருத்துவகவுன்சில் ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் ஊழல், நாடாளுமன்றத்தில் எம்,பிக்கள் வாக்களிக்க லஞ்சம், காமன்வெல்த் போட்டியில் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஊழல் என ஊழல்களின் தேசமாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது. கண்ணுக்கு தெரிந்து பத்திரிக்கைகளில் விவாதப் பொருளாக மாறிப் போன ஊழல்கள் இவை. மறைக்கப்பட்ட, தெரியாத ஊழல்கள் எத்தனை எத்தனையோ.. பறி போன இந்திய உழைப்பாளி மக்களின் செல்வங்கள் எவ்வளவோ,.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில் என எம்ஜிஆர் கால பாடல் ஒன்று உள்ளது, பல அமைச்சர் பெருமக்கள் நோகமல் நொங்கு சாப்பிடுவது போல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடிப்பார்கள், இந்தியாவில் உள்ள அமைச்சர்கள், பெரு முதலாளிகள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டுவீரர்கள் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை முறையாக செலுத்தாமல் பெயருக்கு கட்டிவிட்டு ஏமாற்றி வைத்திருக்கும் கருப்பு பணமே இந்தியாவிற்கான ஆண்டு பட்ஜெட் போடுமளவுக்கு உள்ளது, கருப்பு பணம் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ல்) 5.1 விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கருப்பு பணம் பெரும்பாலும் தங்கமாகவும், நிலமாகவும், வீடாகவும் புழங்குகின்றது.

உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர். இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா? இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம். சுவிஸ் வங்கியில் பணம் போட்டுள்ள வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது, கறுப்புப் பணம் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் ஆர். வைத்தியநாதன் குறிப்பிடுவதாவது: "சுவிஸ் வங்கியில் இருக்கும் கள்ளப் பணத்தை வெளியே கொண்டு வர ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை குரல் கொடுக்கின்றன. ஆனால், இந்தியா மட்டும் வாய் மூடி மௌனியாக இருக்கின்றது. அவர் மேலும் குறிப்பிடுகையில் "நமது வருமான வரி அதிகாரிகள் சுவிஸ் நாட்டின் ஜூரிச் நகரில் உள்ள இந்திய உணவகங்களுக்குச் சென்றாலே இந்தியாவின் எந்தெந்த பிரபலங்கள் அங்கு வங்கிக் கணக்கு வைத்துள்ளனர் என்பது தெரிந்துவிடும்'' என்று வேடிக்கையாகச் சொல்கிறார். "பிரிட்டீஷ்காரர்களால் 90 ஆண்டுகளில் 45 லட்சம் கோடி பணத்தைத்தான் சுவிஸ் வங்கிகளில் சேமிக்க முடிந்தது. ஆனால் நமது இந்தியப் பெருமக்கள் 30 ஆண்டுகளிலேயே 405 லட்சம் கோடி பணத்தை மிகவும் வேகமாக ஓடிச் சென்று சுவிஸ் வங்கியில் சேர்த்துவிட்டனர். எவ்வளவு பெரிய சாதனை'' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் 2008, ஜூலை 18ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, மக்கள் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாயில் புழக்கத்தில் 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கள்ளநோட்டுக்களின் பெருக்கம் காரணமாக ரூபாயின் மதிப்பு குறைவதுடன், பணவீக்கம் பெரிதும் அதிகரித்து, விலைவாசி கடுமையாக உயரும். அதேசமயம் கள்ள நோட்டு நடமாட்டத்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே சிதைந்து போகும் அபாயம் காத்திருக்கிறது.

Pin It