crow 349

பசுமையைப் பேணும் இயற்கை விரும்பி

       மரத்தில் கூடு கட்டும் காகங்கள், காலையில் இரை தேட கிளம்பி மதியத்திற்குள் அதே மரத்தை வந்தடைகின்றன. தான் கூடு கட்டி வாழும் மரத்திற்கு கீழே கூட்டிலிருந்து விழும் காகத்தின் எச்சங்கள் மரத்திற்கு சிறந்த உரமாகப் பயன்படுகின்றன. அதனால் மரங்கள் செழிப்பாக வளர்வதுடன் பிற தாவரங்களும் செழிப்பாக வளர்வதற்கு காரணமாக அமைகின்றது.

எச்சத்தின் மூலமாக மண்ணில் பதிந்த விதைகள் மழைக்காலங்களில் முளைக்கத் தொடங்குகின்றன. இவ்வாறு விதைகள் ஆங்காங்கே பரவி மரங்கள் உற்பத்தியாக இயற்கை விதைத்தூவியாக காகங்கள் விளங்குகின்றன.

மேலும் மரத்தின் கனிகளிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட விதையின் முளைப்புத் திறன், காகத்தின் எச்சத்திலிருந்து பெறப்பட்ட விதையின் முளைப்புத்திறனை விட குறைவாக இருப்பதும் ஆய்வுப் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் உற்ற தோழன்

       ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கு மிகுந்த தொல்லையைத் தருவது உண்ணிப் பூச்சிகளாகும். அவ் உண்ணிப்பபூச்சிகளின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் ஆடு, மாடுகள் அவற்றினுடைய உடம்பை பாறை, சுவர், மரம் போன்ற பொருட்களின் மீது உராய்ந்து உண்ணிப்பூச்சிகளின் தொல்லையைக் குறைக்க முயல்கின்றன.

ஆடு மேய்ப்பவர்கள் வளர்ப்பு ஆடுகளின் காது மடல்களை முக்கால்வாசி வெட்டி விடுவர். காரணம் என்னவென்றால், ஆடுகளின் காது மடல்கள் மடங்கி இருப்பது காதுமடல்களில் அதிகளவு உண்ணிப்பபூச்சி இருந்து ஆடுகளின் இரத்த்த்தை குடித்துவிடுகின்றன. அதனால் ஆடுகள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகின்றன. காது மடல்களை வெட்டிவிட்டால் காகங்கள் ஆடுகளின் கழுத்துப் பகுதியில் அமர்ந்து கொண்டு காதுக்குள் இருக்கும் உண்ணிப்பூச்சிகளை எளிதில் எடுத்து விடுகின்றன. இதனால் ஆடுகள் உண்ணிப்பபூச்சிகளின் தொல்லைகளிலிருந்து எளிதில் விடுபடுகின்றன.

இயற்கை துப்புறவாளர்

crow 340 copyமனிதனால் கொல்லப்பட்டு வீதியில் எறியப்பட்ட விலங்குகள், இறைச்சிக்கடை வியாபாரிகளால் கொட்டப்படும் விலங்குகளின் இறைச்சிக்கழிவுகள், மனிதன் உண்ட பின்பு வீதியல் எறியப்படும் எச்சில் உணவுப் பதார்த்தங்கள் போன்றவை சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்துகின்றன. சுகாதார நலனுக்கு அச்சுறுத்தலாக அமையும் மேற்கண்ட மனிதர்கள் செய்யும் சுகாதாரக்கேட்டினை அப்புறப்படுத்தும் இயற்கைத் துப்புறவாளராக காகம் இருந்து வருகின்றது.

இத்தகைய அற்புதப் பணிகளைச் செய்து வரும் காக இனங்கள் மனிதனின் செயல்களால் அழிந்து வருகின்றது. எலித்தொல்லையை கட்டுப்படுத்த மனிதன் உணவில் விஷம் வைத்துக் கொல்கிறான். விஷ உணவை உண்ட எலிகள் இறந்தவுடன், இறந்த எலியை வீதியில் தூக்கி எறிகிறான். இதனை உண்ட காகமும் இறந்துவிடுகிறது. மேலும் மனிதன் வயல் வெளியில் உள்ள எலிகளை ஒழிக்கும் பொருட்டு அவிக்கப்பட்ட நெல்லில் விஷம் கலந்து அவற்றை வீட்டின் மாடிகளில் உலர வைக்கின்றான். அவற்றை உணவுப் பொருட்களாக நினைத்து, இரை எடுத்த காகங்கள் அழிகின்றன.

காக இனத்தின் அற்புத செயல்களை நினைத்து காகங்கள் அழிபடாமல் காத்தால், நம் சுற்றுப்புறம் தூய்மை ஆவதுடன் நமது நலன்களும் பாதுகாக்கப்படும் என்பது திண்ணம்.

- இரா.முத்துசாமி எம்.ஏ.,பி.எட்., தமிழாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடையநல்லூர். அலைபேசி 9994531009