உடலில் வரிவரியாக பளிச்சென்ற வண்ணத்தில் இருக்கும் கம்பளிப் புழு, அதைவிட வனப்புமிக்க வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்கு தன்னையே அழித்துக் கொள்கிறது. இந்த 'உருமாற்றம்', இயற்கையில் பொதிந்துள்ள எத்தனையோ ஆர்வத்தைத் து£ண்டும் அம்சங்களில் ஒன்று மட்டுமே.

butterflyசமீபத்தில் காந்தி கிராமம் சென்றிருந்தேன். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்கு அழகான பெயர் உண்டு. பகலில் வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ஓய்வெடுக்கத் திரும்பும் இடம் என்று பொருள்படும் வகையில், 'அந்தி சாய்ந்த பிறகு' (பிஹைன்ட் எ சன்செட்) என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் பல சுவாரசியமான விஷயங்கள் இருந்தன. என்னை ஆச்சரியப்பட வைத்த விஷயம் ஒரு வண்ணத்துப்பூச்சிக் கூடு. முட்டையில் இருந்து வெளிவரும் கம்பளிப் புழு, உணவாகக் கொள்ளும் தாவர இலைகளின் அடிப்புறத்தில்தான் வண்ணத்துப்பூச்சிகள் சாதாரணமாக முட்டையிடும்.

ஆனால் ஒரு கூட்டுப்புழுவின் கூடு அந்த வீட்டு முன் மரக்கதவில் ஒட்டிக் கொண்டிருந்ததுதான் என்னை ஆச்சரியப்பட வைத்தது. மற்றொரு கூடு வரந்தா கிரில் கம்பிகளில் ஒட்டிக் கொண்டிருந்தது. மனிதர்களின் வாழ்நிலையை ஒட்டி சில உயிரினங்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை தகவமைத்துக் கொள்கின்றன. அதன் ஒரு பகுதி இது என்று நினைக்கத் தோன்றியது. கல்லு£ரியில் படித்தபோது செடிகளில் ஒட்டிக் கொண்டிருந்த கம்பளிப்புழுக்களின் கூடுகளைக் கண்டது ஞாபகம் வந்தது. பளபளப்பான அந்தக் கூடுகள் விநோதமான தோற்றத்துடன் இருக்கும்.

சாதாரணமாக வண்ணத்துப்பூச்சிகள் இடும் முட்டைகள், நிலவும் வெப்பத்தைப் பொருத்து 3 முதல் 12 நாட்களில் பொரிந்துவிடும். பிறகு, அதிலிருந்து உருவாகும் வண்ணமயமான முதல்நிலைப் புழு, தாவர இலைகளை வட்டவட்டமாகக் கடித்து உண்ணும். இருவாரங்கள் இலைகளை உண்ட பின், 2 அங்குல நீளமுள்ள கொழுகொழு கம்பளி புழுவாக அது வளர்ந்துவிடும். இந்த வண்ணமயமான கம்பளிப்புழுவின் பின் பாகத்தில், இரண்டு கொக்கிகள் போன்ற பகுதி இருக்கும். இதன்மூலம் வசதியான ஓர் இலையின் அடிப்புறம் ஒட்டிக்கொண்டு, கம்பளிப் புழு தலைகீழாக தொங்க ஆரம்பிக்கும்.

அதன்பிறகுதான் ஆரம்பிக்கிறது ரொம்ப முக்கியமான பகுதி. கம்பளிப்புழு உருமாற்றத்தின் முக்கிய கட்டத்தை எட்டப் போகிறது. தன்னையே அழித்துக் கொள்ளப்போகிறது. தன் தோலை சிறிதுசிறிதாக இழந்து கூட்டுப்புழுவாக மாறும். இந்த உருமாற்றம் சில மணி நேரங்களில் நடந்துவிடும். கவிழ்ந்த பூஞ்சாடி போன்ற இந்த கூட்டுப்புழுவைச் சுற்றி, மெழுகுபடலம் போன்ற மெல்லிய தோல் இருக்கும். நாளாகநாளாக, இந்த தோல் கண்ணாடி போல வெளிப்படையாகி, உள்ளிருப்பது தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.

இரு வாரங்களில் இந்த கூட்டுப்புழு அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறிவிடும். அதன்பிறகு கூட்டின் தோல் பகுதியை கிழித்து வெளிவரும். தன் வயிற்றுப்பகுதியில் உள்ள ரத்தத்தின் மூலம் சத்தைப் பெறும் வண்ணத்துப்பூச்சி, இறக்கைகளை மெதுமெதுவாக விரிக்கும். உடலிலுள்ள கூடுதல் திரவப் பொருட்களை வெளியேற்றும். தன் இறக்கைகள் காயவும், உறுதியாக மாறவும் காத்திருக்கும். என்னதான் அதன் இறக்கைகள் எடை குறைவாக இருந்தாலும், உடனடியாக பறக்க முடியாது.

முட்டையிட்டது முதல் வண்ணத்துப்பூச்சி பிறக்கும் வரை மொத்த நடைமுறை நடந்து முடிய ஒரு மாதம் ஆகும். ஒரு நாள் அதிகாலை நான் அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, வண்ணத்துப்பூச்சி கூட்டை கிழித்து, பிறந்துவிட்ட தகவல் கிடைத்தது. வண்ணத்துப்பூச்சி பிறந்தவுடன் பறக்க முடியாது என்பதை நேரடியாகப் பார்த்தேன். அந்த வண்ணத்துப்பூச்சி நீண்டநேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதன் இறக்கைகள் கூட்டின் உள்ளே இருந்ததுபோல, உட்புறமாக வளைந்து இருந்தன. இறக்கை விரிய நேரம் ஆனது. அதன் இயல்பை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் யாரும் அதைத் தொடவில்லை.

காலையில் பிறந்த அந்த வண்ணத்துப்பூச்சி, மாலை நான் வீடு திரும்பியபோதும் முன்னறையிலேயே ஓரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இயற்கை எத்தனையோ அதிசயங்களை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. அழகு மிகுந்த, நுணுக்கமான இதுபோன்ற வண்ணத்துப்பூச்சியை மனிதனால் உருவாக்க முடியுமா என்ற கேள்வியை, இயற்கை என்றென்றைக்கும் நம்மைப் பார்த்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

அனுப்பி உதவியவர்: ஆதி